திருவடி சேவை பகுதி 1 இங்கே
திருவடி சேவை பகுதி 2 இங்கே
திருவடி சேவை பகுதி 3 இங்கே
திருவடி சேவை -பகுதி 4 இங்கே
அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு. அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும் அல்லவா? கருடனே பெரிய திருவடி ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. அருணகிரி நாதர் ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ என்று முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார். எனவே, வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறான். திருமாலுக்கு கருடன் தான் என்றும் வாகனம். ஆதிமூலமே என்று கஜேந்திரன் கதறிய போது கருட வாகனத்தில் பறந்து வந்து காத்தவர் பெருமான்.

அனுமனும் இராமனுக்கு வாகனமாக விளங்கியவன்தான். இராவணனுடன் முதல் போர் நடக்கப் போகிறது. ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டத் தேரில் இராமனின் எதிர் வந்து நிற்கிறான் இராவணன். இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறுகாட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் என்றான்.
ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ, தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
மலையைப் பெயர்த்த தோள்கள், இலங்கிணியை ஒரே குத்தில் வீழ்த்திய தோள்கள், சுந்தர காண்டம் முழுமையிலும் வித விதமான போர் புரிந்து வலிமையை வெளிக்காட்டிய தோள்கைளை ‘மெல்லிய எனினும்’ என்று சொல்லிக் கொள்கிறான் அனுமன். இராமனுக்கு எதிரில் தன் வலிமையைப் பற்றி ஒரு நாளும் ஒரு சமயத்திலும், உண்மையே ஆனாலும் உயர்த்திச் சொல்லக் கூச்சமும் தயக்கமும் கொண்டவன் மாருதி.
கருடன் பெரிய திருவடி. அனுமன் சிறிய திருவடி. அப்படியானால் ஆற்றலிலும் அளவிலும் கருடனுக்கு அனுமன் சிறியவனா? கிடையாது. கருடனுக்கு எந்தவிதத்திலும் குறைவுடையதாகச் சொல்லும் அடைமொழி இல்லை இது. முதல் வாகனம் கருடன். இரண்டாம் வாகனம் அனுமன். காலத்தால் பிற்பட்டு வந்த வாகனம். அதனால் இவர் சின்னவர். திருவடி சுமந்ததிலோ, போர்க்காலத்தில் தகுந்த நேரத்தில் தகுந்தபடி எதிரியைத் தாக்குவதற்கு ஏதுவான எல்லா விதத்திலும் அதி விரைவாகவும், பொருத்தமாகவும், மிகுந்த உறுதியோடும் அனுமன் நின்ற விதத்தை மற்றவர்கள் எல்லாம் பாராட்டியது பெருமை தான் ஆனால் இராவணனே எண்ணி எண்ணி வியக்கிறான்.

முதல் போர் முடிந்த அன்றே ‘இன்று போய் போருக்கு நாளை வா’ என்று இராமன் இராவணனை திரும்ப அனுப்பினான். ஆயிரம் குதிரைகள் இழுத்த தேரில் ஆரவரமாய் போர்க்களத்துக்குள் நுழைந்தவன் ‘வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டுப் புக்கான்’ என்ற நிலையில் துணைக்கு ஒருவர் இல்லாமல், தன்னுடைய வீரத்தைக் கூட அங்கேயே போட்டுவிட்டு ‘நடந்துபோய் நகரம் புக்கான்’ என்று அந்த நிலையைச் சொல்கிறான் கம்பன்.
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழ்மைப் பாலது அன்றே
ஆற்றல்சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்!
காற்றையே மேற்கொண்டானோ காணலையே கடாவினானோ
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நன்றான்.
இது வெறும் குரங்கு, பெரிய விஷயம் இல்லை என்று யாராவது சொல்ல நினைத்தால் அவனுக்குப் புத்தியில்லை. கருடனுக்குக் கூட இந்த மாதிரியான போர்த் தந்திரத்தோடு கூடிய இயக்கங்கள் வருமா? அந்த மனுசன், ரெண்டு கை மனுசன், என்ன காற்று மேலதான் ஏறி வருகிறானா, நெருப்பு மேல வருகிறானா, இல்லை எமனையே வாகனமாகக் கொண்டு வருகிறானா! இதென்ன வெறும் குரங்கா! என்று எண்ணுகிறான் இராவணன்.
அப்படி இராவணனாலேயே புகழப்பட்டவன் மாருதி என்கின்ற சிறிய திருவடி. இராம பக்தர்களின் வரிசையில் முதலில் நிற்பவன்.
இந்த நுட்பமான ஆன்மிக உண்மைகளையெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கரையேற்ற குரு ஒருவர் தேவை. தெய்வத்தை நமக்குக் காட்டிக் கொடுப்பவர் குரு. நம்மைக் கடவுளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் சக்தி பெற்றவர் குரு. நாம் பரிசுத்தமான ஆன்மாக்களாக ஆனால் மட்டுமே மோட்சம் பெற முடியும். அப்படிப் பரிசுத்தமாகாத நம்மைச் நம்மைச் சுத்தப்படுத்துபவர் ஆன்மிக குரு.
அதனால் தான் குரு மூலமாக ஞானம் பெற்றுப் பரிசுத்தம் அடைந்து, அதன் பிறகு இறைவன் திருவடியை அடைவது என்பது வைணவ மரபு. குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்பது ஆன்மிகத்தின் அரிச்சுவடி பாடம். கடவுளுக்கும் நமக்கும் பாலமாக இருப்பவர் குரு. குருவை விட குருவின் திருவடிக்கே மதிப்பு அதிகம்.
நம் இஷ்ட தெய்வமே குருவடிவாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வரவேண்டும். குருவையும் இஷ்ட தெய்வத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்ப்பவனுக்கு எளிதில் முக்தி கிடைக்காது.
நம் கண்களுக்குப் புலப்படாத இறைவனின் திருவடிகளை நம்மால் பற்றிக் கொள்ள முடியாது. அதனால் இவ்வுலகில் தெரிந்த குருவின் திருவடியை பற்றி உய்யுதல் நலம். ஆன்மிகப் பரம்பரையில் வந்தவனுக்குக் குருவின் மகத்துவம் தெரியும்.
வேதங்களின் முடிவாக இருப்பது திருவடி
நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் அறிவார்?
நாலு மறைமுடியும் அகப்பேய்
நற்குரு பாதமடி!
என்று அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார். இறைவனை அறிய யாரால் முடியும்? நால் வேத முடிவாக இருப்பது நற்குரு பாதங்களே என்கிறார். ஆண்டவனையும், குருவையும் திருவடிகள் என்னும் பாதுகைகள் மூலம் வழிபடுவது ஒரு ஞான மரபு! இது அருவுருவ பூஜை!

ஆச்சாரியர் என்பவர் சீடர்களுக்கு எதை வழி நடத்தி செல்கிறாரோ, அதை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். வைணவத்தில் குரு சிஷ்ய உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குருகூரில் நம்மாழ்வார் பிறந்ததும் அது ஆழ்வார்திருநகரி என்ற முக்கியத்துவம் பெற்றது. பெருமாள் கோயில் இருந்தும், ஆழ்வார் முக்கியத்துவம் பெற்றுவிட்டார்.
நம்மாழ்வாருக்கு இன்னொரு ஏற்றமும் உண்டு. அவர் ஆழ்வார்களிலேயே தலைமையானவர் மட்டுன்று. அவர் ஆசார்யர்களிலும் தலைமையானவர். வைணவ குருபரம்பரையில் திருமகள் நாதன் முதல் ஆசார்யன்; திருமகள் இரண்டாவது; விஷ்வக்ஷேனர் மூன்றாவது; நம்மாழ்வார் நான்காவது ஆசார்யர். நாதமுனிகள் ஐந்தாவது. பின்னர் அவரிடமிருந்து யாமுன முனிக்கும் உடையவருக்கும் வேதாந்த தேசிகருக்கும் மணவாள மாமுனிக்கும் என வைணவ ஆசார்ய பரம்பரை செல்கிறது. இப்படி ஆழ்வாராகவும் ஆசார்யராகவும் ஒரே நேரத்தில் இருப்பவர் நம்மாழ்வார் மட்டுமே. வைணவர்களின் குல முதல்வன் என்றும் போற்றப்படுபவர்.
ஒரு முறை ராமானுஜர் காவிரி ஆற்றைக் கடந்து சென்ற போது, பாதுகையை கழற்றி சீடரிடம் கொடுத்தார். மறுகரை வந்ததும் திரும்பிப் பார்த்த ராமானுஜர் அதிர்ச்சியடைந்தார். அவருடைய பாதுகையை சீடர் தான் சுமந்து வந்த பெருமாள் விக்ரக பெட்டியின் மீது வைத்திருந்தார். சீடரிடம் கேட்டபோது, உங்களுக்கு தான் பெருமாள் உயர்ந்தவர், எனக்கு நீங்கள் தான் உயர்ந்தவர் என்றார். ஆச்சாரியர்களை பகவானை காட்டிலும் உயர்வாக சீடர்கள் வைத்திருந்தனர். வைணவ மரபுப்படி உய்வதற்கு வழி ஸ்ரீ ராமானுஜர் திருவடி
இராமானுசர் சொன்ன ஐந்து கடமைகள்
- ஸ்ரீபாஷ்யத்தைக் கற்று உணர்ந்து, அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
- அவ்வாறு முடியாவிட்டால், நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தைக் கற்றுத் தெளிந்து, மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
- அவ்வாறு முடியாவிட்டால், திருமால் கோயில் கொண்டுள்ள திவ்வியதேசம் சென்று, கோயிலைச் சுத்தம் செய்தல், விளக்கேற்றுதல் போன்ற கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்.
- அவ்வாறு முடியாவிட்டால், த்வய மந்திரத்தை அநுசந்திக்க வேண்டும்.
- அவ்வாறு முடியாவிட்டால், எம்பெருமான் அடியாரைப் பற்றிக்கொண்டு அவருக்குத் தன்னால் முடிந்த தொண்டு புரிய வேண்டும்.
திருவரங்கத்தமுதனார் இராமானுஜர் மேல் நூற்றந்தாதி – நூத்தியெட்டு பாசுரங்கள் பாடியுள்ளார். குருபரம்பரையின் பெருமையையும், ஆழ்வார்களின் பெருமையையும் சொல்லி பின் அவர் வழி வந்த எதிராசன் திருவடிகளை பற்றினால் இறைவனே நமக்கு வசப்படுவான் என்பதை ஈரத் தமிழில் பாடியுள்ளார். அதை படித்துத் தெளிவுறுவது அடியவர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
திருநாமத்தை சொன்னால் நல்ல கதி கிட்டும். ஆனால் யாருடைய திருநாமத்தைச் சொல்லுவது என்ற ஐயம் எழுகிறது. நம் ஐயத்தை, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி பாசுரத்தால் போக்குகிறார்.

குலந்தருஞ் செல்வந் தந்திடு மடியார்
படுதுய ராயின வெல்லாம்,
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்,
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயின மாயின செய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராய ணவென்னும் நாமம்.
[பெரிய திருமொழி 1-1-9]
நாராயண நாமம் அடியாருக்கு குலத்தைத் தரும், செல்வம் தரும், துயரைப் போக்கும், நல்லன எல்லாம் தரும், முக்கியமாக நல்ல கதியைத் தரும்.
அந்த நாராயண நாமத்தை, தான் நரகமே சென்றாலும் உலகத்து மக்கள் எல்லாம் அறிந்து உய்ய வேண்டும் என்று தன் குருவுக்கு செய்த சத்தியத்தையும் மீறி திருகோஷ்டியூர் கோவில் மதிலின் மேல் ஏறி ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தை உரக்க அறிவித்த ஸ்ரீ இராமானுஜரின் திருவடி பெருமையை நம்மால் எடுத்து இயம்பவும் முடியுமோ?

ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம்

திருவடி சேவை, சரணாகதி தத்துவத்தின் மேன்மை, இவை இரண்டையும் எடுத்துரைப்பது கண்ணன் அருளிய கீதை. அர்ஜுனன் கண்ணனிடம் அடிபணிந்து உங்கள் சீடனாகிய என்னை, மனத்துயரம் மற்றும் மனக் குழப்பத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று பகவான் கிருஷ்ணனிடம் தன்னை ஒப்படைக்கிறான் (சரணாகதி அடைகிறான்). அதன் பின் கண்ணன் அருச்சுனனுக்கு குருவாகி ஆத்ம உபதேசம் செய்ய முடிவு செய்தார். கண்ணன் பகவானாகவும் ஆச்சாரியனாகவும் நமக்காக இரட்டை வேடம் பூண்டார். அவர் எழுநூறு சுலோகங்களில் நாம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும், இறுதியில் அவனை வந்தடையும் வழி என்ன என்ற அனைத்தையும் உபதேசிக்கிறார். பலவித வழி முறைகளை சொல்லி இறுதியில் அர்ஜுனனுக்கும் (நமக்கும்) அவர் சொன்னது, உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தர்மம், அதர்மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்று அறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்பதே ஆகும். சகலமும் துறந்து நீயே கதி என்று என்னை சரணம் அடைபவர்களை காப்பாற்றுவது என் வேலை என்கிறார். இதுவே சரணாகதி தத்துவம், இறைவன் திருவடியே கதி என்று இருந்து விட்டால் அவன் கருவியாக மட்டுமே நாம் இருந்து பாவ புண்ணியங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் பிறவா நிலையை அடைவோம்.
நாம் செய்த பாவங்களுக்காக பல ஜென்மங்கள் கழிந்தன. புழுவாய் பிறந்து, நாயாய் அலைந்து, பல பிறவிகள் கடந்து மானிட பிறவி பெற்று, மறுபடியும் பிறவியில் விழப்போன நமக்கு ஆச்சாரியன் உதவி செய்கிறார். சரணாகதி மார்க்கத்தை காண்பித்து இனி பிறவியற்ற நித்ய சூரியாக பகவான் முன்னே நிற்கும் பாக்கியத்தைப் பெற வைக்கிறார். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இன்றி, பசு எப்படி கன்றிடம் தாயன்பு காட்டுகிறதோ அப்படி தன்னை அண்டியவனின் மனக்கவலையை போக்கி, எல்லோருக்கும் கருணையுள்ளவனாக இருந்து, தன்னை கொல்ல வருபவருடன் கூட இனியனாக இருந்து, அடியார்களை ஒருபோதும் கைவிடாது, எப்பேற்பட்ட எதிரியையும் வென்று – இப்படி எம்பிரானின் அனந்த கோடி கல்யாண குணங்களை உணர்கிறான் அடியவன். ஒப்புயர்வற்ற அழகுடையதான கொண்டை, மகரவடிவான தோடுகள், திருமார்பில் அணியும் முத்துவடங்கள், தோள்வளைகள், முன் கையில் சாத்தும் வளையள்கள், திருமறு, கௌஸ்துப மாலை, பட்டாடை, திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி இப்படி அலங்கார மேனியாய், காண ஆயிரம் கோடி கண்கள் வேண்டும், அதையும் அடியவனை காண வைக்கிறார் ஆச்சாரியன். பெருமாள் அருகில் காருண்யம், பொறுமை, சாந்தம், போன்ற எண்ணற்ற குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கின்ற திருமகள் அற்புதமாக காட்சியளிக்கிறாள். பெரிய பிராட்டிக்கு ஒரு தனி சிறப்பு, எம்பெருமானுக்கு ஏற்ற அழகிய திருமேனியை உடையவள், அவனோடு ஒத்து இருந்து, அடியார்களை பராமரித்துக் காப்பவள் அவள்.
இப்படி பரமபதநாதனை சேவித்துக்கொண்டே பாதுகைகளை தாங்கிக்கொண்டிருக்கும் திருவடி பீடம் வரை செல்கிறான் சரணாகதி செய்து விட்ட அடியவன். அவரிடம் அவர் திருவடிகளை யாசிக்கிறான். பெருமாளும் அளவில்லாத கருணையினால் தன் திருவடியை இவன் தலைமேல் வைக்கிறார். அவரை மேலும் காண வேண்டும் என்று அருகில் செல்கிறான். பெருமாளும் தாயாரும் அவனை தன் குழந்தை போல மடியில் வைத்துக் கொள்ளும் மகிழ்ச்சியோடு தன் திருவடியில் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் அவன் எம்பெருமானோடு கலந்து, நித்யசூரிகளிடையே கூடி கலந்து மறுபடியும் பிறவியில்லா ஆனந்தத்தை நிலையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.
வள்ளுவ நாயனாரின் வாக்குப் படி
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். அவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்கமுடியும். மற்றவர் கடக்க முடியாது.
இதுவே சரணாகதியின் சிறப்பு! இறைவன் நமக்குக் காட்டிய எளிய வழி.
இறைவன்/குருவின் திருவடிகளே சரணம்

நிறைவுற்றது.