பசங்க -2 திரை விமர்சனம்

pasanga-2

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை எழுதியிருப்பார்,  ஜப்பான் காரன் எதையும் எக்செலண்டா செய்யப் பிரியப் படுவான், நமக்கு பையன் சுமாரா படிக்கிறான், சுமாரா விளையாடறான், சுமார இருப்பதே நமக்குப் போதும் என்ற மனநிலை தான் என்று. அது மாதிரி நல்ல ஒருக் கதைக் கருவை சுமாராக எடுப்பதில் வெற்றிப்பெற்றுள்ளார் பாண்டிராஜ்.

தாரே ஜமீன் பர் படத்தில் சிறுவனுக்கு டிஸ்லெக்சியா. இந்தப் படத்தில் வரும் ஒரு சிறுவன், சிறுமிக்கு ADHD – Attention deficit hyperactivity disorder. அதாவது ஓவர் துறுதுறுப்பு, அதே சமயம் படிப்பில் முழு கவனம் செலுத்திப் படிக்கவும் முடிவதில்லை அக்குழந்தைகளுக்கு. அதனால் பல பள்ளிகளில் இருந்து டிசி கொடுத்து அனுப்பப்பட்டுப் பந்தாடப் படுகிறார்கள். குழந்தைகள் இருவரும் சிறந்த தேர்வு! கவினாக நடிக்கும் நிஷேஷ், நயனாவாக நடிக்கும் தேஜஸ்வினி ஆகிய இருவரின் சேட்டைகள், குறும்புகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன. இந்த குழந்தைகளின் பெற்றோர்களாக கார்த்திக் குமார்- பிந்து மாதவி, முநீஸ்காந்த் ராமதாஸ்- வித்யா பிரதீப். குழந்தைகள் மன நல மருத்துவராக சூர்யா அவரின் மனைவியாக அமலாபால். அமலா பால், படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றில்லாத ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். சூர்யாவிடம் படம் முழுக்க வரும் உற்சாக சிரிப்பும், ஓவர் பாசிடிவ்நெஸ்சிலும் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. ‘ஒண்ணு சொல்லியே ஆகணும்னு’ இன்னும் டயலாக் பேசுவது எரிச்சலை ஊட்டுகிறது. அமலா பால் நன்றாகச் செய்திருக்கிறார். அதே போல முநீச்காந்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அரோல் கொரெலியின் இசை படத்தின் ஓட்டத்தோடு இணைந்து செல்கிறது. பாலசுப்பிரமணியத்தின் கேமிரா குழந்தைகளின் உலகத்தை வண்ண மயமாகக் காட்டுகிறது! குழந்தைகள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள், பெற்றோர்கள் அழைத்துச் செல்லவும்.

கடைசி அரை மணி நேரம் சொல்ல வந்ததை விசுவலாக பிரமாதமாகச் சொல்லியிருக்கிறார் பாண்டி ராஜ். அதுவரை இருக்கும் தொய்வினை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். படத்தின் பெரும்பாலானப் பகுதி குழந்தைகள் வளர்ப்பைப் பற்றியதாக இருப்பதால் நிறைய இடங்களில் வசனங்கள் அறிவுரையாக இருக்கின்றன.

வாட்சப்பில் வந்த பார்வேர்டை எல்லாம் சிறு கதைகளாக படத்தில் வைத்திருப்பது, சில ட்வீட்சை வசனமாக வைத்திருப்பது இவை எல்லாம் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் குழந்தைகளின் மனக் கோளாறுகளைப் பற்றி ஒரு விழிப்புணர்ச்சிப் படம் என்னும் வகையில் இப்படத்தை எடுத்ததற்காக பாண்டிராஜை மிகவும் பாராட்ட வேண்டும். வாழ்த்துகள்.

Pasanga-2-2

திருவடி சேவை – பகுதி -1

தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி!  அதுவே மோட்சம்!  அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை!

பக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம்.  பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் தான் இந்தப் பூமியைக் ‘கர்ம பூமி’  என்கிறார்கள்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் மாதிரி நாமும் பிறவிப் பெருங்கடலை தாண்டுவதற்கு எளிய வழி இறைவனின் திருவடியை பற்றுவதே ஆகும்.

இறைவனின் திருவடியைப் பற்றி பாடாத ஞானிகளே இல்லை. “நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்று அனைத்து மகான்களும் இறைவனை வேண்டுகின்றனர். நம்மை அறிய, இறைவனை உணர இறைவன் திருவடியையே பற்ற வேண்டும்.

திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்

வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார். அதனால் தான் நம் முன்னோர்கள் இதை உலக பொதுமறை என்று கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடையவில்லை எனில் நம்மை பிறவிகள் தொடரும் என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் திருவள்ளுவர்.

thiruvalluvar9

திருவள்ளுவர்

கடவுள் வாழ்த்து பகுதியில் அவர் எதை பற்றிக் கொண்டால் வீடு பேறு கிடைக்கும் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

10 வது குறளில்

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது என்கிறார் வள்ளுவர். இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்

“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
நற்றாள் தொழார் யெனின்”

நாம் என்னதான் கற்றாலும் நற்றாள் அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். இதே போல மீதி உள்ள குறள்களை பார்த்தாலும், ஏன் வள்ளுவர் இதை இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மிகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.

திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ல்

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”

இந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார், தாளை -இந்த சொற்களை கவனித்தால் இறைவன் திருவடியை (அ) மெய்பொருளை நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார் என்பது புரியும்.

இந்த திருவடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக அது காட்டிவிடும், அதாவது

பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி மீண்டும் பிறவா வரத்தையும் பெற்றுவிடலாம் என்கிறார்.

 

 

sivasakthi

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இறைவனை பற்றியும் அவனை அடையும் வழியை பற்றியும் மணி மணியாக தெரிவித்திருக்கிறார். திருவடி பெருமையை பற்றி மாணிக்கவாசகர், சிவ புராணத்தில் அவ்வளவு அழகாக சொல்கிறார்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்

பொருள்: திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக! ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவபிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின் கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின் கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக்கின்ற மலை போலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினை முழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்.

இதைவிட எளிமையாக, தெளிவாக, அற்புதமாக இறைவனின் திருவடி பெருமையை நமக்கு ஒருவர் விளக்க முடியாது.

thirumular

திருவடி பற்றி திருமூலர்

திருவடி யேசிவ மாவது தேரில்               
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் திருமூலர்.
திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!
எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி! இதுதான் மெய்பொருள்! இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்தில் என்கிறார் திருமூலர்.

திருநாவுக்கரசர், மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டு துவக்கத்தில் சமண சமயத்தில் இருந்தார். பின் சிவ பக்தனாக மாறினார். அதற்கு அவரை சமணர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கினார்கள். சுண்ணாம்பு காளவாயில் பிடித்துத் தள்ளினார்கள். சில மணி நேரம் கூட அதில் இருந்து பின் உயிருடன் தப்ப முடியாத நிலையில் சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீற்றறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்பதை இவ்வாறு கூறுகிறார்:

 மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

thirunavukarasar

குற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது. தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு இன்பம் நல்கியது. இறைவன் திருவடியை பற்றியோர்க்கு துன்பம் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.

 

Manikkavacakar

மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல்களும் திருவடி பெருமையை தான் போற்றுகின்றன. காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலா விநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல், முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப் பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை. இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த திருவடிகளைப் போற்றுவதில் முடியும்.

 

 

 

நமது திண்ணை என்னும் இணைய இதழில் டிசெம்பர் மாதம் தொடங்கிய தொடர் இது. அதன் சுட்டி இங்கே: https://namaduthinnai.wordpress.com/2015/12/14/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88dec2015/

பணமும் பாசமும் – சிறுகதை

 

flood1

‘அத்தை எதையாவது பிடிச்சிக்கங்க, யாராவது ஒடி வாங்களேன் எங்க அத்தையை காப்பாத்துங்களேன்” நிர்மலா அலறிக் கொண்டே இருக்கும் போதே பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் பணப்பெட்டியை கட்டிக்கொண்டே நிர்மலாவின் மாமியார் கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போனாள். விடாமல் பெய்த மழையினால் காய்ந்து வரண்டிருந்த பக்கத்தில் இருந்த ஆறு இவ்வளவு வேகமாக வெள்ளமாக மாறும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் கொஞ்சம் தண்ணீர் வீட்டிற்குள் வந்தவுடனேயே நிர்மலா தன் மாமியாரை மாடிக்கு அழைத்துச் செல்ல முயன்ற வரை கெஞ்சிப் பார்த்தாள். “வந்திடுங்க அத்தை. அப்புறம் பீரோவை திறக்கலாம். தண்ணி வேகமா ஏறுது.”

“இருடி வரேன். உனக்கென்னடி தெரியும் பணத்தோட அருமை” அதான் அவள் சொன்ன கடைசி வார்த்தை. பீரோவில் இருந்த பணத்தையும் நகைகளையும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டிருக்கும்போதே கரை புரண்டு வேகமாக வந்த தண்ணீர் அவரை அப்படியே அடித்துச் சென்றது. தண்ணீருக்கு தான் இத்தனை சக்தியா? அத்தை எங்கே? மாடியின் மேல் படியில் நின்றிருந்த நிர்மலா அப்படியே சரிந்து உட்கார்ந்தாள்.

‘மருந்துக்கு எவ்வளவு ஆச்ச?’

‘780ரூபா அத்தை.’

‘மீதி இருபது ரூபா எங்க?’

‘இருங்க அத்தை கொடுக்கறேன். கை வேலையா இருக்கேன் இல்ல.’

‘அப்புறம் மறந்து போயிடுவ. இப்பவே கொடு. நேத்து வாசல்ல கீரக்காரிக்கிட்ட இருபது ரூபாய்க்கு கீரை வாங்கினேன். அதுவே நீ இன்னும் திருப்பிக் கொடுக்கலை. போன மாசம் மருந்துக்கு 750ரூபாய் தானே ஆச்சு, ஏன் முப்பது ரூபா அதிகம் இந்த மாசம்?’

“உங்க மருந்துல ஏதோ ஒண்ணு விலை ஏறி இருக்காம் அத்தை. பில்லைப் பாருங்க. மெடிகல்ச்லையே சொன்னாங்க.”

“சரி, அந்தப் பூஜை ரூம் லைட்டை அணைச்சிட்டுப் போ. சாமி கும்பிட்ட பிறகு லைட்டை அணைக்கனும்னு கூட பிள்ளைங்களுக்குச் சொல்லித் தரர்தில்லை. லைட்டு காலையில் போட்டது. இன்னும் எரியுது. என்ன குடும்பம் நடத்தறியோ?”

grandma2

இந்தக் கிழவியுடன் தினம் இதே போராட்டம் தான் நிர்மலாவிற்கு. பணத்தோடே சாகும் மாமியார். மாமியார் ஒரு கோடீசுவரி. அந்த வீடு மட்டுமே ஒரு கோடி தேறும். வங்கியிலும் வைப்பு நிதி இருக்கு. ஆனால் விருந்தினர் வந்தால் கூட அரை லிட்டர் பால் அதிகமா வாங்கக் கூடாது. இருப்பதை வைத்தே சமாளிக்கணும். கடைசியில் நிர்மலாவுக்குத் தான் காபியோ மோரோ இருக்காது.

இடுப்பில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் இருக்கும் போது கார்கில் போரில் நிர்மலாவின் கணவன் கேப்டன் ராஜேந்திரன் இறந்து விட்டான். கணவன் இறந்த உடனே அவளால் வேலைக்குப் போக முடியவில்லை. மகனைப் பெற்றெடுத்து, மூத்த மகளையும் கைக்குழந்தையையும் பராமரிப்பதிலேயே முதல் சில வருடங்கள் கழிந்தன. கொஞ்ச காலத்திலேயே மகன் போன துக்கத்தில் மாமனார் படுத்தப் படுக்கை ஆனார். அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் வேலைக்குப் போகும் முயற்சியையும் கை விட்டாள். மாமனார் மிகவும் நல்லவர். ராஜேந்திரன் இறந்த உடனேயே, “நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் மா. எங்களுக்குப் பொண்ணு இல்ல. இனிமே நீ தான் எங்க மக. காசு பணத்துக்கு ஒன்னும் பஞ்சமில்லை. நீ வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால் அதுவே போதும் மா” என்று சொன்னார். அவர் இருந்த வரை வீட்டு நிர்வாகத்துக்கு அவளிடமே பணத்தைக் கொடுப்பார். அவள் பென்ஷன் பணத்தைத் தொட வேண்டிய அவசியமே வரவில்லை. அவர் இறந்த பிறகு எல்லாம் தலை கீழாக மாறியது.

அவள் மகன் இறந்ததற்கே நிர்மலாவின் ஜாதகம் தான் காரணம் என்று கருவிக் கொண்டிருந்த மாமியாருக்கு கணவன் இறந்த பிறகு கட்டுப்படுத்த யாரும் இல்லை என்பதால் கோபம் அனைத்தையும் மருமகள் மேல் கொட்ட ஆரம்பித்தாள்.

housewife

நிர்மலாவின் பென்ஷன் பணத்தில் தான் வீட்டுச் செலவு அத்தனையும் என்று நிலைமை மாறியது. ‘இந்த வீட்டில வாடகைக் கொடுத்தா இருக்க? பென்ஷன் பணத்தை எடுத்து செலவழிக்க இவ்வளவு யோசிக்கற” என்பாள். மாமியாரின் மருந்து செலவுக்கு மட்டுமாவது அவள் தன் சொந்தப் பணத்தைக் கொடுக்கிறாளே என்று தேற்றிக் கொள்வாள் நிர்மலா.

மகனே போய் விட்டான். அவன் போகும்போது எதையுமே கொண்டு போகவில்லை. அனால் அந்த உணர்வு கொஞ்சமும் இல்லை நிர்மலாவின் மாமியாருக்கு. தன் வைரத் தோட்டையும் மூக்குத்தியையும் எப்பவாவது கழட்டினால் கூட பிரோவில் பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள். நகையும் பணமுமே அவள் உயிர் நாடி.

வேலைக்குப் போகாதது அவள் செய்த பெரும் தவறு என்று நிர்மலா இப்பொழுது உணர்ந்தாள். பென்ஷன் பணம் அவளின் இன்றைய தேவைகளுக்குக் கொஞ்சமும் போதவில்லை. குழந்தைகள் ஸ்கூல் பீஸ் கட்டுவதில் இருந்து துணி மணி வாங்குவது வரை மாமியார் கையை எதிர்ப்பார்த்தே இருக்க வேண்டியிருந்தது. குழந்தைகளும் பாட்டி வாங்கித் தரும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அவளிடமே அதிகம் ஒட்டுதலுடன் இருந்தன.

“பாட்டி, நீ போட்டிருக்கிற இந்த செயின் நான் காலேஜ் போறச்சே எனக்குப் போட்டுக்கக் கொடுப்பியா”

“அடி போடி. நீயே டிக்ரீ பாஸ் பண்ணி வேலைக்குப் போய் வாங்கிக்க”

“ஏன் பாட்டி, எப்படி இருந்தாலும் எனக்கு தானே வரும். நான் தானே உன் ஒரே பேத்தி?” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அன்று நிர்மலாவின் மகள் ஓடிவிட்டாள்.

ஆனால் கிழவி தான் உயிராக மதித்த பணம் நகையோடு தான் ஜல சமாதி ஆகியிருக்கிறாள். யாருக்கும் கொடுக்காமல் தன்னோடே எடுத்துக் கொண்ட சென்ற நகையும் பணமும் சாவிலாவது அவளுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

தண்ணீர் வடிய ஒரு நாள் ஆகியது. மெல்ல மூவரும் இறங்கி வந்தனர். கொலைப் பசி. குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிப் போயிருந்தது. கண்ணெதிரே அவர்களின் பாட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

தண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது. மெல்ல இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குழந்தைகளுக்குச் சாப்பிட வாங்கிக் கொடுக்க என்ன செய்யலாம் என்று கேட்டைத் திறக்க வருகையில் வேப்ப மரத்தடியில் அவள் பார்வை சென்றது. என்ன அது, அத்தையின் நகைப் பெட்டி மாதிரி உள்ளதே என்று அருகில் சென்று பார்த்தாள். அவள் மாமியாரின் நகைப் பெட்டியே தான். அழுத்தி மூடியிருந்த தாழ்பாளை திறந்தாள். உள்ளே நகைகளும் பணமும் ஈரமாகக் காட்சியளித்தன. இது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வெளியே வந்தது நிர்மலாவிற்கு. மரத்தைப் பிடித்துக் கொண்டு தன் மாமியாரின் மறைவுக்காகக் கதறி அழுதாள்.

moneybox

மாமியாரைப் பொறுத்த வரை அவளைக் காப்பாற்ற வேண்டிய மகன் அவளுக்கு முன்னே போய்விட்டான், அதைத் தொடர்ந்து அவள் கணவனும். வேலைக்குப் போகாத மருமகள், படித்து முன்னேற்ற வேண்டிய பேரக் குழந்தைகள், இவர்களை கண் முன்னே பார்ப்பது தான் அவளை பணத்துடன் ஐக்கியமாகி இருப்பவளாக ஆக்கியிருக்குமோ? வேதனையில் நிர்மலா மனம் எண்ணியது.

பெட்டியையும் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டே தெருவுக்கு வந்த நிர்மலாவை தூரத்தில் ஒருவர் கைக் காட்டி அழைப்பது தெரிந்தது. “அம்மா உங்க வீட்டு ஆயா ஒரு கிலோமீட்டர் தள்ளி ஒரு மரத்து மேலே உட்கார்ந்திருந்திச்சு. அந்தப் பக்கத்துல யாரோ காப்பாத்தி இருக்காங்க. கவலைப் படாம இருங்க. கொஞ்ச நேரத்தில் கூட்டியாந்திடுவாங்க” என்று உரக்கக் கத்தினார். குழந்தைகள் அவளைக் கட்டிக் கொண்டு பெரிதாக மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ஒரு தன்னார்வலத் தொண்டர் குழந்தைகள் கையில் பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் தண்ணி பாட்டில்களையும் கொடுத்து விட்டுப் போனார். வாழ்க்கை அழகு தான்!

photo courtesy from the websites below, with thanks.

https://www.pinterest.com/pin/563653709589924482/

http://www.vkartgallery.com/paintings-detail/508-intazaar

https://wanelo.com/shop/vintage-money-box

http://www.azgs.az.gov/hazards_floods.shtml

உப்பு கருவாடு – திரை விமர்சனம்

uppukaruvadu

கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற பார்த்திபன் இயக்கிய படத்தின் இன்னொரு பதிப்பு தான் உப்பு கருவாடு. ஆனால் நாடக பாணியில் வெறும் துணுக்குத் தோரணமாக அமைந்துள்ளது இப்படம். இரண்டு கோடிக்குள் படம் எடுக்க வேண்டும் என்பது இந்தப் படக் கதையின் கதைக்குள் வரும் படத்தை எடுப்பதில் ஒரு கண்டிஷன். அதுவே இந்தப் படத்துக்கும் இருந்திருக்கும் என்று நன்றாகத் தெரிகிறது. சிறிய பட்ஜெட் படம் தவறே இல்லை. இன்னும் சொல்லப் போனால் நஷ்டத்தைத் தடுக்க முதல் படி செலவை குறைப்பது தான். ஆனால் திரைக் கதையில் சுவாரசியமே இல்லாமல் ஒரு படம் எடுத்தால்? இடைவேளையின் போது எழுந்து போய்விடலாமா என்றளவில் இருந்தது படம். ராதா மோகன் படம் என்று நம்பிப் போனேன்!

கருணாகரன் தான் படத்தின் கதாநாயகன். கொடுத்த ரோலை நன்றாக செய்துள்ளார். நாயகி நந்திதா. அசட்டு கதாப் பாத்திரத்துக்கு நன்றாக செட் ஆகிறார். இளங்கோ குமாரவேல், ராதா மோகன் படங்களின் அத்தியாவசிய நடிகர், நன்றாக நடித்துள்ளார்.  ஆனால் ஒரே மாதிரி கேரக்டர் ரோலில் அவரை திரும்பத் திரும்பப் பார்க்க அலுப்பாக உள்ளது.

எம்.எஸ்.பாஸ்கர் தான் மீன் வியாபார காந்தம். அவர் தான் மகளை ஹீரோயின் ஆக்கப் படம் எடுக்கிறார் . அதை செயல்படுத்த, எப்படியாவது ஒரு படத்தை நன்றாக எடுத்துப் பேர் வாங்கத் துடிக்கும் கருணாகரன் மாட்டுகிறார். அவர்கள் டீம் செய்யும் மொக்க ஸ்டோரி டிஸ்கஷன் தான் முக்கால் வாசிப் படம். இப்படி ஸ்டோரி டிஸ்கஷன் செய்யும் போது அவர்கள் வைக்கும் சீனில் உள்ள ஓட்டைகளைக் காட்டும் கேரக்டராக வரும் இளங்கோ குமாரவேல் மாதிரி ராதா மோகனுக்கு நிஜத்தில் யாரும் கிடைக்கவில்லை என்பதே பரிதாபம்.

பாப்பாரப் பேச்சுடன் மீன் குழம்பையும் சுறா புட்டையும் வெட்டும் கேரக்டராக சாம்ஸ். மயில்சாமிக்கு நீண்ட பாத்திரம். படம் முழுவதும் வருகிறார். இந்தப் படத்தின் சர்ப்ரைஸ் கேரக்டர் ஆதித்தியா டிவியின் டேடி எனக்கொரு டவுட்டு செந்தில் 🙂 ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். சிரிப்பை வரவழைக்கும் இவரின் டயலாக் டெலிவரியும் அவருக்கான வசனங்களும் படத்தின் பெரும் ஆறுதல்! இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா டைப்பில் அவர் ரோல் நன்று 🙂

குறும்படமாக எடுத்திருக்க வேண்டியதை இரண்டு மணி இருபது நிமிடங்களா நீட்டி நம்மை சோதித்து விட்டார் ராதா மோகன். சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம். அவ்வாறு செய்யாமல் வெறும் பேச்சு பேச்சு என்றே படத்தை நகர்த்தியிருப்பது ஆயாசத்தைத் தருகிறது. கேரக்டர்கள் நன்றாக செதுக்கப் பட்டிருந்தன. நல்ல நடிகர்கள். இருந்தும் கருவாடே இல்லாமல்  வெறும் உப்பைத் தொட்டுக் கொண்டு என்ன செய்வான் ரசிகன் பாவம்?

Uppu-Karuvadu-Movie-Posters-11-320x180

Aside