பிரபு சாலமன்- ஹாலிவுட் படக் கதை மாதிரி ஒன்னு வெச்சிருக்கேன் தனுஷ். சூப்பரா இருக்கு. நீங்க பண்ணா வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போயிடலாம். நூத்தி இருபது கிலோமீட்டர் வேகத்துல தறி கேட்டு ஓடற டிரெயினை என்ஜினில் இருந்து நீக்கி எழுநூத்தி சொச்சம் பயணிகளைக் காப்பாத்தறீங்க. அதான் ஒன் லைன்!
தனுஷ்- சூப்பர் பிரபு! எப்போ ஷூட்டிங் வெச்சிக்கலாம்?
இதான் இவர்களுக்குள் படம் ஆரம்பிப்பதற்கு முன் நடந்த உரையாடலா இருக்கும் என்று ஊகிக்கிறேன்.
முதல் பாதி டெல்லி சென்னை வரும் ரயிலின் பேன்ட்ரி காரில் தனுஷ், கருணாகரன், தம்பி ராமையா இவர்களுக்குள் நடக்கும் உரையாடலாகவே கழிகிறது. வசனத்தின் துணையால் சில இடங்களில் நகைச்சுவையாகவும் உள்ளது. அதே டிரெயினில் சினிமா நடிகை ஸ்ரிஷாவும் பயணிக்கிறார். அவரின் டச் அப் பெண் கீர்த்தி சுரேஷுக்கும் {நடிகையை விட டச்சப் பெண் அழகாக உள்ளார்} தனுஷுக்கும் காதல். டிரெயினின் மேல் ஏறி டூயட் பாடுகிறார்கள். அது கனவு சீனாகத் தான் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டோமானால், பின்னால் வரும் ஸ்டன்ட் சீன்களில் தனுஷ் பறந்து பறந்து சண்டையிடுவது கனவு சீன் இல்லை, நிஜம் தான் எனப் புரிந்து கதாப் பாத்திரங்களின் புவி ஈர்ப்பு சக்தியை எதிர்க்கும் திறனைக் கண்டு வியந்து நிற்கிறோம்!
எப்பத் தான் கதை ஆரம்பிக்கும் என்று கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும்போது பின் பாதியில் ஒரு மத்திய அமைச்சர், ஒரு சைக்கோ பாதுகாவலர், சில பல காரணங்களால் தறி கேட்டு ஓடும் டிரெயின், அதை நிறுத்த நம் ஹீரோ செய்யும் சாகசம் என ஒரு கதைச் சொல்ல முற்படுகிறார். பிரபு சாலமன்.
கொள்ளைக் கூட்டத்தினருடன் வரும் சண்டைக் காட்சியில் டிரெயின் கூரையின் மேல் நிற்கும் ஒருவனின் காலைப் பிடித்துத் தொங்கும் தனுஷ், மறு பக்கம் அவனின் கூட்டாளிகள் அவனை கீழே விழுந்து விடாமல் மேலே இழுக்கும் போது மகாபாரதத்தில் ஜராசந்தன் இரண்டாகக் கிழிக்கப் படுவது நினைவுக்கு வந்தது. ஆனால் இது இங்கு அப்படி ஆகவில்லை. அந்தக் கொள்ளைக்காரன் கிழிபடாமல் தனுஷையும் மேலே கொண்டு வந்து விடுகிறான்.
தறி கேட்டு ஓடும் டிரெயினை நிறுத்த ஸ்பெஷல் போர்ஸ் ஒன்று பல உக்திகளை யோசித்து செயல் படுத்தப் பார்க்கிறது. இதன் நடுவில் தொலைக்காட்சி ஊடகங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு கதையை உருவாக்கி டிரெயினைத் துரத்தி நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் டிஆர்பி ரேடிங்கை உயர்த்திக் கொள்ளப் பார்க்கின்றன. முகேஷ் அம்பானிக்கு இந்தப் படம் பற்றி முன்பே சொல்லியிருந்தால் அவர் தன் ஜியோ சிம்மிற்கு நல்ல விளம்பரமாக இப்படத்தைப் பயன் படுத்திக் கொண்டிருப்பார். ஏனென்றால் டிரெயினில் இருக்கும் அனைவரும் லேப் டாப்பிலோ, போனிலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படுவதை நேரடியாகக் கண்டு களிக்கின்றனர்! என்னா மாதிரி நெட்வர்க் கனெக்ஷனா இருக்கணும்!
ஆனால் பின் பாதி உண்மையிலேயே நகைச்சுவையாக் உள்ளது. ஊடகங்களை, அரசியல் கட்சிகளை செமையாக ஓட்டுகிறது படம். அதில் உச்சக் கட்ட நகைச்சுவை படு வேகமாக ஓடும் ரயிலின் என்ஜினையும் போகிகளையும் தனுஷ் தனி ஒருவராகப் பிரிப்பது தான்.
விலங்குகள், பறவைகள் இப்படப்பிடிப்பின் போது துன்புறுத்தப் படவில்லை என்று டைட்டில் கார்டில் வருகிறது. அதுக்குப் பதிலா மொத்தமா ரசிகர்களை… 168நிமிடங்கள்!
Sep 24, 2016 @ 06:32:31
// விலங்குகள், பறவைகள் இப்படப்பிடிப்பின் போது துன்புறுத்தப் படவில்லை என்று டைட்டில் கார்டில் வருகிறது. அதுக்குப் பதிலா மொத்தமா ரசிகர்களை… 168நிமிடங்கள்! //
நீங்க சொன்னவிதம் அழகா இருக்கு.
இது இந்தில ஏற்கனவே தர்மேந்திரா ஏமாமாலினி பண்ணதுதான். தமிழுக்கு இப்பத்தான் வந்திருக்கு.
Sep 26, 2016 @ 02:50:02
நன்றாக சீர்தூக்கி எழுதிய விமர்சனம். முதல் மற்றும் கடைசி பாரா நச் :))
Oct 05, 2016 @ 04:30:59
nonthu noodules aanathu thaan micham
Oct 05, 2016 @ 06:35:58
நன்றி ஜிரா, சின்னப்பையன் & அனானிமஸ் :-}