சமூக அநீதிகளுக்குக் குரல் கொடுக்கும் ஒரு பாத்திரத்தை வெகு வித்தியாசமாக செல்லுலாயிடில் படைத்திருக்கும் ராஜு முருகனுக்கு மனமார்ந்த பாராட்டுகள். படத்தில் கதை என்று ஏதுமில்லை. ஆனால் திரைக்கதை, இயக்கம் {ராஜு முருகன்}, இசை {சான் ரோல்டன்}, ஒளிப்பதிவு {செழியன்}, இவையனைத்தும் படத்தை முன்னிருத்துகின்றன. தருமபுரியில் நிகழும் கதைக்களம், அதில் அம்மக்களும் துணைப் பாத்திரங்களில் நடித்திருப்பதால் மண் மணம் கூடுதல் யதார்த்தத்தைத் தருகிறது.
இப்படத்தின் பலம் ராஜு முருகன் & முருகேஷ் பாபுவின் வாசனங்கள் தான். சும்மா எல்லா அரசியல் கட்சிகளையும், அரசியல் ஊழல்களையும் பளார் பளார் என்று வசனங்களின் மூலம் வெளுத்து வாங்கியுள்ளார். திரை அரங்கில் அவ்வசனங்களுக்கு நல்லதொரு வரவேற்பும், கைத்தட்டலும் கிடைக்கின்றன! சசிபெருமாள், ‘டிராஃபிக்’ ராமசாமி, ‘மதுரை’ நந்தினி போன்றவர்களின் போராட்டங்களே இயக்குநர் ராஜு முருகனுக்கு இப்படத்தை எடுக்க உந்துதலாக இருந்திருக்கும்.
இன்றைய இந்தியாவை காட்டுவதால் சமூக வலைத்தளங்களின் தாக்கமும் இப்படத்தில் பங்கு வகிக்கிறது. ஆனாலும் இவைகளின் தாக்கம் ஓரளவே, பதவியும் பவரும் உள்ளவர்களே இறுதியில் வெற்றி பெறுகிறார்கள் என்கிற யதார்த்தத்தை முகத்தில் அறைந்தார் போல சொல்கிறது படம். லட்சோப லட்சம் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லா சூழ்நிலையில் விண்வெளிக்கு ராக்கெட் விடுவதும் ஓர் அவசியமற்ற ஆடம்பரமே என்பதை குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குநர்! அரசாங்கத்தில் எல்லா நிலைகளிலும் புரையோடிபோயிருக்கும் ஊழலினாலும், அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையினாலும் மக்கள் படும் அவதிகளை படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நடிகர்களின் தேர்வும் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. குரு சோமசுந்தரம் மன்னர் மன்னனாக வாழ்ந்திருக்கிறார். அதுவும் அவரின் பாத்திரத்தில் நடுவில் ஏற்படும் மாற்றத்தை அருமையாக, மிக நேர்த்தியாக காட்டியுள்ளார். பொன்னூஞ்சல் என்னும் பாத்திரத்தில் நாடக நடிகர் M. இராமசாமி சமூக அவலங்களை எதிர்க்கும் ஜெயகாந்தனை ஒத்த ஒரு பாத்திரத்தைக் கண் முன் காட்டுகிறார். எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரும் பின்னி எடுக்கிறார். மனித உரிமை ஆர்வலர் ச.பாலமுருகனும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். ரம்யா பாண்டியன் {நாயகி}, காயத்திரி இருவருமே அவரவர் பாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர்.
நல்ல விஷயங்கள் பல இருந்தும், சினிமாத்தனம் சிறிதும் இல்லாமல் படம் வந்திருந்தும், நிதர்சனத்தின் வலி நம் நெஞ்சத்தைத் தொடும்படி இருந்தும் கூட கதை என்று ஒன்று இல்லாதது எந்த இலக்கை நோக்கிப் படம் பயணிக்கிறது என்று பார்க்கும் ரசிகனுக்குப் புரியாமல் போகிறது. படத்தில் சஸ்பென்ஸ் இல்லை. ஆனால் கதை சொல்லும் விதத்தில் ஒரு நகைச்சுவை தன்மை கிளைமேக்ஸ் வரையில் இழையோடுகிறது.
சமூகத்தில் யார் ஜோக்கர் என்று சுட்டிக்காட்டியபடி முடிகிறது படம். சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் சமூகமே அதற்குக் குரல் கொடுப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவதில்லை என்று சாடுகிறார் இயக்குநர். இம்மாதிரி படங்களில் சில தொய்வுகள் இருந்தாலும் படைப்பாளியை பாராட்டும் விதத்தில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தர வைக்க வேண்டியது நம் கையில் தான் உள்ளது. கமலா திரை அரங்கில் காலை காட்சி மட்டுமே நடைபெறுகிறது. இன்னும் பல காட்சிகள் திரையும்படியான சூழல் சில நாட்களில் ஏற்பட்டால் நன்றாக இருக்கும்.
Aug 13, 2016 @ 09:32:21
இந்தப் படத்துக்கு மக்களிடம் எவ்வளவு வரவேற்பிருக்கும் என்பது ஊகிக்கக்கூடியதுதான். சொல்ல வந்த கருத்துக்காகவது நாம் அதரவு கொடுக்கத்தான் வேண்டும்.
Aug 30, 2016 @ 16:05:04
Yes Gira, thanks.
Aug 13, 2016 @ 10:34:35
ம்..எங்க ஊர்ல வாகா தமிழ்படம் மட்டும்தான் ஓடுது ( இதை சொல்லும் இந்நேரம் அந்த படமும் ஊரை விட்டே போயிருக்கும்)
Aug 30, 2016 @ 16:04:39
How sad! Please watch it in DVD later.
Aug 13, 2016 @ 15:40:30
>>>>சசிபெருமாள், ‘டிராஃபிக்’ ராமசாமி, ‘மதுரை’ நந்தினி போன்றவர்களின் போராட்டங்களே கதை
மணிரத்னத்தின் பின்னோடி
Aug 30, 2016 @ 16:04:09
Yes.
Aug 14, 2016 @ 10:57:06
Good review. Let us encourage such initiatives
Aug 30, 2016 @ 16:03:46
Yes, indeed.
Aug 15, 2016 @ 13:43:12
ராஜு முருகன் விகடனில் எழுதிய தொடர் படித்த அவரிடம் இருந்து எதிர்பார்த்த வைகயான படங்கள் கிடைக்காதது ஏமாற்றமே
Aug 30, 2016 @ 16:03:23
Very true!
Aug 30, 2016 @ 15:33:19
clinical analysis. however, have u noticed that the director silently promoted the left ideology ?. for instance, the old man having red color spectacle glass cover in his pocket during the discourse on the climax. albeit he pointed out the ill effects of crony capitalism, religious bigotry, and political issues with sarcasm, communism is not a solution.
Aug 30, 2016 @ 16:03:02
Well pointed out!