ரொம்ப நாள் கழித்து திரையில் விதார்த்! நல்ல பாத்திரம். படம் முழுக்க வருகிறார், {படம் 90 நிமிடங்கள் தான்}. பார்வை குறைபாடு உடையவராக, பணத் தேவையைத் தீர்த்துக் கொள்ள சூழ்நிலையை வெகு யதார்த்தமாக {matter of fact} பயன்படுத்தும் இளைஞராக நடிப்பில் சபாஷ் வாங்குகிறார்.
டைட்டிலில் விதார்த்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் வருகிறது. ஆனால் அவர் இரண்டு மூன்று நாட்களில் அவர் பகுதியை முடித்துக் கொடுத்திருப்பார், அவ்வளவு சிறிய ரோல்! எனினும் கதையில் முக்கியமானதொரு பாத்திரம் என்று சொல்லலாம். அனாயாசமாக நடித்திருக்கிறார். ரகுமானுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, நன்கு பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். பாத்திரத்துக்கு ஏற்ற நடிகரை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றியைப் பெற்று விட்டார் இயக்குநர். நாசர் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். இதில் கொஞ்ச நேரமே வந்தாலும் {விதார்த்தைத் தவிர எல்லாருமே கொஞ்ச நேரம் தான்} ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் செமையாகச் செய்திருக்கிறார். அவருக்குக் காமெடியும் இலகுவாக வருகிறது என்று இந்தப் படத்தில் இருந்து தெரிகிறது. விதார்த்தின் ஜோடியாக பூஜா தேவரியா அருமை!
காக்கா முட்டைக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டனின் இரண்டாவது படம் இது. அந்தப் படத்துடன் இதை ஒப்பிடக் கூடாது தான், ஆனால் ஒப்பிட்டால் இது மிகவும் லைட் டாபிக். ஒரு க்ரைம் த்ரில்லர். பெயரே படம் எப்படிப்பட்டது என்று சொல்லிவிடுகிறது. அதனால் படத்தில் பெரிய சஸ்பென்ஸ் தெரியவில்லை. கதை உள்ளது ஆனால் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் திரைக் கதையில் ஸ்கோர் செய்து விடுகிறார் இயக்குநர். ஒரு இடத்திலும் தொய்வு இல்லை, அலுப்பு இல்லை.
பாடல்கள் கிடையாது. பின்னணி இசை இளைய ராஜா. இந்த மாதிரி ஒரு படத்துக்கு அவர் தான் வஞ்சனை இல்லாமல் இசையை வழங்க முடியும். ஆனால் கதை சிம்பிளாக நகரும்போது இசை சில இடங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. எடிடிங்கும், ஒளிப்பதிவும் அற்புதம். அதுவும் விதார்த் விழிகள் மூலம் நாம் பார்க்கும் காட்சிகள் முதலில் புரியாமல் பின் அதன் காரணம் தெரிய வரும் போது அசத்தலாக உள்ளன.
முடிவு இன்னும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கலாம். என்னைப் பொறுத்த வரை மற்ற பாத்திரங்களுக்கு குற்றமே தண்டனை சரி விகிதத்தில் உள்ளது. ஆனால் ஹீரோவுக்குக் குறைவான தண்டனையே. அது தான் யதார்த்தமாகவும் இருக்கலாம்.
Sep 04, 2016 @ 07:21:31
எதிர்பார்ப்போடு இருந்த படத்துக்கு உங்கள் விமர்சனம் அருமை