மே 31 – உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்

notobacco

பீடி, சிகரெட், மூக்குப் பொடி, வெற்றிலை பாக்குடன் சுவைக்கும் புகையிலை இவை அனைத்துமே புகையிலையின் வெவ்வேறு வடிவங்களே. புகையிலையை வாயில் போடுவது, மூக்கில் இடுவது, புகைப்பது இவை யாவும் மூளைக்கும், இருதயத்திற்கும் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்று சிலர் கூறலாம். ஆனால் இதனால் கிடைக்கும் அற்ப நன்மையை விட தீமைகள் மிக அதிகம்.

இதை உபயோகிப்பவர்களின் நல்ல இரத்தம் கெட்டு நெஞ்சு வலி, தலை நோய், பீனிசம், காசம், நீரிழிவு முதலிய நோய்கள் உண்டாவது நிச்சயம். பித்தம் அதிகரித்து கபாலச்சூடு உண்டாகி நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் முதலியன உண்டாகின்றன. வாய் புற்று நோய் வந்தவர்களை பார்த்தவர்கள் யாரும் புகையிலை அருகில் போகவே மாட்டார்கள். இந்தப் பழக்கத்தை நிறுத்த புகையிலை பயன்படுத்துபவர்களின் நண்பர்கள் அடையார் கேன்சர் இன்ஸ்டிடயிட்டிற்கு அந்த நட்புக்களை அழைத்து சென்று அங்கு இருக்கும் நோயாளிகளை காட்டலாம். நம் நாட்டில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் ஒரு புகையிலையினால் ஏற்படும் இறப்பு நிகழ்கிறது.

புகையிலையில் நிக்கோடீன் என்ற கொடிய விஷம் உள்ளது. அரைத்துளி நிக்கோடீன் விஷம் ஆளையே கொல்லவல்லது. புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் அது மனிதனின் நரம்பையும் இரத்தக் குழாய்களையும் சீர்குலைத்து விடும். சிகரெட்டில் நாலாயிரம் வகை நச்சு ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. புகையிலையில் உள்ள தார் சத்தும், நிக்கோடீனும் வாய்த் திசுக்களைக் கெடுத்து சுவை குன்றச் செய்துவிடும். புற்றுநோய் இவர்களை எளிதில் பீடிக்கும். புகைப்பவர்களின் இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட வழி உள்ளது.

சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை மாசுபடுவதோடு, உங்கள் அருகில் உள்ள அப்பாவிகளும் நீங்கள் விடும் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.

மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும். (புகை பிடிப்பவர்களின் குழந்தைகள் சரியாக படிக்காததற்கு நீங்களே காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்)

புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் விஷயத்தில் புகையிலை பயன்பாட்டை யாரும் குறைத்திருப்பதாகத் தெரியவில்லை, ஆயினும் அது மிக மிக தேவையே. அன்புமணி ராமதாசுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும், சினிமாவில் ஹீரோக்கள் புகை பிடிக்கக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்ததற்கு. பல இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகரையே தங்கள் ஆதர்சமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புகைக்காமல் இருந்தாலே அது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தாலும் வெளிப்படையாக தன் உடற்கேட்டிற்கான காரணம் புகையிலையும், குடிப்பழக்கமும் தான், அதை நீங்கள் செய்யாதீர்கள் என்று தன் ரசிகர்களிடம் சொன்னது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட முக்கியமாகப் புகையிலை பயன்படுத்தாதவரை தேர்ந்தெடுத்தாலே புகையிலை பயன்பாடு குறைந்துவிடும் என்பது என் எண்ணம்.

DontSmoke

இது நம்ம ஆளு – திரை விமர்சனம்

Idhu-Namma-Aalu-Songs-Release-on-May-10th

முழு நீள நகைச்சுவை படம் பார்த்திருக்கிறோம், இது முழு நீள காதல் பாடம். காதலிப்பதால் வரும் எதிர்ப்பார்ப்புகள், கிளுகிளுப்புகள், மயக்க நிலை, மோன நிலை, அதன் பின் வரும் உறவு பிரச்சினைகள், உப்புப் பெறாத விஷயங்களால் வரும் சிக்கல்கள், காதல் தோல்விக்குப் பின் வாழ்க்கை, பின் காதலில் வெற்றி, நிச்சயதார்த்தம், மணிக்கணக்கில் செல்போன் உரையாடல், அதில் வரும் ரோதனை, மண வாழ்க்கை என்று ஒன்றையும் விடாமல் அலசியிருக்கார் பசங்க புகழ் இயக்குநர் பாண்டி ராஜ்!

இந்தப் படத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே அதிரடி வசனங்கள் தான், அதுவும் சிம்பு நயனின் நிஜ வாழ்க்கையைக் கிண்டல் அடிக்கும் வசனங்கள் சில சமயம் புன்முறுவலையும் பல சமயம் சிரிப்பலைகளையும் எழுப்புகிறது. நயன், சிம்பு இருவர் நடிப்பும் இயல்பாக, நன்றாக உள்ளது. சிம்புவுக்கே உரித்தான ரோல் இது. இருவர் உடைகளும் அருமை. முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை நயன் மிகவும் அழகாக உள்ளார்.

எப்பவும் அம்மா செண்டிமெண்ட் தானா? இந்தப் படத்தில் ஒரு மாறுதலுக்கு அப்பா செண்டிமெண்ட் :-} சரண்யா பொன்வண்ணன் எப்பவும் அம்மா ரோலில் செய்வதை {சிம்புவின் அப்பாவாக} ஜெயபிரகாஷ் இதில் ஸ்கோர் செய்கிறார். நயனின் அப்பா அம்மாவாக உத்ய மகேஷ், தீபா ராமானுஜம் மிக பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சூரி சிம்புவுக்குக் கொடுக்கும் டைமிங்க் கவுண்டர்கள் தான் ஒரு தீப்பெட்டியின் பின்னால் எழுதக் கூடிய அளவு சிறிய கதையை சி{ற}ரிப்பாக நகர்த்திச் செல்கிறது. சில வசனங்கள் கடுப்பு ரகம். சிம்புவை கொட்டு வைக்கும் சில வசனங்களை நயன் டெலிவர் பண்ணும்போது அதிக மகிழ்ச்சியுடன் சொல்வதை நாம் கவனிக்கலாம் :-}

ஏன்ட்ரியா சிம்புவின் ஒரு காதலியாக வருகிறார். ஜோடி செட் ஆகவில்லை. சந்தானம் கெஸ்ட் ரோல், ரொம்ப சின்ன ரோல். அவருக்காகவாவது இன்னும் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்திருக்கலாம். அர்ஜுன் சிம்புவின் நண்பராக வருகிறார், அவரும் சின்ன பாத்திரம் தான் ஆனால் கலக்கல்!

மூன்று வருடம் கிடப்பில் போடப்பட்டப் படம். வருமா வருமா என்று காத்திருந்து கடைசியில் வந்துவிட்டது. ஆனால் நல்ல காலத்துக்கு out dated ஆக இல்லை. ஆனாலும் நயனையும் சிம்புவையுமே சுத்திச் சுத்தி வருவதால் சமயங்களில் அலுப்புத் தட்டுகிறது. சில வசனங்கள் நேராக ட்விட்டரில் இருந்து எடுத்தவை.

இந்தப் படம் all in the family. டி.ஆர், உஷா ராஜேந்தர் தயாரிப்பு, குறளரசன் இசை அமைப்பு. சில பாடல்கள் நன்றாக உள்ளன. அவர் பாடல்கள் தருவதற்கு தாமதம் செய்ததால் தான் படம் முடிய தாமதமாகியது என்று பாண்டிராஜ் சொல்லியிருந்தார். ஆனால் பாடகர்கள், பாடல்கள் கோத்த விதம் நன்றாக வந்துள்ளது. அவரும் அவர் தந்தையைப் போல் இசையமைத்து, பாடல் எழுதி பாடியும் உள்ளார்.

சிம்பு நடனத்திற்காகவே ஒரு குத்துப் பாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடனத்தில் சிம்பு இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம், விசேஷமான நடன ஸ்டெப்கள் எதுவும் இல்லை. அவர் உடல் எடையும் கூடியுள்ளது.

இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் படம் slickஆக இருந்திருக்கும். இளைஞர்களுக்குப் பிடிக்கும். வாழ்த்துகள் டீம் பாண்டிராஜ்!

idhunammaaalu

கீதையில் அஹிம்சை

arjuna-and-krishna

போர்க்களத்தில் கண்ணனால் அர்ஜுனனுக்குக் உபதேசிக்கப் படுவதே கீதை. குருக்ஷேத்திர மைதானத்தில் போர் ஆரம்பிப்பதற்கு சில நொடிகளுக்கு முன் எதிர் அணியில் இருக்கும் தன் உறவினர்களைப் பார்த்து அவர்களை எப்படி கொல்வது என்று மதி மயங்கி, ஆயுதங்களைக் கீழே போட்டு, தடுமாறி நிற்கிறான் அர்ஜுனன். வீரனான உன் கடமை போர் செய்வதே என அவனுக்கு அறிவுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். அப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் இறக்கின்றனர்.

மனம், வாக்கு, காயங்களினால் உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருப்பதே அஹிம்சை. அப்படியிருக்கையில் பல்லாயிரக் கணக்கானோர் இறக்கும் குருக்ஷேத்திரப் போரின் போது போதிக்கப்படும் கீதையில் அஹிம்சை எங்கிருந்து வருகிறது? அஹிம்சைக்கும் பகவத் கீதைக்கும் உள்ள சரியான தொடர்பை நாம் புரிந்து கொண்டோமானால் கீதையின் சாரத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஆகிறோம்.

எதிரே நிற்கும் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், நண்பர்கள், சுற்றத்தார் என்று இருப்பதைக் கண்டு அர்ஜுனன் குழப்பமடைகிறான். நான் ஏன் போரிடவேண்டும்? போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா?  எனவே போரே வேண்டாம் என வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு போர் வேண்டாம் என்கிற “அஹிம்சை” பேசுகிறான்!

அர்ஜூனனின் இச்செயல் அஹிம்சை அல்ல. தான் என்கிற சுயநலம்! அர்ஜுனன் இருந்த இடத்தில் ஒரு புத்தரோ, மஹாவீரரோ இருந்திருந்தால் பகவத் கீதையின் அவசியம் ஏற்பட்டிருக்காது. புத்தரும் மஹாவீரரும் எதிரிலே எவர் நின்றிருந்தாலும் போரிடமாட்டார்கள். அர்ஜூனன் அவனது வாழ்க்கைக்குச் சுகம் தரும் நபர்கள், தான் மதிப்பவர்கள் இருந்ததால் போரிடத் தயங்கினான். “தான்” “எனது” என்பதிலிருந்து தோன்றிய மமதையினால் விளைந்த சுயநலத்தில் “அஹிம்சை” பேசினான். பீஷ்மர், துரோணர், அவனது நண்பர்கள் இல்லையெனில் அர்ஜூனன் அஹிம்சை பேசியிருக்க மாட்டான்!

போர் என்று வந்த நிலையில் போர்க்களத்தில் தான் பீஷ்மரைக் கொன்றுவிட்டால் தன்னைப் புகழ, தனது வில் வித்தையைப் பாராட்ட தாத்தா இருக்க மாட்டாரே என்கிற எண்ணத்தாலும், தனக்கு வில்வித்தை கற்றுத் தந்த குரு அம்பு மாரி பொழிந்த சாகசத்தைக் கண்டு மகிழ்ந்ததைக் களிப்போடு கூறி தட்டிக் கொடுத்துப் பாராட்ட இருக்கமாட்டார் என்கிற சுயநல் எண்ணத்தாலும், போரை நிறுத்திவிட்டால் அர்ஜுனன் மிக நல்லவன் என்று நண்பர்கள் சுற்றத்தார் பாராட்டுவார்கள் என்கிற சுயநல உந்துதலாலும் குழம்பிக் கடமையை நிறைவேற்ற மறுத்த அர்ஜுனனை பகவான் கிருஷ்ணர் தெளிவுபடுத்திக் கடமையைச் செய்ய உரைத்ததே பகவத் கீதை!
அர்ஜுனன் போரிட மறுத்ததற்குக் காரணம் போலி தார்மீக உணர்வு (hypocrisy) மற்றும் மனச்சோர்வு. “எங்கிருந்து இந்த அழுக்கு (கஷ்மலம்) உன் மனதில் புகுந்தது?” என்ற கேள்வியுடன் தான் கண்ணன் தன் உபதேசத்தையே தொடங்குகிறான் – “குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே சமுபஸ்திதம்” !

மேலும், கீதை செய்யச் சொல்லும் யுத்தம் அகம், புறம் என்ற இரண்டு தளங்களிலும் நிகழ்வது. மனத்தில் நல்ல, தீய எண்ணங்களுக்கு இடையில் நடக்கும் போர் என்பதாக மட்டுமே பார்த்து காந்திஜி அதில் அகிம்சைத் தத்துவத்தைக் கண்டு தெளிந்தார். ஸ்ரீ அரவிந்தரும், விவேகானந்தரும் “மனத்துக்குள் மட்டுமன்று, சமுதாயத்திலும் அதர்மத்தை எதிர்த்துப் போரிட வேண்டும்” என்ற செய்தியும் கீதையின் மையக் கருத்து என்பதை முன்வைத்தனர். அஹிம்சை என்பது மன வலிமை, பயமின்மை.

கீதையை ஆழ்ந்து பயின்ற கலாமின் பார்வையிலும் இதே கருத்து 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது வெளிப்பட்டது. “நான் எனது காலடிக்குக் கீழ் மாபெரும் அதிர்வொலியைக் கேட்டேன். அது நமது அச்சத்தை மீறி ஒலித்தது. அந்தத் தருணம் அற்புதமானது. அது இந்திய அறிவியலுக்கும் தொழில் நுட்பத்துக்கும் மகுடம் சூட்டியது’.

எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காத சரித்திரம் கொண்டவர்கள் நாம். ஆனால், நமது உச்சபட்ச சகிப்புத்தன்மையும், இளகிய மனமும் நமக்கு உலக அரங்கில் மரியாதையைப் பெற்றுத் தரவில்லை. அதற்கு மாறானதையே நாம் பெற்றோம்.

பொக்ரான் சோதனைக்குப் பிறகு இந்தியாவின் புவியியல் ரீதியான முக்கியத்துவம் இதுவரை காணாத வகையில் பலமடங்கு உயர்ந்தது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. 2012 டிசம்பரில் அளித்த அறிக்கையில், “2030-இல் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் உலகின் மூன்றாவது வல்லரசாக இந்தியா இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அணு ஆயுத ஆற்றலும், ஏவுகணைகளும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவை உலக வல்லரசாக ஒருநாளும் மேலைநாடுகள் ஏற்றுக் கொண்டிருக்காது.

சாத்வீகமானவர்கள், போரைத் தவிர்ப்பவர்கள் என்கிற அர்த்தமற்ற பெருமித உணர்ச்சியால், நாம் இதுவரை ஆக்கிரமிப்பாளர்களின் கொடுங்கரங்களில் சிக்கி அதற்காகப் பெருத்த விலைகளைக் கொடுத்திருக்கிறோம். பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்த அர்த்தமற்ற குழப்பத்தைப் போக்கியதுடன், இந்தியாவை உலக வல்லரசுப் பட்டியலில் சேர்த்துவிட்டது.

கிருஷ்ணன் அர்ஜுனனை போர் செய் என்கிறார். போரில் பலர் கொல்லப்படுவது நிச்சயம். அஹிம்சை என்பது உயிர் கொல்லாமை. ஆனால் நீ கொல்வது உடலைத் தான் ஆத்மாவை அல்ல என்கிறார் கண்ணன்.

ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது. மேலும் அதை எதாலும் கொல்லவோ வீழ்த்தவோ முடியாது, அதனால் நீ துணிந்து கொல் என்கிறார். ஆத்மாவை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் உடலை கொல்வது அஹிம்சை இல்லையே என்கிற சந்தேகம் வரும்.

அப்படியானால் இதற்கு பகவான் கூறும் விளக்கம் என்ன?

Sukha-duhkhe same kRtvaa laabhaalaabhau jayaajayau

Tato yuddhaaya yijyasva naivam paapam avaapsyasi

இன்பத்தையும் துன்பத்தையும், இலாபத்தையும் நஷ்டத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக நினைக்கும் ஒருவன் போர் புரியும்போது அவன் பாவத்தை செய்வதில்லை என்கிறார் பகவான்.

BhG. 2.38

Mayi sarvaaNi karmaaNi sanyasyaadhyaatma-chetasaa

Nir-aasheeer nir-mamo bhootvaa yudhyasva vigata-jvarah

கிருஷ்ணார்ப்பணம் என்று அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து விட்டு, உடல் மீது பற்றில்லாமல் ஆத்மாவில் மட்டுமே லயித்து, எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, நான் எனது என்ற மாயையில் இருந்து விடுபட்டு சண்டையிடு என்கிறார் கண்ணன்.
BhG. 3.30

இம் மன நிலையில் போர் புரிய அர்ஜூனன நிறைய ஆன்மிக சாதனைகள் செய்திருக்க வேண்டும். அன்பே உருவான ஆன்மிக குரு தலாய் லாமா கூட தீமையை அழிக்க சில சமயம் படை வலிமையை பயன்படுத்தியே ஆக வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த படை வல்லமையை பயன்படுத்த கீதையில் கண்ணன் சொன்னபடி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை ஆகின்றன.

இதை விளக்க ஒரு சூபி கதை உள்ளது. ஒரு சூபி போர் வீரன் போர்க்களத்தில் எதிரி நாட்டு வீரனுடன் போர் புரிந்து அவனை கத்தி எடுத்துக் கொல்லும் தருவாயில் எதிரி வீரன் அவன் முகத்தில் காரி உமிழ்கிறான். கத்தியால் அவனை வெட்ட ஓங்கிய கையை அந்தரத்திலேயே நிறுத்தி விடுகிறான் அந்த சூபி வீரன். “நான் உன் காலடியில் கிடக்கிறேன், ஏன் என்னை இன்னும் கொல்லாமல் இருக்கிறாய்?” என்று கீழே வீழ்ந்திருந்த எதிரி கேட்கிறான். அதற்கு அந்த சூபி வீரன் சொல்கிறான், “இதுவரை நான் என் கடமையை செய்து வந்தேன், உன்னை எனக்குத் தெரியாது, என்னை உனக்குத் தெரியாது. ஆனால் என் முகத்தில் எச்சிலை உமிழ்ந்து என்னை கோபப் படுத்தி விட்டாய். நான் உன்மேல் கோபமாக இருக்கிறேன். இப்பொழுது நான் உன்னை கொன்றால் அது எனக்கு உன் மேல் உள்ள கோபத்தினால் மட்டுமே கொன்றது ஆகும், என் நாட்டுக்காக நான் அற்றும் கடமையினால் அல்ல” என்கிறான்.

அதே தான் இங்கும். அர்ஜுனனை அவன் கடமையை செய்யச் சொல்கிறார் கண்ணன், கொலை செய்ய அல்ல. தற்போது தற்காப்பு கலையில் சொல்லிக் கொடுக்கப் படுவதைத் தான் அன்று கண்ணன் அர்ஜுனனிடமும் எதிர்ப்பார்த்தார். எதிராளியை அடிக்க வேண்டும், ஆனால் அச்சமயத்தில் மனம் ஒருமித்த அமைதியோடு இருக்க வேண்டும். இது தான் யுத்த களத்தில் அஹிம்சை. இதை ஜப்பானியர்கள் கோன் koan என்று சொல்வார்கள்.

இந்த யோக முறையை அடைவது எளிதல்ல, சாத்தியமற்றது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் மனம் சஞ்சலப்படும், காற்றை அடக்குவதைவிட கடினமானது. ஆனால் அமைதியற்ற மனதை அடக்குதல் கடினமென்றாலும் பயிற்சியாலும், பற்றின்மையாலும் இந்நிலையை அடைய முடியும். கட்டுப்பாடற்ற மனங்கொண்டவனுக்கு இது கடினம், ஆனால் கட்டுப்பாடான மனத்துடன் முயல்கையில் வெற்றி நிச்சயம்.

அடுத்து, ய்க்ஞபதியான விஷ்ணுவுக்கு சமர்ப்பணமாக ஒருவன் செயல்பட வேண்டும். இல்லையேல் அவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துகின்றன. பகவானது திருப்திக்காக வினையாற்றினால் அவன் விடுபடுவதுடன் பற்றடங்கி வாழலாம். இதற்குப் பெயர் பொறுப்பு துறத்தல். பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால் பொறுப்பு அவருடையதாகிறது. செய்யும் ஒவ்வொரு செயலும் அவருக்கே சமர்ப்பணம் என்கிறபோது செயல்பட்டாலும் அவன் விடுப்பட்டவன் ஆகிறான்.

sarva-dharmān parityajya

mām ekaṁ śaraṇaṁ vraja

ahaṁ tvāṁ sarva-pāpebhyo

mokṣayiṣyāmi mā śucaḥ

(BG 18.66)

“எல்லா தர்மங்களையும் விட்டு என்னையே சரணம் அடைவாயாக நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். துக்கப்படாதே” என்கிறார் பகவான். இதை சரம ஸ்லோகம் என்பர். செய்யும் செயல்கள் அனைத்துக்கும் அவரே காரணம், அவர் கருவியாக நாம் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டால் இம்மையில் உயர்ந்த இடத்தையும் மறுமையில் இறைவன் திருவடியையும் அடைவது திண்ணம். ஆதலால் சரணாகதி அடைந்தவன் அஹிம்சை வழியில் நடக்க இறைவனே துணை புரிகிறார். இன்னும் சுருக்கமாகச் சொன்னாள் ஹிம்சை பிறவி எடுப்பது, அஹிம்சை பிறவா நிலையை அடைவது!

“முக்குணங்களால் ஆன எனது மாயை கடக்க முடியாதது; எனினும் என்னைச் சரணடைந்தோர் எளிதில் கடக்கலாம்.” என்கிறார் பகவான் கிருஷ்ணன்.

கோபம், லோபம், மத மாத்சர்யம், இன்றியும், சத்வ, ரஜோ தமோ குணங்களுக்கு அப்பால் நிற்கும்போது அவன் எண்ணத்தில் கோபமே வராது. கோபமற்ற எந்த செயலும் அஹிம்சை வழியே.

பதினோராம் அத்தியாயத்தில் பகவான், ”உலகை அழிக்கும் காலம் நான். போரிடுபவரில் உங்களைத் தவிர இருதரப்பினரும் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் அம்பெய்பவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் போன்ற வீரர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறும போரிட்டு, வெல்.” என்கிறார். அதாவது அர்ஜுனன் வெறும் கருவியே, இயக்குவது பகவான். இந்தத் தன்மையில் எவன் ஒருவன் இயங்குகிறானோ அவன் செயல்கள் அனைத்தும் அஹிம்சையே. ஆதலால் சரணாகதி அடைந்தவன் அஹிம்சை வழியில் நடக்க இறைவனே துணை புரிகிறான்.

பதிமூனாவது அத்தியாயத்தில் பகவான், “அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மிக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் – இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.” என்கிறார். அஞ்ஞானமே அஹிம்சைக்கு எதிரானது. ஞானம் உடையவன் அஹிம்சையில் செயல்படுகிறான்.

கீதை கொலை செய் என்று சொல்வது உயிர்களை அல்ல ஆசையை, மோகத்தை, காமத்தை என்று நினைவில் கொள்ள வேண்டும். சகல் விதத்திலும் சகல நேரங்களிலும் சகல உயிர்களிடத்திலும் அஹிம்சை பாராட்டப்பட வேண்டும் என்று யோக சூத்திரத்தில் வியாசர் கூறுகிறார்.

அகிம்சை, வாய்மை, சினமின்மை, தியாகம், சாந்தி, குயுக்தியாகப் பேசாமை, உயிர் இரக்கம், கடும் பற்றுள்ளம் இல்லாமை (லோபம் இல்லாமை), வள்ளல் குணம், பணிவு, திடமான மனம் ஆகியவை இயமத்தின் தன்மைகளாக கீதையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்று வருகிறது. ஒன்றோடுன்று தொடர்புடையது. அஹிம்சை என்னும் தர்மம் தியாகத்தினாலும், பற்றுள்ளம் இல்லாமையாலும், வாய்மையினாலும் பெறப்படும். அல்லது இவை ஏதாவது ஒன்றை கடைபிடித்தாலும் தானே இயல்பாக அஹிம்சை வரும்.

இதைத்தான் திருமழிசை பிரான் நாலே வரிகளில்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்

இறைவன் என்பவன் நமக்கு மிக அருகே உள்ளான், அதே சமயத்தில் நம் கைக்கு அகப்படாமல் எட்டவும் உள்ளான். ரொம்ப சின்னவன்னு வெச்சுக்கலாம், ரொம்பப் பெரியவனும் அவனே ஆவான். ஆயனாக பிறந்தான், துவாரகா ஈசனாக இருந்த அவன் அன்று பாரத யுத்தத்தின் நடுவில் திருத் தேர் தட்டில் நின்று அர்ஜுனனுக்கு அருளிச் செய்த சரம ஸ்லோகமாகிய அந்தத் திருவாக்கை தெரிந்து கொள்ளாவிட்டால் ஒருவனுக்கு மெய் ஞானம் ஏற்படவே ஏற்படாது என்று சாதித்து விட்டார்.

இதை ஒருவர் தெரிந்து கொண்டு விட்டால் மற்ற எதைப் பற்றியும் தெரிந்து கொள்வது எளிதாகிவிடும் அல்லது மற்றதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது, அல்லது வேறு விஷயங்களை தெரிந்து கொண்டும் எந்தப் பலனும் இருக்காது.

சகிப்புத் தன்மை குறைந்து வரும் இன்றைய சமூக நிலையில் அஹிம்சையின் முக்கியத்துவம் அனைவராலும் நன்கு உணரப்பட வேண்டும். அஹிம்சையின் பலன்களையும் அதை பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒருவர் பாவித்து வந்தால் அதன் மேன்மை வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் இன்னும் நன்றாக விளங்கும். இதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

ahimsa

 

Reference: http://tamilthamarai.com/2015-08-01-13-48-07/

http://www.ujiladevi.in/2012/07/blog-post_13.html

http://harimakesh.blogspot.in/2006/12/81.html

கோ 2 – திரை விமர்சனம்

Ko2_movie_poster1

Baby face Bobby Simha அதிரடியா நடித்திருக்கும் ஒரு வகை அரசியல் thriller/நையாண்டி படம் கோ 2. இரண்டு மணி நேரமே படம் என்றாலும் முதல் பாதியில் சூடு பிடிக்க நேரம் ஆகிறது. பின் பாதியில் முடிச்சுகள் அவிழ்கையில் சுவாரசியம் கூடுகிறது. சில வசனங்களில் இன்றைய ஆளும் கட்சியை சாடும் அரசியல் காட்சிகளை அரங்கேற்றினாலும் தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தினால் வாக்களிப்பதில் பெரும் மாற்றமோ பாதிப்போ ஏற்படாத வண்ணம் சவ சவ என்று அமைந்திருப்பது இப்படத்தின் மைனஸ்.

திரைக் கதையில் தெளிவு இல்லை. பின் பாதியில் தான் கதையே சரியாகப் புரிகிறது. சஸ்பென்ஸ் தேவை தான் ஆனாலும் கதை முதலில் இருந்து புரிந்தால் தான் சஸ்பென்ஸ் கடைசியில் எடுபடும். பாபி சிம்ஹாவுக்கு ஏற்ற பாத்திரம், கச்சிதமாக செய்திருக்கிறார். சினிமா இலக்கணத்துக்கு ஏற்ப ஒரு சண்டை காட்சி, டூயட் இரண்டும் உள்ளது. நிக்கி கல்ராணி ஹீரோயின். பிற மாநில நடிகைகளை இரு கரம் நீட்டி தமிழ் திரையுலகம் வரவேற்கும் என்பது எழுதப்படாத விதி. நம் தலைவிதியும் அதுவே. அதனால் நடிப்பைப் பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்? வெள்ளைத் தோல் போதும். அது நிறையவே உள்ளது, முக்கியமாக பாடல் காட்சியில். ஹீரோயினுக்கு உடையமைப்பு யார் என்று தெரியவில்லை. சுத்தமாக செட் ஆகவில்லை.

முதல்வராக பிரகாஷ் ராஜ். நடிக்க ஸ்கோப் இருந்தா தானே பாவம் அவரும் நடிக்க முடியும்? முதல்வன் படத்தின் ரகுவரன் அர்ஜுன் தொலைக் காட்சி பேட்டி கண் முன் வந்து மனக் கண்ணில் கண்ணீர் வரவழைத்து விட்டுப் போகிறது. அதே மாதிரி கேள்வி பதில் செஷன் கிட்நேப் செய்யப்பட முதல்வருடன் பாபி சிம்ஹாவுக்கு உள்ளது. ஆனால் சேர்க்கப்பட்ட சம்பவங்களும் வசனங்களும் ரொம்ப சுமார் ரகம். இளவரசு, நாசர், கருணாகரன், ஜான் விஜய் சின்ன பாத்திரங்கலில் வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டராக வரும் அந்த காமெடி நடிகர்{பெயர் தெரியவில்லை} புது மாதிரியாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு செய்யும் மேனரிசம் கடுப்பை மட்டுமே வரவழைக்கிறது, மேலும் அது படத்தின் விறுவிறுப்பைக் குறைக்கிறது. கோஹிலா கோஹிலா என்ற பாடல் மட்டும் நன்றாக உள்ளது. மற்ற பாடல்கள் சுமார். புது இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ். இது தான் அவர் முதல் படம். ஒளிப்பதிவாளர் பிலிப் சுந்தர் டூயட் பாடலை மிகவும் நன்றாக படமாக்கியுள்ளார்.

இது சின்ன பட்ஜெட் படம் தான். அதனால் போட்ட பணத்தை எடுத்துவிடுவார் தயாரிப்பாளர். இன்னும் விறுவிறுப்பாக பொறி பறக்கும் வசனங்களுடன் எடுத்திருக்கலாம், ஆனால் படம் ரிலீஸ் ஆகாமல் போக வாய்ப்பிருந்திருக்கும். இதிலேயே சென்னை வெள்ளம் பற்றிய ரெபரன்ஸ் மற்றும் ஆளுங் கட்சியை கேள்வி கேட்கும் வகையில் சில வசனங்கள் இருந்தும் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. தயாரிப்பாளருக்கும் ஹீரோ இயக்குநருக்கு கட்டம் சரியா இருந்திருக்கும் போல!

ko22

24 – திரை விமர்சனம்

24

சூர்யா நடிப்பிற்கு நல்ல ஸ்கோப் தந்திருக்கும் படம், மூன்று வேடங்களில் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் & ஹீரோ பாத்திரங்களில் நல்ல வித்தியாசத்தைக் காண்பித்து நடிப்பில் மிளிர்கிறார். அவரின் கேரியரில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம். ஒவ்வொரு பாத்திரத்தையும் உள்வாங்கி கேரக்டராக மாறி நடித்துள்ளார். அதுவும் மணி பாத்திரத்தில் ஒரு ஜாலித் தன்மையுடனும், வில்லனாக குரூர குயுக்தியுடன் நடிப்பது பாராட்டுக்குரியது!

திரைக் கதை மட்டும் இன்னும் நன்றாக அமைந்திருந்தால் இன்னும் நல்ல படமாக இது அமைந்திருக்கும். டைம் டிராவல் கதை.  நல்ல மூலக் கதையை வைத்துக் கொண்டு பரபரவென நகரும் திரைக் கதையாக மாற்றியிருக்க வேண்டும் விக்ரம் குமார். இப்படத்தை ஹரி இயக்கியிருந்தால் இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து இருப்போம். ஆனால் இது விண்டேஜ் கார் மாதிரி மெதுவாக பயணிக்கிறது. முதல் பாதி வெகு நீளம். இடைவேளையின் போதே படத்தை முடித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் குழப்பம் இல்லாமல் நகர்கிறது திரைக் கதை. சகொதர்களிடையே வரும் பகைக்கான காரணம் சொல்லாததும் படத்தில் அழுத்தத்தை குறைக்கிறது.

நித்யா மேனனுக்கு சின்ன பாத்திரமாக இருந்தாலும் நன்றாக செய்துள்ளார். சமந்தா ஸ்பெஷலாக எதுவும் இல்லை. சராசரி என்ற அளவிலே தான் அவர் பங்களிப்பு உள்ளது. தமிழ் படங்களின் ஆஸ்தான அம்மாவான சரண்யா பொன்வண்ணன் கச்சிதமாக நடித்திருக்கிறார். எல்லா அம்மாக்களும் இவ்வளவு பப்ளியாக நிஜ வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்கும். மகனிடம் முன் கதையை சொல்லும் பொழுது நெகிழ வைக்கிறார்.

ஜனரஞ்சகப் படங்களுக்குப் பாடல்கள் தேவை எனினும் இப்படத்தில் பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். ரஹ்மானின் இசை என்று சொல்லவே முடியாது. மேலும் டூயட்கள் படத்தில் வேகத் தடைகளாகவே உள்ளன. சூர்யாவுக்கும் சமந்தாவுக்கும் சுத்தமாக கெமிஸ்டிரி இல்லை. அல்லது அந்த மாதிரி ரோமேண்டிக் சம்பவங்கள் சேர்க்கப்படவில்லை என்று சொல்லலாம்.

திருவின் ஒளிப்பதிவு படத்தின் பலம். சோதனைக் கூடத்தில் இருக்கும் சேதுராமனை காட்டும்போதும், அவரின் evil twin ஆத்ரேயாவை காட்டும்போதும் ஒளியில் எதோ மாயம் செய்து நல்ல வித்தியாசத்தைக் கொண்டு வருகிறார்.

24 என்ற ப்ராஜெக்டின் பெயருக்கான காரணம் புரிய வரும்போது அட போட வைக்கிறார் இயக்குநர். சின்ன சின்ன நிகழ்வுகளால் பின்னப்பட்டுள்ள கதை, லைட்டான படம். மெலோடிராமா எதுவும் இல்லை.

சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மற்ற தரப்பினருக்கும் இந்தப் படம் entertainingஆக இருக்கும். ரசிகர்களிடம் இருந்து வந்த Feed back வைத்து படத்தை trim செய்தால் நன்று.

24-1