குடும்பக் கதை. ரிஷி கபூர் தாத்தாவாக பிரமாதமாக நடித்துள்ளார். என்ன, கொஞ்சம் முதலில் அவர் முகத்தை தடிமனான மேக் அப்பின் கீழே தேட வேண்டியிருக்கு. பிறகு பழகிப் போய் விடுகிறது. ஒரு குடும்ப க்ரூப் போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஓர் ஆசையுடன் இருக்கும் ஒரு தொண்ணூறு வயது கிழமாக, வயதை மறந்து நடிகை மந்தாகினியின் மேல் ஜொள்ளு விடும் ஆணாக, வாழ்வின் அந்திம நாட்களில் இருந்தாலும் உற்சாகமாக வளைய வரும் ஒரு நல்ல கதாபாத்திரமாக அவரை அமைத்திருக்கிறார் இயக்குநர்/கதாசிரியர் சகுன் பாத்ரா.
அடுத்து ஆலியா பட், ஒரு பப்ளி கேரக்டர்! அவருக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் ஈசி தூசி. ஒரு சீனில் அவர் பெற்றோரின் மறைவை பற்றி நாயகனிடம் சொல்லும் போது அவர் தொண்டைக் குழி கூட நடிக்கிறது. நேர்த்தியான செயல்பாடு. ஹைவே படத்தில் இருந்தே அவரின் பெரிய விசிறி நான் 😀 அதன் விமர்சனம் இங்கே
இரு சகோதரர்களாக சித்தார்த் மல்ஹோத்ரா, ஃபவத் கான், ரிஷி கபூரின் மகன் மருமகளாக ரஜத் கபூர், ரத்னா பாதக் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். வெளி நாட்டில் வாழும் சகோதரர்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக் என செய்தி கேட்டு சொந்த ஊரான குன்னூருக்கு வருகிறார்கள். அப்பொழுது சகோதரர்களுக்கு இடையே ஆன பழைய மனஸ்தாபம், அதனால் ஏற்பட்ட பொறாமை, பெற்றோர்களின் மண வாழ்வில் விரிசல், அதனால் ஏற்படும் மன வருத்தங்கள், இவைகளால் ஏற்படும் குழப்பங்கள் அரங்கேறுகின்றன.
இவ்வுலகில் யாரும் உத்தமர்களோ, குறையில்லாதவர்களோ கிடையாது. அந்த குறைபாடுகளின் பின்னணியில் எல்லாரையும் அவர்களாகவே நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டு, எப்படி நாம் உறவுகளை அரவணைத்து வாழவேண்டும் என்பதே படம் சொல்லும் கருத்து.
இதே படம் தமிழில் எடுக்கப்பட்டால் இந்த அளவு எனக்குப் பிடித்திருக்குமா என்று யோசித்துப் பார்த்தேன். சில கதைகள் அந்தந்த மொழிக்கே பொருத்தமானவை. தமிழில் இதை மாற்றி எடுக்கும் போது அதிக மெலோடிராமா சேர்த்து விடுவார்கள்.
இந்தப் படம் முழுக்க குன்னூரில் எடுக்கப் பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை. இந்தக் கதை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், நைனிடால் அல்லது லோனவாலாவிலும் எடுக்கப் பட்டிருக்கலாம். எதற்கு ஒரு இந்திப் படம், எல்லா பாத்திரங்களும் இந்தியிலேயே பேசுகின்றன ஆனால் தமிழ் நாட்டில் நடப்பதாகக் காட்டவேண்டும்?
இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப புதிய குடும்ப உறவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்படத்தில் பார்க்கலாம். மொழி புரியாவிட்டாலும் பார்த்து ரசிக்க முடியும். சத்தியம் திரை அரங்கில் சப் டைட்டில் உள்ளது.
Mar 20, 2016 @ 03:38:02
குட். நீங்க சிறந்த மார்க்கெட்டிங்க் டெக்னிக் மன்னி என்பதற்கு ஒரு உதா – ஹைவே படத்தில் இருந்தே அவரின் பெரிய விசிறி நான் 😀 அதன் விமர்சனம் இங்கே
Mar 20, 2016 @ 07:07:01
நன்றி எனக்கும் பார்க்கணும் போல இருக்கு :)) எப்போ சான்ஸ் கிடைக்குதோ 😦
“சில கதைகள் அந்தந்த மொழிக்கே பொருத்தமானவை.” இத சொன்னீங்களே இது நூற்றுக்கு நூறு சத்தியம்.
குன்னூரில் எடுத்த படம் என்று சொல்லுகிறீர்கள். ஒரு பாத்திரமாவது அல்டீஸ்ட் வேலைக்கார பாத்திரமாவது தமிழரா காமிக்கலையா ?
நன்றி வாழ்த்துகள் :))