
“ஜானு, நல்ல வேளை நீ வந்தம்மா. காத்தாலேந்து மூச்சு விடறேதே கஷ்டமாயிருக்கு.” பிராணவாயு மாஸ்கை சற்றே தூக்கிவிட்டு மெதுவாக சிரமத்துடன் பேசினார் அப்பா. அப்பாக்கு 85 வயசு. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா சிலிண்டரில் உள்ள பிராண வாயுவின் துணையோடு தான் வளைய வருகிறார். நுரையீரல் வலுவிழந்து விட்டது. மகனை அகாலமாக ஒரு விபத்தில் பறிகொடுத்தது அவரை சம்மட்டியால் அடித்து போட்டு உடல் பலத்தை வாங்கிக் கொண்டு விட்டது. அதன் பின்னும் மருமகளுக்கும், பேரனுக்கும், பேத்திக்கும் துணையாக, தைரியமாக இருந்து வருகிறார். அந்த மனோ திடம் அம்மாக்கு இல்லாமல் போய்விட்டது. அண்ணன் இறந்த இரண்டாம் மாதம் அம்மா போய் சேர்ந்து விட்டாள்.
“ஏம்பா. நேத்து ஹாஸ்பிடல் போயி ஹார்ட் ரிதிமை சரி செஞ்சப்போ கூட சரியா இருந்தீங்களே. டாக்டர்சே உங்க வயசுக்கு அந்த ப்ரோசீஜரை நல்லா ஹேண்டில் பண்ணீங்கன்னு சொன்னாங்களே”
“தெரில மா. இன்னிக்கு கார்த்தால பாத் ரூம் போயிட்டு வந்தேன். அப்போ ஆக்சிஜன் மாஸ்கை எடுத்துட்டுப் போனேன். அதுலேந்து ரொம்ப சிரமமா இருக்கு”
அவரின் பிரத்தியேக மருத்துவர் சமீபத்தில் அவரை பரிசோதித்தப் போது அவரை தொடர்ந்து ஆக்சிஜன் வைத்துக் கொள்ள அறிவுருத்தி இருந்தார். முன்பு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பிராண வாயு வைத்துக் கொண்டால் போதுமானதாக இருந்தது. இப்போ உடல் நிலையில் சீர்கேடு அதிகரித்து உள்ளது. அதுவும் இரண்டு நாட்களுக்கு மின் இதயத் துடிப்பு அதிகரித்து மருத்துவமனைக்குப் போய் ஒரு சின்ன இதய சிகிச்சை பெற்று வர வேண்டியிருந்தது.
அப்பாவால் பிறருக்கு எந்த தொந்தரவும் கிடையாது. அவரே ஆக்சிஜன் சிலிண்டருக்கு போன் பண்ணி ஆர்டர் செய்து சரியாக ஒரு சிலிண்டர் முடியும் தருவாயில் மற்றொன்று வரும்படி வாங்கி விடுவார். மத்திய ஆரசில் ஒய்வு பெரும் போது மேல் நிலையில் இருந்ததால் இருபதினாயிரம் பென்ஷன் வருகிறது. அண்ணி வேலைக்குப் போனாலும் அவர் பென்ஷன் பணம் குடும்பத்துக்கு பெரும் உதவியே.
அண்ணி ரூம் உள்ளே வந்து “நானே உனக்கு போன் பண்ணி உன்னை வரச் சொல்லனும்னு நினச்சேன் ஜானு, நீயே வந்துட்ட. அப்பாவை திரும்ப ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு நினைக்கிறேன்.” என்றாள்.
சமீபத்தில் எடுத்த மருத்துவ பரிசோதனை ரிபோர்ட்கள் அனைத்தையும் அவர் தயாராக மேஜையில் எடுத்து வைத்திருந்தார். பிளாஸ்கில் காபி, பிஸ்கட் பேக்கட், டவல், மாற்று உடை அனைத்தையும் ஒரு பையில் வைத்து, ரிபோர்ட்களையும் அதே பையில் வைத்துக் கிளம்பத் தயாரானேன்.
எப்பவும் போல் அப்பா ரூமில் இருந்த சாமி படத்தின் முன் நின்று திருநீறு அணிந்து கொண்டு மகன் புகைப்படத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துப் பின் வாசல் வராந்தாவுக்கு வந்தார். அதற்குள் நான் கூப்பிட்டிருந்த ஆம்புலன்ஸ் வந்திருந்தது. மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. அண்ணன் மகன் தினேஷ் கல்லூரியில் இருந்து அப்போது தான் உள்ளே நுழைந்தான். “அத்தை இருங்க நானும் வரேன். நீங்க தனியா எப்படி எல்லாம் பார்த்துப்பீங்க” என்று காபி கூடக் குடிக்காமல் எங்களுடன் ஆம்புலன்சில் ஏறினான். அவர்களும் உடனே ஆக்சிஜன் மாஸ்கை அப்பாவுக்கு மாட்டி விட்டு பத்தே நிமிஷத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டனர்.

கேசுவாலிடியில் அவரை பரிசோதித்த மருத்துவர், “நுரையீரலில் கொஞ்சம் நீர் சேர்ந்திருக்கு. பங்க்சர் பண்ணி எடுத்தால் சரியாகிவிடும் ஆனால் அதை ஆபரேஷன் தியேட்டரில் தான் செய்ய வேண்டும். நீங்க ஒரு ரூம் எடுத்துத் தங்கிடுங்க, எப்போ தியேட்டர் ப்ரீ ஆகுதோ அப்போ கூட்டிட்டுப் போய் செஞ்சிடுவாங்க. இன்னிக்கு ராத்திரி பத்து பதினோரு மணிக்குள்ள பண்ணுவாங்க இல்லைனா காலைல பண்ணுவாங்க” என்றார்.
“நாளை காலை வரை வெயிட் பண்ணலாமா டாக்டர்? ஒண்ணும் பயமில்லையே?” என்றேன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. அவர் வைடல்ஸ் எல்லாம் சரியாத் தான் இருக்கு. ஆக்சிஜன் மாஸ்கில் தொடர்ந்து இருக்கட்டும். லங்க்சில் கோத்திருக்கும் நீரை எடுத்து விட்டால் சிரமம் இல்லாமல் மூச்சு விட ஆரம்பித்து விடுவார்” என்றார்.
அறைக்கு ஏற்பாடு செய்த பின் கேசுவாலிடியில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆக்சிஜன் மாஸ்குடனே வந்தார் அப்பா. தொடர்ந்து ஆக்சிஜன் மாஸ்கிலேயே இருந்தார். அப்பப்ப சரியாக பிராணவாயு குழாயில் போகிறதா என்று சிலிண்டரை செக் பண்ணிக் கொண்டே இருந்தேன். வீட்டில் இப்படி செய்வது எங்கள் எல்லாருடைய பழக்கமும் ஆகிவிட்டது. சில சமயம் சிலிண்டரில் வாயு தீர்ந்த பிறகு அப்பாக்குச் சொல்லத் தெரியாது. திடீரென்று மூச்சு வாங்கும், பின் தான் ஆக்சிஜன் தீர்ந்திருப்பதைக் கண்டுபிடிப்போம்.
தினேஷை வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு எனக்கும் அப்பாவிற்கும் ரசம் சாதம் எடுத்து வர அனுப்பினேன். சின்ன வயதிலேயே பொறுப்பு வந்து விட்டதால் எல்லாம் சரியாக செய்வான் அவன். அவன் கூட இருப்பதும் எனக்கு தைரியமாக இருந்தது. என் கணவர் வெளிநாடு போயிருந்தார். அது என்னமோ மருத்துவமனை என்றாலே ஒரு பயம் வந்துவிடுகிறது. ஆனால் அப்பா எப்பவும் போல தைரியமாக இருந்தார்.
நர்ஸ் வந்து பிபி பார்த்து வாயில் தெர்மாமீடரை நுழைத்துத் தன் கடமையை செய்து விட்டுப் போனாள். அவளிடம், “எப்போ மா பங்க்சர் பண்ணி நீர் எடுக்க தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போவாங்க” என்றேன். “தெரிலமா, அவங்க போன் பண்ணி சொன்னா வந்து சொல்றேன்” என்றபடி அடுத்த அறைக்குச் சென்றாள்.
நமக்கு தான் அப்பா என்கிற கவலை. அவர்களுக்கு அவர் இன்னொரு பேஷன்ட் அவ்வளவு தான். ஒன்பது மணிக்கு தினேஷ் வந்தவுடன் அப்பாவுக்குக் கொஞ்சம் ரசம் சாதம் கொடுத்தேன். விரும்பி சாப்பிட்டார். தினேஷை வீட்டுக்குப் போகச் சொன்னேன் ஆனால் அவன் “இல்ல அத்தை நாளைக்கு நான் காலேஜுக்குப் போகலைன்னாலும் பரவாயில்லை. இங்கே உங்களுடனேயே இருக்கேன்” என்றான். பத்தரை மணி இருக்கும். “அம்மா, தூக்கம் வருதே, தூங்கட்டுமா” என்றார் அப்பா.
நான் நர்சிடம் போய் “இனிமே வருவாங்களாமா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க” என்றேன். “நாங்க கேக்க முடியாதும்மா, அவங்க தான் எங்களுக்குச் சொல்லுவாங்க. அவர் தூங்கறதுன்னா தூங்கட்டும். இனிமே காலையில தான் பண்ணுவாங்க” என்றாள்.
தினேஷும் அட்டெண்டர் படுக்கையில் தூங்கிவிட்டான், பாவம் அசதி. நான் சேரில் உட்கார்ந்து கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்பா எங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் உறவினர் அனைவருக்குமே ஒரு நல்ல பாதுகாவலர். எந்த ஒரு பிரச்சினையையும் சரியான கோணத்தில் அணுகுவார். யார் மனத்தையும் புண்படுத்தாமல் அறிவுரை சொல்வார். மகன் உடலைப் பார்த்துக் கூட குடும்பத்தினருக்காக அழாமல் நின்றவர் அவர்.
தடதடவென ரோலர் உருளும் சத்தம் கேட்டு முழித்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன், மணி ஒன்று. ஸ்டிரெச்சரை தள்ளிக் கொண்டே ஒரு மருத்துவப் பணியாளர் அறையின் உள் நுழைந்து அப்பாவை அவர் படுக்கையில் இருந்து ஸ்டிரெச்சருக்கு மாற்ற துவங்கினான்.
“என்னப்பா, என்ன பண்றே” என்றேன் பதைபதைப்புடன்.
“தியேட்டர் ரெடியா இருக்குமா. பேஷண்டை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க” என்றான். அதற்குள் வார்ட் நர்சும் வந்து உதவி செய்ய ஆரம்பித்தாள்.
“என்னப்பா இது இந்த நேரத்துல பண்ணுவாங்களா?”
“தெரிலமா. கொஞ்ச நேரம் CCUல ஆப்சர்வேஷன்ல வெச்சிட்டு அப்புறம் பண்ணுவாங்களா இருக்கும்” என்றான்.
அப்பாவும் தூக்கம் கலைந்து அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ரூமில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து தொடர்பை துண்டித்து அவன் ஸ்டிரெச்சருடன் கொண்டு வந்த சிலிண்டருக்குக் கனெக்ஷன் கொடுத்தான். அறையில் இருந்து தள்ளிக் கொண்டே லிப்ட் இருக்கும் இடத்துக்குக் கொண்டு போனான். ஆக்சிஜன் சரியா குழாயில் வருகிறதா என்று ஒரு சந்தேகம் வந்தது. சிலிண்டர் திருகாணியை வார்ட் பாய் சரியாக திருப்பவில்லை என்று எனக்குத் தோன்றியது. ஸ்டிரெச்சர் பின்னாடியே ஓடிய நான் “ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா இருக்கா பாருப்பா, அவருக்கு மூச்சு வாங்குது பாரு” என்றேன். “எல்லாம் சரியாத் தான் இருக்கு. நீங்க படிக்கட்டுல இறங்கி கீழ போயிடுங்க நான் லிப்ட்ல கூட்டிக்கிட்டு வரேன்” என்றான்.
வேகமாகக் கீழே இறங்கி லிப்ட் வாயிலில் நின்றேன். லிப்ட் பத்தாவது மாடிக்குப் போயிருந்தது. முதல் மாடிக்கு வந்து கீழே வர ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். கதவு திறந்ததும் அப்பா முகம் வெளிறி இருப்பதைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் கையைப் பிடித்துக் கொண்டார். “கோபால் குழந்தைகளை நல்லா கவனிச்சிக்கமா. உன்னால முடிஞ்ச உதவியை நீ அவங்களுக்கு எப்பவும் செய்யணும்” என்றார் மூச்சுத் திணறலுக்கு இடையே.
“அப்பா உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இப்போ அந்த ப்ளுயிட் எடுத்தவுடன் சரியாகிடுவீங்க” என்றேன்.
அதற்குள் CCU வந்து விட்டது. உள்ளே இருந்து வந்த நர்ஸ் நேராக ஆக்சிஜன் சிலிண்டரைப் பார்த்து அந்தத் திருகாணியைத் திருப்பி விட்டாள்.
“ஏம்மா ஆக்சிஜன் போய்கிட்டு தானே இருந்தது?’ என்றேன்.
“இப்போ போக ஆரம்பிச்சிருக்கு” என்றாள். “அப்போ இத்தனை நேரமா போகலையா?’ என்ற என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அப்பாவின் ஸ்டரெச்சரை உள்ளே தள்ளிக் கொண்டு போய்விட்டனர்.
“நீங்க போய் ரூம்ல இருங்க. நாங்க ப்ரோசீஜர் முடிஞ்சதும் சொல்லி அனுப்பறோம்” என்று இன்னொரு பெண் வெளியே நின்ற என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள்.
ரொம்ப கவலையுடன் மாடி எறிப் போனேன். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பிராணவாயுவின் உதவி இல்லாமல் மூச்சுவிட்டு இருக்கிறார். அந்த சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. அதனால் இத்தனை நாள் தைரியமாக இருந்த அவர் இப்பொழுது என்னை அண்ணன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கார். இராம இராமா என்று மனம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது நர்ஸ் வேகமாக வந்து உங்களை கீழே கூப்பிடறாங்க என்றாள். அதற்குள் முடிச்சிட்டாங்களா என்று எண்ணியபடி “தினேஷ் எழுந்து வா என்னோட” என்றபடி அவசரமாகக் கீழே இறங்கிப் போனேன்.
CCU வாசலில் ஒரு டாக்டர் நின்று கொண்டிருந்தார். “மேடம் நீங்க பேஷண்டுக்கு என்ன உறவு” என்றார்.
“நான் அவர் மக” என்றேன்.
“அவர் இந்த ப்ரோசீஜருக்கு பிட் இல்லைங்க. அதனால் இந்த ப்ரோசீஜர் வேண்டாம்னு நீங்க இந்த பார்ம்ல ஒப்புதல் கையெழுத்துப் போட்டுடுங்க” என்றார்.
“என்ன சார் நல்லா தானே இருந்தார்? கேசுவாலிடில சாயங்காலம் டாக்டர் செக் பண்ண போது கூட ஒண்ணும் பயம் இல்ல, காலைல கூட பண்ணலாம்னு சொன்னாரே?”
“இப்போ பிட்டா இல்லைமா. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? வயசானவர் தானே? நீங்க கையெழுத்துப் போடுங்க.”
“நீங்க நார்மலா ஏதாவது செய்யறத்துக்கு முன்னாடி தானே கையெழுத்து வாங்குவீங்க? இப்போ வேண்டாம்னு எழுதி கையெழுத்துப் போட சொல்றீங்களே? எனக்கு புரியலை”
எனக்கு உண்மையிலேயே ஒண்ணும் புரியலை. நடு ராத்திரி. தினேஷ் தான் துணை. எப்பவும் அப்பா தான் அவர் உடல் நிலை சம்பந்தமாகக் கூட முடிவெடுப்பார்.
“சார், நான் அப்பாவை பார்க்கலாமா? அவரிடமே கேட்டுவிடுகிறேன்.”
“நீங்க கையெழுத்துப் போட்டுட்டுப் போய் பாருங்க மேடம்”
சட்டென்று பொறி தட்டியது. “டாக்டர் அவர் உயிரோடு இருக்காரா இல்லையா?”
“சாரி மேடம், ஹி இஸ் நோ மோர்” என்றார்.
தினேஷ் டாக்டரை நெட்டித் தள்ளிக் கொண்டு CCUவினுள் நுழைந்தான். நானும் அவன் பின்னே நுழைந்தேன். அப்பாவின் கண்கள் மலங்க மலங்க மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. லேசாக நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது. “சார், அவர் உயிரோடு தானே இருக்கார்? பாருங்க” என்றேன்.
“இல்லைமா கொஞ்ச நேரத்தில் அடங்கிடும். நீங்க சாமி பேரு சொல்றதுன்னா அவர் பக்கத்தில் நின்னு சொல்லுங்க” என்றார்.
வந்தது கோபமா, துக்கமா, ஆத்திரமா, இயலாமையா என்று தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அவர் காதில் ராம நாமத்தைச் சொன்னேன். தாத்தாவின் நிலை பார்த்து முதலில் விக்கித்து நின்ற தினேஷின் கண்களில் இருந்து அருவியாக நீர் கொட்ட ஆரம்பித்தது. பார்த்துக் கொண்டே இருந்தபோது மெல்ல அடங்கியது அவர் ஆவி. அவரின் இரு கண்களையும் மூடினேன்.
“இந்த பார்மில் கையெழுத்துப் போடுங்க” என் அருகில் வந்து அந்த மருத்துவர் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
“நான் வந்தவுடனே அவர் இறந்த விஷயத்தை சொல்லாம பார்மில் கையெழுத்துப் போட சொல்லிக்கிட்டே இருந்தீங்களே, ஏன்? எங்கப்பா எப்படி இறந்தார்னு சொல்லுங்க டாக்டர்”
“இங்கே வரும்போதே அவர் ஆக்சிஜன் சேசுரேஷன் ரொம்பக் கம்மியா இருந்தது மேடம்.”
“ரூமை விட்டுக் கிளம்பும்போது அவர் கையில் இருந்த பல்ஸ் மீட்டரில் 93%ஆக்சிஜன் செசுரேஷன் இருந்ததை நான் பார்த்தேன் டாக்டர்”
“இங்க நான் அவரை பார்க்கும்போது அவ்வளவு இல்லை மேடம்”
“அது ஏனுன்னு விசாரிச்சீங்களா டாக்டர்?”
“அவர் வயசுக்கு இதெல்லாம் நடப்பது சகஜம் தான்மா.”
“அப்போ ஏன் சார் எங்கப்பா செத்ததை கூட சொல்லாம கையெழுத்து வாங்கறதுலேயே குறியா இருந்தீங்க? ஸ்டிரெச்சரில் மாத்தும் போது அந்த வார்ட் பாய் ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா கொடுக்கலை. நான் அவனிடம் கேட்டபோதும் சரியா திரும்ப அவன் செக் பண்ணலை. இங்கே கீழே CCU வந்ததும் தான் நர்ஸ் ஆன் பண்ணாங்க. நான் என் கண்ணாலேயே பார்த்தேன். பத்து நிமிஷத்துக்கு மேல அவருக்கு ஆக்சிஜன் போகலை. அஜாக்கிரதையினால எங்கப்பாவை கொன்னுட்டீங்க”
என் குரல் பெரிதாவதைக் கண்ட டாக்டர் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். “இப்போ என்ன பண்ணலாம்னு சொல்றீங்க? அவருக்கு 85 வயசாகுது. போஸ்ட்மார்டம் பண்ண சொல்றதுன்னா சொல்லுங்க, ஆர்டர் பண்றேன்.”
“எதுக்குங்க போஸ்ட்மார்டம்? கண்ணு முன்னால தவறு நடந்திருக்கு, நான் பார்த்தேன்னு சொல்றேன்.”
“எதனால் இறந்தாருன்னு போஸ்ட் மார்டம் ரிபோர்ட் சொல்லும். நீங்க பார்த்து உண்மைனே வெச்சுக்கிட்டாலும் அதனால் தான் அவர் உயிர் போச்சுன்னு சொல்ல முடியுமா?”
“ஏங்க எங்கப்பாக்கு எந்த முதலுதவியும் கொடுக்காம சுவாசம் அடங்கற வரைக்கும் எங்களை பார்த்துக்கிட்டு நிக்க சொன்னீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?”
“அதெல்லாம் தேவையில்லை. அவர் இறந்துட்டாரு. நாங்க டாக்டரா நீங்க டாக்டரா? போஸ்ட்மார்டம் வேணும்னா சொல்லுங்க, ரெண்டு நாள் ஆகும் பாடிய கொடுக்கறதுக்கு. நிறைய போஸ்ட்மார்டம் வெயிட்டிங்க்ல இருக்கு”
இதய சிகிச்சைக்காக சென்னையிலேயே இந்த மிகப் பெரிய மருத்துவமனைக்கு ரெண்டு நாள் முன்பு தான் முதல் முறையாக தந்தையை அழைத்து வந்திருந்தேன், அதுவும் அந்த சிகிச்சைக்கான வசதி இந்த மருத்துவமனையில் தான் நன்றாக இருக்கும் என்று டாக்டர் சொன்னதால். அதனால் தொடர்ந்து இங்கேயே சிகிச்சை எடுக்கலாம் என்று நான் முடிவு செய்தது அப்பாவின் உயிரையே காவு வாங்கிவிட்டது. முதல் சிகிச்சையின் போதே நேர்ந்த அஜாக்கிரதையால் தான் நுரையீரலில் நீர் கோத்துக் கொண்டதோ என்று இப்பொழுது தோன்றியது.
“போஸ்ட்மார்டம் வேண்டாம் டாக்டர், எங்களிடம் அவரை ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் நடத்துவது உயிரைக் காக்கும் மருத்துவமனை அல்ல. பணம் ஈட்டும் கார்பொரேட் நிறுவனம். உங்களை மாதிரி பெரிய நிறுவனங்களுடன் எங்களால் சண்டையிட்டு ஞாய தர்மத்தை நிலை நாட்ட முடியாது. எங்கப்பா எந்த சிகிச்சையும் இன்றி வீட்டில் இறந்திருந்தால் கூட எனக்கு அது இத்தனை கஷ்டமாக இருந்திருக்காது, ஆனால் இங்கே உங்க அஜாக்கிரதையினால் அவர் உயிர் இழந்ததை நினைத்து என் வாழ்நாள் முழுக்க அந்தக் குற்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டே இருக்கும்”
“தினேஷ் வா நாம வெளியே காத்திருப்போம்.” பணம் செலுத்த பில் கட்டும் கவுண்டரை நோக்கி நடந்தேன். பின்னாடியே ஓடிவந்து ஒரு நர்ஸ் அந்த பார்மை எடுத்து வந்து மறக்காமல் கையெழுத்துக்காக நீட்டினாள். கையெழுத்திட்டேன், ஆனால் என் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரால் பார்மில் எழுதப்பட்டிருந்தது மறைந்து போயிற்று.
