மாவீரன் பரதன்

sudarshana-krishna

மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள் சக்கரம், சங்கு, கதை, வாள், வில். இந்த ஐந்து ஆயுதங்களும் மகாவிஷ்ணுவின் பணிகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இதில் முதன்மையானது வலது கரத்தில் தாங்கியுள்ள சக்கரம் என்று சொல்லப்படும் சுதர்சனப் பெருமாள்தான். திருமாலின் அம்சமாகவே இவர் விளங்குகிறார். எனவே, சுதர்சனரை திருமாலாகவே வணங்குகின்றோம். பஞ்ச ஆயுதங்களின் முதன்மையான சுதர்சனத்திற்கு சக்கரத்தாழ்வார் என்று ஆழ்வார் பட்டம் கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

  • கஜேந்திர மோட்சத்தில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டான் 2-10-8″
  • மஹாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்த போது கோரைப் பற்களாக அமைந்து தீயவர்களைக் கிழித்து, அந்தக் கோரைப் பற்களால் பூமியை கடலுக்கடியிலிருந்து தூக்கி வருவதற்கு துணையாக இருந்தது சுதர்சன சக்கரமே
  • வாமன அவதாரத்தில், மாவலி சக்கரவர்த்தி வாமனனனுக்கு மூவுலகை தானம் செய்ய தாரை வார்க்க முயலும் போது தண்ணீர் விழும் துவாரத்தை ஒரு வண்டாக மாறி சுக்கிராச்சாரியார், தடை செய்தபோது ஒரு தர்பை கொண்டு அதன் கண்ணினை குத்தியது சக்கரத்தாழ்வார்  – சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையனே ! அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே ! அச்சோ அச்சோ 1-8-7“
  • ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் போது சுதர்சன ஆழ்வார்  கூர்மையான கை நகங்களாக அமைந்து இரணியன் வயிற்றைக் கிழித்து வதம் செய்தார்.
  • கிருஷ்ணாவதாரத்தின் போது சிசுபாலனை வதம் செய்ய உதவியதும் சுதர்சன் சக்கரமே. ஜெயத்ரதனை வதம் செய்த போது, சூரியனை மறைத்து, உதவியது ஸ்ரீசுதர்ஸன சக்கரம்தான் – தேவகி தன்  சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப 4-1-8“
  • அம்பரிஷ மகாராஜாவிடம் கோபித்துக்கொண்ட துர்வாச முனிவரை துரத்தித் தாக்கியதும், அவரை திரும்ப அம்பரிஷ  மகாராஜாவிடம் சரண் அடைய செய்ததும் ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்சன சக்கரமே.

திரேதா யுகத்தில் இராமாவதாரத்தின் போது சக்கரத்தாழ்வாரே பரதனாக அவதாரம் எடுத்தார். அவரையும் பரதாழ்வார் என்றே அழைக்கிறோம். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார், எம்பெருமானிடத்தில் ஆழ்ந்தவர் என்பதால் தான் அப்பெருமை!

வீரத்தின் உறைவிடம், நேர்மையின் இருப்பிடம் சுதர்சன சக்கரம். அதன் அம்சமாகப் பிறந்த பரதன் அவ்வாறு குணத்துடன் இருப்பது இயல்பே.

இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. ஒரு மாவீரனுக்கான அடையாளம் அது. இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன். ஆனால் இராமனே சொன்னால் கூட, அறம் என்று அவன் நினைத்ததை, பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும் விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.

அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைக்கிறான். உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிறழ தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

அழுது புலம்புவது ஒரு மாவீரனுக்கு அழகா என்கிற கேள்வி எழலாம்? ஆனால் அவன் நொந்து போய் உட்கார்ந்து விடவில்லை. தவறை சரி செய்ய அடுத்தடுத்த முயற்சிகளை எடுத்து கர்ம வீரனாக செயல் படுகிறான். சோகத்துடன் இருந்த கோசலையை அவன் பார்க்கப் போனான். மேலும் இராமனுக்குப் பதில் தனக்கு அரசாளும் உரிமையும், தன் தாயினால் இராமன் காட்டுக்குப் போகும் அவலமும் ஏற்பட்ட அந்த நிலையில் இராமனின் தாயைப் போய் பார்க்கத் தனித் துணிச்சல் வேண்டும். மாவீரன் பரதன் அதைச் செய்தான்.

பாடல் 2197 கம்பராமாயணம்
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்?‘ என்றாள்.

பரதா, உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள். அதில் மறைந்து நிற்கும் தொனி, உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே. பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று அவள் அறிவாள். இருந்தும் “உனக்குத் தெரியாதா” என்று கேட்கிறாள்.

கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள் போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று மிகப் பெரிய பாவங்களின் பட்டியலைத் தருகிறான். ஒரு அநீதி நடக்கிறது என்றால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான். ஒன்றும் செய்யாமல் இருப்பதும், அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.

இதில் தெரிகிறது பரதனின் வீரமும் நேர்மையும்!

கைகேயியை அவனால் தண்டிக்க முடியவில்லை. ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று பரதனுக்குத் தெரியும். கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.

பாடல் 2172 கம்பராமாயணம்
‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

இப்படிப் பட்ட வரம் கேட்டது தெரிந்த பின்னும் நானும் இறக்காமல் இருக்கிறேன். இது நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பாகும் என்கிறான். ஒரு மாவீரனைப் போல, தாய் செய்த தவறுக்கும் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்!

இராமன் காட்டுக்குச் செல்லவும் நாட்டை பரதனிடம் கொடுக்கவும் கைகேயி இராமனிடம் அறிவுருத்திய பிறகு இராமன் நேராக கோசலையின் மாளிகைக்குச் செல்கிறான். இராமன் முடி சூடப் போவதில்லை, பரதனே அரசாளப் போகிறான் என்பதை அறிந்து கொள்கிறாள் கோசலை.

1609. ‘முறைமை அன்று என்பது ஒன்று
உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
கூறினள் – நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
வேற்றுமை மாற்றினாள்.

இராம இலக்குமண பரத சத்துருக்கனர்களாகிய நால்வரிடத்தும் குற்றம் அற்ற அன்பு செலுத்துவதில் வேறுபாட்டை நீக்கி ஒரே தன்மையவளாய் உள்ள கோசலை மூத்தவன் இருக்கும் போது இளையவன் அரசாளுவது முறைமை இல்லை என்ற ஒரு குறை உண்டு, ஆயினும் மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன், உன்னையும்விட நல்லவன்,   கல்வி, இளமை, வீரம், குணம் முதலிய யாவற்றாலும்  யாதொரு குறைவும் இல்லாதவன் பரதன் என்று சொன்னாள். அதாவது அவன் ஆட்சி பீடத்துக்கு வருவதில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்கிறாள்.

கைகேயியின் அன்பு பெரிதும் இராமனுக்கும், கோசலையின் அன்பு
பெரிதும் பரதனுக்கும் அமைந்துள்ளதை இக்காவியத்தில் காணலாம்.
‘நின்னினும் நல்லன்’ என்பதைப் பின் வரும் எண்ணில் கோடி இராமர்கள்
என்னினும், அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ’ என்ற (10181.)
கோசலைக் கூற்றை ஒப்பு நோக்கி நாம் உணர வேண்டும்.  இதில் நாம் கவனிக்க வேண்டியது பரதனைப் பற்றிய கோசலையின் கணிப்பை தான்.

கைகேயி மகனின் பண்பை புரிந்தவளாக இருந்திருந்தால் தயரதனிடம் பரதனுக்காக அரசாளும் வரத்தை கேட்டிருக்க மாட்டாள். தயரதன் இறக்கும் தருவாயில் கைகேயியை தன் மனைவியேயில்லை, பரதனும் தனக்கு இறுதிச் சடங்குகளை செய்யக்கூடாது  என்று வசிட்டரிடம் கூறி விடுகிறார். இந்நிலையில் யாரிடமாவது ஆறுதல் பெற முடியுமா என்று தாயை நோக்கி ஓடும் கன்றினைப் போல பரதன் கோசலையைப் பார்க்கச் செல்கிறான் பரதன். அவளோ உன் அன்னை தீட்டிய திட்டம் உனக்கு முன்பே தெரிந்ததோ என்று கொதிக்கும் சொற்களை அவன் மேல் சொரிகிறாள். அடுத்து பரதனிடம் முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்யலாமா என்று வசிட்டர் கேட்கிறார். இராமனைப் போல மரவுரியைத் தரித்துக் கொண்டு கானகம் சென்று இராமனை அழைத்து வர புறப்பட்டுக் கொண்டு இருந்தவனைப் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு கேட்கிறார் வசிட்டர். கங்கைக் கரையை அடையும் நேரத்தில் பெரும் திரளாக பரதன் வருவதைக் கண்டு குகனும் இராமனை வீழ்த்தத் தான் பரதன் பெரும் படையுடன் வருகிறான் என்று நினைக்கிறான். எப்பொழுதும் கோபத்துடனே இருக்கும் இளவல் இலக்குவன் புழுதி பறக்க பரதன் அயோத்தி மக்களுடன் வருவதை தூரத்தில் இருந்து பார்த்தவன் தன் வில்லை எடுத்து பரதனுடன் போர் புரிய ஆயத்தமாகிறான்.

தன்னை சுற்றியுள்ள அன்பு நெஞ்சங்களே அவனைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், புண்படுத்தினாலும், வரிசையாக அவன் துயரத்தை அனுபவித்தாலும் தன் அறத்தில் இருந்து அவன் ஒரு போதும் பிறழவில்லை. எவ்வித மனச் சோர்வு வந்தாலும் தளர்ந்து விடாமல் இருப்பதும் ஒரு மாவீரனக்கழகே.

பரதனை மிகச் சரியாக, பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டவர்கள், குகனுடைய படை வீரர்கள்தான். வருகிறவனைப் பார்த்தால் சண்டைக்கு வருகிறவன் மாதிரி தெரியவில்லையே. போருக்கான எந்த ஆயுதமும் இல்லை. இவனும் நமது தலைவன் இராமன் மாதிரி மரவுரி கட்டியல்லவா வந்திருக்கிறான் என்று கேட்கிறார்கள். அப்போதுதான், ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டு அமைதி நிலைக்கு வரும் குகன் ஓடி சென்று பரதனிடம், அண்ணன் இராமனை நேரில் சந்தித்து அவனுக்கு உரிய அரசாங்கத்தை அவனுக்கே திருப்பித் தருவதுதான் முறை என்று முடிவு செய்து இந்த வனத்துக்கு வந்திருக்கிறாய், அந்த நல்ல சிந்தனை உன் முகத்தில் தேங்கியிருக்கிறது என்று கூறுகிறான். ‘பரதா, உன்னுடைய நல்ல குணங்களையெல்லாம் எடை போட்டுப் பார்த்தால், ஆயிரம் இராமர்கள்கூட உனக்கு இணையாகமாட்டார்கள்!’ என்கிறான். பின்  பரதனை  இராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறான்.

போர் புரிவதில் வருவதில்லை வீரம், போர் புரிய வாய்ப்பிருந்தும் புரியாமல் அற வழி நிற்பதே மாவீரனுக்கழகு!

rama-and-bharatha

பரதன், அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினாலு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார். பதினாலு ஆண்டுகளை பதினாலு நாட்களாகக் கழித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார். தேவர்கள் அசீரியாக இராமர் வனவாசம் புரிதல் வேண்டும் என்று கூறுகிறார்கள். திரும்பி வர பதினாலு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகம் ஆனாலும் உயிர் தியாகம் செய்வேன் என்று பரதன் சொல்கிறான். கொள்கைக்கு முன் உயிரை துச்சமெனக் கருதுகிறான் மாவீரன் பரதன். எம்பிரானுடைய பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு பலமுறை இராமபிரானைத் தொழுது அழுது புறப்படுகிறான் பரதன்.
bharata
அயோத்திக்கே செல்லாமல், அருகில் நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல் பொறி புலன்களை அவித்து உப்பில்லாத கஞ்சியைப் பருகி, இராமனின் பாதுகைகளுக்கு தினந்தினம் ஆயிரம் மந்திரங்களால் அர்ச்சனை புரிந்து இடையறாத இராம பக்தியுடன் தவநெறியில் இருந்தான் பரதன்.

இலங்கை வேந்தன் இராவணனை வதம் செய்த பின்னர் இராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடியால் அனைவரும் தங்கினார்கள்.

இதற்கிடையில் குறித்த நாளில் இராமபிரான் அயோத்திக்கு வராத காரணத்தால் முன்பு கூறியது போல் பரதன் தீயில் விழுந்து உயிரை விட முற்படுகிறான். இதுவும் மாவீரனுக்குரிய ஒரு செயல்! அப்போது இராமனால் அனுப்பப்பட்ட அனுமன், பரதனை தடுத்து தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை காட்டுகிறான். இதைக்கண்டு மகிழ்ந்த பரதன், சத்ருக்கனன் ஆகியோர் இராமனை அழைத்து செல்வதற்காக அனுமனுடனே பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு செல்கின்றனர்.

இராமனை உயர்த்திக் காட்ட வந்த பல பாத்திரங்களுள் பரதன் மிக முக்கிய பங்கை வகிக்கிறான். இலக்குவன் இராமன் கூடவே இருக்கும் பேற்றினைப் பெற்றான். ஆனால் பரதனோ அவப் பெயரையும் சுமந்து, இராமனையும் பிரிந்து பதினாலு ஆண்டுகள் தவ வாழ்க்கையை வாழ்ந்தான். அவனின் ஒவ்வொரு செயலும் இராமனைப் பெருமை படுத்துவதாகவே அமைந்தது. இராமன் பட்டாபிஷேகம் பின்னொருநாளில் தான் வந்தது. ஆனால் அதற்கு முன்பே இராமனின் திருவடிகளைத் தொட்ட பாதுகைக்கு அளப்பறியா பெருமை சேரும்படி பாதுகா பட்டாபிஷேகத்தை நிகழ்த்தியவன் பரதன். சக்கரத்தாழ்வாராகிய பரதாழ்வாரின் புகழ் இராமன் புகழ் இருக்கும் காலம் வரை இதனால் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

padhuka

அச்சம் என்பது மடமையடா – திரை விமர்சனம்

aym

சில இயக்குநர்கள் பிறரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை திரைக்குக் கொண்டுவருவதில் வல்லுநர்களாக இருப்பார்கள். சிலர் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தைக் கதையாக வெளிப்படுத்துவார்கள். கௌதம் மேனன் தன்னையே ஒவ்வொரு படத்திலும் ஒரு பகுதியாகக் கொடுப்பதாகத் தோன்றுகிறது. அவரின் ஒவ்வொரு படத்தின் ஹீரோவிலும் அவரின் ஒரு பகுதி உள்ளதாகவே ஓர் எண்ணம் வருகிறது. இந்தப் படத்திலும் சிம்புவில் அவர் உள்ளார். அந்தத் தொடர்பு இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சிம்பு சூபர்லேடிவ் பெர்பார்மென்ஸ் தந்திருக்கிறார். முழு படத்தின் பாரத்தையும் அவர் ஒருவரே தாங்குகிறார். மஞ்சிமா மோகன் நாயகி, சிம்புவுடன் படம் முழுவதும் வருகிறார். நன்றாக நடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் உடல் எடையில் கவனம் வைத்தால் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வரும்.

முதல் பாதியில் படித்த, வேலையில்லா வெட்டிப் பையனாக வருகிறார் சிம்பு. அதன் தொடர்ச்சியாக மஞ்சிமாவுடன் காதல் உணர்வுடன் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் செய்கிறார். அதனால் திரும்ப ஒரு விடிவி படத்தைப பார்ப்பது போலவே முதல் பாதி நகர்கிறது. திடீரென்று எதிர்பாராத சம்பவத்தால் சாதா நிலையில் இருந்து அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுகிறார் சிம்பு. அதை எப்படி கையாள்கிறார் என்பதே கதை. பின் பாதியில் வேகம் எடுக்கிறது கதை. அதே சமயம் சண்டையும் வயலென்சும்  வெளுத்து வாங்குகிறது. ஏன் எதுக்கு என்று தெரியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில் இருந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கண நேரத்தில் சிம்பு செய்யும் அதிரடி நடவடிக்கைகள் அவரை மாஸ் ஹீரோவாகக் காட்டுகிறது!

திரைப்படம் என்பது விஷுவல் மீடியா. ஆனால் கௌதம் மேனன் பாத்திரங்களை அதிகம் பேச வைத்தே கழுத்தறுத்து விடுகிறார். அதுவும் இந்தப் படத்தில் முக்கியமான சஸ்பென்ஸ் வெளி வருவதே வசனத்தின் மூலம் தான். வாய்ஸ் ஓவராக சீனில் புரியாததை சொல்ல எத்தனிக்கலாம். கண்ணால் காண்பதையே எதற்குத் திரும்ப சிம்பு வாய்ஸ் ஓவரால் விளக்க வேண்டும்? சிம்பு நன்றாக டயலாக் டெலிவரி செய்வதால் படம் பிழைக்கிறது.

எப்பவும் படம் ரொம்ப தாமதமாக வெளிவரும்போது எடுத்த நேரத்துக்கும் வெளி வரும் நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கதை பழையதாகி இருக்கும். அ எ ம படம் அந்தப் பாதிப்புக்கு ஆளாகவில்லை. பாடல்கள் படத்திற்கு ஏற்றம் தருகிறது. முக்கியமாக ராசாளி & தள்ளிப் போகாதே இரண்டும் படம் பிடித்த விதமும், வரும் இடமும் அருமை. தள்ளிப் போகாதே பாடல் படமாக்கப் பட்ட விதம் கௌதம் மேனனின் இயக்கத்தைப் பாராட்ட வைக்கிறது! அவளும் நானும் பாடலும் நன்கு படமாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை அதுவும் பின் பாதியில் படத்துடன் இயைந்துள்ளது.

காக்க காக்கப் படத்தையும், விடிவி படத்தையும் கலந்து செய்தக் கலவையாக் சில இடங்களில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. நெருக்கமான குடும்பம், பயங்கரமான வில்லன் குழு, அவர்களை எதிர்க்கும் ஹீரோ என்றே போகிறது கதை. இதில் சிம்புவின் கதாப்பாத்திரத்தின் பெயரே படத்தின் கடைசிப் பகுதி வரை தெரியாது. நல்ல டச் அது.

குழந்தைப் பையனாக ஜாலியாக இருந்த அவரை ஒரே நாளில் adult ஆக்குகிறது வாழ்க்கை. இது சிம்பு ரசிகர்களுக்கான படம்!

aym1