கோகுலின் கதை இயக்கத்தில் கார்த்தி இரு வேடத்தில் நடித்துள்ளார். காஷ்மோரா என்கிற ஒரு டுபாக்கூர் பேய் ஒட்டுபவராகவும், ஐநூறு வருடங்களுக்கு முந்தைய படைத் தளபதியாகவும் வருகிறார் கார்த்தி. கார்த்தியிடம் எப்பவும் ஒரு விளையாட்டுப் பிள்ளை குணம் இயல்பாகவே குடிகொண்டிருக்கும். அது முதல் பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறது. ஒரு பயங்கர வில்லனாக, மொட்டைத் தலையுடன் படைத் தளபதி பாத்திரத்தையும் மிக சிறப்பாக செய்திருக்கிறார் அவர்.
முதல் பாதியில் பேய் ஓட்டும் குடும்பமாக அப்பா விவேக், அம்மா, தங்கை ஜாங்கிரி மதுமிதா & மெயின் ஃப்ராடாக கார்த்தியும் கலகலக்க வைக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா பேய் ஓட்டுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு பித்தலாட்டம் செய்பவர்களைத் தோலுரித்துக் காட்டும் ஆய்வில் முனைவர் பட்டம் பெற இந்தக் குடும்பத்தில் ஒருவராக நுழைகிறார். படத்தின் இறுதி வரை வந்தாலும் ஒரு தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் வந்த அழகிய பெண்ணா இவர் என்கிற சந்தேகம் தான் வருகிறது! நயன்தாரா எப்பொழுது வாருவார் என்று காத்துக் காத்துக் கிடந்து கடைசியில் பின் பாதியின் பின் பாதியில் அரசிளங்குமரியாகத் தோன்றுகிறார். நயனின் அழகிலும் உடையிலும் சிறு குறையும் இல்லை. சிறிய பாத்திரம் தான் எனினும் கொடுக்கப்பட்ட ரோலை நன்கு செய்துள்ளார். சைனீஸ் படங்களில் வருவது போல அவரும் கார்த்தியும் பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள். நீண்ட வாளை நயனும், கதை மாதிரி ஒரு ஆயுதத்தை கார்த்தியும் வைத்து இருவரும் சண்டையிட்டாலும் நயனின் அழகிய வெள்ளை உடையில் சிறு கீறல் கூட விழாமலும், முத்து மாலைகளில் ஒரு மணி கூட சிதறாமலும் சண்டையிட்டு கின்னஸ் சாதனை படைக்கின்றனர்!
கொஞ்சம் கூட பயமில்லாத பேய் படம் இது. கருப்பு உருவத்தில் வரும் புகை போன்ற பேய்கள் காமெடியாகத் தோன்றுகின்றனவே தவிர பயமுறுத்தும்படியாக இல்லை. படத்தில் நிறைய CG உள்ளது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். பட்ஜெட் பிரச்சினையாக இருந்திருக்கும். இசை சந்தோஷ் நாராயணன் – பாடல்கள் படு சுமார், எப்பவும் போல அவர் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார்.
இது ஒரு fantasy கதை. லாஜிக் எல்லாம் கிடையாது. 168நிமிடங்கள் ஓடுகின்றது படம். சில இடங்களில் ஜவ்வு மாதிரி இழுக்கிறது. நிச்சயமாக 15 நிமிடங்கள் நறுக்கியிருக்கலாம். பேய் பங்களாவில் சுத்தி சுத்தி ஒரே மாதிரியான காட்சிகள் அலுக்க வைக்கின்றன. வசனங்கள் நன்றாக உள்ளன, அந்த பலத்தைப் பயன்படுத்தி முன் பாதியில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை அதிகப் படுத்தி இருக்கலாம்.
Oct 28, 2016 @ 19:48:41
நன்றி. அருமையா வழக்கம்போல் மெச்ச வேண்டிய இடத்தில மெச்சியும் குட்ட வேண்டிய இடத்தில் குட்டியும் உள்ளீர்கள். 🙂
இப்ப இரவு ஒரு மணி. வெளியே ஷாப்பிங் போய்டுவந்ததும் உங்க இந்த விமர்சனம்தான் கண்ணில் பட்டது. நீங்க சுட சுட விமர்சனம் எழுதினால் நானும் சுட சுட கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துகள் :))