திரைக் கதை – அது ஒரு படத்தை எவரஸ்ட் உயரத்துக்கும் கொண்டு செல்லும், அதள பாதாளத்தில் தள்ளவும் செய்யும். இந்தப் படத்தின் திரைக்கதை முதல் பிரிவைச் சேர்ந்தது. படம் திரையில் ஓடும் நேரம் வெறும் 114 நிமிடங்கள் தான். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு துளி அதிகப்படியான சதை இல்லை. சுதா கோங்கரா என்று பெண் இயக்குநர் எழுதி இயக்கியயுள்ள உலகத் தரம் வாய்ந்தப் படம் இறுதிச் சுற்று. துணை எழுத்தாளர்கள் சுனந்தா ரகுநாதன் & ராஜ்குமார் ஹிரானி. இவர்களுக்கு மிகப் பெரிய பாராட்டுப் பூங்கொத்து உரித்தாகுக!
மாதவன் ஒரு பாக்சிங் கோச். விளையாட்டுத் தலைமை கமிட்டித் தலைவர் நடத்தும் அரசியலால் இந்தியாவின் நம்பர் ஒன் கோச் ஆன மாதவன் அவருக்கு உரிய மரியாதை பறிக்கப்பட்டு ஹிஸ்ஸார் நகரில் இருந்து தண்டனையாக பாக்ஸிங்கில் வாய்ப்புகள் அதிகம் இல்லாத சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஒரு மீனவக் குப்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் உள்ள திறமையைக் கண்டுபிடித்து அவளை உலக அரங்கில் மிளிர வைக்கப் பாடுபடுகிறார் மாதவன்.
ரித்திகா சிங் {நிஜ வாழ்விலும் பாக்சர்} மாதவனிடம் பாக்சிங் கற்கும் மாணவியாக துள்ளித் திரிந்தும், பம்பரமாகச் சுழன்றும், உணர்ச்சிகளை கச்சிதமாகக் காட்டியும் வெளுத்து வாங்கியிருக்கார். புது முகம் என்று எவரும் நம்ப மாட்டார்கள். மாதவனும் ரித்திகாவும் இந்தப் படத்தில் அவர்கள் பாத்திரங்களின் தன்மையை நன்குணர்ந்து நூத்துக்கு இருநூறு சதவிகித ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார்கள். ஒரு கோச்சும் வெற்றிக் கனியை பறிக்கத் துடிக்கும் விளையாட்டு வீராங்கனையும் காட்டும் அர்ப்பணிப்பும் அதீத ஈடுபாடும் ஒவ்வொரு நொடியிலும் திரையில் தெறிக்கிறது.
ரித்திகா சிங் முதலில் மனமுவந்து கோச்சிங்கிற்கு வருவது இல்லை. அந்த ஆரம்பத்தில் இருந்து மாதவனை புரிந்து கொண்டு அவருக்காக இறுதிச் சுற்று வரை போராடும் அவரின் கதாபாத்திரம் கைத்தட்ட வைக்கிறது. கிளைமேக்சில் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வராதவர் இருக்க முடியாது.
பாத்திரத்துக்காக உடலை மாற்றியமைத்த மாதவனின் அபார உழைப்புப் பயனுள்ளதாக மாறியதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. எத்தனையோ நடிகர்கள் சமீபத்தில் சிக்ஸ் பேக் மோகத்தில் உடலை வருத்தி மாற்றியும் படங்களில் அவை எடுபடாமல் போயிருக்கின்றன. இதில் அவர் கோச்சிற்கான உடலை அற்புதமாக அமைத்துக் கொண்டு இருக்கிறார். அதனுடன் அவரின் நடிப்பும் A கிளாஸ். கமல் இவரின் இந்தப் பாத்திரத்தையும் நடிப்பையும் பார்த்து நிச்சயமாகப் பொறாமை படுவார் 😀
நாசர், ராதா ரவி, வில்லன் சாகீர் ஹுசெயின் மற்றும் ரித்திகாவின் பெற்றோராகவும், சகோதரியாகவும் வரும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ராதாரவி சின்னப் பாத்திரத்தில் வந்தாலும் இறுதி பன்ச் well wort it :-}
சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் சுவாரசியத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாடல்கள் அருமை. பின்னணி இசை வேற லெவல்! அதுவும் கிளைமேக்சில் நின்று விளையாடுகிறார் சந்தோஷ் நாராயணன்.
பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். ஆனால் எந்தப் பகுதியும் நீர்த்துப் போகாமல் எந்த ஒரு நொடியும் தொய்வில்லாமல் படம் இருப்பதே படத்தின் வெற்றி. இவ்வளவு விறுவிறுப்பான அதே சமயம் நல்ல சத்தான கதையுள்ளப் படத்தை சமீபத்தில் பார்க்கவில்லை.
இதுவும் ஒரு காதல் கதை தான். ஆனால் அது முகத்தில் அடிக்காமல் ஸ்போர்ட்சில் பேஷ்ஷன் கொண்டவர்களின் இயல்பைக் காட்டும் படமாக அமைந்திருப்பது தான் இந்தப் படத்தின் வித்தியாசம். இப்படத்தில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் சிறிய பாத்திரமோ பெரிய பாத்திரமோ ஒவ்வொரு பாத்திரமும் தனித் தனியாகக் கதை சொல்லும் தன்மைக் கொண்டு வார்க்கப்படிருக்கின்றன. அந்த மெனக்கெடலில் தெரிகிறது இயக்குனர் கதாசிரியர் இவர்களின் புத்திசாலித்தனம்! படம் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க :-}
வாழ்த்துகள் team இறுதிச் சுற்று!
Feb 01, 2016 @ 11:35:55
madam, you did not mention that maker Rajkumar Hirani (PK, 3 idiots fame) doctored the script largely and made it tailor made. he is also one of the producers
Feb 01, 2016 @ 12:28:43
will add, thanks :-}
Feb 01, 2016 @ 12:37:01
மிக்க மகிழ்ச்சியோடு விமர்சித்துள்ளீர்கள். வழக்கம்போல நோ பாகுப்பாடு. வியப்பாக இருக்கிறது. ஹாஸ்யத்திற்கு என்று ஒரு இடம் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படிஎன்றால் ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கும். ஆனால் அப்படியும் இல்லாமல் கதை சுவாரஷ்யமா இருக்கிறது என்றுவேறு சொல்லியிருப்பதால், ஒவ்வொரு பிரேமும் கவனத்துடன் செதுக்கியுள்ளார்கள் என்று தோன்றுகிறது. இம்மி பிசகாமல், எந்த வித திரைத்துறை காம்பிரமைஸ்களுக்கும் ஆளாகாமல் மயிரிழையில் தப்பித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று அறிகிறேன் உங்களின் விமர்சனம் மூலம்.
.
கமல் பார்த்தால் நாமே நடித்திருக்கலாமே என்று கூட எண்ணலாம் :)) அந்த அளவுக்கு ஒரு நல்ல படம் என்றால் டைரக்டருக்கும், நடிகர்களுக்கும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே.
வாழ்த்துகள். இனிமே யாரால் படம் பார்க்க இயலாமல் இருக்க முடியும் :))
நன்றி :))
Feb 01, 2016 @ 13:44:52
இல்லை, இதில் நகைச்சுவை என்று தனியாகக் கிடையாது. Gripping movie!
Mar 04, 2016 @ 03:54:26
நேற்றுதான் படம் பார்த்தேன். நீங்கள் விமர்சித்தது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை உண்மை. என்ன ஒரு தத்ரூபமான திரைப்படம். வாவ். குறிப்பா விளயாட்டுபிள்ளையா இருந்த நாயகி ஒரு கட்டத்துல சீரியஸா மாறிவிட்டி ருப்பதை நாசூக்கா காமித்தது. நன்றி வாழ்த்துகள் :))