திருவடி சேவை பகுதி 1 இங்கே.
திருவடி சேவை பகுதி 2 இங்கே
திருவடி சேவை பகுதி 3 இங்கே
ஸ்ரீரங்கத்தில் திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக தொடர்ந்து பத்து நாட்கள், காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார். உத்ஸவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது, நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத் தன் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் வழக்கத்தை அன்று ஏற்படுத்தினார். பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அன்று உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப் படும். ஆழ்வார் பெருமாளின் திருவடியை வணங்குதலை நாம் நேராக பார்க்கும் ஒரு பாக்கியம் இது.
கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் எதையும் முடியாது என்கிற நிலையில் சரணாகதியை கடைபிடிக்க வேண்டும். இதில் நம்மாழ்வார் தான் கடைபிடித்த சரணாகதியை நமக்குத் திருவாய் மொழியில் சொல்கிறார்.
இறைவன் திருவடிகளைப் பற்றிப் பேசும் முன் அவரின் திருவடிகளை அலங்கரிக்கும் பேறு பெற்ற பாதுகைகளின் பெருமையைத் தெரிந்து கொண்டால் திருவடிப் பெருமையை இன்னும் அதிகமாக உணர முடியும்.
இராமனை காட்டில் இருந்து அழைத்து வந்து அரசாளும் பொறுப்பை அவனிடம் கொடுப்பதற்காக பரதன் இராமனை சித்திரக் கூடத்தில் சந்தித்து இறைஞ்சுகிறான். இராமன் தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீற முடியாது என்று சொல்கிறார். உடனே பரதன் தானும் காட்டிலேயே தங்கிவிடுவதாகச் சொல்கிறான். அயோத்தி நாட்டு மக்களின் நலனுக்காக அவன் திரும்ப சென்று நாடாள வேண்டும் என்று வற்புறுத்துகிறார் இராமன். கடைசியில் பரதன் ஒத்துக் கொள்கிறான். ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த அடுத்த கணம் இராமன் அரசாளும் பொறுப்பை ஏற்கவில்லையென்றால் தீப்புகுந்து உயிரை விடுவேன் என்று இராமனிடம் சொல்கிறான்.
இராமபிரான் கண்டிப்பாக வந்துவிடுவதாகச் சொல்கிறார். அதன் பின் இராமனின் பாதுகைகளை பரதன் பெற்றுக் கொள்கிறான். பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன் அவற்றைத் தன் தலையிலே வைத்துக் கொண்டு தரையில் விழுந்து இராமனை வணங்குகிறான்.
பின்னர் பரதன் மற்றும் பரிவாரங்கள் புடைசூழ திரும்பப் பயணப்பட்டு அயோத்தி நகருக்குள் செல்லாமல், நந்திக்கிராமம் எனும் இடத்தை அடைகிரான். அங்கே இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துத் தன் ஐம்பொறிகளை அடக்கி நீர் சொரியும் கண்களோடு தவம் புரிந்து வாழ்ந்தான். மக்களிடம், இந்தப் பாதுகைகளை நீங்கள் இராமனின் திருவடிகளாகவே எண்ணவேண்டும் என்றான். இதன் மூலம் பாதுகைக்கு இராமனின் திருவடிகளுக்குச் சமமான பெருமை உள்ளது என்று தெரிந்து கொள்கிறோம்.
வேதாந்த தேசிகர் என்ற வைணவப் பெரியவர் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பாதுகைகளை மட்டும் புகழ்ந்து ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். பாதுகா சகஸ்ரம் என்பது அந்த நூலின் பெயர். அதில் இருந்து சில ஸ்லோகங்களின் பொருளை பார்த்தால் பாதுகையின் பெருமையை அறியலாம்.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களையும் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள் தாங்கி நிற்கின்றன. அப்படிப்பட்ட அவனது திருவடிகளையும் நீ தாங்கி நிற்கின்றாய். ஆக, மூன்று உலகங்களுடன் சேர்த்து ஸ்ரீரங்கநாதனையும் தாங்கி நிற்பதால் உனக்குக் களைப்பு காரணமாக வியர்வைத் துளிகள் தோன்றுகின்றன. இவையே உனது முத்துக்கள் போன்று அழகாகத் தோன்றுகின்றன போலும்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எந்த விதமான உதவியும் இல்லாத ஒருவன் – மிகவும் அழகானதும், அழியாததும், பகவானை அடையும் பாலம் போன்றதும் ஆகிய உன்னைச் சரணம் என்று அடைந்துவிட்டால் போதும். இன்பம், துன்பம் என்று மாறிமாறி எழும் அலைகள் நிறைந்த சம்சாரக் கடலில் இருந்து மீண்டு, திருமகள் வாசனின் திருவடி என்ற அழியாத செல்வத்தைப் பெற்று விடுகிறான்.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் தூய்மையாகவும் ஸ்திரமாகவும் உள்ளன. அந்தத் திருவடிகளில் நீ எப்போதும் நிலையாக, எல்லையற்ற பெருமையுடன் விளங்குகிறாய். இப்படியாக உள்ள உன்னை, வேதங்கள் ஆனந்தமயம் என்று கூறுகின்ற மணிமண்டபமாகவே எண்ணுகிறேன். இப்படிப்பட்ட உன்னை அடைந்ததால், குற்றம் ஏதும் இல்லாத முத்துக்கள், தங்கள் ஒளி மூலமாக அனைத்து உலகங்களும் ஒளிரும் விதமாக எரிகின்ற விளக்குகள் போன்று, தோஷங்கள் அற்ற தன்மையை அடைகின்றன.
இவ்வாறு சுவாமி தேசிகன் வடமொழியில் எழுதியுள்ள ஆயிரம் பாடல்கள் மூலம் இறைவன் திருவடியை அலங்கரிக்கும் பாதுகையின் பெருமையை நாம் அறிகிறோம்.
கிருஷ்ணாவதாரத்தின் காலம் முடியும் நேரம் வந்தது. அப்போது உத்தவர் அவரை மும்முறை வலம் வந்து அவர் பாதங்களில் விழுந்து அவர் திருவடிகளை தன் கண்ணீரால் நனைத்தார். அப்போது பகவான் அவருக்குத் தன்னுடைய பாதுகைகளை அளித்தார். அவற்றை தன் தலையில் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் வணங்கி புறப்பட்டுச் சென்றார். பிறகு பத்திரிகாசரமம் சென்று கிருஷ்ணனை தன் இதய பீடத்தில் நிலை பெறச் செய்து தியானித்து அவருடைய அறிவுரைகளை கடைப்பிடித்து இறுதியில் பரம பதத்தை அடைந்தார்.
இராமனின் வில்லின் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு – அதுதான் “தனுஷ்கோடி” – இராம தனுசின் இரு கோடிகள்.
கோதண்டத்தின் மேல்முனையில் இராமபிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில்
இராமனின் “முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை” (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை. திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.
கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் “கால் வண்ணம்” என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:
கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!
இராமன் பெரியோர்களுக்கு மரியாதை அளிப்பதில் சிறந்தவன். அவனுடைய கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுந்தாள் என்று கம்பரால் சொல்ல இயலவில்லை. ஏனென்றால் பெற்ற
தாய்க்கும் முன்னதாகவே இவள் இராமனை நெஞ்சில் கருக் கொண்டாள். அதனால் கம்பர் இங்கே மூலநூலில் இருந்து சற்றே மாறினார்.
இராமனின் கால் படவில்லை. ஆனால் அவன் நடந்து வந்த போது அவன் கால் பட்டுத் தெரித்த துகள் கல்லென சமைந்திருந்த அகலிகையின் மீது பட்டது என்கிறார். அந்த காலில் இருந்து கழண்ட துகளினாலே அவள் சாப விமோசனம் பெற்றாள் என்று மாற்றுகிறார் கம்பர்.
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14
தாடகை வதத்தில் இராமனின் கை சரம் எடுத்ததையும், அதைத் தொடுத்ததையும் கண்டிலர். அத்தனை வேகத்தில் சரம் எய்தவன் இராமன். இராமனின் கையால் ஒருத்தி சாப விமோசனம் அடைந்தாள். இன்னுமொரு பெண் இவன் கால் துகள் பட்டு பாப விமோசனம் அடைந்தாள்.
‘இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’ 24
இராமனின் திருவடி பெருமைக்கு இது ஒரு சான்றே. ஜடாயு மோட்சத்தில் அவரின் மலரடி பெருமையை இன்னும் காணலாம்.
சீதையை இராவணன் கவர்ந்து செல்லும்போது தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைத்த போது பறவைகளின் அரசனான ஜடாயு இராவணனுடன் சண்டையிட்டு தன்னால் இயன்றவரை சீதையை காப்பாற்ற முயன்றார். பகைவனின் தலையை பெருஞ்சீற்றத்துடன் கொத்தி அவன் தலை கீரிடத்தையும் கீழேத் தள்ளினார். ஆனால் இராவணன் சிவனிடம் பெற்ற வாளினால் அவர் இறக்கைகளை வெட்டியபோது அதற்கு மேல் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. உயிர் பிரியும் முன் இராம இலட்சுமணர்களிடம் இராவணன் சீதையை கவர்ந்து சென்றதை சொல்லிவிட வேண்டும் என்று துடித்தார். நல்லவேளையாக அவர்களும் ஜடாயு அடிபட்டுக் கிடந்த இடத்தை அந்நேரம் வந்தடைந்தனர். அவர்களிடம் சீதையை இராவணன் தூக்கிச் சென்றதையும் அவர் தடுக்க முயன்றதையும் சொல்லி வேதங்களும் காணமாட்டா எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்கப் பெற்றதால் மீளாவுலகமாகிய வைகுண்டத்தை அடைந்தார். இராமனே அவருக்கு இறுதி காரியங்களை செய்யும் பெரும் பேற்றினையும் பெற்றார் அவர். எம்பிரான் சேவையினாலும் திருவடி தரிசனத்தினால் முக்தி அடைந்தார் ஜடாயு.
தொடரும்…