சில இயக்குநர்கள் பிறரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை திரைக்குக் கொண்டுவருவதில் வல்லுநர்களாக இருப்பார்கள். சிலர் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தைக் கதையாக வெளிப்படுத்துவார்கள். கௌதம் மேனன் தன்னையே ஒவ்வொரு படத்திலும் ஒரு பகுதியாகக் கொடுப்பதாகத் தோன்றுகிறது. அவரின் ஒவ்வொரு படத்தின் ஹீரோவிலும் அவரின் ஒரு பகுதி உள்ளதாகவே ஓர் எண்ணம் வருகிறது. இந்தப் படத்திலும் சிம்புவில் அவர் உள்ளார். அந்தத் தொடர்பு இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
சிம்பு சூபர்லேடிவ் பெர்பார்மென்ஸ் தந்திருக்கிறார். முழு படத்தின் பாரத்தையும் அவர் ஒருவரே தாங்குகிறார். மஞ்சிமா மோகன் நாயகி, சிம்புவுடன் படம் முழுவதும் வருகிறார். நன்றாக நடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் உடல் எடையில் கவனம் வைத்தால் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வரும்.
முதல் பாதியில் படித்த, வேலையில்லா வெட்டிப் பையனாக வருகிறார் சிம்பு. அதன் தொடர்ச்சியாக மஞ்சிமாவுடன் காதல் உணர்வுடன் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் செய்கிறார். அதனால் திரும்ப ஒரு விடிவி படத்தைப பார்ப்பது போலவே முதல் பாதி நகர்கிறது. திடீரென்று எதிர்பாராத சம்பவத்தால் சாதா நிலையில் இருந்து அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுகிறார் சிம்பு. அதை எப்படி கையாள்கிறார் என்பதே கதை. பின் பாதியில் வேகம் எடுக்கிறது கதை. அதே சமயம் சண்டையும் வயலென்சும் வெளுத்து வாங்குகிறது. ஏன் எதுக்கு என்று தெரியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில் இருந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கண நேரத்தில் சிம்பு செய்யும் அதிரடி நடவடிக்கைகள் அவரை மாஸ் ஹீரோவாகக் காட்டுகிறது!
திரைப்படம் என்பது விஷுவல் மீடியா. ஆனால் கௌதம் மேனன் பாத்திரங்களை அதிகம் பேச வைத்தே கழுத்தறுத்து விடுகிறார். அதுவும் இந்தப் படத்தில் முக்கியமான சஸ்பென்ஸ் வெளி வருவதே வசனத்தின் மூலம் தான். வாய்ஸ் ஓவராக சீனில் புரியாததை சொல்ல எத்தனிக்கலாம். கண்ணால் காண்பதையே எதற்குத் திரும்ப சிம்பு வாய்ஸ் ஓவரால் விளக்க வேண்டும்? சிம்பு நன்றாக டயலாக் டெலிவரி செய்வதால் படம் பிழைக்கிறது.
எப்பவும் படம் ரொம்ப தாமதமாக வெளிவரும்போது எடுத்த நேரத்துக்கும் வெளி வரும் நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கதை பழையதாகி இருக்கும். அ எ ம படம் அந்தப் பாதிப்புக்கு ஆளாகவில்லை. பாடல்கள் படத்திற்கு ஏற்றம் தருகிறது. முக்கியமாக ராசாளி & தள்ளிப் போகாதே இரண்டும் படம் பிடித்த விதமும், வரும் இடமும் அருமை. தள்ளிப் போகாதே பாடல் படமாக்கப் பட்ட விதம் கௌதம் மேனனின் இயக்கத்தைப் பாராட்ட வைக்கிறது! அவளும் நானும் பாடலும் நன்கு படமாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை அதுவும் பின் பாதியில் படத்துடன் இயைந்துள்ளது.
காக்க காக்கப் படத்தையும், விடிவி படத்தையும் கலந்து செய்தக் கலவையாக் சில இடங்களில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. நெருக்கமான குடும்பம், பயங்கரமான வில்லன் குழு, அவர்களை எதிர்க்கும் ஹீரோ என்றே போகிறது கதை. இதில் சிம்புவின் கதாப்பாத்திரத்தின் பெயரே படத்தின் கடைசிப் பகுதி வரை தெரியாது. நல்ல டச் அது.
குழந்தைப் பையனாக ஜாலியாக இருந்த அவரை ஒரே நாளில் adult ஆக்குகிறது வாழ்க்கை. இது சிம்பு ரசிகர்களுக்கான படம்!
Nov 11, 2016 @ 17:34:26
I too liked thalli pogathey placement 🙌🏻🙌🏻. GVM Tried to give movie with new treatment but scoring only 60%
Nov 11, 2016 @ 18:18:35
நன்றி. இவ்வளவு விரைவாக விமர்சனம் செய்து கொடுத்ததற்கு. விமர்சனம் நன்றாகவே உள்ளது :)) வாழ்த்துகள்
Nov 15, 2016 @ 06:52:29
நேற்று தோகா சிட்டி சென்டர் மாலில் ஆறு மணிக்காட்சி கண்டேன். மொத்தமே ஒரு பத்துப் பேர் இருந்திருப்பார்கள். கௌதம் மேனன் – ரகுமான் கூட்டணியின் முந்தைய படத்துடன் ஒப்பிடுகையில் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. கடைசியில் ஒஸ்தி ரேஞ்சுக்கு ஒரு க்ளைமேக்ஸ் ஒட்டுமொத்த கொடுமை. பாடல்கள் எற்கெனவே பிரபலமாகி விட்டமையால் முணுமுணுக்க வைத்தன. காதல் கதையையும் த்ரில்லர் கதையையும் ப்ளெண்ட் பண்ண முயற்சி செய்து ஒரு அரை வேக்காடான படைப்பைக் கொடுத்த இயக்குனருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.