புறம் – சிறுகதை

“என் பெண்ணை நான் ஸ்ட்ரிக்டா வளர்த்திருக்கேன். காதல் கீதல்னு சொல்லிக்கிட்டு வந்தானா வெட்டிப் போட்டிருவேன்னு அவளுக்குத் தெரியும். வேற ஜாதி பையனை கல்யாணம் செஞ்சுக்கரதுல்ல ஒண்ணும் தப்பில்ல. ஆனா அவங்களுக்குப் பிறக்கிற குழந்தைங்க எந்த ஜாதியை சேரும்? நீங்களே சொல்லுங்க மாலதி, ஒரே குழப்படியா ஆயிடாது?”

என் மகள் வேறு ஜாதிப் பையனை மணக்கப் போகிறாள் என்று கேள்விப்பட்டு என் தெரு நட்பு ராதிகா கோவிலில் என்னைப் பார்த்ததும் என்னிடம் சொன்னதது தான் மேற்கூறிய கருத்து! நான் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்து கொண்டேன். இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் எங்கள் தெரு பிள்ளையார் கோவிலில் தான் சுவாரசியமாக நடக்கும். சாமி கும்பிட வராங்களா இல்லை வம்புப் பேச வராங்களான்னே சந்தேகம் எனக்கு எப்பவும்.

அடுத்த வாரம் ஒரு மணி விழாவில் ராதிகாவை மறுபடியும் சந்திக்கும்படி நேர்ந்தது. அவள் கண்ணில் படாமல் தள்ளி போய் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். மோப்பம் பிடித்து அருகில் வந்து என் பக்கத்து சேரில் உட்கார்ந்து விட்டாள். “நானும் என் பெண்ணுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் மாலதி. எங்க ஜாதில உங்களுக்கு நல்ல வரன் எதுனா தெரிஞ்சா சொல்லுங்க. அது சரி, நீங்க பொண்ணுக்கு கல்யாணம் உங்க வழக்கப்படி பண்ணப் போறீங்களா இல்லை பிள்ளை வீட்டு வழக்கப் படியா?”

thamboolam

நல்லவேளை அந்த சமயம் வேறு ஒருவர் ராதிகாவிடம் பேச வந்ததால் நான் வாய்ப்பை நழுவ விடாமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன். மண மேடையில் மணி விழா காணும் தம்பதியினர் காலில் விழுந்து ஆசி வாங்கி, சாப்பிடக் கூட காத்திருக்காமல் கிளம்பிவிட்டேன்.

“நீங்களும் நில்கிரிஸ்ல தான் மளிகை சாமான் வாங்குவீங்களா? உங்களை நான் இங்கே பார்த்ததேயில்லையே” தோளைத் தொட்டுப் பேசியது யார் என்று திரும்பிப் பார்த்தேன். வேறு யார்? ராதிகா தான்.

grocery

“நம்ம தெருக் கடைல வெண்ணெய் ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டான். அதான் இங்க வாங்க வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே பில் போடும் இடத்துக்கு விரைந்தேன். என் கெட்ட நேரம் பில் போடும் கவுண்டரில் எனக்கு முன்னாடி நாலு பேர். வசதியாப் போச்சு ராதிகாவுக்கு. “அன்னிக்கு நீங்க உடனே கிளம்பிட்டீங்க போலிருக்கு. உங்க கூட பேசவே முடியலை. கல்யாணத்துக்குப் புடைவை எல்லாம் வாங்கிட்டீங்களா?”

“வாங்கியாச்சுங்க”

“போன தடவை பார்த்தபோதே கேக்க நினச்சேன், நீங்க சைவமாச்சே. பிள்ளை வீட்டுல அசைவம். உங்க பொண்ணுக்கு அசைவம் சமைக்கத் தெரியுமா?”

“அதெல்லாம் அவங்க பிரச்சினைங்க. நமக்கென்ன அதைப் பத்தி. கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தப் போறவங்க அவங்க ரெண்டு பேரும். சமைக்கறாங்க, சமைக்காமப் போறாங்க. நீங்க ஏங்க அதைப் பத்திக் கவலைப்படறீங்க?” சற்றே எரிச்சலுடன் பதில் சொன்னேன்.

“அதெப்படிங்க, அவ்வளவு லைட்டா சொல்றீங்க? வெஜிடேரியனா இருந்துட்டு நான் வெஜிடேரியன் சமைக்கணும்னா கஷ்டம் இல்லையா? என் பொண்ணு நான் வெஜ் பக்கத்துல வெஜ் சாப்பாடு இருந்தா கூட சாப்பிட மாட்டா. நாங்கல்லாம் ஹோட்டல் போனா கூட சைவ ஹோட்டல் தான் போவோம்.”

பதில் பேசாம பணத்தைக் கொடுத்து சாமானை வாங்கிக் கொண்டு வீடு வந்தேன். மாலை என் கணவர் வந்ததும், “இதப் பாருங்க நம்ம தெருல இருக்கிற ராதிகா வீட்டுக்குப் பத்திரிகை வைக்க வேண்டாம். எரிச்சலா வருதுங்க. எப்போப் பார்த்தாலும் நம்ம பொண்ணு கல்யாணத்தைப் பத்திக் குத்தலா சொல்லிக்கிட்டு இருக்கா.”

“அது எப்படி அவங்களை மட்டும் விட்டுட்டு மத்தப் பேருக்கு பத்திரிகை வைக்கிறது? அது சரி இல்லை மாலதி. கலப்புத் திருமணம்னா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க தான். இதுக்கெல்லாம் கோபப்படக் கூடாது”

வேண்டா வெறுப்பாக அவர்கள் வீட்டுக்குச் சென்று பத்திரிகை வைத்தேன். அங்கேயும் விடவில்லை ராதிகா. “என்னங்க, உங்க தம்பி பெண்டாட்டியோட அத்தைப் பொண்ணு கூட இன்டர் கேஸ்ட் மேரேஜ் தானே செஞ்சா, ஒரே வருஷத்துல பிரிஞ்சிட்டாங்க இல்ல” என்று தன் கணவரைப் பார்த்துக் கேட்டாள். அவர் பாவம் நல்லவர். “என்ன ராதிகா, கல்யாணத்துக்கு அழைக்க வந்தவங்க முன்னாடி இப்படி பேசறே. அவங்களுக்கு என்ன பிரச்சினையோ பிரிஞ்சாங்க. எல்லாரும் அப்படியேவா இருப்பாங்க. சாரி சார். என் வைப் கொஞ்சம் இப்படி தான் சட்டுன்னு பேசிடுவா, நீங்க எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க. நாங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தறோம்” அப்படீன்னு எங்களை அவசர அவசரமா வெளியேற்றினார்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் என் கணவரின் அலுவலகத்தின் ஆபிஸ் டே விழா ஈசிஆர் ரோடில் ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது. அங்கு சென்றிருந்த போது அவரின் சில உடன் வேலை செய்பவர்களிடம் பேசும்போது என் மகளின் திருமணப் பேச்சு வந்தது. என் மகள் எப்படி இருக்கிறாள், மண வாழ்க்கை எப்படி இருக்கு என்று ஒருவர் கேட்டதற்கு அவள் மகிழ்ச்சியாக இருப்பதை சொல்லிக் கொண்டிருந்த போதே, ஒரு கலீகின் மனைவி என்னைப் பார்த்து, “உங்க மகள் கலப்புத் திருமணம் எல்லாம் ஒரு சின்ன விஷயங்க. நான் வொர்க் பண்றது ஒரு MNCல. அங்கே நட்பு/காதல் எல்லாம் மொழி, கலாச்சாரம் எல்லாம் பார்த்து வரது இல்லைன்னு நான் நேரடியாவே பார்க்கிறேன். மதம், மொழி, இனம் எல்லாம் வேற வேற. ஆனா எப்படியோ லவ் வந்துருதுங்க” என்றார் சிரித்துக் கொண்டே!

ladieschatting1

காரில் திரும்பி வரும்போது “மாலதி, நம்ம தெரு ராதிகா அவங்களோட மக ஒரு கொரியன் பையனை லவ் பண்றா. இன்னிக்கு மத்தியானம் லஞ்சுக்கு அன்னலட்சுமி போயிருந்தேன். அங்கே ராதிகா கணவரைப் பார்த்தேன். அவர் தான் என்னிடம் சொன்னார். அந்தப் பையன் அந்த பொண்ணு ஆபிசிலேயே ஒரு பிராஜக்டுக்காக வந்திருக்கானாம். ரெண்டு பெரும் ஒரே ப்ராஜெக்ட்ல வேலை செஞ்சிருக்காங்க. கல்யாணம் செஞ்சுப்போம்னு ரொம்ப உறுதியா இருக்காங்களாம். சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார்.”

அப்படியே ஷாக் ஆயிட்டேன். “நீ போய் அவங்களை ஒன்னும் கேக்காத பாவம்” என்றார் என் கணவர். ஆனால் நான் அதற்குள் மனத்தில் பிளான் பண்ண ஆரம்பித்து விட்டேன். எனக்கு சில டப்பர்வேர் டப்பாக்கள் தேவையாக இருந்ததால் அடுத்த நாள் ராதிகா வீட்டுக்கு அதை சாக்கிட்டுப் போக முடிவு செய்தேன். அவள் டப்பர்வேர் சேல்ஸ் ரெப்.

கதவை தட்டியதும் திறந்த ராதிகா, என்னைப் பார்த்ததும் முகம் சுருங்கி வீட்டுக்கு வராம என்னை அப்படியே போக வைப்பது எப்படின்னு யோசிப்பது தெரிந்தது. வாங்க வாங்க என்று உள்ளே அழைகாமல் “ஒரே தலைவலி, என்ன விஷயம்?” என்று வாசலில் நிற்க வைத்தே கேட்டாள் ராதிகா.

“கோவிலுக்கு வந்தேன். அப்படியே கொஞ்சம் டப்பர்வேர் டப்பாக்கள் வேண்டியிருந்தது. அதான்  வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றேன்.

“இருங்க கேட்லாக் எடுத்து வரேன்” என்று உள்ளே சென்று எடுத்து வந்தாள்.

முகம் வாடி வதங்கி இருந்தது. அவளிடம் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று முடிவுடன் வந்த நான் அவளின் சோகம் கப்பிய முகத்தைப் பார்த்ததும் ஏனோ வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. வாங்க வேண்டிய ஐட்டம்களை டிக் செய்து கேடலாகை திருப்பிக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.

“மாலதி, என்னங்க ஒண்ணும் கேக்காம கிளம்பறீங்க?”

“இல்லையே வேணுங்கற ஐட்டம் மார்க் பண்ணிடேங்க”

“ப்ச் அது பத்தி இல்லைங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்னு எனக்குத் தெரியும். என் வீட்டுக்காரர் உங்க வீட்டுக்காரரைப் பார்த்த விஷயம் சொல்லிட்டாரு. ஆனாலும் அதைப் பத்தி ஒண்ணுமே கேக்காம கிளம்பறீங்களே?

“ஆறுதல் சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனா நீங்க சாதாரணமா தான் இருக்கீங்க. எதுக்குக் கேட்டு உங்களை வருத்தப்பட வைக்கனும்னு கேட்கலை.”

“எப்படி இருந்தாலும் சீக்கிரம் எல்லாருக்கும் தெரியப் போகுது. நானே சொல்லிடறேன். என் பொண்ணு ஆபிஸ்ல ஒருத்தனை லவ் பண்றா. அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டா. யாருன்னு கேட்டீங்கன்னா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க மாலதி. அவங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிற கொரியா நாட்டு ஆளு.” சொல்லும்போதே அழ ஆரம்பித்து விட்டாள் ராதிகா.

என் மகள் திருமணத்தின் போது என்ன தான் என்னை சீண்டி எரிச்சல் படுத்தியவளாக இருந்தாலும் ராதிகா புடைவை தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுவதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.

“ஐயோ ராதிகா, எதுக்கு நல்ல செய்திக்குப் போய் அழறீங்க. இந்தக் காலத்துப் பசங்க நல்ல விவரம் தெரிஞ்சவங்க. அவங்க எடுக்கிற முடிவு எல்லாம் ரொம்ப சரியா இருக்கும். நாம தான் பத்தாம் பசலியா பழைய பஞ்சாங்கமா இருக்கக் கூடாது.”

“எப்படிங்க இப்படி சொல்றீங்க? நானே உங்களை எவ்வளவு கொடச்சல் கொடுத்திருப்பேன். அதை எல்லாம் மனசுல வெச்சிக்காம எனக்குத் தைரியம் சொல்றீங்க. ரொம்ப சாரிங்க. உங்க பொண்ணு அசைவ உணவை எப்படி ஏத்துப்பான்னு கேட்டேன். இப்போ என் பொண்ணு….” முடிக்காம திரும்ப அழ ஆரம்பித்தாள் ராதிகா.

“உண்மையிலேயே நீங்க அழறதை நிறுத்திட்டு அந்தப் பையனை பத்தி நல்லா விசாரியுங்க. நல்ல குணமான பிள்ளைன்னா வேற என்ன வேணுங்க? அவங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியா இருக்கணும் அதான் முக்கியம். பன்னாட்டு கம்பெனிகளின் வேலையும், அவர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களையும் வரவேற்கும் நமக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைகளையும் வரவேற்கும் பக்குவம் வேணும் ராதிகா. நீங்க இன்னிக்கு உங்க பொண்ணு வந்த பிறகு நல்லா உட்கார்ந்து பேசுங்க. அந்தப் பையனையும் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசுங்க. கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரமும் நம் கலாச்சாரத்தை ஒத்தது தான். பெரியவங்களுக்கு மரியாதை கொடுப்பதில் இருந்து அம்மா அப்பா என்று கூப்பிடுவது கூட கொரிய நாட்டவர்கள் நாம தமிழ்ல அம்மா அப்பான்னு கூப்பிடற மாதிரி தான் கூப்பிடுவாங்க.”

“உங்கள்ட்ட பேசினது ரொம்ப தைரியமா இருக்கு மாலதி. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. கடவுளா பார்த்து தான் உங்களை இங்கு அனுப்பி என்னுடன் பேச வெச்சிருக்கார்” ராதிகா வாசல் வரை வந்து சிரித்த முகத்துடன் வழி அனுப்பினாள்.

அவள் வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தது இந்துக் கடவுளா இருக்குமா கொரியக் கடவுளா இருக்குமா என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

cake

Photo courtesy from the sites below.

https://pixabay.com/en/indian-women-laughing-happy-323324/

http://katemcelweephotography.com/2012/01/best-of-2011-wedding-photography-reception-photos/

https://blog.itriagehealth.com/combat-high-grocery-bills-food-allergy/grocery-shopping-food-allergy/

http://trvramalingam.com/History.htm

11 Comments (+add yours?)

 1. GiRa ஜிரா
  Nov 06, 2015 @ 09:09:45

  அடுத்தவங்களுக்கு வர்ரப்போ இனிச்சது தனக்குன்னு வர்ரப்போ கசக்குது. இப்பவாச்சும் மாறியது நல்லதுதான்.

  புன்னகையை வரவழைத்த கடைசி வரி 🙂

  Reply

 2. amas32
  Nov 06, 2015 @ 16:31:13

  Thank you Gira 🙂

  Reply

 3. v.krishna kumar @chinnpiyan
  Nov 06, 2015 @ 17:03:30

  அருமை. கதை சுவாரஷ்யமா போச்சு. அதற்கு முக்கிய காரணம், கதை கருத்து மட்டுமல்ல, இடம்பெற்ற ரொம்ப ரொம்ப இயல்பான சம்பாஷணைகள்.
  கடைசி வரி ROFL :)) அது உங்களிடம் இயல்பா ஒளிந்திருக்கும் குறும்பு :))
  வாழ்த்துகள்

  Reply

 4. chinnapiyan
  Nov 06, 2015 @ 17:12:10

  மேலே சொன்ன என் கருத்தில என் டுவிட்டர் டிபி தெரியல. ஒருவேள மொபைலில் இருந்து சொன்னதால இருக்குமோ? சின்பையன் னு தப்பா வேறு அடிச்சிட்டேன :))

  Reply

 5. gowthami (@gow_sn)
  Nov 07, 2015 @ 08:56:35

  அடுத்தவர்களின் கஷ்டம் பார்த்து சிரிக்கும் பலருக்கு தனக்குன்னு வந்தா தான் தெரியுது, நடைமுறையில் உள்ளதை சொல்லும் உண்மையான கதை.வாழ்த்துக்கள்

  Reply

 6. Umesh Srinivasan
  Nov 08, 2015 @ 05:30:59

  அருமையான கதை. கடைசி வரி ட்ரேட்மார்க் பன்ச்.

  Reply

 7. உமா க்ருஷ் (@umakrishh)
  Nov 09, 2015 @ 18:17:57

  நீங்க எழுதிய கதைகளிலேயே இதைரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லுவேன்..நீங்க இதுக்கு முன்னாடி கோவிலில் புறம் பேசுற ஆளுங்க பத்தி ஒரு டிவிட்லான்கர் போட்டு இருந்தீங்க ஞாபகம் இருக்கு.அதுல கூட இது போல பொண்ணு மாப்பிள்ளை விசாரணை..அதனால இதைப் படிக்கும்போது நிஜமான நிகழ்வு மாதிரியே இருந்தது..சுருக்குன்னு குத்துனவங்கள திருப்பிக் குத்தியே ஆகணும்னு தோனும் ..அதை விட பெரிய தண்டனை இப்படி தைரியம் சொல்றது.. வள்ளுவர் சொன்ன மாதிரி இன்னா செய்தாரை ஒறுத்தல் ..நிஜமாகவே மனசாட்சி உள்ளவங்களா இருந்தா நிச்சயம் உறுத்தும்..
  முதல் கதைக்கும் இந்தக் கதைக்கும் நிறைய வேறுபாடு..மனமார்ந்த வாழ்த்துகள் ..:-)

  Reply

 8. Suseela
  Nov 11, 2015 @ 15:29:43

  👏

  Reply

 9. Anonymous
  Aug 15, 2016 @ 10:04:38

  நல்லா இருக்கு. வார்தைகள் நடை very good.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: