பலர் புகழ்ந்து தள்ளியது போல படம் ரொம்ப ஓஹோ என்றும் இல்லை எழுத்தாளர் சாருவும் வேறு சிலரும் இகழ்ந்தது போல படம் படு குப்பையும் இல்லை. இக்கால சூழலுக்கு ஏற்ற மிக நல்ல படம். பெண்கள் என்றும் சூழ்நிலை கைதிகளாகவே உள்ளனர், சுதந்திரம் என்பது வெகு அரிதான ஒரு பரிசாக அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது படம். பெண்கள் ஆண்களிடம்/கணவன்களிடம் படும் அவஸ்தைகளை மெலோடிராமா இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம். பீட்சா, ஜிகிர்தண்டா, அதன் பின் இறைவி. ஜிகிர்தண்டா ரொம்ப ஜனரஞ்சகமான படம். இறைவி கொஞ்சம் சீரியஸ். படத்தில் வரும் சம்பவங்கள் நிஜ வாழ்வை ஒத்து உள்ளது. எஸ்.ஜே.சூர்யா தான் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் ஒரு இயக்குநராக அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. அவரது மனைவியாக கமாலினி முகர்ஜி, விரக்தியால் குடி நோயில் தள்ளாடும் சூர்யாவிடம் மாட்டிக் கொண்டு திருமணத்தை முறித்துக் கொள்ளவும் முடியாமல் அவருடன் குடித்தனமும் செய்ய முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் வாழும் அவரும் சிறப்பாக செய்துள்ளார்.
விஜய் சேதுபதி திரும்பவும் அடியாள் மாதிரி பாத்திரம். அவரது மனைவியாக பல சின்ன சின்னக் கனவுகளுடன் அஞ்சலி. அஞ்சலி, கமாலினி, பூஜா தேவரியா ஆகிய மூன்று முக்கிய பெண் பாத்திரங்களில் அஞ்சலி எளிதாக முதல் இடத்தைப் பிடிக்கிறார். வடிவுக்கரசியும் படத்தில் உள்ளார், அவர் கோமாவில் இருப்பதால் நடிப்பு என்று பேச எதுவும் இல்லை. ராதாரவி, சீனு மோகன் தங்கள் தேர்ந்த நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.
பெண்களின் நிலை பற்றி பொதுவில் எவரும் கவலைப்படுவதில்லை ஏனென்றால் பெண் எந்த நிலைக்கும் தன்னை பொருத்திக் கொள்வாள் என்ற காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையே. அதுவே இப்படத்தின் அடித்தளம். அதன் மேல் கட்டப்பட்டிருக்கு மற்ற சம்பவங்கள். ஆண் என்பவன் கோபக்காரன், முரடன், ஆதிக்கம் செலுத்துபவன். ஆண்கள் பெண்களுக்கு உதவும் எண்ணம் இருக்கும் சமயத்திலும் கூட அதன் முடிவு ஆண்களுக்கு சாதகமாக இருந்தாலே அதை செயல் படுத்துகிறார்கள். அதை மாற்றவும் முடியாது என்பதையும் இப்படம் சொல்கிறது.
Men are from mars and women are from Venus என்பது ஒரு புகழ் பெற்ற புத்தகத்தின் தலைப்பு. அப்புத்தகத்தில் ஆசிரியர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை விவரமாக காட்டியிருப்பார். ஆணும் பெண்ணும் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள், அவர்களின் எண்ணங்களும் செயல்களும் எதிர்ப்பார்ப்புகளும் வெவ்வேறானவை. அது இப்படத்தின் கருவாக இல்லாவிட்டாலும் ஆண், பெண் உணர்வுகளின் வித்தியாசத்தை இப்படம் அழகாக கோடிட்டுக் காட்டுகிறது.
இப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை. பாடல்களும் நன்றாக இல்லை. நான்கு பாடல்களையும் கட் பண்ணிவிடலாம். அவை கதையோட்டத்திற்கு தடையாகவும் உள்ளன. இந்தத் தவறை இயக்குநர் ஏன் செய்தார் என்று புரியவில்லை. படத்தின் நீளம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். பாடல்களை எடுத்துவிட்டால் நேரமும் குறையும். மேலும் பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பில் பழுதுள்ளது. அது கதையை பலவீனப் படுத்துகிறது.
பாபி சிம்ஹா கோமாவில் இருக்கும் வடிவுக்கரசியிடம் தன எண்ணங்களையும் செயல்களையும் பற்றி பேசுவது ஆடியன்சுக்கு அவரின் செயல்களைப் புரிய வைக்கவே என்று தெளிவாகத் தெரிகிறது. அது நாடகத்தனமாக உள்ளது. {ஆடியன்ஸ் அறிவாளிகளே!} அதே மாதிரி தான் கடைசியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் வசனமும். அவர் ஆண் பெண் பற்றி விளக்கம் சொல்லாமலே நமக்கு விளங்கும். படமே அது தானே!
ஒரே சமயத்தில் பல பாத்திரங்களை கதையில் களமாட விட்டு ஒருவரின் செயல் இன்னொருவரை பாதிக்கும் விதத்தில், அதே சமயம் சிக்கலில்லாமலும் திரைக் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெண்களுக்கு மதிப்புக் கொடுங்கள் என்று ஓபனாக சொல்லாமல் பெண்மையை உயர்த்திக் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராசுக்கு ஒரு மலர் கொத்துப் பரிசு :-}
Jun 04, 2016 @ 14:45:31
>>>இருதலைக் கொல்லி எறும்பு இருதலைக்கொள்ளி எறும்பு
Jun 04, 2016 @ 14:48:50
>>>ஆணும் பெண்ணும் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள், அவர்களின் எண்ணங்களும் செயல்களும் எதிர்ப்பார்ப்புகளும் வெவ்வேறானவை. சூப்பரு. விமர்சனம் குட். ஜிகிர்தண்டா ஏ செண்ட்டரில் மட்டுமே எடுபட்ட படம், ஜனரஞ்சகமான படம் என்ற வரிக்கு அர்த்தம் ஆல் செண்ட்டர் ஹிட்
Jun 05, 2016 @ 02:17:16
மிக்க நன்றி செந்தில் :-}
Jun 04, 2016 @ 15:43:24
vomit
Jun 04, 2016 @ 16:26:23
Verdict ennamaa ?
சரி ! உங்களுக்கு பிடித்ததா இல்லையா ?
Jun 05, 2016 @ 02:16:52
எனக்குப் பிடித்தது :-}
Jun 05, 2016 @ 05:30:34
அருமை நன்றாக வஞ்சகமில்லாமல் விமர்சித்துள்ளீர்கள் :))
” இக்கால சூழலுக்கு ஏற்ற மிக நல்ல படம். பெண்கள் என்றும் சூழ்நிலை கைதிகளாகவே உள்ளனர், சுதந்திரம் என்பது வெகு அரிதான ஒரு பரிசாக அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது படம். ” – இது ஒன்றே போதும் படம் பார்க்க வைக்கும்.
இன்று ஜூன் 5 தமிழ் ஹிந்து பேப்பர்ல ஏறக்குறைய உங்களின் விமர்சனம்போலதான் உள்ளது. அடுத்த லெவலுக்கு போறீங்க. படம் லெங்க்தின்னு ஹிந்டுவே சொல்லியிருக்கு :)) வாழ்த்துகள் நன்றி
Jun 06, 2016 @ 02:59:53
கடந்த மூன்று நாள்களாக இப்படத்திற்கு வரும் விமர்சனங்களைப் படித்துவிட்டு, இன்னமும் இறைவி பார்க்க போகலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாத இருதலைக் கொள்ளி ஏறும்பாகவே இருக்கிறேன் 🙂
Jun 16, 2016 @ 12:32:33
படத்தை இன்றுதான் பார்த்ததால், கருத்தும் தாமதமாக வருகிறது.
ஒரு கலைப்படைப்பை விமர்சனம் செய்வது எளிது. உருவாக்குவது கடினம். இந்தச் சூழ்நிலையில் பெண்களின் நிலையை வைத்துப் படம் செய்யும் போது கொஞ்சம் பார்த்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் எடுத்துச் சொல்ல வந்த கருத்து மிக அற்புதமான கருத்து. சமுதாயம் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. அந்தக் கருத்துக்கு என்னுடைய பாராட்டுகள்.
இந்தப் படம் மலையாளத்தில் வந்திருந்தால் ஹிட்டாகியிருக்கும். ஏனென்றால் மலையாள கதியில் இருக்கிறது படத்தின் வேகம். தமிழ்நாட்டு வேகத்தில் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
இந்தப் படத்தில் பாத்திரப்படைப்பும் நடிகர் தேர்வும் மிக அருமை.
அடுத்த படத்தில் வெற்றியைப் பெற கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.