1982ல் கே.பாலச்சந்தரின் நிறுவன தயாரிப்பிலும் விசுவின் கதை இயக்கத்திலும் வெளிவந்த மணல் கயிறு படத்தை யாரும் மறக்க முடியாது. நாயகனான எஸ்.வீ.சேகர் {கிட்டுமணி} தன் திருமணத்திற்குப் போடும் எக்குத்தப்பான எட்டு கண்டிஷன்களுக்கும் ஏற்றப் பெண்ணென நாரதர் நாய்டுவாக வரும் விசு எட்டுக் கண்டிஷங்களுக்குமே பொருந்தாத ஒரு பெண்ணை அவருக்குத் திருமணம் செய்துவைப்பார். உண்மை தெரிந்த பின் நடக்கும் மணவாழ்க்கை கலாட்டாக்கள் நிறைந்த படம் மணல் கயிறு. படத்தின் இறுதியில் மனைவியை ஏற்றுக்கொள்ளும் கிட்டுமணி நாரதர் நாய்டுவை வெறுத்து ஒதுக்கிவிடுவார்.
எஸ்.வீ.சேகர் கதை, திரைக்கதையிலும், மதன் குமார் இயக்கத்தில் வரும் பகுதி இரண்டில் பெரிய தொழிலதிபராகியிருக்கிறார் எஸ்.வீ.சேகர். அவருக்கு ஒரு மகள் உள்ளார். கதாநாயகி மாப்பிள்ளைக்கான தகுதியென அப்பாவைப் போல் தானும் எட்டுக் கண்டிஷன்கள் போடுகிறார். தற்போது பத்தாயிரம் திருமணங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கும் அதே நாரதர் நாய்டுவாக விசு இந்தப் பெண்ணின் திருமணத்தையும் எஸ்.வீ சேகருக்கேத் தெரியாமல் சூத்திரதாரியாக இருந்து எட்டு கண்டிஷங்களுக்குமே பொருந்தாத ஒரு பையனுக்குத் திருமணம் முடித்து வைக்கிறார்.
உண்மை தெரிந்த பின் வரும் கோபதாபங்களும் குழப்பங்களுமே கதை. முடிவு சுபம். மணல் கயிறு படத்தில் நாரதர் நாய்டுவாக கெத்தாக வருவார் விசு. இரண்டாம் பகுதியில் மூப்பின் காரணமாகவும், உடல் நலக் கோளாறின் காரணமாகவும் அந்த கெத்து இல்லை. குரலும் தளர்ந்து போயிருக்கிறது. அனால் நல்ல வேளையாக அவருக்கு முழு பாத்திரத்தையும் கொடுக்காமல் ஒரு உதவியாளர் பாத்திரத்தை உருவாக்கி {சுவாமிநாதன்} திரைக்கதையை சற்றே நிமிர வைக்கப் பார்த்திருக்கிறார்கள். சாந்தி கிருஷ்ணா முதல் படத்தில் கிட்டுமணி மனைவி உமாவாக வெகு பொருத்தமாக இருப்பார். இப்பொழுது அவர் கால்ஷீட் கிடைக்காததால் பழைய நடிகை ஜெயஸ்ரீ அந்தப் பாத்திரத்தில் வருகிறார். நடிப்பும், பாத்திரப் பொருத்தமும் பரவாயில்லை.
நாயகனாக அஷ்வின் சேகர் முந்தைய படங்களை விட நன்றாக நடித்துள்ளார். நகைச்சுவை நன்றாக வருகிறது. நாயகி பூர்ணா ரொம்ப அழகாக உள்ளார். நடிப்பும் நடனமும் வெகு நன்றாக வருகிறது. நல்ல பெரிய கண்கள். ஆனால் மொத்தப் படத்துக்குமே உயிர்நாடி எஸ்.வீ.சேகரும் அவரின் டைமிங் நகைச்சுவை வசன டெலிவரியும் தான். அவருக்கும் நாரதர் நாய்டுவுக்காமன பகை சில நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. சாம்ஸ் {சுவாமிநாதன்} நகைச்சுவைக் காட்சிகள் சுவையாக இல்லை. ஆனால் ஜெகன், அஸ்வின், ஜார்ஜ் கூட்டணியில் வரும் விளமரப் பட நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன.
இப்படத்தில் கல்யாணம் செய்து கொள்ளப் பெண் போடும் சில கண்டிஷன்கள் இன்றைய சமூகத்தில் நடைமுறையில் கேள்விப்படுகிற கட்டளைகள் தான். அந்த வகையில் கதையில் யதார்த்தம் உள்ளது. நாயகனும் நாயகியின் மேல் காதல் உருவாகிவிட்டதால் கண்டிஷங்களுக்குத் தான் சரிப்பட்டு வரமாட்டோம் என்று தெரிந்தே திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். திருமணத்திற்குப் பின் கதை சுவாரசியமாக நகரும், எப்படி பொய்கள் உடையும், எப்படி பொய்களை சமாளிக்கப் போகிறார், என்று ஆவலுடன் உட்கார்ந்தால் எல்லாமே புஸ்வாணம் தான். ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் பெண் எப்படி பையனைப் பற்றி எந்த புலன் விசாரணையும் செய்யாமல் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறார் என்பதில் ஆரமபித்துத் திரைக் கதையில் பல ஓட்டைகள். இசை தரன்குமார்.வெகு சுமார். எடிட்டிங்கில் பாடல்களை கத்திரித்திருக்கலாம்.
குடும்ப வால்யுசின் பங்கைப் பற்றி நல்ல முறையில் இப்படம் பேசுகிறது. அதற்காக இப்படத்தை பாராட்ட வேண்டும். மேலும் முந்தைய மணல் கயிறு படத்தின் தொடர்ச்சியாக இப்படமும் இருப்பது நன்று. என்ன ஒன்று, இம்மாதிரி இரண்டாம் பகுதி படங்கள் வருவதினால் முதல் பாகம் எவ்வளவு அருமையான படம் என்று உணரவைக்கிறது. அதுவும் இப்படம் ஆரம்பிக்கும்போது முதல் படத்தின் காட்சிகள் முன்கதை சுருக்கமெனக் காட்டப்படுகின்றன. அந்தப் படத்தையே மறுமுறை முழுதாகப் பார்த்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது 🙂