பீடி, சிகரெட், மூக்குப் பொடி, வெற்றிலை பாக்குடன் சுவைக்கும் புகையிலை இவை அனைத்துமே புகையிலையின் வெவ்வேறு வடிவங்களே. புகையிலையை வாயில் போடுவது, மூக்கில் இடுவது, புகைப்பது இவை யாவும் மூளைக்கும், இருதயத்திற்கும் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்று சிலர் கூறலாம். ஆனால் இதனால் கிடைக்கும் அற்ப நன்மையை விட தீமைகள் மிக அதிகம்.
இதை உபயோகிப்பவர்களின் நல்ல இரத்தம் கெட்டு நெஞ்சு வலி, தலை நோய், பீனிசம், காசம், நீரிழிவு முதலிய நோய்கள் உண்டாவது நிச்சயம். பித்தம் அதிகரித்து கபாலச்சூடு உண்டாகி நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் முதலியன உண்டாகின்றன. வாய் புற்று நோய் வந்தவர்களை பார்த்தவர்கள் யாரும் புகையிலை அருகில் போகவே மாட்டார்கள். இந்தப் பழக்கத்தை நிறுத்த புகையிலை பயன்படுத்துபவர்களின் நண்பர்கள் அடையார் கேன்சர் இன்ஸ்டிடயிட்டிற்கு அந்த நட்புக்களை அழைத்து சென்று அங்கு இருக்கும் நோயாளிகளை காட்டலாம். நம் நாட்டில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் ஒரு புகையிலையினால் ஏற்படும் இறப்பு நிகழ்கிறது.
புகையிலையில் நிக்கோடீன் என்ற கொடிய விஷம் உள்ளது. அரைத்துளி நிக்கோடீன் விஷம் ஆளையே கொல்லவல்லது. புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் அது மனிதனின் நரம்பையும் இரத்தக் குழாய்களையும் சீர்குலைத்து விடும். சிகரெட்டில் நாலாயிரம் வகை நச்சு ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. புகையிலையில் உள்ள தார் சத்தும், நிக்கோடீனும் வாய்த் திசுக்களைக் கெடுத்து சுவை குன்றச் செய்துவிடும். புற்றுநோய் இவர்களை எளிதில் பீடிக்கும். புகைப்பவர்களின் இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட வழி உள்ளது.
சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை மாசுபடுவதோடு, உங்கள் அருகில் உள்ள அப்பாவிகளும் நீங்கள் விடும் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.
மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும். (புகை பிடிப்பவர்களின் குழந்தைகள் சரியாக படிக்காததற்கு நீங்களே காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்)
புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் விஷயத்தில் புகையிலை பயன்பாட்டை யாரும் குறைத்திருப்பதாகத் தெரியவில்லை, ஆயினும் அது மிக மிக தேவையே. அன்புமணி ராமதாசுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும், சினிமாவில் ஹீரோக்கள் புகை பிடிக்கக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்ததற்கு. பல இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகரையே தங்கள் ஆதர்சமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புகைக்காமல் இருந்தாலே அது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தாலும் வெளிப்படையாக தன் உடற்கேட்டிற்கான காரணம் புகையிலையும், குடிப்பழக்கமும் தான், அதை நீங்கள் செய்யாதீர்கள் என்று தன் ரசிகர்களிடம் சொன்னது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட முக்கியமாகப் புகையிலை பயன்படுத்தாதவரை தேர்ந்தெடுத்தாலே புகையிலை பயன்பாடு குறைந்துவிடும் என்பது என் எண்ணம்.
May 31, 2016 @ 03:12:24
ஒரு தாயன்போடு நம் இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்லியிருக்கீங்க. நூற்றுக்கு ஒரு பத்து பேர்கள் இதை படித்து திருந்தினாலே போதும் .
முன்ன மாதிரி இல்லாம,இப்போ சிகரட் குடிப்பது குறைந்து போய்விட்டதை காண்கின்றேன். அதற்கு காரணம் விலையேற்றம்தான். ஆனாலும் வாயில் போட்டு மெல்லும் புகையிலை பொருட்கள் பள்ளி மாணவர்களிடையே பரவலாகவுள்ளது வேதனை தருவதாக உள்ளது 😦
நன்றி வாழ்த்துகள் :))