“நாளைக்கு அமாவாசை. நாளைக்குத் தாண்டாது.”
“ரெண்டு நாளா தண்ணி கூட இறங்கலை, வயிறும் உப்பி இருக்கே.”
“ஒண்ணுக்கு வெளிக்கு எதுவுமே போகலை.”
“கர் கர்னு இப்படித் தொண்டக் குழியில கடையுதேடீ”
சுத்தி இருக்கறவங்க பேசறதெல்லாம் என் காதில் விழுது. பாழும் வாய் தான் பேசவும், கண்ணு திறக்கவும் மாட்டேங்கிது. கண்ணுல நிக்கிற அம்முவைக் கட்டி முத்தம் கொடுக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆனா அதை சொல்லக் கூட முடியலையே.

“உசிரு போவேனான்னு இழுத்துக்கிட்டு இருக்கே, அடியே, அம்முக்கு மொட்டை அடிச்சு காது குத்தணும்னு குமாரு சொல்லிக்கிட்டே இருந்தானே, அதை வேணா நாளைக்கு நாகாத்தம்மன் கோவில்ல போய் பண்ணிட்டு வந்திடு. அப்பவாவது நிம்மதியா போறானான்னுப் பார்க்கலாம்” பக்கத்து வீட்டு பாட்டி குரல் தான் இது. இன்னும் ஒரு மாசம் முடிஞ்சா தான் முப்பது வயசை தொடுவேன். முப்பது வயசு இளைஞனை அந்தக் கிழவி வழியனுப்ப அவசரப்படுது.
“அதையும் செஞ்சிடலாமே, ஏண்டா சுரேஷு நீ போய் அவன் பெண்டாட்டிட்ட கேட்டுட்டு வரியா?” பெத்த தாயே என்னை மேலே சீக்கிரம் அனுப்பத் துடிக்குது.
“என்னம்மா, என்னை போய் அந்த நாய் வீட்டு வாசல்ல நிக்க சொல்றியா?” இது அண்ணன்.
“என்னடா பண்றது, புள்ள அவ கிட்ட தானே இருக்கு. ஒரு எட்டு போய் கேட்டுடுடா. நாளைக்கு அம்முவை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிடு. காலையில போய் மொட்டை அடிச்சு, காது குத்திடலாம். நம்ம தெருல இருக்கிறவங்களுக்கு மட்டும் கறி சோறு ஆக்கி போட்டுடலாம்.”
என் வீட்டுலேந்து நாலாவது வீடு தான் ஜென்னி வீடு. அப்படி தெருல பார்த்து பார்த்து தான் லவ் ஸ்டார்ட் ஆச்சு. ஞாயிறு ஆனா அவங்க வீட்டுல எல்லாரும் நல்லா டிரெஸ் பண்ணி மாதா கோவிலுக்குப் போவாங்க. அதுல ஜென்னி பளிச்சுன்னுத் தனியா தெரிவா. டேன்சர் ஆச்சே. எல்லா க்ரூப் டேன்சிலும் அவளைத் தான் முதல் வரிசைல நிக்க வெப்பாங்க. தெலுங்கு படத்திலும் தமிழ்ப் படத்திலும் அவளுக்கு நிறைய சான்ஸ் வரும். என் மெக்கானிக் கடைல இருக்கிற டிவில அவ டேன்ஸ் ஆடுன பாட்டு வந்தா ஸ்பேனர கீழ போட்டுட்டு பாட்டு முடியுற வரைக்கும் டிவி பொட்டியை விட்டு நகர மாட்டேன்.

நானும் நல்லாத் தான் இருப்பேன் பார்க்க. அதான் அவளுக்கும் என்னை பிடிச்சிடுச்சு. நான் சொந்தமா கடை வெச்சிருக்கேன்னு மயக்கிடிச்சுன்னு அம்மா தான் பேசிக்கிட்டே திரிஞ்சிது. நான் நாலாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். ஜென்னி ப்ளஸ் டூ. ஒரு நாள் கால் ஷீட்டுக்கு அது மூவாயிரம் ரூபாய் வாங்கும். அது ஏன் என் கடையைப் பார்த்து மயங்கனும்? சினிமால டேன்ஸ் ஆடுற பொண்ணுன்னு அம்மாக்குப் பிடிக்கலை. அதுக்கும் மேல அது கிறிஸ்டியன் வேற!
நான் பத்து வயசிலேயே படிப்பும் வராம, வழிகாட்ட அப்பாவும் இல்லாம ஒரு மெக்கானிக் கடைல போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது என்னவோ நான் கை வெச்சா எந்த டூ வீலருக்கும் உடனே உசிர் வந்திடும். முதலாளி எல்லா பைக்கையும் என்னைத் தான் முதல்ல பார்க்க சொல்லுவாரு. அவர் ஒரு நாள் பஸ் ஏக்சிடன்ட்ல திடீர்னு செத்துப் போனதும் அவரு கஸ்டமருங்க எல்லாம் என்கிட்டே வர ஆரம்பிச்சிட்டாங்க. மரத்தடில வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் சீக்கிரமே பக்கத்துல ஒரு கடையை தொறந்துட்டேன்.

இருபது வயசுல கடை ஓனர் நான். நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சேன். குடி, சிகரெட்டு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.ஜென்னி என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப எதுனால என்னைப் பிடிச்சிருக்குன்னு கேட்டேன். இதத் தான் சொல்லிச்சு. சினிமால நடிக்கிறவங்க, ஏன் நம்ம ஏரியால இருக்கிறவங்க எல்லாருமே சிகரெட்டு, தண்ணின்னு இருக்காங்க. நீ நல்லா சம்பாதிச்சாக் கூட அப்படி இல்லைன்னிச்சு.
கொஞ்ச நாள்லயே ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப் போயி ரெண்டு குடும்ப எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ஜென்னி தான் வேற வீடு பார்க்க வேணாம் இங்கேயே இருக்கலாம்னு சொல்லிச்சு. அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜென்னி சினிமால டேன்சர்னு எப்பப் பார்த்தாலும் கேலி பேச்சு. என்னோட ஆத்தா அது கிரிஸ்டியனுன்னு நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்னு திட்டிக்கிட்டே இருந்தாங்க.
மூணே மாசத்துல தனிக் குடித்தனம் போயிட்டோம். அப்போ அம்மு அவ வயத்துல ரெண்டு மாசம். ஆறு மாசம் வரைக்கும் டேன்சுக்குப் போனா, அப்புறம் முடியலை. எனக்கு அவ்வளவு சந்தோசம். கடையிலேயே என்னோடயே உக்காந்திருக்கும். கடைக்கு வர கஸ்டமர்ட்ட நல்லா பேசும். அம்மு பிறந்த அன்னிக்கு தெரு முழுக்க எல்லாருக்கும் ஜிலேபி வாங்கிக் கொடுத்தேன். எங்க ஆத்தாவும் அண்ணனும் அண்ணியும் கூட சந்தோஷமா இருந்தாங்க.
மூணு மாசத்துலேயே திரும்ப டான்ஸ் ஆட சான்ஸ் வர ஆரம்பிச்சுது. நான் போக வேணாம்னு சொன்னேன். அதுல ஆரம்பிச்சுது சின்ன சின்னத் தகராறு. சரி வா அம்மா வீட்டோட போயிடலாம், அம்மா குழந்தையைப் பார்த்துக்கும், நீ ஷூட்டிங் போலாம்னு சொன்னேன். அதெல்லாம் வேணாம், எங்கம்மாட்ட விட்டுட்டுப் போறேன். என் தங்கச்சி ஸ்கூலேர்ந்து வந்த பார்த்துப்பான்னா. பாலு கொடுக்கறதையும் நிப்பாட்டிட்டு புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சா. பாப்பாக்கு வயிறே ஆங்கலை. எப்பப் பார்த்தாலும் அழுக. அதுவும் நடு ராத்திரில வீல்னு கத்தும். ஜென்னி டேன்ஸ் ஆடிட்டு வந்த அசதில எந்திரிக்கக் கூட மாட்டா. நான் தான் பாலைக் கரைச்சுக் கொடுப்பேன். வேக வேகமா குடிக்கும். கொஞ்ச நாள் பார்த்தேன் பொறுக்கலை. ஒரு வருஷம் கழிச்சு தான் வேலைக்குப் போயேன். கொழந்த தவிக்குது பாரேன்னேன். எங்கேர்ந்து தான் இத்தனை கோபமோ, சான்ஸ் கிடைக்கறப்பப் போகணும். ஒரு வருஷம் போகாம இருந்துட்டா அப்புறம் யாரு சான்ஸ் தருவாங்கன்னு சத்தமா கத்த ஆரம்பிச்சிட்டா. இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்ல.
சோறு ஆக்கறதும் நினைச்சப்பத் தான். நான் ஓட்டல்ல வாங்கி துன்னறது பார்த்துட்டு அம்மா தினம் வீட்டாண்ட வந்து சாப்பிட சொல்லிச்சு. மத்தியானம் தினம் சாப்பிடப் போனேன். அண்ணனுக்கு ஈபில லைன் மேன் வேலை. அது இருக்காது. ஆனா அண்ணி இருக்கும். ஜாடை மாடையா பேசிச்சு. அதனால அம்மாவை எங்க வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு செய்யச் சொன்னேன். அப்படியே ஜென்னி அம்மா வீட்டிலேந்து பாப்பாவை இங்கக் கொண்டாந்து கொஞ்ச நேரம் பார்த்துக்க சொன்னேன்.
ஜென்னி வீட்டுல புள்ளை அழுதுகிட்டு இருக்கும். ஆனா ஜென்னியோட அம்மா அதும் பாட்டுக்கு டிவி பார்த்துக் கிட்டு இருக்கும். காது தான் கேக்காதோன்னு தோணும். அடிக்கடி ஜலுப்பு ஜுரம்ன்னு பாப்பாக்கு வர ஆரம்பிச்சுது. ஆசுபத்திரிக்கும் பாப்பாவை தூக்கிக்கிட்டு அம்மா தான் ஓடும்.
ஷூட்டிங்ல ஓவர் டைம்னு சில நாளைக்கு லேட்டா வர ஆரம்பிச்சா ஜென்னி. ஒரு நா எவனோ ஒருத்தன் பைக்ல கொண்டாந்து விட்டான். கேட்டா அவனும் டேன்சர் தான், ஆட்டோவே கிடைக்கலை அதான் கொண்டாந்து விட்டான்னு சொல்லிச்சு. எனக்கு தான் இப்போ நல்லா பணம் வருதே பாப்பாவை எதிர் வீட்டு ஆயாக்கிட்ட காசு கொடுத்துப் பார்த்துக்கச் சொல்லலாம். உங்கம்மா என்னை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க. அவங்க ஒன்னும் இனிமே பார்த்துக்க வேணாம்னு சொல்ல ஆரம்பிச்சா.
இதக் கேட்டு ஆத்தாக்கு ரொம்பக் கோபம். அடிச் சிறுக்கி, உன் கொழந்தைய உன்னால பார்த்துக்க முடியாதுன்னு ஆயாவ காசுக் கொடுத்து வேலைக்கு வெப்பியான்னு அடிக்கவே போயிடிச்சி. அப்புறம் தினத்துக்கும் சண்டை தான். திடீர்னு ஒரு நாள் வந்து ஒரு வாரம் அவுட் டோர் ஷூட்டிங் போகணும்னு சொல்லுச்சு. பெரிய ஹீரோ படம். கண்டிப்பாப் போகணும்னு ஒரே அழிச்சாட்டியம். கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய அவுட் டோர் போகும். கல்யாணத்துக்கு அப்புறம் அதான் மொத தடவ. போகாதன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேக்கலை. சூட்கேஸ்ல துணிய எடுத்து வெச்சுட்டு கிளம்பிடுச்சு.
அம்மா தான் ஒரு வாரம் முழுக்க பாப்பாவை பார்த்துக்கிச்சு. அண்ணியும் தான். ஜென்னி அம்மா வீட்டுக்கே குழந்தைய அனுப்பலை. ரெண்டு நாளுக்கு ஒருக்கா போன் பண்ணி விசாரிச்சிக்கிடிச்சி ஜென்னி. எவனோ ஒருத்தனோட பைக்ல வந்து இறங்கினதுலேந்தே என் மனசே சரியாயில்லை. ஓரு வாரம் ஜென்னி ஊர்ல இல்லாத போது ஏதேதோ எண்ணம் மனசுல. அவனும் கூட அவுட்டோர் வரானான்னு கேட்டதுக்கு என்னை முறைச்சிட்டு ஆமாம் அதுக்கென்னன்னு கேட்டுட்டுப் போனா. அதுவரைக்கும் டாஸ்மாக் பக்கமே போகாத நான் அந்த வாரத்துல ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தேன். அங்கே போய் ரெண்டு கட்டிங் போட்டா மனசு லேசான மாதிரி இருந்துது.
ஒரு வாரத்துல ஷூட்டிங் முடியாம இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு வந்தா. அவ திரும்பி வந்தன்னிக்கு நான் டாஸ்மாக் போயிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன். கிட்ட வந்து குடிச்சிருக்கியான்னு கேட்டா. அமா, அதைப் பத்தி உனக்கென்னன்னு நானும் திமிரா பதில் சொன்னேன். அப்புறம் என் கூட சரியாவே பேசலை. ரெண்டு நாள் வீட்டிலேயே இருந்தா. ரெண்டு நாளும் வேணும்னுட்டு குடிச்சிட்டே வந்தேன். திரும்ப ஷூட்டிங்கிற்கு போயிட்டு சாயந்திரமா அதே ஆளோட பைக்ல வந்தா. ஆனா நாலு மணிக்கே வந்துட்டா. நான் எப்பவும் அந்த சமயத்துல கடைல தான் இருப்பேன். ஆனா அன்னிக்கு வீட்டுல இருந்தேன். வண்டியை விட்டு இறங்கும்போது அவனை உரசிகிட்டே வண்டிய விட்டு இறங்கினா. என் நெஞ்சில் யாரோ எசிட் பாட்டிலை கவுத்தா மாதிரி இருந்தது.
நான் ஜன்னல் வழியா பார்த்தது அவளுக்குத் தெரியலை. என்ன சீக்கிரம் வந்துட்டன்னு கேட்டேன். உடம்பு சரியாயில்லைன்னு சொன்னா. நேரா படுக்கப் போயிட்டா. அவ செல் போன் எடுத்துப் பார்த்தேன். ஆனந்துன்னு ஒரு நம்பருக்கு நிறைய கால் போயிருந்தது. அதை நான் தனியா என் போனில் சேவ் பண்ணிகிட்டேன். அவ உரசிக்கிட்டு இறங்கினது என்னை ரொம்ப உறுத்த ஆரம்பிச்சுது. நேரா டாஸ்மாக் போயிட்டு என்னிக்கும் இல்லாத அளவு குடிச்சிட்டு வந்தேன். என்னை பார்த்துட்டு உனக்கு இந்த கருமாந்திர பழக்கம் இல்லேன்னு தானே உன்ன கட்டிக்கிட்டேன், இப்படி குடிக்க ஆரம்பிச்சிட்டியேன்னு திட்டினா.
ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வரும்போது ஆத்தாவும் ஜென்னியும் பயங்கரமா சண்டை போட்டுக் கிட்டு இருந்தாங்க. ஆத்தா ஜென்னி வீட்டை விட்டு வெளிய துரத்திக் கிட்டு இருந்துச்சு. சண்டையை விலக்கி என்னன்னு கேட்டா அம்மா வாயிலையும் வயித்திலேயும் அடிச்சிக்கிட்டு நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா? இந்தச் சிறுக்கி வேணாம்னு சொன்னேனே கேட்டியான்னு அழுவுது. அவ ஒண்ணும் சொல்லாம முறைச்சுக்கிட்டு நின்னா. திடீர்னு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினா ஜென்னி. என்னடின்னு கேட்டா, இப்படி சந்தேகப் படற உன்னோட இனிமே வாழ விருப்பம் இல்லை, உன்ன பிடிக்கலை. நான் போறேன்னு போயிட்டா.
எனக்கு அவ பின்னாடி போறதான்னு தெரியலை. அம்மா பக்கத்துல வந்து போகட்டும்டா அவ எவனோடயோ ஊர் மேயறா. அன்னிக்கே பக்கத்துத் தெருல இருக்கிற போட்டோ கடைக்காரன் என்கிட்டே சொன்னான். அவன் ஏதோ ஷூடிங்கல போட்டோ எடுக்கப் போயிருந்தானாம். ஜென்னியும் இன்னொருத்தனும் கொஞ்சிக் குலாவிக்கிட்டு இருந்தாங்க, பாவம் குமாருன்னு சொன்னான். இன்னிக்கு எவன் கூடவோ ஒட்டிக் கிட்டு பைக்ல வந்து இறங்கினா. யாருடி அவன்னு கேட்டா நீ யாரு அதை கேக்கன்னு கத்தரான்னுச்சு.
எனக்கு ஜென்னி மேல உசுரு. அது தப்புப் பண்ணும்னு நெனைக்க முடியல. அவங்க வீட்டுக்குப் போயி அவ ஜடையை புடிச்சு ஏண்டி வீட்டை விட்டுக் கிளம்பி வந்தேன்னு கத்தினேன். குடிச்சிட்டுப் போயிருக்கக் கூடாது. நான் போட்ட சத்தத்துல அம்மு அழ ஆரம்பிச்சிடுச்சு. இதப் பாரு, நீயும் உங்கம்மாவும் என் மேல சந்தேகப் படறீங்க. நான் உன்னை நம்பி இல்லை. என் சொந்தக் கால்ல நிக்க முடியும். முதல்ல நீ குடிக்கறதை நிறுத்திட்டு வந்து பேசுன்னிச்சு. இப்படியே ஒரு மாசம் போச்சு. நானும் அவ அம்மா வீட்டு வாசப் படிய அதுக்கப்புறம் மிதிக்கலை. வைன் ஷாப் போறதையும் நிறுத்தலை. குடிச்சிட்டு அந்த ஆனந்த் நம்பருக்கு அப்பப்ப போன் பண்ணுவேன். அவன் எடுத்ததும் கட் பண்ணிடுவேன்.
என்னால குடிக்கறதை நிறுத்த முடியலை. ஜென்னி என்னை விட்டுட்டுப் பாப்பாவையும் தூக்கிட்டுப் போனதைத் தாங்கவும் முடியலை. ஒரு நாள் ஜென்னி கடைக்கு வந்திச்சு. நீ குடிக்கறதை நிறுத்தப் போறியா இல்லையான்னு என் கடை பசங்க முன்னாடி கோபமா கேட்டுது. நீ முதல்ல வீட்டுக்கு வா அப்புறம் நிறுத்தறேன்னு நானும் கோபமா சொன்னேன். பதில் கூடப் பேசலை அப்படியே போயிடுச்சு. அடுத்த மாசம் அந்தப் பொறுக்கி அவங்க வீட்டுக்கே குடி வந்துட்டான். ஜென்னி மேல நான் வெச்சிருந்த நம்பிக்கை தவிடு பொடியாகிடிச்சி. அவன் அவங்க வீட்டுக்குக் குடி வந்ததும் புத்தி பேதலிச்சா மாதிரி ஆயிடிச்சி எனக்கு. கடையை ஒரு வாரம் தொறக்கலை. கஸ்டமருங்க போன் பண்ணா எடுக்கலை. கடை ஹெல்பர் பசங்க வீட்டுக்கு தினம் வந்து வாங்கண்ணே கடையை தொறங்கன்னு கெஞ்சினாங்க. நான் போகலை.
அம்மா போய் அம்முவை தூக்கிக்கிட்டு வரப் பார்த்தாங்க. அவ கொடுக்க மாட்டேன்னு பஜாரி மாதிரி கத்தியிருக்கா. எங்கண்ணன் ஏரியா கவுன்சிலர் கிட்ட போய் சொல்லி பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ணினாரு. அவ குழந்தையை கொடுக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டா. எங்கம்மா அவ குழந்தையப் பார்த்துக்காம தானே ஷூட்டிங் போனா, நான் தானே பார்த்துக்கிட்டேன், இப்ப மட்டும் ஏன் குழந்தை வேணும்னு அவங்கம்மாட்ட கேட்டாங்க. எதுவும் வேலைக்கு ஆவலை. நாளைக்கு அதையும் நடிக்க விட்டு சம்பாதிப்பா அதான் கொடுக்க மாட்டேங்கறான்னு ஏரியால எல்லாரும் பேசினாங்க. நாறிப் போச்சு. கவுரதையா இருந்தா எங்க வீட்டு மானம் கப்பலேறிடிச்சு. ஆளாளுக்கு தோணுனத எல்லாம் பேசினாங்க.
எனக்கு தான் அன்னிலேர்ந்து உயிர் போகிற வலி. ஆனா எங்க வலின்னு தெரியலை. எழுந்து நிக்கவே முடியல. அண்ணன் டாக்டருகிட்ட கூட்டிப் போச்சு. எதோ மருந்து கொடுத்தாங்க தூக்கம் தூக்கமா வந்துது. தூங்கி முழிப்பேன் வலிக்கும். வலுக்கட்டாயமா என் ஷாப் ஆளுங்க கடையை தொறந்து என்னை அங்கே ஒக்கார வெச்சாங்க. சில சமயம் மூச்சு விட முடியாத மாதிரி அடைக்கும்.
திரும்பவும் வலிக்கு மருந்து பாட்டில் தானுன்னு ஆச்சு. குடிச்ச உடனே வலி காணாம போயிடும். தினமும் டாஸ்மாக் தொறக்கும் போதே போய் குடிச்சிட்டு வந்து தான் என் மெக்கானிக் ஷாப்பை தொறக்க ஆரம்பிச்சேன். எப்பவும் போல நல்லா வேலை செஞ்சேன். நான் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு அம்மா வீட்டோட வந்துட்டேன்.

தினம் என் கடையத் தாண்டி தான் அவனோட பைக்ல போகும் ஜென்னி. உடனே எனக்கு உடம்பு முழுக்க வலிக்கும். கையோட இருக்கிற பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு ராவா குடிப்பேன். நெஞ்சு எரிச்சல்ல உடனே வலி மரத்துப் போகும். ஜென்னி வீட்டுல இல்லாத சமயமா அம்மா அவங்க வீட்டுல போயி அவ தங்கச்சிட்ட கேட்டு அம்முவை தூக்கியாரும். அதுஞ் சிரிப்புல தான் உசிரோட இருந்தேன்னு நினைக்கிறேன்.
முதல்ல நான் தினம் குடிக்கறதை பத்தி அண்ணன் ஒன்னும் சொல்லலை. ஒரு நாள் சோறு துன்றச்சே என் கை நடுக்கத்தைப் பார்த்து ஏண்டா குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கறேன்னுச்சு. ஏன் நான் உசிரோடு இருந்து என்ன ஆகணும்னு கேட்டேன். உடனே அம்மாவும் அண்ணனும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அவளை நினைக்காம இருக்க முடியலை. அவ ஏன் என்னை விட்டுட்டுப் போனான்னு புரியலை. அந்த வலி மறக்க எனக்கு குடி தேவையா இருந்தது.
ஒரு நாளைக்கு ரெண்டு தடவை டாஸ்மாக் போக ஆரம்பிச்சேன். லீவ் விடுவாங்கன்னு தெரிஞ்சா முதல்லியே ரெண்டு பாட்டில் வாங்கி வெச்சிப்பேன். ஆத்திர அவசரத்துக்கு எப்பவும் கடைல ஸ்டாக் இருக்கும். கொஞ்ச நாளா காச்சல் வந்து முடங்கி படுக்க ஆரம்பிச்சேன். குடியை நிப்பாட்டுற டாக்டர் கிட்ட என்னை கூடிப் போச்சு அண்ணன். அவரு எல்லா டெஸ்டும் எடுத்தபோது தான் எனக்குக் காச நோய் இருப்பது தெரிய வந்துச்சு.

தாம்பரம் சேனடோரியம் ஆசுபத்திரில போய் சேர்த்து வுட்டாங்க. ரெண்டே நாள்ல ஒடி வந்துட்டேன். தாம்பரத்துலேயே ஒரு டாஸ்மாக்குல கட்டிங் போட்டப்புறம் தான் ஒரு நிதானத்துக்கே வந்தேன். அது வரைக்கும் உடம்பு ஒரே உதறல். வீட்டுக்கு வந்தப்புறம் அம்மா கெஞ்சிச்சு, நான் முடியவே முடியாதுன்னுட்டேன். தினம் அம்முவை பார்த்துக் கிட்டு இங்கேயே இருக்கேன். ஆசுபத்திரிக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.
அம்மு ஸ்கூல் போக ஆரம்பிச்சதுலேந்து ஸ்கூல் விட்டதும் நேரா என் கடைக்கு தான் ஒடி வரும். நான் வாங்கி வெச்சிருக்கிற பிஸ்கட்டை துன்னுட்டு என்னக் கட்டி முத்தம் கொடுத்துட்டு அவங்க வீட்டுக்கு ஓடிடும்.
எனக்கு டிபின்னு யாரோ ஜென்னி கிட்ட போய் சொல்லிட்டாங்க. சின்னக் குழந்தைக்கும் டிபி வந்துடும்னு அது உடனே அம்மு என்னைப் பார்க்க போகக் கூடாதுன்னு சொல்லிடிச்சு. அதுலேந்து இன்னும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சேன். கடைய பசங்க தான் பார்த்துக் கிட்டாங்க. எழுந்து நிக்கக் கூட முடியலை. பசி எடுக்கறதும் நின்னுப் போச்சு. எங்கண்ணன்ட டாக்டர் லிவர் அழுகிப் போச்சுன்னு சொன்னாராம். ஒரு நாள் மயக்கமாயிட்டேன். ஜிஹெச்சுக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. அங்க என்னல்லாமோ செஞ்சிப் பார்த்திருக்காங்க. முத்திப் போச்சு, இன்னும் நாள் கணக்கோ நேரக் கணக்கோ தான், வீட்டுக்குக் கொண்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். பாதி நினைவும் பாதி மயக்கமுமா இருந்தேன். ஒண்ணுமே புரியல. ஆனா மனசு சந்தோஷமா இருந்திச்சி. இன்னும் கொஞ்ச நாள்ல வலி போயிடும். நிம்மதியா ஜென்னிய நினைக்காத வேற உலகத்துக்குப் போயிடலாம்னு தோணுச்சு.
இதோ அம்மு பக்கத்துல வந்து நிக்குது, ஆனா பார்க்க முடியலை. அதை எனக்கு வாயில பால் ஊத்தச் சொல்றாங்க. அம்முக் கொடுத்தப் பாலை கஷ்டப்பட்டு முழுங்கறேன். “அடே சுரேஷு, குமாரு பால முழுங்கறாண்டான்னு” அம்மா அண்ணனைக் கூப்பிட்டுது. அண்ணன், அண்ணி, அம்மா எல்லாரும் பாலை வாயில ஊத்தறாங்க. பாதி உள்ளப் போகுது பாதி வெளியே வழியுது.
அம்மு இன்னும் அங்கேயே நிக்குது போல. அண்ணன் அதுங்கிட்ட “அழாதடா கண்ணு”ன்னு சொல்றது காதுல விழுது. பாவம் அம்மு. என்னமோ சத்தம். ஜென்னி போடும் சென்ட் மணம் வருது. “அம்முவை கூட்டிப் போக வந்தேன்” அப்படின்னு சொல்லுது ஜென்னி. இவங்கல்லாம் பால் கொடுக்கறதை பார்த்துட்டு அதுக்கும் கொடுக்கணும்னு மனசுல தோண வெச்சிருக்கான் அந்த நல்ல ஆண்டவன். கிட்ட வந்து வாயில பாலை விடுது. அது பாலை விட்டதும் அப்படியே கண்ணை தொறக்கறேன், கண்ணிலேந்து தண்ணி வழியுது, ஜென்னியப் பார்க்கிறேன், பக்கத்துல மொட்டை அடிச்சு காது குத்தியிருக்கற அம்முவை பார்க்கறேன், கீழே இருக்கற என் உடம்பையும் பார்க்கறேன். குமாராகிய நான் இனி இங்கில்லை.
