“சுசீலா மைலாப்பூர்ல ஒரு ஜோசியர் இருக்காராம். ரொம்ப நல்லா ஜாதகம் பார்த்து சொல்றாராம். என் ப்ரெண்டு ஜானு சொன்னா. கார்த்திக்குக்கு இப்போ செய்யிற வேலை பிடிக்கலையாம். தினம் வீட்டுக்கு வந்ததும் வேலையை விட்டுடறேன்னு பயமுறுத்தறான். அவன் ஜாதகத்தைக் காட்டலாம்னு இருக்கேன். உன் பையன் ஜகன் ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு வாயேன். என்ன சொல்றாருன்னு பார்ப்போம். பீஸ் கூட ஒரு ஜாதகத்துக்கு நூறு ரூபாய் தானாம்.”
“ப்ச் எனக்கு ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கையே போச்சு சவிதா. ஒவ்வொருத்தனும் இப்ப ஆயிடும் அப்ப ஆயிடும்னு சொல்றான். எங்க ஆச்சு?” சலித்துக் கொண்டாள் சுசிலா.
“இல்ல, இவரு சொன்ன மாதிரியே ஜானு புருஷனுக்கு ஒரே மாசத்துல வெளிநாட்டுல வேலை கிடைச்சுதாம். அவ நாத்தனார் புருஷனுக்கு வேலை போகாதுன்னு அடிச்சு சொன்னாராம். அவரு கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம், ஆனா இவரை வேலையை விட்டு அனுப்பலையாம். சும்மா தான் வாயேன்” கையைப் பிடிச்சு இழுக்காத குறையாகக் கூப்பிட்டாள் சவிதா.
சரி ஒரு நூறு ரூபாய் தானே. போய் பார்ப்போம் என்று சவிதாவுடன் டூ வீலரில் கிளம்பினாள் சுசிலா. ஜோசியர் இருந்த அறை ரொம்ப சின்ன அறை. வாசல் கதவில் ஜோசியர் குஞ்சிதபாதம் என்ற பலகை கோணலாகத் தொங்கிக் கொண்டிருந்தது. வெராண்டாவில் டாக்டர் கிளினிக்கில் இருப்பது போல கூட்டம் வழிந்தது. ஒரு பெரிய வெங்கடாஜலபதி படம் சீரியல் விளக்குகளுடன் மின்னியது. யாருக்குப் பின் யாரென்று அவர்களே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு முடிவு செய்து கொண்டிருந்தனர். வியாதியை விட பிரச்சினைகள் தான் அதிகம் போலிருக்கு என்று எண்ணினாள் சுசிலா. ஜோசியர், ஒருவருக்கு சொல்லும் ஜாதகப் பலன்கள், பரிகாரங்கள் எல்லாம் அங்கு இருந்த எல்லார் காதிலும் விழுந்தது. ப்ரைவசி என்பதெல்லாம் கிடையாது. ஆனால் ஒன்று, நேரம் கடத்தாமல் விறு விறுவென்று எல்லாரையும் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அரை மணி நேர காத்திருப்பில் இவர்கள் முறை வந்தது. முதலில் சவிதா கேட்க வேண்டியவற்றைக் கேட்டுக் கொண்டாள். பின் சுசிலா ஜகன் ஜாதகத்தைக் காட்டினாள். “ஆயிடும் மா இன்னும் மூணு மாசத்துல ஆயிடும்” என்றார் ஜோசியர். “இந்த மாதிரி தாங்க ஒவ்வொரு ஜோசியரும் சொல்றாங்க. மூணு மாசம் மூணு மாசம்னு நிறைய ஜோசியக்காரங்க சொல்லியே இப்போ அவனுக்கு முப்பத்தஞ்சு வயசாச்சு” என்றால் சுசீலா. “சோழி உருட்டிப் பார்த்து கரெக்டா பொண்ணு பேரு என்ன, எங்க இருக்கான்னு கூட சொல்ல முடியும். செய்யவா? ஆனா அதுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார்.
சரி நூறு ரூபாய் தண்டம். இதோடு கிளம்பலாம் என்று சவிதாவைப் பார்த்தாள் சுசிலா. அதற்குள் சவிதா “நீங்க போட்டுப் பார்த்து சொல்லுங்க சார்” என்றாள். அவர் உடனே கண்ணை மூடிக் கொண்டு எதோ மந்திரங்களைச் சொல்லி சோழியை உருட்டிப் போட்டார். பின் கூட்டல் கழித்தல் எல்லாம் செய்து, “உங்கம்மா பேர் என்ன சொல்லுங்க?” என்றார்.
“அம்மா பேர் ரமணியம்மா”
“உங்க பிள்ளையை கட்டிக்கப் போறவ பேரும் அது தான். ஊரு பெங்களூரு மைசூரு பக்கம். அவங்க வீட்டுக்கு கிழக்கால ஒரு அம்மன் கோவில் இருக்கும். நல்ல சக்தி வாய்ந்த அம்மன். மேற்கு பக்கத்துல ஒரு அரசாங்க அலுவலகம் இருக்கும். உங்க பிள்ளைக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கும்” என்றார்.
“பொண்ணு எங்க ஜாதி பொண்ணா இருக்குமா?”
“கண்டிப்பா உங்க ஜாதிப் பொண்ணு தாம்மா. வேற ஜாதிப் பொண்ணு வரா மாதிரி ஜாதகத்துல இல்லவே இல்லை. அதான் பொண்ணு பேரு கூட உங்கம்மா பேரு தானுன்னு சொல்றேனே” என்றார்.
சுசீலா பர்சில் ஐநூறு ரூபாய் தான் இருந்தது. சவிதா மீதி அறநூறு ரூபாயைக் கொடுத்தாள். “ஏய் ஒன்னும் கவலைப்படாதே. இவரு சொல்றது அப்படியே பலிக்குதாம். வெயிட் பண்ணிப் பார்ப்போமே” என்றாள் சவிதா.
அடுத்த மாதத்திலேயே ரெண்டு ஜாதகங்கள் வந்தன, ஒன்று ஹோசூர் இன்னொன்று பெங்களூர். சுசீலா ரொம்ப ஆர்வம் ஆனாள். “ஜகன் ரெண்டு ஜாதகம் வந்திருக்கு. நல்ல குடும்பம். ரெண்டு பேருக்குமே சென்னைல தான் வேலை. என்ன சொல்ற?”
“நானே பார்த்துக்கறேன், நீ தேடாதேன்னு எவ்வளவு தடவை சொல்றதுமா? சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல சேதியை சொல்லப் போறேன். பொறுமையா இரு.” என்று சொல்லிவிட்டு அகன்றான்.
சுசீலாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இது வரை அவன் பிடி கொடுத்தே பேசியது இல்லை. கணவரிடம் சென்று, “அவன் யாரையோ லவ் பண்றான் போலிருக்குங்க. யாரா இருந்தாலும் நாம சரின்னு சொல்லிடலாம். அவன் சந்தோஷம் தான் நம்ம சந்தோஷமும்.” என்றாள்.
ஒரு வாரம் கழித்து ஒரு நாள் அவர்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, டிவியை மியுட் பண்ணிவிட்டுப் பேச ஆரம்பித்தான், “அம்மா அப்பா நான் சொல்றதைக் கேட்டு நீங்க அதிர்ச்சி அடையக் கூடாது. என் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒருத்தரை நான் விரும்பறேன். பெங்களூரில் இருந்து மாத்தலாகி சென்னை வந்து ஒரு வருஷம் இருக்கும். பழகினதில் ரொம்பப் பிடிச்சிருக்கும்மா.”
“அடேய் பேரு என்னடா?” என்றாள் சுசீலா.
“பேரு கொஞ்ச பழங்காலப் பேரு தான்மா. ரமணி.”
ஜிவ்வென்று மகிழ்ச்சி தலைக்கு ஏறியது சுசிலாவுக்கு. “பெங்களூர்ல அவங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருக்காடா? தெரியுமா?”
“நான் போன வாரம் அபிஷியலா பெங்களூர் போயிருந்த போது அவங்க வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பாவை சந்திச்சிட்டு வந்தேன் மா. வாராஹி அம்மன் கோவில் இருக்கு. அவங்க தெரு பேரே வாராஹி அம்மன் டெம்பிள் ஸ்ட்ரீட் தான். BSNL ஆபிஸ் பக்கத்து கட்டடத்தில் தான் இவங்க பிளாட் இருக்கு.”
திக்கு முக்காடிப் போனாள் சுசீலா. ஒரு மூச்சு விட மறந்து அடுத்த மூச்சை இழுத்தாள். “கோச்சுக்காதடா, நம்ம ஜாதி தானே?”
“ஆமாம்மா”
“அப்புறம் ஏண்டா அதிர்ச்சி அடையக் கூடாதுன்னு சொன்ன. எவ்வளவு சந்தோஷமான விஷயம். உனக்குப் பிடிச்சா மாதிரி பொண்ணு கிடச்சுதேன்னு சந்தோஷம் தானேடா படப் போறோம்.”
“பொண்ணு இல்லம்மா பையன்.”
Jan 24, 2016 @ 14:14:12
ஹஹஹஹஹஹா கதை ரொம்ப சுவாரஷ்யமா போச்சு :)) கடையிலே போட்டீங்களே ஒரு குண்டு . அருமை அருமை :))
நல்ல இயல்பான நடை . அந்த ஜோசியர் வீடு, கூட்டம் , யாருக்குபின் யார் என்ற ஒரு இயல்பான ஆக்ரீமன்ட் எல்லாமே தத்ரூபம். இங்கே ஸ்ரீரங்கத்தில் சேஷாத்ரி ன்னு ஒருத்தர் இருந்தார். அப்படியே டிட்டோ நீங்க சொன்னது . வாழ்த்துகள். நன்றி :))
Jan 24, 2016 @ 14:40:18
நடை நன்று
Jan 24, 2016 @ 14:59:29
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓக்கே, ஆனா எல்லாத்தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு சொல்லிட முடியாது. ஏ செண்டர் ஆடியன்ஸ் ரசிக்கலாம்
Jan 24, 2016 @ 15:59:34
அட. எதிர்பாராத முடிவுங்குறது இதுதான் போல.
Jan 24, 2016 @ 16:46:10
wow……..one hell of a twist. it is like watching a martin Scorsese movie.
Jan 24, 2016 @ 17:10:55
ஜோசியரே இப்பல்லாம் ரெண்டு பக்கமும் சொல்லி செட்அப் பண்ணிடுறாங்க என்று கேள்விப்பட்டதால் ஜோசியர் பெண் வீட்டாருக்கும் சொல்லி அதன்படி முடிவு இருக்குமோ
என்று நினைத்து முடிப்பதற்குள் எதிர்பாராத கிளைமேக்சாக முடித்துவிட்டீர்கள். எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கலாம்;நடக்கும்….ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இதெல்லாம் சகஜம்தான் என்றாகிவிடக்கூடும்;-))
Jan 24, 2016 @ 18:28:38
நல்ல பொன்னு தான்…
Jan 25, 2016 @ 03:16:26
very good. the final climax similar to one in movie, actor Vivek tells to Baskar. அம்மாக்களே கல்யாணத்துக்கு ஆமான் சொலறத்துக்கு முன்னளாலே பயனுக்கு புடிச்சது ஆனா இல்ல பொன்னா தெரிஞ்சுக்கோங்கோ
Jan 25, 2016 @ 03:56:36
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி 😀
Jan 26, 2016 @ 04:14:17
Good. Very crisp
Jan 27, 2016 @ 03:50:12
எதிர்பாராத முடிவு !கதை அழகாகப் புனையப்பட்டுள்ளது.
Sep 12, 2018 @ 14:34:05
இதான் சிறுகதை சூப்பர் எல்லாரையும் பயமுறித்திட்டீங்க.
Sep 12, 2018 @ 16:00:37
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். நல்லா இருக்கு கதை.