“The Intouchables” என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலே தமிழில் தோழா என்றும் தெலுங்கில் ஊபிரி என்றும் வெளிவந்துள்ளது. நாகார்ஜுனாவும் கார்த்தியும் சரியான பாத்திரத் தேர்வு. அவர்கள் நடிக்க நல்ல தீனி போடும் பாத்திரப் படைப்பு! இருவரும் நடிப்பதே தெரியாமல் இயல்பாக செய்து மனத்தில் நிற்கிறார்கள். வம்சியின் திரைக்கதை, இயக்கம் பாராட்டுக்குரியது. நடிகர்களை சரியாக வேலை வாங்கியிருக்கிறார்.
கார்த்திக்கு இந்தப் படம் கிடைத்தது ஒரு நல்ல அதிர்ஷ்டமே. சமீபத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் எதுவுமே பேர் சொல்லும்படி இல்லை. இந்தப் படத்தில் இவர் பாத்திரத்தில் முதலில் ராமா ராவ் ஜூனியர் நடிப்பதாக இருந்து, அவர் வெளியேறியதால் கார்த்திக்கு அடித்திருக்கிறது ஜேக்பாட். கேர்ப்ரீயாக, கொஞ்சம் ரவுடி/நிறைய நல்லவன், அன்பும் பாசமும் நிறைந்த துடிப்பான ஏழை இளைஞன் வகை குணச்சித்திரம் கார்த்திக்கே வெச்சுத் தெச்சது போல பொருந்துகிறது. மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
நாகார்ஜுனாவின் பாத்திரம் பார்க்க இலகுவாகத் தெரிந்தாலும் மிகவும் கடினமான உழைப்பை வாங்கக் கூடிய ரோல். அவர் ஒரு quadriplegic patient. அதாவது கழுத்துக்குக் கீழே எந்த அசைவும் உணர்ச்சியும் கிடையாது. அதனால் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தோ, படுக்கையில் படுத்தபடியோ மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம். அவர் நடிப்பை முகத்தில் மட்டுமே காட்டவேண்டும் என்கிற நிலையிலும் மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார். அவர் உடல் மொழி எப்படிப்பட்ட தேர்ந்த நடிகர் அவர் என்பதைக் காட்டுகிறது.
ஒரு quadriplegicகிற்கு ஏற்படும் சங்கடங்கள், மன அழுத்தம் முதலியவை சரியாக திரைக்கதையில் காண்பிக்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனாவுக்கும் அவரின் caretaker அதாவது அந்தரங்க உதவியாளர் கார்த்திக்கும் இடையே ஏற்படும் உறவும் அதன் மூலம் இருவரும் அடையும் இலாபங்களுமே தான் கதை. நாகார்ஜுனா கார்த்திக்குச் செய்யும் உதவியும் கார்த்தி அவருக்குச் செய்யும் உதவியும் அவர்கள் இருவரின் வாழ்வையும் மேம்படுத்துக்கிறது. அந்த விதத்தில் இது ஒரு feel good movie.
கதையில் உறவுகளின் உணர்சிகளுக்கு முதலிடம் கொடுப்பதே பல இடங்களில் நம்மை நெகிழ வைக்கிறது. எந்த சம்பவமும் செயற்கையாக இல்லாமல் நம்பும்படி கதையோட்டத்துடன் அமைந்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகிறது. நாகார்ஜுனா பெரும் பணக்காரராக இருப்பதால் கண்ணைக் கவரும் அழகிய மாளிகை, பிரமாதமான கார்கள், பாரிஸ் நகர் வலம் ஆகியவை நமக்கும் பார்க்கக் கொடுத்து வைக்கிறது. ஒளிப்பதிவாளர் P.S.வினோத், வம்சியின் கதை திரைக்கதைக்குப் பிறகு அதிக மதிப்பெண் பெறுகிறார்.
தமன்னா அழகு! கார்த்தி தமன்னா ஜோடி பொருத்தம் பற்றி சொல்லத் தேவையில்லை :-} நாகார்ஜுனாவின் காரியதரிசியாக பொம்மை போல வந்து போகிறார். ஆனாலும் அதுவும் அவருக்குப் பொருந்துகிறது. பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, விவேக் இவர்களைத் தவிர ஸ்ரேயாவும் அனுஷ்காவும் விருந்தினர் வருகை. நடிகை கல்பனாவுக்கு இது தான் கடைசிப் படம் 😦 டப்பிங் கூட வேறொருவர் தான் கொடுத்துள்ளார்.
வசனங்கள் ராஜூ முருகனும், முருகேஷ் பாபுவும் கச்சித்தமாக எழுதியுள்ளார்கள். வசனங்களிலேயே நகைச்சுவை இழையோடுகிறது. உடைகள் நிர்வாகம் நன்றாக செயல்பட்டிருக்கு. தமன்னா உடைகளும் நாகார்ஜுனாவினுடையுதும் தூள்!
பாடல்கள் சொதப்பல். பெரிய மைனஸ் படத்தின் நீளம். இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பொறுமை போய்விடுகிறது. இந்தப் படம் இரண்டேமுக்கால் மணி நேரம்! ட்விட்டரில் சுருங்கச் சொல்லி பழகிவிட்டது போல கதையையும் சொல்ல வந்த கருத்தையும் நறுக்கென்று சொன்னால் தான் இன்றைய காலக் கட்டத்தில் பிடிக்கிறது. இப்படத்தில் எளிதாக இருபது நிமிடங்கள் எடிட் பண்ணிவிடலாம். அதையும் செய்து விட்டால் படம் ஹிட் தான். வாழ்க்கையை பாசிடிவாகப் பார்க்க சொல்லும் படம் பாராட்டப் பட வேண்டியதுதானே :-}
Mar 26, 2016 @ 02:51:21
>>தமன்னா அழகு! கார்த்தி தமன்னா ஜோடி பொருத்தம் பற்றி சொல்லத் தேவையில்லை :-}
சிவகுமார் சார்கிட்டே கோர்த்துவிடறேன் வெயிட்
Mar 26, 2016 @ 03:04:19
! ட்விட்டரில் சுருங்கச் சொல்லி பழகிவிட்டது போல கதையையும் சொல்ல வந்த கருத்தையும் நறுக்கென்று சொன்னால் தான் இன்றைய காலக் கட்டத்தில் பிடிக்கிறது,,,
“நாம் இருக்கும் இடத்தையும் மறக்கூடாது இல்லையா ” :-))
Mar 26, 2016 @ 05:30:56
என்னுடைய கருத்தை அப்படியே சொல்லீட்டிங்கம்மா. படத்துல பாடல்கள் நல்லா இருந்திருந்தா இன்னும் பிரமாதமா இருக்கும். மத்தபடி கண்டிப்பா ஒருவாட்டி பாக்கலாம். பாரிஸ் காட்சிகள் முழுக்க அழகோ அழகு.
நடிகை கல்பனாவுக்கு இது கடைசிப்படம்னு நெனைக்கிறேன். வேற யாரோ குரல் கொடுத்திருக்காங்க போல.
Mar 26, 2016 @ 07:42:39
Pathuda venduyadhudhan😊
Mar 27, 2016 @ 02:17:31
நன்றி அருமையா அலசி வழக்கம்போல விமர்சித்துள்ளீர்கள். வாழ்த்துகள். ஆனால் இந்த விமர்சனத்தில் தாங்கள் வரம்பு மீறிவிட்டதாக உணருகிறேன். இதுவரை கதை என்ன என்று சொல்ல மாட்டீர்கள். But, “நாகார்ஜுனாவுக்கும் அவரின் caretaker அதாவது அந்தரங்க உதவியாளர் கார்த்திக்கும் இடையே ஏற்படும் உறவும் அதன் மூலம் இருவரும் அடையும் இலாபங்களுமே தான் கதை” என்று ஒரு வரியில் கோடிட்டு காட்டியுள்ளீர்கள் :))
நன்றி வாழ்த்துகள்