படத்தில் என்ன புதுமை? ஹீரோயின் கிடையாது. அது நல்ல விஷயம் தான். கதையை சொல்லும் விதத்திலும் பல புதுமைகளை முயற்சி செய்திருக்கிறார்கள் அனால் அவை எடுபடவில்லை. முழு நீள நகைச் சுவை படம் தான் ஆனால் வசனங்களில் நகைச்சுவை கம்மியாக இருப்பதால் சர்க்கரை குறைவான டீ போல சுவை குன்றி உள்ளது படம்.
ஆர்.ஜே.பாலாஜி, நாசருடன் படம் ஆரம்பிக்கும்போது சுவாரசியமாகத் தொடங்கும் படம் வெகு விரைவில் உப்பச் சப்பு இல்லாமல் நகரத் தொடங்குகிறது. Funky ஹேர்ஸ்டைலில் சித்தார்த் வருவதும், பொட்டல் காட்டில் கதையின் பெரும் பகுதி நடப்பதும், லெதர் ஜெக்கெட்டில் பல பாத்திரங்கள் சுற்றுவதும், துப்பாக்கி வைத்து டுமீல் டுமீல் என்று கண்டமேனிக்கும் சுடுவதும் ஒரு கௌபாய் பட பீலை இப்படம் தருகிறது. நடுவில் அவர்களுக்கே ரஷ் பார்க்கும்போது அப்படி தோன்றியிருக்கும் போலிருக்கு, ஜெய் சங்கர் பெயரை திடீரென்று ஒரு கதாப் பாத்திரம் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று குறிப்பிடுகிறது.
போதை மருந்து கடத்தலை ஒரு காரின் மூலம் எப்படி புதுமையாகக் கடத்துகிறார்கள் என்று ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்குப் பிறகு தடம் மாறி தாறுமாறாக ஓடுகிறது. நடித்தவர்களுக்கே கதை எப்படி போகிறது என்று புரிந்திருக்காது.
இசையிலும் புதுமை செய்ய எண்ணி சண்டைக் காட்சியின் பின்னணியில் கர்நாடக சங்கீத இசையும், ஓரிடத்தில் ஒரு தொடர் ஆலாபனையும் வருகிறது. கொஞ்சம் வித்தியாசமான முயற்சி தான், மோசம் என்று சொல்வதற்கில்லை. இசை விஷால் சந்திரசேகர். பாடல்கள் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை ஷூட் த குருவி உட்பட.
எடிடிங்கிலும் புதுமை என்று ஒரே சமயத்தில் துண்டு துண்டாக வெவ்வேறு இடங்களில் நடக்கும் காட்சிகளை ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் காட்டுகின்றனர். கதையில் புரிவதற்கு ஒன்றும் இல்லை {ஏனென்றால் கதையே இல்லை}என்பதால் இப்படி காட்டுவதாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை. சித்தார்த்தின் தாத்தாவின் துப்பாக்கி கிளைமேக்சில் எப்படி திடீரென்று சுடுகிறது என்பது சுத்தமாகப் புரியவில்லை.
சித்தார்த் நன்றாக நடித்திருக்கிறார். மொத்த வசனத்தில் தொண்ணூறு சதவிகிதம் அவர் தான் பேசுகிறார். வெள்ளத்தின் போது சென்னை/கடலூர் மக்களுக்கு நல்ல உதவிகள் செய்தார். அதனால் அவர் மேல் கூடுதல் பாசம் வந்துவிட்டது. நல்ல கதை & இயக்குநரை அடுத்த முறை கவனத்துடன் தேர்ந்தெடுக்கவும்! Better luck next time Sidharth.