ஆனந்த விகடன் – என் பார்வையில்

 

vikatan

என் பெற்றோர், அவர்களின் பெற்றோர் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் விகடன் வாசகர்கள். அதாவது விகடன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்று வைத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் விகடன் வாங்கியவர்கள் பலர் வீட்டிலும் இந்தக் கதை சொல்லப் பட்டுக் கேட்டிருப்பீர்கள், அதாவது விகடன் வந்தவுடன் யார் அதை முதலில் படிப்பது என்று சகோதர சகோதரிகள் இடையே போட்டி நடக்கும் என்பது தான் அது. எங்கள் தாத்தா வீட்டில் விகடன் வரும் நாளன்று என் மாமா புகை வண்டி நிலையத்துக்கே போய் புத்தகக் கட்டு பிளாட்பாரத்தில் போடப்படும் போதே வாங்கிக் கொண்டு வந்து, வரும் வழியிலேயே ஒரு பாலத்தின் சுவர் மீது உட்கார்ந்து முக்கியமான பகுதிகளைப் படித்து விட்டு அதன் பின் தான் வீட்டுக்கு இதழைக் கொண்டு வருவாராம். வீட்டில் என் அம்மா தான் கடைக் குட்டி. அதனால் அவருக்குப் படிக்கக் கடைசியில் தான் கிடைக்குமாம். இப்படி விகடனுக்கு அந்தக் காலத்தில் இருந்தே ஒரு சுவாரசியமான, ஜனரஞ்சகமான, குடும்பத்தில் அனைவரும் எவர் முன்னும் பிரித்து வைத்துப் படிக்கக் கூடிய ஒரு பத்திரிக்கை என்னும் மதிப்பு இருந்து வந்திருக்கிறது. எழுத்துத் துறையில் பல ஜாம்பவான்களை உருவாக்கியப் பத்திரிகை, பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்தப் பத்திரிகை என்னும் இரட்டைப் பெருமையையுடையது ஆனந்த விகடன்.

இதன் நிறுவநர் S.S.வாசன். அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்குக் கொண்டு வந்த வார இதழை அவர் பின் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் மகன் பாலசுப்பிரமணியன் இன்னும் அதிகமாக பரிமளிக்க வைத்தார். ஒரு ஆனந்த விகடன் பல குழந்தைகளை அல்லது பல சகோதர சகோதரிகளை பாலசுப்பிரமணியன் தலைமையில் பெற்றது. ஜூனியர் விகடன், அவள் விகடன், டாக்டர் விகடன், டைம் பாசுக்கும் ஒரு விகடன் என்று எல்லா துறைகளுக்கும் ஒரு விகடன் வந்துள்ளது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது ஜூனியர் விகடன் தான். முதல் இதழில் இருந்து போன வருடம் வரை வாரம் இரு முறை வந்த இதழ்களை அட்டைக்கு அட்டைப் படித்து வந்தேன். தமிழில் புலனாய்வுப் பத்திரிகையில்  தரமான முன்னோடி என்று சொல்லும் அளவுக்கு ஜூவி இருந்தது. துக்ளக் வார இதழ் 1970ல் ஆரம்பித்து இருந்தாலும் அது அரசியல் நையாண்டி பத்திரிக்கையாகவும் அரசியலை விமர்சிக்கும் பத்திரிக்கையாகவுமே இருந்து வருகிறது. ஆனால் ஜூனியர் விகடன் அவ்வாறு இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து ஆக்கப் பூர்வமான தீர்வுகளுக்கும் வழி வகுத்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜூனியர் விகடனின் செய்திகள் பரபப்பூட்டுகிற {sensationalism} வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகின. உருப்படியாகப் படிக்க விஷயங்கள் குறைய ஆரம்பித்தன. ஒரு நேரத்தில் ஜூனியர் விகடன் வரும் நாளில் இந்து நாளிதழை விட்டு முதலில் அப்பத்திரிக்கையை படித்து வந்த நான் இரண்டு நிமிடங்களுக்கு மேல் யோசிக்காமல் வாங்குவதை நிறுத்தும் முடிவையும் ஒரு நாள் எடுத்தேன். நடு நிலைமையாக அவர்கள் போட்டு வந்த செய்திகளின் நிறம் மாறியதும், அவர்கள் சொல்லுவதில் உள்ள நம்பகத் தன்மை குறைந்ததும் தான் அதற்கு முக்கியக் காரணங்கள்.

காலம் மாறிவிட்டது. அன்று கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாளையும், மணியனின் பயணக் கட்டுரைகளையும், சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதையையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும், கற்றதும் பெற்றதும் பகுதியையும், ஹாய் மதனையும் எதிர்ப்பார்க்க முடியாது தான். ஆனால் விகடனின் தரத்தை நிலை நிறுத்திக் கொள்ள அதற்குப் பதிலாக சுவாரசியமான, கருத்துச் செறிவான பகுதிகள் நிச்சயம் தேவை.  நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த தொடர் கதைகள் வாசகனை விகடனை வாரா வாரம் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும்.

வாசன் அவர்கள் விகடனில் குறுக்கெழுத்துப் போட்டிகள் வாராவாரம் வரும்படி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணமாகப் பரிசுத் தொகையும் அளித்து வந்தார். அது மாதிரி விகடன் முன்பு நிறைய போட்டிகள் வைத்து, பரிசுகள் கொடுத்து வாசகர்களை தன் வசப்படுத்தும். ஆனால் தற்போது விகடனோ ட்விட்டரிலும் பேஸ் புக்கிலும் மக்கள் பகிரும் கருத்துகளை அவர்களுக்கு எந்த சன்மானமும் கொடுக்காமல் அவற்றை வெளியிட்டு தங்கள் பத்திரிக்கையின் பல பக்கங்களை நிரப்புகிறது! அது தான் பத்திரிகை தர்மமா என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய முக்கியமான வருத்தம் சமீப காலத்தில் விகடனில் நிலைத்தன்மை {consistency} இல்லை என்பதே. ஒரு வாரம் நன்றாக உள்ளது இதழ், மறு வாரம் சொங்கியாக இருக்கிறது. கட்டுரைகள், வாழ்க்கை அனுபவங்கள், பேட்டிகள் ஆகியவை சினிமாத் துறையைச் சார்ந்தவர்களுடையதாகவே உள்ளன. மற்ற துறைகளில் சாதிப்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். இன்னுமொரு பெரிய குறை எழுத்துப் பிழைகள் நிறைந்த கதை, கட்டுரைகள்! அதைத் தவிர எங்கும் எதிலும் ஆங்கிலக் கலப்பு.  இப்படி ஆங்கில சொற்களை தலைப்பாகவும், கட்டுரையின் நடுவிலும் புகுத்துவது  பாரம்பரியம் மிக்க ஒரு தமிழ் வார ஏட்டுக்கு அழகா?

மதுவினால் வரும் கேடு, பாரம்பரிய உணவு வகைகளின் முக்கியத்துவம், குடிநீரின்றி தவிக்கும் கிராமங்களின் நிலை, அத்தியாவசிய உணவுகளிலும் கலப்படம், ஈழத் தமிழர்களின் நிலை போன்ற பல சமூகத்துக்குத் தேவையான விஷயங்களை கட்டுரைகளாக கொண்டு வருகிறது விகடன். அந்தச் சேவைக்கு என் பாராட்டுகள். ஆனால் பல விஷயங்கள் வெறும் துணுக்குச் செய்திகளாக உள்ளன. இந்தக் காலத்து இளைய சமுதாயத்தின் கவனம் இவ்வளவு தான் {attention span} இருக்கும் என்று விகடனாகவே கணித்து அவ்வாறு வெளியிடுகிறதா என்று தெரியவில்லை. தமிழ்வாணனின் கல்கண்டு இதழை படிப்பது போல் உள்ளது.

திரை விமர்சனத்தில் விகடனை அடிச்சிக்க ஆளில்லாமல் இருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்களின் மதிப்பெண்களே அவார்டுகளாக இயக்குநர்/நடிகர்கள் நினைப்பர். நடுவில் திரை விமர்சனத்தின் தரம் படு மோசமாகப் போய் இப்பொழுது சற்றே இழந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது.

தொடர் கதைகள் தான் அடியோடு வெளியிடுவதில்லை! சிறுகதைகளாவது சுவாரசியமானதாக வெளியிடலாம். எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி உள்ளன. எழுத்தாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா அல்லது தேர்வு செய்பவரின் அளவுகோல் சரியாக இல்லையா? பல கதைகளைப் படிக்க ஆரம்பித்து பாதியோடு விட்டு விடுகிறேன். அதே போல பல சினிமாச் செய்திகளும் பயனற்றவையாக உள்ளன!

விகடன் இணையத்தில் காலூன்ற இன்னும் நிறைய மெனக்கட வேண்டும். நான் பேஸ் புக்கில் இல்லை. இணையத்தில் அவர்களின் சந்தாதாரராக இருந்து இப்போது துண்டித்து விட்டேன். ட்விட்டரில் அவர்களைத் தொடர்கிறேன். ட்விட்டரில் வெவ்வேறு ஹென்டில்களிலும் {சினிமா விகடன், ஜூனியர் விகடன் etc} இவர்கள் போடும் செய்திகள் ஈர்க்கவில்லை. தலைப்பை சுவாரசியமாக வைத்துவிட்டு உள்ளே செய்தியைப் படிக்கையில் சப்பென்றுள்ளது. மறுமுறை அம்மாதிரி இணைப்பை ஒரு புத்திசாலி திறந்து பார்ப்பானா? மேலும் பல முறை தவறான/தரமில்லாத செய்திகளை ட்வீட் செய்து பின் அழித்திருக்கிறார்கள்.

வலைத்தள செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில் தவறில்லை.  அது தான் புதிய யுகம். ஆனால் அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க சரியாக பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவரை நியமித்தல் நன்று.

விகடனை பல விகடன்களாக ஆக்கியதனால் சுவாரசியம் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. முன்பு விகடனில் பரணிதரனின் அல்லது ஸ்ரீ வேணுகோபலனின் ஆன்மிகப் பகுதி இருக்கும். இப்போ தனியாக அதற்கு சக்தி விகடன் வந்து ஆனந்த விகடனில் ஆன்மிகப் பகுதி போய் விட்டது. சுட்டி விகடன் வந்து விகடனில் சுட்டிகளுக்கான பகுதி போய் விட்டது. மருத்துவம், விவசாயம், சமையல், பங்குச்சந்தை, மோட்டார், தடம் எனப் பிரித்து மிச்சம் ஆனந்த விகடனில் இருப்பது சக்கையோ என எண்ணத் தோன்றுகிறது.

தனித் தனியாக ஒவ்வொரு விகடனை வாங்க எனக்கு அந்த அளவு ஒவ்வொருத் துறையிலும் ஆர்வம் இல்லை. ஒரே பத்திரிகையில் இவை அனைத்தும் கலப்படமாக வந்தால் அவியல் சுவைக்கும்! என்னால் விகடன் வாங்குவதை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஜூனியர் விகடனையும் ஒரு காலத்தில் இவ்வாறு தான் நினைத்தேன்.

vikatan1

15 Comments (+add yours?)

 1. GiRa ஜிரா
  Sep 02, 2016 @ 10:24:44

  ஒரு நெடுநாள் வாசகரின் நேர்மையான ஆதங்கத்தை நான் மதிக்கிறேன்.

  Reply

 2. Krishnan (@tskrishnan)
  Sep 02, 2016 @ 11:08:30

  உங்களுக்குப் பெருந்தன்மை அதிகம். அதனால் தான் சில இதழ்கள் நன்றாக இருக்கிறதென்று சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் 🙂

  Reply

 3. கடமுடா நாவ்! (@Thiru_navu)
  Sep 02, 2016 @ 11:32:32

  சரியான அறிவுரை! சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழுந்தால் சந்தோஷம்!
  என்னைப் பொறுத்தவரை மிகவும் மதித்த The Hindu, Anandha Vikatan இவற்றை நிறுத்திவிட்டேன்.

  Reply

 4. Anonymous
  Sep 02, 2016 @ 13:35:37

  CORRECT REVIEW

  Reply

 5. tvb_talks (@kalyani_AS)
  Sep 02, 2016 @ 13:57:41

  எப்போது விகடன் தன தனித்தன்மையை இழந்து “புதுப் பொலிவுடன்” வரத்துவங்கியதோ, அப்போதே நான் அதை வாசிப்பதை நிறுத்தி விட்டேன். உங்களைப்போலவே நானும் அதன் வாசகனாக இருந்தேன் என் சிறு வயது முதல். அதன் அட்டைப்பட நகைச்சுவையில், முதற்பக்க நான்கு பட பேச்சில்லா தமாஷ்களில், ஸ்ரீதர், பின் மதனின் கார்டூன்களில், தலையங்கங்களில்,மணியனின் பயணக்கட்டுரைகளில், சினிமா விமர்சனங்களில், சிறுகதை மற்றும் தொடர்கதைகளில், அங்கங்கு தெளித்து விட்டிருக்கும் ஜோக்குகளில் என்று விகடன் தனக்கென்று ஒரு பாணி அமைத்துக் கொண்டிருந்தது. Uniqueness தொலைந்து run-of-the-mill பத்திரிகை ஆனதும் என்னைப்போல் ஏமாற்றம் அடைந்தோர் ஏராளம்.

  விகடனின் hallmark ஆக இருந்தது அதன் முத்திரைக் கதைகள். மிகச் சிறந்த சிறுகதைகள் விகடனின் emblem தாங்கி முத்திரைக் கதைகளாக பிரசுரம் ஆயின. அதன் படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்ட சன்மானம், அந்தக்காலத்திலேயே ரூ..500. வாசனின் தாராள மனசு.

  ஒரு இதழை ரசித்து படித்து முடிக்க இரண்டு மூன்று மணி நேரமாவது வேண்டும். Reading material நிறைய இருந்தன. படித்து விட்டு, நானும் என் தாயாரும் நிறைய விவாதிப்போம். இப்போது 20 நிமிடத்தில் ஒரு விகடனை படித்து விடலாம். படங்களை நீக்கினால் இன்றய விகடனை பத்து பன்னிரண்டு பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியும். Content மிகக் குறைந்து விட்டது.

  நீங்கள் எழுதியது பலருடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள் இந்த பதிவிற்கு.

  Reply

 6. N.Subbiah
  Sep 02, 2016 @ 14:02:37

  திரு நாவு கூறியுள்ளபடி எனக்கும் ஹிந்துவையும் விகடனையும் நிறுத்திவிடத்தான் தோன்றுகிறது. காபியை -நன்றாக இருக்கிறதோ இல்லையோ- விடமுடியவில்லை. அது போல்தான் ஹிந்து இன்னும் தொடர்கிறது. ரஸ்க் மாதிரி விகடன் (சில சமங்களில் நமத்துப் போன ரஸ்க்), விட்டுவிடலாம்.

  Reply

 7. chinnapiyan
  Sep 02, 2016 @ 15:12:59

  100000 + வரிக்கு வரி உண்மை உண்மை. சரியான கனகச்சிதமான யாரும் மறுப்பு சொல்ல இயலாத கணிப்பு. சூப்பர. :)) 1957 லிலிருந்து துணுக்கு 1960 லிருந்து முழு வாசகன். திறமையுள்ள சரியான நபர்கள் இல்லாத்தும், விகடன் பல விகடன்களாக பிரிந்து விட்டதாலும் இந்த தரம்தாழ்ந்து போன நிலை. முக்கியமாக பெர்சனலா எனக்கு எரிச்சல் ஊட்டுவது அது தன் சைசிலிருந்து பெரிய சைசுக்கு மாறியது. ஏனென்றால் நான் படுக்கையில் படுத்துக்கொண்டேதான் வாசிப்பது வழக்கம். அதுக்கு இந்த சைஸ் தோதுப்படல :)) சில்பி, லதா, ஜெ ஆகியோர்களின் ஓவியங்கள் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்குறது. உங்கள் கடைசி வரிகள் அபாரம் . ( எனக்கு ஒரு சந்தேகம். இந்த பதிவில் நிச்சயம் உங்கள் தாயாரின் பங்கு உண்டு என்று :)). )

  Reply

 8. தேவா..
  Sep 02, 2016 @ 16:33:37

  என்னாலும் விகடன் படிப்பது நிறுத்த முடியுமா என தெரியவில்லை. அப்படி படிக்கும் புத்தகத்தின் தரம் குறைவது வருத்தமளிக்கிறது. ஆனாலும், இன்று தமிழில் இதனையொட்டி வேறு ஏதாவது புத்தகம் இருக்கா? என தெரியவில்லை.

  தமிழ் வார இதழ்கள் விகடன், குமுதம், கல்கி என ஆரம்பித்து பல வார இதழ்கள் வந்து இப்போது திரும்ப கல்கி,குமுதம், விகடன் என தள்ளாடுகிறது…குறைந்த தரத்தில் நிறைய புத்தகம் போட்டால் நன்றாக காசு பண்ணலாம் என வந்ததே காரணம் என நினைக்கிறேன். ஆங்காங்கு வந்த நல்ல இலக்கியத்தையும் தடம் மாற்றிவிட்டார்கள்

  Reply

 9. Umesh Srinivasan
  Sep 03, 2016 @ 04:56:23

  ஆசிரியர் குழுவில் உள்ளோர் முதலில் வாசகர்களாக இருந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய இதழ்களைத் தொகுக்க முடியும். வருமானம் ஒன்றையே பிரதானமாகக் கருதி பேருக்கு நாலு துணுக்குகளையும், கவர்ச்சிப் படங்களையும் போட்டு ஒப்பேத்திவிட்டால் விகடன் தன் பெயருக்காகவே வித்துப் போகும் என்னும் மனப்பான்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்பது என் கருத்து.

  Reply

 10. மோனிகா மாறன்
  Sep 03, 2016 @ 06:10:52

  பலரின் ஆதங்கத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்.நன்று.விகடனின் ஆசிரியர் குழுவில் இலக்கிய அறிமுகமே இல்லை போல.சினிமா மட்டுமே உள்ளது.தினத்தந்தியின் தரமே பரவாயில்லை என்று எண்ண வைக்கிறார்கள்.என் தந்தை நாற்பதாண்டுகள் வாங்கிய விகடனை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி விட்டார்.பழக்கத்தில் நான் இன்னும் இணையத்தில் சில பக்கங்களை மட்டுமே வாசிக்கிறேன்.சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அளித்த ஒரு போடி நிதிக்கு தேர்ந்தெடுத்த பட்டியலிலும் நிறைய சர்ச்சைகள் எழுந்தன.விகடனில் வரும் சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகளும் நம்பத்தகுந்தவை அல்ல.எங்கள் ஜவ்வாது மலைப்பகுதியில் ஒரு பெண் ஆசிரியரைப் பற்றி ஆகா என்று வந்த கட்டுரையில் எதுவுமே உண்மையில்லை.சேவை என்றெல்லாம் விகடன் ஏற்றிவிட்டது தான் அபத்தம்.
  மிக தைரியமான பதிவு.வாழ்த்துகள் அமாஸ் அம்மா.

  Reply

 11. Rajasubramanian S (@subramaniangood)
  Sep 03, 2016 @ 07:30:27

  நடு நிலை விமர்சனம். நிறைய விகடன்கள் வந்ததால் சாரம் குறந்துவிட்டது. நான் விகடன் படிப்பதை பல வருடங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டேன்.விகடன் மட்டுமல்ல, குமுதம், ஹிண்டு ஆங்கில நாளிதழும் நிறுத்திவிட்டேன்.

  Reply

 12. Raja Jaisingh (@kaattuvaasi)
  Sep 03, 2016 @ 08:09:40

  Sad… But true…

  Reply

 13. ஜாவா பாலாஜி
  Sep 03, 2016 @ 08:10:27

  நான் அந்தக்கால விகடன் படித்ததில்லை. நான் மேல்நிலைபடிப்பு படித்ததிலிருந்து ஆனந்த விகடன் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இன்று வரை அதன் தரம் குறையவில்லை. ஒரு இளைஞனாக எனக்கு அவ்வாறு தோன்றவில்லை.
  மாற்றம் ஒன்றுதான் மாறாதது
  ஒருவேளை பங்குதாரர்களின் விருப்பமாக இந்த மாற்றம் இருக்கலாம்.

  Reply

 14. Jayshri
  Sep 06, 2016 @ 17:16:48

  2004- முதல் நான் விகடன் வாசகர்
  வாரம் தவறாமல் ஆ.விகடன் படிப்பேன். இந்த பழக்கம் சமீபகாலமாக மாறியது.
  காரணம்- அன்று போல் எழுத்தில்/செய்திகளில் தரமில்லை.
  குறிப்பாக வெகுசன கவர்தல் என்ற நிலை மாறி- கமர்ஷியல் மார்கெட்டிங் யுக்திகளோடு பல இடங்களில் சமரசம் செய்துள்ளனர்.
  முன்னரெல்லாம் ஜூவி – அரசியலில் நம்பத்தகுந்த செய்திகளாய அளித்தது, இன்று வெரும் அரசியல் கேளிக்கை பதிப்பாக மாறியுள்ளது.
  ஆ.வி – உபயோகமான அனைத்து விசயங்களும் ஒரே புத்தகத்திலிருக்கும். ஆனால் இன்று அப்படியல்ல.சிறுகதை- தொடர்கதை- அஃறிணை- ஆறாம் திணை- கார்டூண் சித்தரிப்பு- இப்படி பல பிந்தைய படைப்புகள் , கருத்தில் உயர்ந்த படைப்புகள் காணாமல் போய்விட்டன்.

  25- ரூபாயை வேஸ்ட் செய்யக்கூடாது என்ற மனநிலையில் என்னைப் போன்ற வாசகர்களை சிந்திக்க வைத்த பெருமை விகடன் குழுமத்தின் சாதனை.

  Reply

  • Anonymous
   Sep 19, 2016 @ 10:38:20

   நீங்கள் சொல்வது 100 கு 100 உண்மை. பல பக்கங்களை படிக்காமலே விட்டுச் செல்கிறேன்

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: