யுவனின் இசையில் சீனு இராமசாமியின் இயக்கம், ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின்கள் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா. அதனால் எதிர்ப்பார்ப்போடு போவது நம் தவறல்ல.
நீர் பறவையைப் போல இதுவும் ஒரு கிராமத்துக் கதை. இக் கதையின் கரு என்று பார்த்தால் முதல் தலைமுறை மருத்துவர் ஒரு ஏழை குடும்பத்தில் உருவாகுகிறார் என்பதே. ஆனால் அது புரிவதற்குள் பாதி படம் முடிந்துவிடுகிறது. நல்ல விஷயங்களை சொல்ல முற்பட்டிருக்கார் சீனு இராமசாமி. ஆனால் கதையில் சுவாரசியம் பிடிக்க இடைவேளை வரை சுற்றிச் சுழலும் கதையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சினிமா என்பது visual media என்பதை பல இயக்குநர்கள் மறந்து விடுகிறார்கள். வசனத்தை வைத்தே படத்தை ஓட்ட முடியாது.
தமன்னா முதல் பாதியில் வந்ததைப் பார்த்தபோது சப்பென்றாகிவிட்டது. இதற்கு எதுக்கு தமன்னா என்று நினைக்கும் பொழுது பின் பாதியிலும் வந்து கதைக்கு வலு சேர்க்கிறார். பாண்டிச்சேரியில் குறைந்த பீசுக்கு சேவை செய்யும் மருத்துவரை முன்னிறுத்தி விஜய் சேதுபதியின் பாத்திரம் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஆழமாகப் பதியவில்லை, காரணம் முன் பாதி முழுக்கு குடிகாரனாக அவரைக் காட்டி அதன் காரணத்தைப் பின் பாதியில் சுருக்கமாக சொல்வதால்!
ஐஸ்வர்யா, விஜய் சேதுபதி வரும் பகுதி கவிதை. படம் முழுதும் அதே சிரத்தையுடன் கதையை எடுத்து சென்றிருந்தால் படம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குடி நோய், அதனை தீர்ப்பது, வரதட்சணை கொடுமை, மருத்துவர்கள் நம் நாட்டில் கிராமப் புறங்களில் சேவை செய்வதன் முக்கியத்துவம், விவாகரத்து செய்து மறு விவாகம், பகை, மத வேற்றுமையை புறம் தள்ளி உயிரைக் காப்பதே முக்கியம் என பல நல்ல விஷயங்களை படத்தில் காண்பித்துள்ளார் சீனு ராமசாமி. அதற்கு பாராட்டுகள். ஆனால் எல்லா நல்லதையும் ஒரே படத்தில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அல்லது அப்படி காட்ட விருப்பப்பட்டால் கதையில் சரியான கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
படத்தின் முற்பகுதியை அப்படியே வெட்டி எறிந்துவிட்டு பின் பாதியை மட்டுமே பார்த்தால் கூட ஒரு அழகிய குறும்படத்தைப் பார்த்த நிறைவைத் தந்திருக்கும்! எப்படி இந்த பெரிய விஷயத்தை கவனிக்காமல் இயக்குநர் தவறு செய்தார்? கல்லூரி Flash back சீன்கள் படு மட்டமாக உள்ளன. அந்தக் காலத்து அப்பாஸ் வினீத் நடித்த காதல் தேசம் படமே தேவலாம். பேர்வெல் பாட்டு படு சுமார். பேராசிரியராக வரும் ராஜேஷ் நன்றாக நடித்துள்ளார். ஆனால் பல இடங்களில் போதனை தொனியில் வசனங்கள் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
இத்தனை ஓட்டைகள் இருந்தும் படத்தை இரண்டு மணி முப்பது நிமிடங்கள் நம்மால் உட்கார்ந்து பார்க்க முடிவது விஜய் சேதுபதியினால் மட்டுமே. மிகவும் நன்றாக செய்துள்ளார். அழுத்தமாக நடிக்க வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும், இலகுவாக நடிக்க வேண்டிய இடத்தில் அவ்வாறாகவும் செய்து நம் கைத்தட்டலைப் பெறுகிறார். தொடர்ந்து நல்ல பாத்திரங்களில் நடித்துப் பெயர் வாங்க அவர் உடல் எடையைக் குறைப்பதில் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.
அரங்கை விட்டு வெளியே வரும்போது என்னமோ போடா மாதவா என்ற மன நிலையில் தான் வருகிறோம். ஆனால் விஜய் சேதுபதிக்கு நல்ல fan base உருவாகியுள்ளது தெரிகிறது. படம் பார்க்க வந்தவர்கள் ஆரவாரத்துடன் பார்த்தார்கள். டைட்டிலில் அவர் பெயர் “மக்கள் செல்வன்” என்று வந்துள்ளது கூடுதல் தகவல் :-}
Aug 21, 2016 @ 13:18:30
ஆ….காதல் தேசமே தேவலாமா? 😱