ட்விட்டர் நண்பர் ஜகன் @Azhvarkadiyann க்குத் திருமணம் நிச்சயம் ஆன உடனேயே எங்கள் நண்பர் குழாம் கோவில்பட்டிக்கு டிக்கெட் போட்டாச்சு. அந்த வட்டாரத்தில் இருக்கும் சில பல கோவில்களை தரிசிக்கவும் மூன்று நாட்கள் இன்ப சுற்றுலா திட்டமும் வகுக்கப்பட்டது. ஜெகனின் திருமணம் கோவில்பட்டியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசுவந்தனை சிவன் கோவிலில் நடைபெற இருந்ததால் நாங்கள் எட்டு பேர் கோவில்பட்டிக்குப் போய் அங்கே குளித்து முடித்துத் திருமணத்துக்குச் செல்வதாக முடிவு செய்தோம்.
முத்து நகர் எக்ஸ்பிரெஸ்சிலியே கொண்டாட்டம் ரம்பம்பம் ஆரம்பம். சுவை மிகுந்த உணவிற்குப் பிறகு ட்விட்டர், சினிமா, அரசியல் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய எங்கள் மேலான கருத்துக்களைப் {!!} பகிர்ந்த பிறகு தூக்கம் கண்களை சுழற்ற நல்ல உறக்கம். இப்பொழுது எந்த ஸ்டேஷனில் இறங்க வேண்டுமோ அந்த ஸ்டேஷன் வரும் முன் எழுப்ப போனில் 139 டயல் செய்து அலாரம் வைக்கும் வசதியை ரெயில்வே துறை அமைத்துக் கொடுத்துள்ளது. எங்களுக்கு அது மிகவும் வசதியாக இருந்தது. காலை ஐந்தே காலுக்குக் கோவில்பட்டியை தொட்டது டிரெயின். சூப்பர் டிலக்ஸ் டெம்போ டிராவலரை எங்கள் குழு நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். சிறு நகர வீதியில் காலை புலரும் நேரத்தில் ஹோட்டல் சென்று அடைந்தோம். மிகவும் ரம்மியமான காலைப் பொழுது.
சின்ன விடுதி தான். ஆனால் சுத்தமாக இருந்தது. குளித்து முடித்து அலங்கரித்துக் கொண்டு கிளம்பி லட்சுமி சங்கர் சைவ ஹோட்டலில் காலை உணவை உண்டோம். காபி சுவை நாவை விட்டு நீங்கவில்லை. சாப்பிட்ட இலையை நாமே எடுத்துப் போடவேண்டும். என்ன அருமையான பழக்கம்! காலை மணி எட்டு எட்டரை ஆனதால் நிறைய பள்ளி பேருந்துகள் செல்லும் சாலையில் ரொம்ப டிராபிக் ஜேம். பசுவந்தனை செல்லும் சாலையில் ஓவர் டேக் எல்லாம் செய்ய முடியவில்லை. கோவிலை அடைந்தபோது மணி ஒன்பதே கால். முகூர்த்தம் ஒன்பதில் இருந்து பத்தரை. மணமக்களும் குடும்பத்தினருமே அப்பொழுது தான் அரக்கப் பறக்க வந்திருந்தனர்.
சாமி சன்னதியில் மணமக்களுக்கு புது உடை கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளை சீக்கிரம் ரெடியாகி விட்டார். வழக்கம் போல பெண் லேட்டாக்கினார். கோவில் குருக்கள் மணி பத்தாகிவிட்டதே என்று அவசரப் படுத்தினார். ஆனால் மணமக்கள் வீட்டார் ரொம்ப ஜாலியாக இருந்தனர். அதெல்லாம் பத்தரைக்குள் மாப்பிள்ளை தாலியை கட்டிவிடுவார் கவலை வேண்டாம் என்று குருக்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தனர். புது உடையில் வந்த மணமக்களை சாமி சன்னதியில் இருந்து கோவிலில் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். எக்கச்சக்கக் கூட்டம். ஊரே வந்துவிடும் போலிருக்குக் கல்யாணத்துக்கு!

மணமக்களை புகைப்படக்காரர், விடியோக்காரர் நன்றாக மறைத்துக் கொண்டனர். தாலி கட்டும் சமயத்தில் தோராயமாக மணமக்கள் இருக்கும் திசையில் அட்சதையை தூவினோம். வாழ்க மணமக்கள். இருவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் இருந்தது முகத்தில் தெரிந்தது. இரு வீட்டாரும் சொன்னது போல பத்து இருபத்தைந்துக்கு ஜகன் மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டார்.
மணமக்கள் ரிசெப்ஷன் மண்டபத்துக்கு வந்த பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டு திருமணத்தின் முக்கிய நிகழ்வான விருந்துண்ணல்லுக்கு முதல் பந்திக்கே சென்றோம். அறுசுவை உணவு! ஜவ்வரிசி/சேமியா பால் பாயசத்தின் சுவை இன்னும் நாக்கில் உள்ளது!
பிறகு கோவில்பட்டிக்குப் பயணம். வழியெல்லாம் சில ஈச்ச மரங்களும், பனை மரங்களும் வேலிக்காத்தான் முட்செடிகளும் தான் சாலையின் இரு புறமும் இருந்தன. நிழல் தரும் மரங்களோ பசுமையான வயல்களோ இல்லை.
நாலு மணிக்கு கோவில்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் பயணப்பட்டோம். முப்பது கிலோமீட்டர் தான். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தை நிச்சயம் உலக அதிசயங்களுக்கு ஈடாகச் சொல்லலாம். வானளாவ நிற்கும் அந்தக் கோபுரம் தமிழர் பண்பாட்டிற்கும் கலை நயத்துக்கும் ஒரு சான்று. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

கோவில் வெளிப்பிராகாரத்தில் இருந்தே பெரிய பெரிய சிற்பங்கள் தூண்களை அலங்கரிக்கின்றன. கையெட்டும் தூரம் வரை எண்ணெய் பிசுக்கை நம்மவர்கள் தூண்களில் துடைத்து வைத்திருக்கின்றனர். அதற்கு மேல் பகுதி கெடாமல் அழகாக உள்ளன. எத்தனையோ வருடப் பழைமையானக் கோவிலாக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள சுவரில் உள்ள சிற்பங்கள் மெருகு குலையாமல் உள்ளன. அவ்விடங்களில் கம்பி வேலி போட்டு பாதுகாப்பதும் ஒரு காரணமாக இருக்கும். உட் பிராகாரத்தில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் ஆண்டாள், பெரியாழ்வாரின் கதைகளை சொல்கின்றன.


கர்ப்பக்கிரகத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் மற்றும் கருடன் சேவை சாதிக்கின்றனர். எங்கும் கருடாழ்வார் பெருமாளுக்கு நேரெதிர் சன்னதியில் தான் இருப்பார். ரங்கமன்னாரை ஆண்டாளுடன் இணைக்க விரைந்து கருடன் கொண்டு சேரப்பித்ததால் அவருக்குப் பெருமாளுடன் நிற்கும் ஏற்றம் இங்கே கிடைத்திருக்கிறது.

கோவிலைச் சுற்றியும் கோவிலுக்குப் போகும் அந்த வெளிப் பிராகாரத்திலும் பால்கோவா, வாசனைப் பொடி, தாழம்பூ குங்குமம், மர பொம்மைகள், ஓலைக் கூடைகள் எனக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இரு புறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. வெளியே வந்தவுடன் இடது புறத்தில் ஆண்டாள் அவதரித்த துளசி வனம் உள்ளது. மிகவும் அழகான நந்தவனம். அங்கேயே ஒரு சின்ன சன்னதியில் சிறுமியாக ஆண்டாள் சேவை சாதிக்கிறாள். சின்னக் கோவிலானாலும் மிகவும் சுத்தமாகவும் சுவர்களில் அழகிய சித்திரங்களும் நிறைந்துள்ளன.

அதை அடுத்து வடபத்ரசாயி கோவில் உள்ளது. பெரிய கோவில், இரண்டு நிலைகள். கீழ் நிலையில் லட்சுமி நரசிம்மர் சுதையால ஆன பெரிய சிலை. வண்ணப் பூச்சுக்களுடன் கன கம்பீரமாகக் காட்சித் தருகிறார். அழகோ அழகு. மாடியில் வடபத்ர சாயி. அவரும் சுதை வடிவில், நீண்ட சயனத் திருக்கோலம். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை இவ்வளவு அருகிலும் விரட்டப்படாமலும் சேவிக்க முடியாது. இங்கே அருமையான சேவை. தீர்த்தம், துளசிப் பிரசாதம். அந்தக் காலத்தில் எப்படித்தான் இவ்வளவு பிரம்மாண்டமானக் கோவில்களை அரசர்கள் கட்டினார்களோ தெரியவில்லை. கோவில்கள் முழுவதுமே சிற்பங்கள் கண்ணைக் கவர்ந்தன. இந்த மூன்று கோவில்களும், அடுத்து நாங்கள் தரிசித்த நவ திருப்பதியும் வெகு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது ஒரு பெரிய ஆறுதல்.

அடுத்த நாள் திருநெல்வேலிவேலியில் இருந்து பயணத்தைத் தொடங்கினோம். ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன. நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள். 1.ஸ்ரீவைகுண்டம் 2.நத்தம் 3. திருப்புளியங்குடி, 4.தொலைவில்லி மங்கலம், 5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது) 6.பெருங்குளம், 7. தென்திருப்பேரை, 8. திருக்கோளூர், 9. ஆழ்வார் திருநகரி.
டிபனை முடித்துக் கொண்டு கிளம்பவே ஒன்பது மணி ஆகிவிட்டது. நவ திருப்பதியின் முதல் கோவிலாக திருவைகுண்டத்தை அடைந்தோம். அழகிய பெரிய கோபுரம். வாசல் பகுதியில் இருந்து சன்னதிக்கு செல்வதே நீண்ட நடையாக இருந்தது. ஒரு தனி மண்டபத்தில் நிறைய ஆளுயர சிற்பங்கள் இருந்தன.

வைகுண்டநாதன் நின்ற திருக்கோலம். ரொம்ப உயரம் இல்லை. எந்த நவ திருப்பதி கோவில்களிலும் கர்ப்பகிரகத்தில் மின்சார விளக்கு இல்லை, எண்ணெய் விளக்குகள் தாம். அதனால் வெளி வெளிச்சத்தில் இருந்து நாம் உள்ளே வந்து தரிசிக்கும்போது சிறிது நேரம் ஆகிறது கண்கள் அட்ஜஸ்ட் ஆகி பெருமாளை சரியாக பார்க்க. தீபாராதனை காட்டும்போது தான் நன்றாக தரிசிக்க முடிகிறது. பட்டர் சுருக்கமாக பெருமாளின் பெயர், தாயாரின் பெயர் திவ்ய தேசத்தின் பெயர், எந்த கிரகத்துக்கான ப்ரீத்தி ஆகியவைகளை கூடியிருப்பவர்களுக்குச் சொல்கிறார். இந்தக் கோவில் சூரியன் பரிகார ஸ்தலம்.

ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டானாம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா கடும் தவம் செய்ய, பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிகிறார்.
அடுத்து நாங்கள் சென்றது ஒன்பதாவது திருப்பதி. முதல் ஸ்தலத்துக்குப் பிறகு ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு என்று வந்தால் சுற்று இல்லாமல் விரைவில் தரிசிக்க முடிகிறது. ஆழ்வார் திருநகரி பயணப்பட்டோம். இது நம்மாழ்வார் அவதாரத் தலம். கோவில் வெளியில் இருந்து பார்க்க சிறியதாக இருந்தாலும் உள்ளே பெரியதாக இருந்தது. பெருமாளும் கிடந்த கோலத்தில் வெள்ளிக் கவசத்தில் பிரமாதமாக இருந்தார். நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா, திருவடிகளில் ஸ்ரீதேவி பூதேவி. இங்கும் தீப ஆராதனையின் போது தான் பெருமாளை நன்றாக தரிசிக்க முடிகிறது. எல்லா கோவில்களிலுமே ரொம்ப கூட்டம் இல்லை. நாங்கள் போவதற்கு முன் ஒரு பத்து பேர் இருப்பர், அவர்கள் நகர்ந்ததும் நாம் சற்று அருகில் போய் சேவிக்க முடிகிறது. இந்தக் கோவில் குரு பகவானுக்கான பரிகார ஸ்தலம்.
பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் ஆதிநாதன் என்ற திருநாமம் இவருக்கு. திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என்றும் அழைக்கப்படுகிறது.

பிராகாரத்தை வலம் வந்தால் அங்கே ஒரு பகுதியில் நான்கு படிகள் ஏறினால் நம்மாழ்வார் பல வருடங்கள் பிண்டமாக வாழ்ந்த புளியமர பொந்தை தரிசிக்கலாம். நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது. இந்தப் புளியமரம் இரவில் இலைகளை மூடாது. அதனால் இதற்கு உறங்காப் புளி என்று பெயர். பக்கத்திலேயே நம்மாழ்வார் சன்னதி. நம்மாழ்வார் திரு உருவம் மிகவும் அழகாக உள்ளது. அலங்காரமும் அற்புதம்.
அடுத்து நாங்கள் எட்டாவது தலமாகிய திருக்கோளூர் சென்றோம். இது மதுரகவி ஆழ்வார் அவதாரத் தலம்.

இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள், உற்சவர் நிக்சோவித்தன், தாயார் குமுத வல்லி, கோளூர் வல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து, தான் ஒரு சாபத்தால் இழந்த நிதியில் பாதியை பெற்றான். எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். இது செவ்வாய் கிரஹதோஷ நிவர்த்தி ஸ்தலம்.
அடுத்து தென் திருப்பேரை சென்றோம். இந்த தலம் திருவைகுண்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தான். இங்கு மூலவர் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். உயரமான பெருமாளாக தரிசிக்க அத்தனை அழகாக உள்ளார். உற்சவர் நிகரில் முகில் வண்ணன், தாயார் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பெயர்களே உச்சரிக்க அவ்வளவு ரம்மியமாக உள்ளன.

துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தாராம். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்திருக்கிறார். அப்போது தேவர்கள் பூமாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. இலக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் திருப்பேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பொய்ப்பதில்லை என்கிறார்கள். இது சுக்கிர கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.
அடுத்தத் திருத்தலம் பெருங்குளம். மூலவர் வேங்கட வாணனாகவும், உற்சவர் மாயக்கூத்தன் தாயார் அலமேலுமங்கை, குளந்தைவல்லி தாயாருடன் அருள் பாலிக்கிறார்.

பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண் குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி, தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார். பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.
ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான். குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார். பெருமாளுடன் அரக்கன் போரிட்டான். அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது. இது சனி கிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

பெருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இரட்டை திருப்பதி ஸ்தலங்கள். தெற்கு கோவிலில் மூலவர் தேவபிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன் தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். மிகப் பெரிய மூர்த்தி. வீற்றிருந்த திருக்கோலம். வெள்ளிக் கவசத்துடன் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கிறார்.

ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த மிக ஒளிமயமான ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார். அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் ராகு தோஷநிவர்த்தி ஸ்தலம்.இரட்டை திருப்பதி என்னும் ராகு கேது பரிகார ஸ்தலம்.
தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வடக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அரவிந்த லோசனார் {செந்தாமரைக் கண்ணன்} வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன் தாயார் கருத்தடங்கண்ணியுடன் எழுந்தருளியுள்ளார். பெருமாளையும் தாயாரையும் நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார். ஒருமுறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக காட்சி அளிக்கிறார். இது கேது கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.
இந்தக் கோவில்கள் இரண்டும் ஒரு மணிக்கு மேலும் திறந்திருப்பது சேவார்த்திகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. செந்தாமரைக் கண்ணன் கோவிலில் ரொம்ப அழகான ஒரு யானை லட்சுமி என்ற பெயருடன் எல்லார் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. அதனுடன் புகைப்படம் எடுக்க நின்றால் தும்பிக்கையை மேலே தூக்கி அழகாக போஸ் கொடுத்தது. நாம் தாங்க் யு என்றால் தலையை ஆட்டி, போயிட்டு வரோம் என்றாலும் புரிந்தா மாதிரி தலையை ஆட்டியது. எங்கள் குழுவினர் சிலருக்கு அதை விட்டு வரவே விருப்பம் இல்லை.

அடுத்து நாங்கள் சென்றது புதன் பரிகாரத் தலமாகிய திருப்புளியங்குடி. இங்கே மூலவர் காய்சினவேந்தன் தாயார் மலர்மகள், திரு மகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால் கண்டுகொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இரு வரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவரகுணமங்கை எனப்படும் நத்தத்தில், மூலவர் விஜயாசன பெருமாள் ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் தாயார்கள் வரகுண வல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது சந்திரகிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

திருவரகுணமங்கையில் வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு ஆகியோருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனம் என்னும் மந்திரத்தை ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அப்போது திருமால் அங்கு தோன்றி வேதவிக்கு காட்சியளிதார். திருமாலின் அருள் பெற்று வேதவி பரம பதம் அடைந்தார்.
ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது. இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கே இறைவனை பிரார்த்திக்கலாம். இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
வெற்றிகரமாக மதியம் ஒன்னரை மணிக்குள் நாங்கள் நவ திருப்பதியையும் சேவித்து முடித்ததில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. எங்கள் குழுவில் பலருக்கு இது நெடு நாள் ஆசை. நிறைவேற்றி வைத்த அந்தப் பெருமாளுக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு எங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
தொடரும்..இன்னுமொரு பாகம்.