திருவல்லிக்கேணிக் கண்டேனே

partha

நான் பல முறை திருவல்லிக்கேணி சென்று பார்த்தசாரதி பெருமாளை தரிசித்து இருக்கிறேன். ஆனால் இன்று தான் அவரின் திருமஞ்சனத்தை தரிசிக்கும் பேறினைப் பெற்றேன். எப்பொழுதும் பட்டுப் பீதாம்பரதுடனும், தங்க, வைர நகைகளுடன் தரிசனம் தரும் தேரோட்டி இன்று இடுப்பில் ஒரு வெள்ளை வேட்டியும், முகத்தில் மீசை கூட இல்லாமல் புன்னகையை மட்டுமே அணிந்து காட்சித் தந்தார். மனம் நெகிழ்ந்து மயங்கிப் போனேன்.

“இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவி தனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை* பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை* எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*”

அவன் திருமேனிகண்டு புளகாங்கிதம் அடைந்த திருமங்கை மன்னன் திருவல்லிக்கேணிக் கண்டேனே என்று வியப்புறுகிறார். அந்த பாக்கியமான மன நிலையை நானும் இன்று பெற்றது எம்பெருமான் அருளிய வரம்.
மேலே உள்ள பாடலின் பொருள், இனிய துணையான தாமரை மலரில் பிறந்த மகள் மகாலட்சுமிக்கும் இனிமையானவன், நல்ல பூமிக்கும் இறைவன், தன்னையே துணையாக உடைய ஆயர் குல பெண்ணும் கண்ணனின் மாமன் மகளும் ஆன நப்பின்னைக்கும் இறைவன், மற்றுமுள்ள எல்லாருக்கும் என்றுமே நீங்காத துணையாய், பஞ்சபாண்டவர்களுக்காக தூது சென்று செயல்பட்டவனும், எனக்கு துணையானவனும், என் அப்பாவுக்கு அப்பா (எங்கள் குலமே வழிபட்ட) இறைவனைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. மகிழ்ச்சி மகிழ்ச்சி என்கிறார் திருமங்கை மன்னன்!

வேங்கடகிருஷ்ணன் மிகவும் நெடிந்துயர்ந்த பெருமாள். திருமஞ்சனம் செய்ய அர்ச்சகர்கள் பெரிய ஸ்டூல் மேல் ஏறி நின்று அபிஷேகப் பொருட்களை சமர்ப்பித்து நீராட்டுகிறார்கள். பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக உள்ளது. முதலில் பாலால் திருமஞ்சனம். வெள்ளிச் சொம்பில் எடுக்க எடுக்க குறையாத அளவு பாலை மொண்டு மொண்டு திருமுடியில் இருந்து திருமஞ்சனம் செய்கிறார்கள். அப்பொழுது திருமுகத்தில் வழியும் பாலின் இடையில் காட்சித் தரும் அவர் செந்தாமரைக் கண்களின் கருணை என்னை ஆட்கொண்டுவிட்டது. கோதையும், எண்ணிலடங்கா கோபியரும் எப்படி மெய் மறந்து அவன் கண்களால் கட்டுண்டார்கள் என்பதை ஒரு துளியினும் துளியாக இன்று அறிந்தேன். என்னால் அவர் திருவடியை கூட சேவிக்கத் தோன்றவில்லை. குனித்து திருவடியைத் தேடினாலும் மீண்டும் கண்களுக்கே வந்து தரிசித்து நின்றேன். தயிரும், தேனும், சந்தனமும், இளநீரும் சேர்த்து திருநீராட்டினார்கள். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் அவரின் திருக் கண்களின் அழகுக் கூடிக் கொண்டே போயிற்று. மிகவும் அழகான சிலா வடிவம். இக்கோயில் முதலில் 6ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. கிபி எட்டாம் நூற்றாண்டில் கட்டியக் கோவில் என்றால் சிலை எவ்வளவு புராதானமாகியிருக்கணும். ஆனால் அவரோ இன்று வடித்தது போல அவ்வளவு அழகாக உள்ளார்.

திருமஞ்சனத்துக்குப் பிறகு அவருக்குத் தளிகை சமர்ப்பிக்கப் படுகிறது. பின்பு அது நமக்குப் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இந்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் சுவைக்க வேண்டும். அத்தனை ருசி! பெருமாளின் பிரசாதம் என்பதாலும், அதில் கணக்கில்லா முந்திரி, திராட்சை, படி கணக்கில் நெய், பாகு வெல்லம், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்,  சேர்க்கையாலும், அவர்கள் செய்யும் பக்குவத்தாலும் பொங்கல் பிரசாதம் கிடைதுண்பதும் நம் கொடுப்பினை தான் எனலாம்.

parthatemple

அலங்காரம் முடிய ஒரு மணி நேரம் ஆகிறது. அது வரை நாம் வெளிப் பிராகார மண்டபத்தில் இருக்கலாம். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இ‌ந்த கோ‌விலை பிருந்தாரண்ய ஸ்தலம் பஞ்ச வீரத்தலம் என்றும் அழைக்கிறார்கள். வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். சென்னை மெரீனா கடற்கரை வெகு அருகில்! இத்திருத்தலத்தில் யோக  நர‌சி‌ம்மர் சந்நிதி பெருமாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. வடக்கு நோக்கி நரசிம்மர் சந்நிதிக்கும் கிழக்கு நோக்கி பார்த்தசாரதி சந்நிதிக்கும் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிருக்கின்றன. பா‌ர்‌த்தசார‌தி சந்நிதி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது. வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது, அப்போது அந்த யானை தனது உ‌யிரை‌க் கா‌ப்பா‌ற்றுமாறு பெருமாளை நினைத்து வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் சிக்கியிருந்த கஜே‌ந்‌திரனை ‌‌மீ‌ட்டா‌ர், யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக வீற்றிருக்கிறார். பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புறத்‌தி‌ல் ஆ‌ண்டா‌‌ள் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவர் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோவில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி, இ‌தி‌ல் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆ‌‌கிய தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. இத்திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.

parthatank

அலங்காரம் முடிந்த பிறகு திருமஞ்சனத்துக்குப் பணம் கட்டியவர்களின் குடும்பத்தைத் தனித்தனியாக அழைத்து பெருமாளுக்கு அர்ச்சனையும் நமக்கு அவரின் சேவையும் செய்து வைக்கிறார்கள். தரிசிக்க உள்ளே நுழையும்போதே கம்பீரமாக நிற்கிறார் பெருமாள். பச்சையும் சிவப்புமான, நிறைய ஜரிகையுடைய பட்டு வஸ்திரத்தில், முறுக்கு மீசையுடன், இராஜாதி இராஜனான அவர் அழகைக் கண்ட எனக்கு பெரியாழ்வார் வந்து இவருக்கும் பல்லாண்டு பாடி கண் திருஷ்டியைக் களைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவருடைய ஆபரணங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. அருகில் சென்று தரிசிக்க முடிந்ததால் அங்கு இருந்த அனைவரையும் நிறைவாக சேவிக்க முடிந்தது. மூலவர் பெயர் வேங்கடகிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் வீற்றிருக்கிறார்.

partha1

.உத்சவராக வீற்றிருக்கும் பார்த்தசாரதி பெருமாள் பெயரிலேயே கோவில் அழைக்கப் படுகிறது. அவர் ‌திரு‌முக‌த்‌தி‌ல் தழு‌ம்புக‌ள் உள்ளன, மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ஏற்ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள்தான் அவை எ‌ன்று ஐதீகம். மேலு‌ம் ‌மீசையுட‌ன் உள்ள ‌கிருஷ‌்ண அவதாரமாகவும் இங்கு இருக்கிறார். மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக (சார‌தி) வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு (பா‌ர்‌த்தா) அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌னே (அவதாரம்) பா‌ர்‌த்தசார‌தி என்று அழைக்கப்பட்டார்.

இ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சியளித்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், ஸ்ரீ இராமானுஜர் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம்

திருவல்லிக்கேணியில் வாழும் மக்கள் ரொம்பக் கொடுத்து வைத்தவர்கள். நினைத்தபோது போய் பெருமாளை தரிசிக்கலாம். ஸ்ரீ ரங்கம் போலக் கூட்டம் அவ்வளவு அதிகம் இல்லை. மேலும் பெருமாள் உயரமாக இருப்பதால் தூரத்தில் இருந்தும் தரிசிக்க முடிகிறது. வருடம் முழுக்க எந்நாளும் உத்சவம்! அல்லிக்கேணி மக்களும் பெருமாளைக் கொண்டாடுகிறார்கள்! பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளையே குறித்துப் பாடப்பட்டவை என்று கூறுவர். அவர் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த போது அனுதினமும் கோவிலுக்கு சென்று வழிபடுவார். சென்னையில் இருப்போர் தவறாமல் சென்று வழிபட வேண்டிய தலம். என் அருகில் இருந்த ஒரு பக்தர் என்னிடம் நிறைய பேசிக் கொண்டே இருந்தார். அவர் சொன்னார் கேட்டதை கொடுக்கும் பெருமாள் அம்மா இவர், நான் இவரை சிறுவனாக இருந்தபோதிலிருந்து சேவித்து வருகிறேன். பரம ஏழையாக இருந்த என்னை இன்று நாலு வீட்டுக்கு சொந்தக்காரர் ஆக்கியுள்ளார் என்றார். நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு!

partha2

6 Comments (+add yours?)

 1. pvramaswamy
  Aug 01, 2016 @ 23:59:20

  இதோ, அதிகாலையில் கண் விழிக்கையிலேயே, முதல் தரிசனம் எனக்கும் கிடைத்துவிட்டது.
  //கம்பீரமாக நிற்கிறார் பெருமாள். பச்சையும் சிவப்புமான, நிறைய ஜரிகையுடைய பட்டு வஸ்திரத்தில், முறுக்கு மீசையுடன், இராஜாதி இராஜனான அவர் அழகைக் கண்ட// உடனேயே உங்களுக்கு நன்றி சொல்லவே இது.

  Reply

 2. கடமுடா நாவ்! (@Thiru_navu)
  Aug 02, 2016 @ 04:32:49

  …க்கும்! நானும்தான் பல தரம் போயிருக்கேன்! ஆனா பிரசாதம் கிடைக்கிற நேரம் பார்த்து! நல்ல தகவல்கள். நன்றி!

  Reply

 3. GiRa ஜிரா
  Aug 02, 2016 @ 10:41:39

  நல்லநாளும் அதுவுமாக அல்லிக்கேணி ஆண்டவன் திருக்கண் கண்டிருக்கின்றீர்கள்.
  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இசைபட வாழ்க.

  அல்லிக்கேணி நானும் போயிருக்கிறேன். அருமையான கோயில். எவ்வளவு பெரிய கோயிலாக இருந்தாலும் தள்ளுமுள்ளுக் கோயிலாக இருந்தால் பிடிக்காது. திருப்பதியானாலும் சரி. திருத்தணியானாலும் சரி. போனால் அவனைப் பார்த்து நாலு வார்த்தை நயமாகப் பேசுவதற்கு வாய்ப்பிருந்தால்தான் மகிழ்ச்சி. இப்போதெல்லாம் போகின்ற கோயில்களில் எல்லாம் அப்படியே அமைத்து வைக்கிறான். மகிழ்ச்சி.

  அல்லிக்கேணியில் திருமேனி பெருமேனி. மேலிருந்து கீழுமாகப் பார்த்தால்தான் தெரியும். கோகுலத்துக்கு இந்திரன் மறுத்த கார் ஓட்டிய அந்தக் கார் ஒட்டி இந்தக் கோயிலில் தேரோட்டி. அதற்கேற்ற உருவம். கோயிலுக்குள்ளே மீசையோடு இருக்க, திரைப்படங்களிலும் புத்தகங்களிலும் மீசையில்லாத மொழுக் முகத்தார்களையே காட்டுவது ஏனோ?

  கையில் மஞ்சள் பிடிக்க வைக்கும் தாயார் சன்னதியும் நெஞ்சில் அஞ்சல் விரட்டி வைக்கும் யோகநரசிம்மர் சன்னதியும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  சென்ற மாதம் சுவாமிமலையில் பாலாபிஷேகம் கண்டேன். உங்களது மகிழ்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பால் வீணாகிறதே என்ற வருத்தத்தை என்னால் மறைக்க முடியவில்லை.

  திருமங்கையாழ்வார் இவ்வளவு தூரம் வந்து பாடியிருக்கிறார் பாருங்களேன். கூடவே குமுதவல்லியும் வந்திருப்பார் தானே?

  Reply

 4. Anonymous
  Aug 02, 2016 @ 10:42:37

  நான்கூட நான்கு ஆண்டுகள் திருவல்லிக்கேணியில் வசித்திருக்கிறேன். பார்த்தசாரதி கோயிலுக்கும் சென்று இருக்கிறேன். புராதனமான கோயில்.இன்று மீண்டும் ஞாபகப் படுத்திக் கொண்டேன். நன்றி.

  Reply

 5. Sankar
  Aug 03, 2016 @ 07:08:49

  > திருவல்லிக்கேணி”க்” கண்டேனே

  க் மிகாது. டுவிட்டரில் சொல்லி விட்டேன் என்று நினைத்தேன். ஆனால் காணும்.

  Reply

 6. Divya
  Aug 04, 2016 @ 05:00:02

  Here’s a link for what you were looking for on twitter:
  http://www.thehindu.com/thehindu/fr/2004/01/02/stories/2004010202190900.htm

  Tell your daughter she could email Urmila-ji for help. I’m sure you must know someone from the same social circle as hers.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: