கதை/திரைக்கதை தான் என்றும் ராஜா! வெற்றி மாறன் தயாரிப்பில் எழுதி இயக்கி இருக்கும் துரை செந்தில்குமார் இப்படத்தின் மூலம் அதை நிருபித்து வெற்றி கொடி நாட்டியுள்ளார்! தனுஷ் இரட்டை வேடத்தில் அசத்தி உள்ளார். மேக்கப்பிலோ நடை உடை பாவனையிலோ {தாடி+ கூலிங் கிளாஸ்/தாடி+ கூலிங் கிளாஸ் இல்லை விலகலாக} இரு வேடத்துக்கும் வெளிப்படையாக வித்தியாசம் காட்டப் பெரிதாக மெனக்கெடாமல் அனாலும் அதே சமயத்தில் சூப்பராக இரு வேடங்களிலும் அமர்க்களப் படுத்தி இருக்கார் தனுஷ்.
த்ரிஷா இந்த வேடத்துக்காக தான் இது நாள் வரை காத்திருந்தது போல் உள்ளது. என்ன ஒரு வாய்ப்பு! நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். முதலில் vulnerable ஆகவும் பிறகு சாதுர்யத்துடன் அரசியலில் காய் நகர்த்தும் போது படு கெத்தாகவும் இரட்டை தனுஷுக்கு ஒத்தை ஆளாக நடிப்பில் ஈடு கொடுக்கிறார் த்ரிஷா. அவரின் மேக்கப் அருமை. மிகவும் இளமையாகவும் பாத்திரத்துக்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார். அவர் படம் முழுக்க அணிந்துவரும் புடைவை ரவிக்கை செட்கள் அருமையான தேர்வு. உடை அலங்கார நிபுணருக்கு அதற்காக ஒரு பூங்கொத்து! இறுதி க்ளைமேக்ஸ் வரை அற்புதமாக செய்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆச்சரிய பாத்திரம் SAC அவர்கள். மிகவும் அருமையாக ஒரு நல்ல அரசியல் தலைவர் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஒரு தனுஷுக்கு ஜோடியாக வரும் அனுபமா மலையாளத் தமிழில் பேசி நம்மை ஈர்க்கிறார். மலையாளத்து அழகியும் கூட :-} இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களின் நடிகர்களுக்கானத் தேர்வு நன்று! அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு & ஸ்டன்ட் இரண்டும் நன்றே. வசனங்கள் பல இடங்களில் அப்ளாஸ் வாங்குகிறது.
மிகவும் விறுவிறுப்பான திரைக் கதை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் படம் ஓடும் நேரம் இரண்டு மணி இருபது நிமிடங்களே, அதனால் எந்த இடத்திலும் தொய்வு இல்லை. அரசியல், காதல், சூழ்ச்சி, பலி என்று இருந்தாலும் அனாவசிய மெலோடிராமா இல்லாமல் உள்ளது படம். சரண்யா பொன்வண்ணன் இரட்டையர் தனுஷுக்கு அம்மா. டபுள் மடங்கு நன்றாக நடித்துள்ளார்.
ஸ்டெர்லைட் மாசு தொடர்பாக வைகோ போராடியது போலவும், உணர்ச்சி வயப்பட்டத் தொண்டன் தீக்குளிப்பது போன்ற நமக்கு நெருக்கமான அரசியல் நிகழ்வுகளை படத்தில் சேர்த்திருப்பது வலுவான கதைக்கு நல்ல ஹோம் வாரக் செய்திருக்கிறார் இயக்குநர் என்று தெரிகிறது.
அடி மட்டத் தொண்டன் நிலையில் இருந்து அரசியலில் ஆர்வமும் வேகமும் இருப்பவர்கள் எப்படி படிப்படியாகப் பல பதவிகளை அடைகிறார்கள் என்பதை நாம் வெளியுலகில் பார்ப்பதையே அழகாகத் திரையிலும் காண்பித்துள்ளார் இயக்குநர். அவ்வளர்ச்சியே ஒரு சமயம் பதவி வெறியாக மாறும்போதும், இருக்கும் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும்போதும் அது அவர்களை எந்த நிலைக்குத் தள்ளுகிறது என்பதை தான் கதை. நல்லது செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளும் அதை செய்ய தனி சாமர்த்தியம் தேவையாக உள்ளதையும் காட்டுகிறது படம்.
இரண்டு டூயட்கள் இருக்கின்றன. ஆனால் படத்தின் ஓட்டத்தைத் தடை செய்யாமல் வந்து போய்விடுகிறது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல்களில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்தி இரு பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.
தனுஷ், வெற்றிமாறன் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தந்துள்ளது இப்படம். வாழ்த்துகள் டீம் கொடி!