
வெறித்தப் பார்வையுடன் வீல் சேரில் உட்கார்ந்து இருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. சுற்றிலும் மனித நடமாட்டம் நின்று போய் ஒரு சுழல் காற்றில் அவளும் சுரேந்தரும் மட்டும் சிக்கிக் கொண்டது போல் செயலற்று நின்றாள். சுரேந்தரைக் கொண்டு வந்து விட்டவன் இவளிடம் அவசர அவசரமாக சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டான். எதற்குப் போடுகிறோம் ஏன் போடுகிறோம் என்று தெரியாமல் கையெழுத்துப் போட்ட அவளிடம் அவன், “நான் ரிடர்ன் பிளைட்டிலேயே மலேசியா போறேன் மேடம், பார்த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான்.
“சார் என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி இருக்கிறார், சொல்லிட்டுப் போங்க” என்று அவன் சட்டையைப் பிடித்தாள் விமலா.
சட்டையிலிருந்து அவள் கைகளை விலக்கி, “தெரியாது மேடம், காலையில வேலைக்கு வரலையேன்னு என்னை அவர் ரூமுக்குப் போய் பார்க்க சொன்னாங்க, இப்ப இருக்கிறா மாதிரியே இருந்தாரு. அதுக்கப்புறம் அங்கப் பக்கத்துல இருக்கிற டாக்டர் வந்து பார்த்துட்டு, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு சொன்னாரு. ஹைதிராபாத் ஆபீசுக்குத் தகவல் சொன்னோம். அவங்க அங்கெல்லாம் அட்மிட் பண்ண வேண்டாம், அவர் பழைய கேஸ் ஹிச்டரி எல்லாம் நமக்குத் தெரியாது. அதனால உடனே சென்னைக்குக் கூட்டிப் போய் உங்க கிட்ட ஒப்படைக்கச் சொல்லிட்டாங்க. உங்களையும் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லிடறோம்னு சொன்னாங்க. எனக்கு வேற எதுவும் தெரியாதுங்க” என்றான்.
“ஏங்க, எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமையா கூட்டிக்கிட்டு வந்தீங்க?” கசங்கிய சட்டையும் சாய்ந்தத் தலையுமாக உட்கார்ந்திருந்த கணவனைப் பார்த்து அடக்க முடியாமல் கோபமும் அழுகையும் ஒருசேர வந்தது விமலாவுக்கு. அவனோ பதில் சொல்லக் கூட நிற்காமல் அந்த இடத்தைவிட்டுக் காணாமல் போயிருந்தான். சுற்றி இருந்த மனிதர்களும் விமான நிலைய இரைச்சலும் திடீரென்று இவள் முகத்தில் ஓங்கி அறைவது போலத் தோன்றியது. முதலுதவிக்கு விமான நிலையத்தில் இருந்தவர்களை அணுகினாள். அவர்கள் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்தார்கள். உடனே பாரதி ராஜா மருத்துவமனைக்கு விரைந்தாள். ஆம்புலன்ஸ் பயணத்தின் போது அவன் கண்களை மூடி உறங்கிக் கொண்டு வருவது போலத் தோன்றியது. ஒரு பேச்சுமில்லை அவனிடம் இருந்து. மருத்துவமனையில் நேராக அவனை ICUவுக்குக் கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த ஒரு மருத்துவர், “அவருக்கு எதோ பெரிய ஷாக் ஏற்பட்டிருக்கணும். அல்லது நினைவுகளை பாதிக்கிற அளவு ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். மெண்டல் பிரேக் டவுன் ஆகியிருக்கு. என்ன காரணம்னு செக் பண்ணா தான் தெரியும். உயிருக்கு ஆபத்தில்லைம்மா கவலைப் படாதீங்க. இப்போ நான் கேக்கிற கேள்விக்கெல்லாம் விளக்கமா பதில் சொல்லுங்க” என்று விரைவாக பல கேள்விகள் கேட்டு அவருக்குத் தேவையானவற்றைத் தெரிந்து கொண்டார்.
நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஹாஸ்பிடல் நெடியும் பயமும் சேர்ந்து குமட்டிக் கொண்டு வந்தது விமலாவுக்கு. மலேசியாவுக்குப் போகவே விருப்பம் இல்லாத சுரேந்தரைப் பிடித்துத் தள்ளியது இவள் தானே? எத்தனை முறை அவனை நச்சரித்திருப்பாள்! அவனை வாட்டும் சொற்களைக் கொட்டிய வாய் இன்று கேவலை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது..
“எவ்வளவு நாளு தான் எடுத்துக்கப் போறீங்க முடிவு பண்ண? இங்க வாங்கினதை விட மூணு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்க. உங்களுக்கு வேலை போய் நாலு மாசம் ஆகுது, இன்னிக்கு வரைக்கும் இன்டர்வியு போறீங்களே தவிர வேலை ஒண்ணும் கிடைக்கலை. மலேசியா போய் வேலை செய்ய என்ன கஷ்டம் உங்களுக்கு?”
“இல்லை விமலா, உன்னையும் குழந்தைகளையும் விட்டுட்டுப் போகணுமா? நீயோ பேங்க்ல வேலை செய்யற, அதையும் விட மாட்ட. நீ இங்கேயும் நான் அங்கேயும்னு எவ்வளவு நாள் இருக்க முடியும்? நான் போற இடம் மலேசியாவில் பெரிய நகரத்துல கூட இல்ல. சின்ன ஊர். ஹெட் ஆபிஸ் ஹைதிராபாத்தில் இருக்கு. இந்தக் கம்பெனியை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் அங்க வேலை பார்க்கலை.”
“நீங்க என்ன கல்யாணம் கட்ட பொண்ணு பாக்கறீங்களா இல்லை வேலைக்குப் போக கம்பெனி தேடறீங்களா? எதுக்கு யாரையும் தெரிஞ்சிருக்கணும். ஒரொரு வேலைக்கும் உங்களை புடிச்சுத் தள்ள வேண்டியிருக்கு. சிவில் இஞ்ஜிநீயரிங் படிச்சிருக்கீங்கன்னு எங்கப்பா கட்டிக் கொடுத்தாரே, அவரை சொல்லணும்.” தேளாகக் கொட்டினாள்.
அடிபட்டவனாக அவன் அவளைப் பார்த்து, “கொஞ்சம் பொறுமையா இரு விமலா, நிச்சயமா சென்னையிலேயே வேலை கிடச்சிடும்.”
“இப்படியே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இதோ அதோன்னு நாலு மாசம் ஆச்சு. பழைய கம்பெனியிலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துருந்தீங்கன்னா வேலையே போயிருக்காது. அவங்க பண்ற கலப்படத்துக்கு நான் எப்படி உடந்தையா இருக்க முடியும், நேர்மை நியாயம்னு GM கிட்ட சண்டை போட்டீங்க, அவங்க போயிட்டு வான்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.” வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினாள்.
அவள் தொணதொணப்புக்குப் பலன் கிடைத்திருந்தது. ரெண்டு நாள் கழித்து மாலை அவள் ஆபிசில் இருந்து வந்தவுடன், “அவங்கள்ட்ட பேசிட்டேன் விமலா. ஒரு வாரத்துல வீசாக்கு ஏற்பாடு பண்ணிடறதா சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சென்னை வந்து போக அவங்களே டிக்கெட் தருவாங்களாம். ரெண்டு வார லீவில் வந்து போகலாமாம்” என்றான்.
மகிழ்ச்சியுடன் அவனை ஆணைத்துக் கொண்டாள். எல்லாம் விரைவில் நடந்தது. கிளம்பும் போது இவனுக்கு தான் கண்களில் நீர் தளும்பியது. விமலாவோ அவன் ஆறு மாதத்தில் வரும்போது என்னல்லாம் வாங்கி வரச் சொல்லவேண்டும் என்று மனத்தில் ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். விமான நிலையத்தில் குழந்தைகளை கட்டியணைத்து ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தமிட்டுக் கிளம்பினான்.

கோலாலம்பூர் போய் அங்கிருந்து பஸ்ஸில் கோலா கங்சர் போகவேண்டும். நாலு மணி நேர பேருந்து பயணத்தின் பின் அவன் சென்றடைய வேண்டிய ஊர் போய் சேர்ந்தான்.
அங்கு வரவேற்க கம்பெனியை சேர்ந்த அகௌன்ட்ஸ் மேனேஜர் ஜெயகிருஷ்ணா வந்திருந்தார். அவர் முன்பே தொலைபேசியில் பேசியிருந்ததால் அவரை சந்தித்து அவருடன் காரில் அவர்களுக்கான இருப்பிடத்திற்குப் போனார்கள். அவர் தெலங்கானாவை சேர்ந்தவர், அந்த ப்ராஜெக்டில் ஆரம்பித்த நாள் முதல் இருப்பவர், என்று பேசியதில் தெரிந்து கொண்டான். அவர் அவனுக்காகவும் சமைத்து வைத்திருந்தார். அவர் ரூமிலேயே அவன் உணவருந்திய பின் அவனுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் ரூமில் இருந்து இரண்டு அறைகள் தள்ளி சுரேந்தருக்கான ரூம்.

ஒரு பெரிய ஹாலிடே ரிசார்ட் கட்டும் பணி இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்திருந்தது. அழகிய கங்ஸர் நதிக்கு எதிரில் மிக நவீனமான அடுக்கு மாடி கட்டடம், ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறு பயண விடுதிகள் கட்டும் பணி. அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
பழைய ப்ராஜெக்ட் இஞ்சினீயர் வேலையை விட்டதால் சுரேந்தர் அந்த இடத்திற்கு நியமிக்கப் பட்டிருந்தான். ஊரில் இருந்து சிறிது தொலைவில் தான் இந்த கட்டடம் எழும்புவதால் அவர்கள் தங்கும் இடமும் சைட்டுக்கு அருகிலேயே அமைக்கப் பட்டிருந்தது.

இரவு விமலாவிடம் மகிழ்ச்சியாகப் பேசினான். அவளுக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கே இவன் போய் இடம் பிடிக்கவில்லை என்று சொல்வானோ என்று பயந்து கொண்டிருந்தாள்.
ரெண்டு வாரம் போயிருக்கும் நடு இரவில் போன் வந்தது. படபடப்புடன் போனை எடுத்தாள். “விமலா நான் திரும்பி வந்துடறேன். இங்கே நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” சுரேந்தர் நடுங்கியக் குரலில் சொன்னான்.
“ஐயோ என்ன விஷயம்? இப்படி நடு ராத்திரியில் போன் பண்றீங்க?”
“இப்போ தான் பண்ண முடிஞ்சிது. இங்கே கன்ஸ்டிரக்ஷனில் பயங்கர தில்லு முல்லு நடக்குது. அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கட்டுமான வேலைக்கு வாங்காத சாமானுக்கெல்லாம் வாங்கியதாக என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். நான் ஹைதிராபாத்தில் மேலதிகாரிக்குத் தகவல் சொல்வேன் என்றால், எல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சு தான் நடக்குது. ஒழுங்கா கையெழுத்துப் போடு இல்லேனா முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு ஆன கதி தான் உனக்குன்னு மிரட்டுறான். முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு என்ன நடந்ததுன்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க. நாலஞ்சு பேர் தான் இந்தியாவில் இருந்து வந்து வேலை பார்க்கிறாங்க. அவங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்காங்க. மத்தவங்க எல்லாம் மலாய்காரங்க, சைனீஸ். அவங்கள்ட்ட என்னால எதுவும் கேக்க முடியலை.”
“என்னங்க, போய் ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ளே இப்படி குண்டை தூக்கிப் போடறீங்களே.”
“இங்க இருக்கிற நிலைமை புரிஞ்சிக்காம இப்படி பேசறியே விமலா, நான் இப்போ அங்கே திரும்பி வரணும்னா கூட வரமுடியாதபடி அவங்க என் பாஸ்போர்ட்டை எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்க. நானே என்ன பண்றதுன்னு தெரியாம உன்கிட்ட யோசனை கேக்க போன் பண்ணா நீயும் இப்படி சொல்றியே” எரிச்சலுடன் போனை வைத்து விட்டான்.
விமலாக்குப் பிறகுத் தூக்கமே வரவில்லை. கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. ஏதாவது பிரச்சினை என்றால் அவனுக்கு உதவியாக இருக்க அங்கு தெரிந்தவர்கள் கூட யாருமே இல்லையே என்று அப்பொழுது அவளுக்குத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவனுக்குப் போன் போட்டு பேசினாள்.
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருங்க. ஒரு ஆறு மாசம் கழிச்சு வருவீங்க இல்ல அப்போ திரும்பி போகாம இருந்திடுங்க. எல்லா இடத்திலேயும் தான் கணக்கு வழக்குல மோசடி பண்றாங்க.”
“விமலா உனக்குப் புரியலை. இவங்க பெரிய மோசடியா பண்றாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு நான் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளும் இரும்பு ராடுகள், செங்கல், சிமெண்டு மூட்டைகள் கணக்கை என் கம்பியுட்டரில் தனியா நோட் பண்ணிக்கிட்டு வரேன். ஆனா அவங்களுக்கு நான் இது மாதிரி பண்றது தெரிஞ்சாக் கூட எனக்கு ஆபத்து தான்.”
இதை கேட்டதில் இருந்து விமலாவுக்கு உண்மையிலேயே குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் அவன் பக்கத்தில் வேறு யாரோ இருந்தால் அவளுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தான். அதனால் அவன் கூப்பிடும் போது மட்டுமே அவளால் பேச முடிந்தது.
கடைசியா அவனுடன் பேசி ரெண்டு நாள் ஆகியிருக்கும். அன்று மத்தியானம் ஹைதிராபாதிலிருந்து “சுரேந்தருக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் சென்னைக்கு ஒருவர் துணையுடன் அனுப்பி வைக்கிறோம்” என்று போன் வந்தபோது கூட இந்த நிலைமையில் கணவனைப் பார்ப்போம் என்று அவள் நினைக்கவில்லை.
விடிகாலையில் அவளிடம் வந்து டாக்டர், “நாங்க செடடிவ் கொடுத்துத் தூங்க வச்சிருக்கோம் மா. அது தான் இப்போதைய நிலைமைக்கு சிறந்த நிவாரணி. நீங்க வீட்டுக்குப் போயிட்டு குளிச்சு சாப்பிட்டுட்டு வாங்க, காலையில் ஒரு EEG எடுப்போம். வேற டெஸ்டுகள் பண்ணுவோம். இன்னிக்கு முழுக்க அவரை செடெஷனில் தான் வைத்திருப்போம். கவலைப் படாம வீட்டுக்குப் போயிட்டு வாங்க” என்றார்.
வீட்டுக்குப் போய் திரும்பி வந்த பின் டாக்டரைப் சந்தித்தாள். “அவரை அட்மிட் பண்ணவுடனே பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்டுக்குக் கொடுத்து ரிசல்டும் வந்திட்டுது மா. அவர் இரத்தத்தில் ஒரு வித விஷத் தன்மை கலந்திருக்கு. அவர் இப்போ உயிருடன் இருப்பதே நீங்க செய்த அதிர்ஷ்டம் தான். அவர் மூளைக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு. விஷத்தன்மையைப் போக்க மருந்து ட்ரிப்சில் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். கொஞ்ச கொஞ்சமாகத் தான் ரிகவரி இருக்கும். மெதுவாக அவர் நிலை சீரடைந்து நினைவும் திரும்பும். நீங்க பொறுமையா இருக்கணும். அவர் நல்ல முறையில் பேச ஆரம்பித்த பிறகு தான் என்ன நடந்ததுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்க முடியும்.” என்றார்.
ஒரு வாரம் ஒரு யுகமாகக் கழிந்தது. கண் விழிப்பதும் உறங்குவதுமாக இருந்தான். அவளைப் பார்த்தும் ஏதும் பேசவில்லை, சிரிக்கவில்லை. டாக்டர் குழந்தைகளை அழைத்து வரச் சொன்னார். குழந்தைகளைப் பார்த்ததும் முதல் முறையாக லேசாக மலர்ந்தது முகம். கைகளை நகர்த்தி குழந்தைகள் கைகளைப் பிடித்துக் கொண்டான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது விமலாவுக்கு.

போஸ்டில் ஒரு செக்கும் வேலையை விட்டு சுரேந்தரை நீக்கியதற்கானக் கடிதமும் வந்து சேர்ந்தது. அவன் உடல் நலமின்மையையைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்திருந்தார்கள். இதை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை விமலா. அவர்களின் ஆபிசுக்குப் போன் பண்ணி பேசினாள். HRல் ஒருவர் “நீங்க இது மாதிரி உடல் நலக் கோளாறு முன்னமே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்களே மேடம். எப்படி அவரை கன்ஸ்டிரக்ஷன் சைட்டில் வேலைக்கு வெச்சுக்க முடியும்? அவர் திடீர்னு மயங்கி விழுந்தா நாங்க பொறுப்பேத்துக்க முடியுமா சொல்லுங்க?” நறுக்குத் தெரித்தாற் போலக் கேட்டார்.
“சார், இதுக்கு முன்னாடி அவருக்கு இந்த மாதிரி வந்ததே இல்லை. நானே பயங்கர ஷாக்கில் இருக்கேன். மலேசியாவில் தான் ஏதோ நடந்திருக்கணும். நீங்க தான் மருத்துவ செலவை எல்லாம் ஏத்துப்பீங்கன்னு நினச்சேன், இப்படி வேலையை விட்டே அனுப்பிட்டீங்களே சார். காண்டிரேக்ட் எல்லாம் போட்டு தானே வேலைக்கு எடுத்தீங்க?”
“மேடம், நீங்களே ஏர்போர்டில் எங்க ஆபிசரிடம் இவருக்கு இது மாதிரி உடல் கோளாறு முன்பே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்க, இப்ப இப்படி சொல்றீங்களே?” தெளிவாகப் பேசினார் எதிர் முனையில் இருப்பவர்!
சகலமும் புரிந்தது விமலாவுக்கு. சூழ்ச்சியுடன் நடந்து கொள்வது அந்த கம்பெனிக்குப் புதுசு இல்லை என்று தெரிந்து கொண்டாள். இனிப் பேசி பிரயோஜனமில்லை.
மெல்ல மெல்ல சகஜ நிலைமைக்குத் திரும்பி வந்தான் சுரேந்தர். பழைய நினைவுகள் கூடிய விரைவில் திரும்பி விடும் என்று டாக்டர் நம்பிக்கை அளித்ததில் இரண்டு வாரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டாள்.
திடீரென்று ஒரு நாள் “விமலா நான் கூல்ட்ரிங்க் குடிச்சப் பிறகு எனக்கு என்ன நடந்துதுன்னே தெரியலை” என்றான். மலேசியாவில் நடந்தது அவனுக்கு நினைவுக்கு வருவது கண்டு மனம் நெகிழ்ந்து, “எதை பத்திச் சொல்றீங்க?” என்று அருகில் அமர்ந்து கேட்டாள்.
“அந்த ஜெய கிருஷ்ணா அவன் ரூமுக்கு வான்னு என்னைக் கூப்பிட்டான். எனக்குப் போகவே பயமா இருந்தது. முந்தின நாள் தான் என் லேப் டாப்பை என் அறைக்கு வந்து யாரோ பயன்படுத்தின மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், ஏன்னா டேபிள் மேல பேப்பர்ஸ் கலஞ்சு இருந்தது. அதனால் நான் கம்பியுட்டரில் கணக்கு வச்சிருப்பதைக் கண்டுபிடிச்சிருப்பானோன்னு நினச்சு, உடம்பு சரியாயில்லை அப்புறம் வரேன்னு சொன்னேன். ஆனா அவனோ ஒரு அஞ்சு நிமிஷம் தான் வந்துட்டுப் போன்னுச் சொன்னான். போனவுடன் ஒரு கிளாஸ்ல ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தான், நானும் தாகமா இருந்துதுன்னு உடனே குடிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் எனக்கு இங்கே ஆசுபத்திரியில் தான் கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்தது. எப்படி சென்னை வந்தேன்னு ஒண்ணுமே ஞாபகமில்லை.”
அவனை ஏர்போர்டில் பார்த்தபோதே அவன் பெட்டியோ லேப்டாப்போ ஒண்ணுமே கொண்டு வரவில்லையே என்று விமலா நினைத்தாள். ஆனால் அவன் உடல் நிலை சரியாகித் திரும்பிப் போவான் என்று நினைத்ததால் அதைப் பற்றி வந்தவனிடம் கேட்கவும் இல்லை, அதை கேட்கும் நிலையிலும் அவள் இல்லை.
சுரேந்தர் மெல்ல மீண்டு பெரிய வேலை இல்லையெனினும் ஒரு சின்ன கம்பெனியில் பிடித்த வேலையில் சேர்ந்தான். ஏமாற்றப் பட்டதால் மனத்தில் ஏற்பட்ட வடு மட்டும் காயம் ஆறாமலே தான் இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தமிழ் தினசரியில் நாலாவது பக்கத்தில் “மலேசியாவில் ஹாலிடே ரிசார்ட் கட்ட காண்டிரேக்ட் கிடைத்த ஹைதிராபாத் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மலேசிய போலீஸ் கம்பெனி தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை” என்று வந்த செய்தியை சுரேந்தர் பார்த்திருந்தால் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்திருக்கலாம்.
Images taken from these sites with thanks.
http://www.cliparthut.com/wheelchair-sports-clipart.html
http://seattle.urbansketchers.org/2014/07/portland-for-2nd-annual-west-coast.html
http://pencil-bender.deviantart.com/art/Father-Daughter-Time-422404333
http://www.dreamstime.com/stock-illustration-father-child-pencil-sketch-hand-drawn-man-gently-holding-toddler-image49286492