‘அத்தை எதையாவது பிடிச்சிக்கங்க, யாராவது ஒடி வாங்களேன் எங்க அத்தையை காப்பாத்துங்களேன்” நிர்மலா அலறிக் கொண்டே இருக்கும் போதே பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் பணப்பெட்டியை கட்டிக்கொண்டே நிர்மலாவின் மாமியார் கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போனாள். விடாமல் பெய்த மழையினால் காய்ந்து வரண்டிருந்த பக்கத்தில் இருந்த ஆறு இவ்வளவு வேகமாக வெள்ளமாக மாறும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் கொஞ்சம் தண்ணீர் வீட்டிற்குள் வந்தவுடனேயே நிர்மலா தன் மாமியாரை மாடிக்கு அழைத்துச் செல்ல முயன்ற வரை கெஞ்சிப் பார்த்தாள். “வந்திடுங்க அத்தை. அப்புறம் பீரோவை திறக்கலாம். தண்ணி வேகமா ஏறுது.”
“இருடி வரேன். உனக்கென்னடி தெரியும் பணத்தோட அருமை” அதான் அவள் சொன்ன கடைசி வார்த்தை. பீரோவில் இருந்த பணத்தையும் நகைகளையும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டிருக்கும்போதே கரை புரண்டு வேகமாக வந்த தண்ணீர் அவரை அப்படியே அடித்துச் சென்றது. தண்ணீருக்கு தான் இத்தனை சக்தியா? அத்தை எங்கே? மாடியின் மேல் படியில் நின்றிருந்த நிர்மலா அப்படியே சரிந்து உட்கார்ந்தாள்.
‘மருந்துக்கு எவ்வளவு ஆச்ச?’
‘780ரூபா அத்தை.’
‘மீதி இருபது ரூபா எங்க?’
‘இருங்க அத்தை கொடுக்கறேன். கை வேலையா இருக்கேன் இல்ல.’
‘அப்புறம் மறந்து போயிடுவ. இப்பவே கொடு. நேத்து வாசல்ல கீரக்காரிக்கிட்ட இருபது ரூபாய்க்கு கீரை வாங்கினேன். அதுவே நீ இன்னும் திருப்பிக் கொடுக்கலை. போன மாசம் மருந்துக்கு 750ரூபாய் தானே ஆச்சு, ஏன் முப்பது ரூபா அதிகம் இந்த மாசம்?’
“உங்க மருந்துல ஏதோ ஒண்ணு விலை ஏறி இருக்காம் அத்தை. பில்லைப் பாருங்க. மெடிகல்ச்லையே சொன்னாங்க.”
“சரி, அந்தப் பூஜை ரூம் லைட்டை அணைச்சிட்டுப் போ. சாமி கும்பிட்ட பிறகு லைட்டை அணைக்கனும்னு கூட பிள்ளைங்களுக்குச் சொல்லித் தரர்தில்லை. லைட்டு காலையில் போட்டது. இன்னும் எரியுது. என்ன குடும்பம் நடத்தறியோ?”
இந்தக் கிழவியுடன் தினம் இதே போராட்டம் தான் நிர்மலாவிற்கு. பணத்தோடே சாகும் மாமியார். மாமியார் ஒரு கோடீசுவரி. அந்த வீடு மட்டுமே ஒரு கோடி தேறும். வங்கியிலும் வைப்பு நிதி இருக்கு. ஆனால் விருந்தினர் வந்தால் கூட அரை லிட்டர் பால் அதிகமா வாங்கக் கூடாது. இருப்பதை வைத்தே சமாளிக்கணும். கடைசியில் நிர்மலாவுக்குத் தான் காபியோ மோரோ இருக்காது.
இடுப்பில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் இருக்கும் போது கார்கில் போரில் நிர்மலாவின் கணவன் கேப்டன் ராஜேந்திரன் இறந்து விட்டான். கணவன் இறந்த உடனே அவளால் வேலைக்குப் போக முடியவில்லை. மகனைப் பெற்றெடுத்து, மூத்த மகளையும் கைக்குழந்தையையும் பராமரிப்பதிலேயே முதல் சில வருடங்கள் கழிந்தன. கொஞ்ச காலத்திலேயே மகன் போன துக்கத்தில் மாமனார் படுத்தப் படுக்கை ஆனார். அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் வேலைக்குப் போகும் முயற்சியையும் கை விட்டாள். மாமனார் மிகவும் நல்லவர். ராஜேந்திரன் இறந்த உடனேயே, “நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் மா. எங்களுக்குப் பொண்ணு இல்ல. இனிமே நீ தான் எங்க மக. காசு பணத்துக்கு ஒன்னும் பஞ்சமில்லை. நீ வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால் அதுவே போதும் மா” என்று சொன்னார். அவர் இருந்த வரை வீட்டு நிர்வாகத்துக்கு அவளிடமே பணத்தைக் கொடுப்பார். அவள் பென்ஷன் பணத்தைத் தொட வேண்டிய அவசியமே வரவில்லை. அவர் இறந்த பிறகு எல்லாம் தலை கீழாக மாறியது.
அவள் மகன் இறந்ததற்கே நிர்மலாவின் ஜாதகம் தான் காரணம் என்று கருவிக் கொண்டிருந்த மாமியாருக்கு கணவன் இறந்த பிறகு கட்டுப்படுத்த யாரும் இல்லை என்பதால் கோபம் அனைத்தையும் மருமகள் மேல் கொட்ட ஆரம்பித்தாள்.
நிர்மலாவின் பென்ஷன் பணத்தில் தான் வீட்டுச் செலவு அத்தனையும் என்று நிலைமை மாறியது. ‘இந்த வீட்டில வாடகைக் கொடுத்தா இருக்க? பென்ஷன் பணத்தை எடுத்து செலவழிக்க இவ்வளவு யோசிக்கற” என்பாள். மாமியாரின் மருந்து செலவுக்கு மட்டுமாவது அவள் தன் சொந்தப் பணத்தைக் கொடுக்கிறாளே என்று தேற்றிக் கொள்வாள் நிர்மலா.
மகனே போய் விட்டான். அவன் போகும்போது எதையுமே கொண்டு போகவில்லை. அனால் அந்த உணர்வு கொஞ்சமும் இல்லை நிர்மலாவின் மாமியாருக்கு. தன் வைரத் தோட்டையும் மூக்குத்தியையும் எப்பவாவது கழட்டினால் கூட பிரோவில் பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள். நகையும் பணமுமே அவள் உயிர் நாடி.
வேலைக்குப் போகாதது அவள் செய்த பெரும் தவறு என்று நிர்மலா இப்பொழுது உணர்ந்தாள். பென்ஷன் பணம் அவளின் இன்றைய தேவைகளுக்குக் கொஞ்சமும் போதவில்லை. குழந்தைகள் ஸ்கூல் பீஸ் கட்டுவதில் இருந்து துணி மணி வாங்குவது வரை மாமியார் கையை எதிர்ப்பார்த்தே இருக்க வேண்டியிருந்தது. குழந்தைகளும் பாட்டி வாங்கித் தரும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அவளிடமே அதிகம் ஒட்டுதலுடன் இருந்தன.
“பாட்டி, நீ போட்டிருக்கிற இந்த செயின் நான் காலேஜ் போறச்சே எனக்குப் போட்டுக்கக் கொடுப்பியா”
“அடி போடி. நீயே டிக்ரீ பாஸ் பண்ணி வேலைக்குப் போய் வாங்கிக்க”
“ஏன் பாட்டி, எப்படி இருந்தாலும் எனக்கு தானே வரும். நான் தானே உன் ஒரே பேத்தி?” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அன்று நிர்மலாவின் மகள் ஓடிவிட்டாள்.
ஆனால் கிழவி தான் உயிராக மதித்த பணம் நகையோடு தான் ஜல சமாதி ஆகியிருக்கிறாள். யாருக்கும் கொடுக்காமல் தன்னோடே எடுத்துக் கொண்ட சென்ற நகையும் பணமும் சாவிலாவது அவளுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.
தண்ணீர் வடிய ஒரு நாள் ஆகியது. மெல்ல மூவரும் இறங்கி வந்தனர். கொலைப் பசி. குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிப் போயிருந்தது. கண்ணெதிரே அவர்களின் பாட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
தண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது. மெல்ல இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குழந்தைகளுக்குச் சாப்பிட வாங்கிக் கொடுக்க என்ன செய்யலாம் என்று கேட்டைத் திறக்க வருகையில் வேப்ப மரத்தடியில் அவள் பார்வை சென்றது. என்ன அது, அத்தையின் நகைப் பெட்டி மாதிரி உள்ளதே என்று அருகில் சென்று பார்த்தாள். அவள் மாமியாரின் நகைப் பெட்டியே தான். அழுத்தி மூடியிருந்த தாழ்பாளை திறந்தாள். உள்ளே நகைகளும் பணமும் ஈரமாகக் காட்சியளித்தன. இது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வெளியே வந்தது நிர்மலாவிற்கு. மரத்தைப் பிடித்துக் கொண்டு தன் மாமியாரின் மறைவுக்காகக் கதறி அழுதாள்.
மாமியாரைப் பொறுத்த வரை அவளைக் காப்பாற்ற வேண்டிய மகன் அவளுக்கு முன்னே போய்விட்டான், அதைத் தொடர்ந்து அவள் கணவனும். வேலைக்குப் போகாத மருமகள், படித்து முன்னேற்ற வேண்டிய பேரக் குழந்தைகள், இவர்களை கண் முன்னே பார்ப்பது தான் அவளை பணத்துடன் ஐக்கியமாகி இருப்பவளாக ஆக்கியிருக்குமோ? வேதனையில் நிர்மலா மனம் எண்ணியது.
பெட்டியையும் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டே தெருவுக்கு வந்த நிர்மலாவை தூரத்தில் ஒருவர் கைக் காட்டி அழைப்பது தெரிந்தது. “அம்மா உங்க வீட்டு ஆயா ஒரு கிலோமீட்டர் தள்ளி ஒரு மரத்து மேலே உட்கார்ந்திருந்திச்சு. அந்தப் பக்கத்துல யாரோ காப்பாத்தி இருக்காங்க. கவலைப் படாம இருங்க. கொஞ்ச நேரத்தில் கூட்டியாந்திடுவாங்க” என்று உரக்கக் கத்தினார். குழந்தைகள் அவளைக் கட்டிக் கொண்டு பெரிதாக மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
ஒரு தன்னார்வலத் தொண்டர் குழந்தைகள் கையில் பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் தண்ணி பாட்டில்களையும் கொடுத்து விட்டுப் போனார். வாழ்க்கை அழகு தான்!
photo courtesy from the websites below, with thanks.
https://www.pinterest.com/pin/563653709589924482/
http://www.vkartgallery.com/paintings-detail/508-intazaar
Dec 12, 2015 @ 06:02:02
வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது.
பாத்திரப்படைப்புகள் அருமை. நகைகள் காணாமல் போய் மாமியார் மட்டும் பிழைத்திருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
Dec 12, 2015 @ 11:37:52
:-} அப்படியும் யோசிக்கலாம் :-}
Dec 12, 2015 @ 08:12:42
ஆயா ஜலசமாதி ஆகியிருக்கும்னு பார்த்தால் கடைசியில இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே?
Dec 12, 2015 @ 11:38:07
ha ha ha
Dec 21, 2015 @ 17:11:14
ஹா ஹா ஹா :))
Dec 12, 2015 @ 14:51:11
pengalin semippum , paasamume kudumbathin pakkabalam enbathai unarthugirathu…
Dec 12, 2015 @ 15:42:48
thank you :-}
Dec 13, 2015 @ 16:48:10
கதாசிரியர் நன்றாக கதையை நகர்த்தியிருக்கிறார். இப்படிச் செய்திருக்கலாம்
அப்படிச் செய்திருக்கலாம் என்று வாசகன் நிலையில் தோன்றலாம். எனக்கும் தோன்றியது
இப்படி முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று!
மாமியார் பிழைக்க மருமகளே உதவியதாகவும் தாம் காப்பாற்றப்பட்ட பிறகு மருமகளிடம்
தன் தவறை உணர்ந்து திருந்தியதாகக் காட்டியிருக்கலாம்.
மருமகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்தபிறகு “வெள்ளத்தோட அடிச்சிட்டுப் போயிருந்தா
உங்களையெல்லாம் பிரிஞ்சிருப்பேன். கடந்தகாலத்தில் இருந்தமாதிரி நான் இருக்க மாட்டேன்.
இனிமே நான் புது மனுசியா இருப்பேன்னு” சொல்லி முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
ஒரு மெசேஜ் உங்களால் ஸ்ட்ராங்க்கா சொல்லப்பட்டிருக்குமோ என்று எனக்குத் தோன்றியது.
ஆனாலும் காதாசிரியர் இதையெல்லாம் குழப்பிக்கொள்ளவேண்டியதில்லை; இது என் கருத்துமட்டுமே!
Dec 14, 2015 @ 02:33:11
அருமையான கருத்து. ரொம்ப நன்றி. மாமியாரின் பிறவிக் குணம் கஞ்சத்தனம் என்று ஒரு வரி எழுதியிருக்கணும். இவ்வளவு விவரமா பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி.
Dec 15, 2015 @ 01:44:13
கதை சொல்லல் உங்களுக்கு இயல்பாகவே வருது. நல்ல எளிமையான நடையில் , குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் சம்பாஷனைகளுடன் சுவாரஸ்யமாக செல்கிறது. ஆனால் கதையை முடிப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டுளதாக தெரிவது எனக்கு மட்டும்தானா?
நகையும் பணமும் கிடைத்துவிடுகிறது. அத்தையும் உயிரோடு இருப்பதும் தெரிந்து விடுகிறது. இதனால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிர்மலாவுக்கு என்ன பயம். அதே பழைய வாழ்கைதானே. அத்தை குணம் மாறி திருந்திவிட்டாளா? மறுமலர்ச்சி, ஒரு விடிவு என்று ஏதேனும் காணலியே.
ஏதோ என் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன். குற்றம் சொல்கிறேன் என்று என்ன வேண்டாம் . வாழ்த்துகள் நன்றி :))
Dec 15, 2015 @ 02:21:47
இல்லை, பலரும் சொன்ன கருத்து இது. தவறில்லை. ஆனால் அவள் வாழ்க்கையில் மாற்றம் இல்லை. தன்னை தான் மாற்றிக் கொள்ள வேண்டும். அதைத் தான் அவள் எண்ணமாக இங்கே சொல்லியுள்ளேன்.
//மாமியாரைப் பொறுத்த வரை அவளைக் காப்பாற்ற வேண்டிய மகன் அவளுக்கு முன்னே போய்விட்டான், அதைத் தொடர்ந்து அவள் கணவனும். வேலைக்குப் போகாத மருமகள், படித்து முன்னேற்ற வேண்டிய பேரக் குழந்தைகள், இவர்களை கண் முன்னே பார்ப்பது தான் அவளை பணத்துடன் ஐக்கியமாகி இருப்பவளாக ஆக்கியிருக்குமோ? வேதனையில் நிர்மலா மனம் எண்ணியது.//
துன்பப்படுபவர் வாழ்க்கை மாற வேண்டும் என்று நினைப்பது நம் இயல்பு. ஆனால் எல்லா சமயமும் அது நடக்கிறதா? எது நடந்தாலும் பல சமயங்களில் மாமியார்கள் மாறுவதில்லை, அல்லது மருமகள்கள் மாறுவதில்லை.
எப்பவும் போல உங்கள் அருமையான கருத்துக்கு ரொம்ப நன்றி :-}
Dec 15, 2015 @ 02:39:48
இப்ப புரிஞ்சிக்கிட்டேன் இப்ப புரிஞ்சிக்கிட்டேன் :))
என்னதான் இருந்தாலும் கணவனையும் மகனையும் இழந்த ஒரு வயதான முதுமையடைந்த தாயை கவனித்துக்கொள்ளவேண்டியது மருமகள் நிர்மலாவின் கடமை என்ற உன்னதமான கருத்தை சொல்லியுள்ளீர்கள். எனக்குத்தான் விவரம் பத்தல :))
அந்த அத்தை, உன்னை விட்டால் எனக்கு கதியில்லை, என்னைவிட்டால் உனக்கு கதியில்லை என்று எண்ணாமல், வேலைஏவுவது, எதெற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது போன்ற இம்சைகள்தான் ஜாபகத்துக்கு வந்து தொலைக்கிறது 🙂
நன்றி வாழ்த்துகள் :))
Dec 15, 2015 @ 02:56:26
மிக்க நன்றி சின்னப் பையர் :-}}
Dec 21, 2015 @ 17:17:16
சின்னப் பையன் அவர்களுடைய குழப்பம் எனக்கும் வந்தது..கதை ஒரு flow வா வந்தது..முடிவு இன்னமும் அழுத்தமா இருந்திருக்கலாம்…மாமியாரின் கஞ்சத்தனங்கள் யாவும் இவளின் நலன் பொருட்டே எனும் வகையில் ஏதேனும் ஆதாரம் அவளுக்கு மாமியார் இல்லாத இடத்தில் கிடைக்குமோ அது குறித்து நிர்மலா தவறாக நினைத்த மாமியாரை பின் நினைத்து வருந்துவாளோ இப்படி..
அல்லது மாமியார் எவ்வளவு சேர்த்து வச்சிருந்தாலும் இறுதியில் அது துணைக்கு வராது என உணர்ந்துவாரோ என..மருமகளே ,மாமியார் பற்றி நினைப்பது சொல்லி இருந்தாலும் அதை இன்னமும் அழுத்தமான வரிகளில் தனக்கான சமாதானமா சொல்லிருந்தா நல்லா இருந்திருக்கும்..அவங்களும் திருந்தல இவளும் மாறல..அட்லீஸ்ட் திட்டிகிட்டேயாவது நமக்கு ஒரு உறவு இருந்ததே அவங்க திரும்பி வராங்க எனவும் பழைய வாழ்க்கையே எனிலும் அதுவும் ஒரு ஆசுவாசத்தோடு திரும்ப தொடர்வது போல..இப்படி..தோனுச்சு
Dec 24, 2015 @ 10:10:37
கதை,பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்தேன்.கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எப்படி இருப்பார்களோ,அப்படித்தான் இருக்கிறார்கள்.சிறு கதையின் நோக்கம் நீதி சொல்வதல்ல.இப்படிப் பட்ட மனிதர்கள் இப்படி நடந்துகொண்டார்கள்.அவ்வளவே. கதை என்று தோன்றாதவாறு சொல்லி இருப்பது சிறப்பு.
Dec 25, 2015 @ 01:54:59
நன்றி உமா, ராஜசுப்பிரமனியன் :-}