திருவடி சேவை – பகுதி -1

தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி!  அதுவே மோட்சம்!  அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை!

பக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம்.  பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் தான் இந்தப் பூமியைக் ‘கர்ம பூமி’  என்கிறார்கள்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் மாதிரி நாமும் பிறவிப் பெருங்கடலை தாண்டுவதற்கு எளிய வழி இறைவனின் திருவடியை பற்றுவதே ஆகும்.

இறைவனின் திருவடியைப் பற்றி பாடாத ஞானிகளே இல்லை. “நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்று அனைத்து மகான்களும் இறைவனை வேண்டுகின்றனர். நம்மை அறிய, இறைவனை உணர இறைவன் திருவடியையே பற்ற வேண்டும்.

திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்

வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார். அதனால் தான் நம் முன்னோர்கள் இதை உலக பொதுமறை என்று கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடையவில்லை எனில் நம்மை பிறவிகள் தொடரும் என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் திருவள்ளுவர்.

thiruvalluvar9

திருவள்ளுவர்

கடவுள் வாழ்த்து பகுதியில் அவர் எதை பற்றிக் கொண்டால் வீடு பேறு கிடைக்கும் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

10 வது குறளில்

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது என்கிறார் வள்ளுவர். இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்

“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
நற்றாள் தொழார் யெனின்”

நாம் என்னதான் கற்றாலும் நற்றாள் அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். இதே போல மீதி உள்ள குறள்களை பார்த்தாலும், ஏன் வள்ளுவர் இதை இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மிகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.

திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ல்

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”

இந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார், தாளை -இந்த சொற்களை கவனித்தால் இறைவன் திருவடியை (அ) மெய்பொருளை நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார் என்பது புரியும்.

இந்த திருவடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக அது காட்டிவிடும், அதாவது

பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி மீண்டும் பிறவா வரத்தையும் பெற்றுவிடலாம் என்கிறார்.

 

 

sivasakthi

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இறைவனை பற்றியும் அவனை அடையும் வழியை பற்றியும் மணி மணியாக தெரிவித்திருக்கிறார். திருவடி பெருமையை பற்றி மாணிக்கவாசகர், சிவ புராணத்தில் அவ்வளவு அழகாக சொல்கிறார்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்

பொருள்: திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக! ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவபிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின் கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின் கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக்கின்ற மலை போலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினை முழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்.

இதைவிட எளிமையாக, தெளிவாக, அற்புதமாக இறைவனின் திருவடி பெருமையை நமக்கு ஒருவர் விளக்க முடியாது.

thirumular

திருவடி பற்றி திருமூலர்

திருவடி யேசிவ மாவது தேரில்               
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் திருமூலர்.
திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!
எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி! இதுதான் மெய்பொருள்! இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்தில் என்கிறார் திருமூலர்.

திருநாவுக்கரசர், மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டு துவக்கத்தில் சமண சமயத்தில் இருந்தார். பின் சிவ பக்தனாக மாறினார். அதற்கு அவரை சமணர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கினார்கள். சுண்ணாம்பு காளவாயில் பிடித்துத் தள்ளினார்கள். சில மணி நேரம் கூட அதில் இருந்து பின் உயிருடன் தப்ப முடியாத நிலையில் சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீற்றறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்பதை இவ்வாறு கூறுகிறார்:

 மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

thirunavukarasar

குற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது. தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு இன்பம் நல்கியது. இறைவன் திருவடியை பற்றியோர்க்கு துன்பம் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.

 

Manikkavacakar

மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல்களும் திருவடி பெருமையை தான் போற்றுகின்றன. காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலா விநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல், முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப் பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை. இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த திருவடிகளைப் போற்றுவதில் முடியும்.

 

 

 

நமது திண்ணை என்னும் இணைய இதழில் டிசெம்பர் மாதம் தொடங்கிய தொடர் இது. அதன் சுட்டி இங்கே: https://namaduthinnai.wordpress.com/2015/12/14/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88dec2015/

4 Comments (+add yours?)

  1. Trackback: திருவடி சேவை – பகுதி – 2 | amas32
  2. Trackback: திருவடி சேவை – பகுதி – 3 | amas32
  3. Trackback: திருவடி சேவை – பகுதி 4 | amas32
  4. Trackback: திருவடி சேவை – பகுதி 5 | amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: