பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சில பெண்களின் வாழ்க்கை சிறு வயது முதலே போராட்ட வாழ்க்கையாய் அமைந்து இறுதி வரை போர்க்களத்திலேயே வீழும் வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவர் தான் நம் மாநில முதல் மந்திரி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.
சிறந்த படிப்பாளி, நாட்டியத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்றவர், அழகும் அறிவும் ஒரு சேரப் பெற்ற நடிகையாகப் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தன் கேரியரை ஆரம்பித்தார். அம்மு என்று அவரை நெருங்கிய அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மென் மனத்தினராக இருந்தார். நடிக்கும்போது கூட செட்டில் தன் பகுதி முடிந்தவுடன் புத்தகமும் கையுமாக தான் இருப்பார், யாரிடமும் வம்புப் பேச்சு கிடையாது என்று அவருடன் நடித்தவர்கள் சொல்லுவர்.
இரண்டு வயதில் தந்தையை இழந்து ஸ்டெனோகிராபராக இருந்து பின் நடிப்புத் தொழிலுக்கு வந்த தன் தாயுடனும், அண்ணனுடனும் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் எந்த உறவும் இல்லாமல் சுற்றி இருந்தோர் அனைவருமே அவரை பயன்படுத்தி கொண்டார்கள்! நடிகையாக தான் வாழ்ந்த நாளில் ஒரு நொடி கூட தான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று ஒரு வட இந்திய ஊடக பேட்டியில் {சிமி காரேவால்} சொல்லியிருந்தார். நன்றாக படிக்கும் ஒரு இளம் பெண்ணை, மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்த ஒருவரை வலுக்கட்டாயமாக நடிப்புத் தொழிலுக்கு அனுப்பியது அவரது தாய் சந்தியா. அது ஒரு சுயநலச் செயல். மகன் படித்து முன்னுக்கு வர மகளை பொருள் ஈட்ட அனுப்பினார். நடிகை சந்தியாவிற்கு அச்சமயத்தில் நடிப்பு வாய்ப்புகள் இல்லை, மகளை வைத்து நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதால் அவர் செய்த ஏற்பாடு இது. எங்கும் இருப்பது போல் இரட்டை நிலை. சமுதாயம் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் தாழ்ந்தவள் என்றும் கூறி பேதப்படுத்துகிறது
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்.
எட்டுமறிவில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி” என பாரதியார் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்துப் பாடிவிட்டுப் போய்விட்டார். ஆனால் அது நடைமுறையில் இன்று வரை முழுமையாக வந்தபாடில்லை 😦
சினிமாவில் நடிப்பது ஒரு வங்கிப் பணியோ, ஆசிரியர் பணியோ மாதிரி 9 to 5 வேலை கிடையாது. ஆண்களுடன் நெருங்கி டூயட் பாடுவதும், உடலைக் காட்டும் உடைகளை அணிவதும் ஒரு நடிகையின் வாழ்வின் இயல்பான ஓர் அங்கம். அதில் எத்தனை ஆண்கள் அவர் விருப்பத்திற்கு மீறி அத்து மீறீனார்களோ தெரியாது. ஒரு சமயத்தில் அவர் நடிகர் ஷோபன் பாபுவுடன் திருமண உறவில் இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் ஒரு செய்தி பல காலம் உலவியது. அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இன்றைய ஊடகங்கள் அதை கண்டுபிடித்து அவர் மகனையோ மகளையோ இந்நேரம் வெளிக் கொண்டுவந்திருக்கும். ஆதலால் பிள்ளைச் செல்வம் இல்லை என்றே நினைக்கிறேன்.
தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், ஆங்கிலம் பேசும் புலமையினாலும், எம்ஜிஆருடன் நிறையப் படங்களில் நடித்தப் பழக்கத்தினாலும், மேலும் அவருடன் நெருக்கமான உறவும் இருந்ததாக கூறப்பட்டதாலும் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடன் அவரை தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஆக்கினார். அரசியலுக்கும் அவர் விருப்பபட்டு வந்தாரா என்று தெரியாது. அவருக்கு அந்தக் காலகட்டத்தில் நிறைய கடன் இருந்ததாக சொல்லப்பட்டது. அதை அடைக்க இந்தப் பணி உதவியதால் இதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கலாம். அதில் இருந்து தொடங்கியது அவரது அரசியல் வாழ்க்கை. எம்ஜிஆர் முதல் மந்திரியாக இருந்த பத்து வருட காலத்தில் படிப்படியாக அரசியலை இவர் நன்கு கற்றுக்கொண்டார்.
எம்ஜிஆர் இறந்த போது அவர் உடலின் தலைமாட்டில் சோகமே உருவாக அமைதியாக நின்றிருந்தார். ஆனால் அவரால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதி ஊர்வல வண்டியில் இருந்து தள்ளி விடப்பட்டார். ஆனால் எம்ஜிஆர் இறந்த இரண்டே ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனார். அவரின் சலியாத உழைப்பும் போராட்டக் குணமும் அவருக்குப் படிப்படியாக வெற்றிகளைத் தந்தன. அவரை கட்சி ரீதியாக பிடிக்காதவர்கள் கூட அவரிடம் இருக்கும் வைராக்கியத்திற்காக அவரை பிடித்தவர்கள் அநேகம் பேருண்டு.
கலைஞர் இந்திய அரசியல் சரித்திரத்தில் இடம்பெறப் போகும் மாபெரும் அரசியல் வித்தகர். அவரின் எழுபது, எழுபத்தைந்து வருட அரசியல் பயணத்தில் அவரை விஞ்ச எவரும் இல்லை. அப்படிப்பட்ட ஜாம்பவானையும் அவரது கட்சியையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவது எளிதன்று. அத்தகைய சாகசத்தை அவர் தனியாகப் பலமுறை நிகழ்த்தியிருக்கிறார்.
அரசியல் ஒரு சாக்கடை என்பது தான் பலரின் கருத்து. அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் ரவுடிகளும் அராஜகப் போக்கும் கொண்டவர்கள் என்பது பொது கண்ணோட்டம். அப்படிப்பட்ட அரசியலில் தனியொரு பெண்ணாக எந்த ஒரு ஆணின் துணையில்லாமல் தனித்துத் தலைமைப் பொறுப்பில் பல்லாண்டு காலம் தமிழகத்தை வழி நடத்தியிருகிறார். இது ஒரு மாபெரும் சாதனை.
‘‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’’ (ப.,214)
என்கிற பாரதியார் பாடலுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.
வீட்டில் ஆண் குடித்து விட்டு அடிக்கும்போதும், பணம் கொடுக்காமல் சச்சரவு செய்யும்போதும், அதட்டி மிரட்டி ஆணாதிக்கத்தைக் காட்டும் போதும், பொது வெளியில் ஆண்கள் பெண்களை சீண்டும் போதும், இன்ன பிற எரிச்சலூட்டும் செயல்களை ஆண்கள் செய்யும்போதும் நம் முதலமைச்சரின் கெத்து, ஆண் வர்க்கத்தையே அடக்கி ஆளும் திறன், பெண் வர்க்கத்துக்கு எரியும் புண்ணின் மேல் வருடும் குளிர் காற்றாக இருந்தது. துணிச்சலில் அவருக்கு நிகர் எவருமே இல்லை. அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதே இந்தத் துணிச்சல் குணத்தை தான்.
எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சளைக்காமல் எதிர் கொண்டு போராடினார். சாவுடனும் 75நாட்கள் விடாமல் போராடி சாகா வரம் இவ்வுலகில் யாருமே பெறாததால் அந்தப் போராட்டத்தில் மட்டுமே அவர் வெற்றி காணவில்லை.
நான் அவர் பதவியில் இருந்தபோது செய்த முறைகேடுகளை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை, தத்தெடுத்து அந்தப் பிள்ளைக்கு வெகு ஆடம்பரமாகத் திருமணம் செய்ததை, மக்களுக்கு இலவசங்களை அளித்ததைப் பற்றியெல்லாம் இங்கு நான் விமர்சிக்கவில்லை. இந்திய அரசியலில், ஏன் தற்போது டிரம்ப் தான் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்னும் நிகழ்வுக்குப் பின், உலக அரசியலில் கூட இவ்வாறான முறைகேடுகள் எல்லாம் வெகு சாதாரணமப்பா என்று அனைவரும் கடக்கின்ற நிலையில் இவர் ஆட்சியில் நடந்த சில எல்லை மீறுதல்களை இங்கே இப்பொழுது பேச விரும்பவில்லை. அதனால் அவர் செய்த தவறுகள் எல்லாம் சரி என்றும் சொல்லவில்லை. இத்தருணத்தில் அவை முக்கியமில்லை என்றே கருதுகிறேன்.
அவர் உண்மையிலேயே தாயுள்ளம் கொண்டவர். உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்று அவர் ஒவ்வொரு முறை கூறும்போதும் அது அவர் உள்ளத்தில் இருந்து ஒலிக்கும் குரலே! அம்மா என்று அனைவரும் அவரை அழைப்பது மரியாதைக்காக மட்டுமல்ல உண்மையான அன்பினாலும் தான். சிலவற்றை மக்களிடம் திணிக்க முடியாது. அதிகாரத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது. அன்பையும், மரியாதையும் ஒருவர் தன் நடத்தையினால் மட்டுமே பெற முடியும். அதனால் தான் இலட்சக்கணக்கான மக்கள் அவருக்காக இத்தனை பிரார்த்தனைகளையும் தானாக முன் வந்து செய்கின்றனர். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா பேருந்துகள், அம்மா மருத்துவக்காப்பீட்டு திட்டம், ஆகியவை அரசாங்கம் வைத்தப் பெயராக இருந்தாலும் அவைகளை மக்கள் விருப்பத்துடனேயே அவ்வாறு அழைக்கின்றனர். அவரின் பெயரை வருங்காலம் முழுவதும் அவர் கொண்டு வந்த இந்த நலத் திட்டங்கள் சொல்லும். அம்மா என்றால் அன்பு தான்! அவர் புகழ் நிலைக்கட்டும்!
Dec 05, 2016 @ 14:26:27
என்னோட கருத்தும் இதான்.Well written.
Dec 05, 2016 @ 14:31:28
அற்புதம் அருமை…ரொம்ப சரியான போஸ்ட்…படம் அழகு
Dec 05, 2016 @ 15:05:53
சிலவற்றை மக்களிடம் திணிக்க முடியாது. அதிகாரத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது,,உண்மை சூப்பர்
Dec 05, 2016 @ 15:55:03
திமுக வினரின் வீடுகளிலேயே கூட பெண்கள் ஓட்டு அம்மையாருக்கு விழுந்திருக்கும். இன்று அவர் இறந்ததாகச் செய்தி வந்த போது, படித்த/படிக்காத/இளைய/முதிய என எல்லா நிலை தமிழகப் பெண்களும் கண்ணீர் விட்டிருப்பர். தன்னால் முடியாததை தன் சார்பாய் ஒரு பெண் செய்வதாய் எல்லா பெண்களுமே ஒரு கட்டத்தில் அவரைப் பற்றி உணர்ந்திருப்பர்.
முதன் முறை அவரை நேரில் பார்த்தது, சைதாப்பேட்டை இடைத் தேர்தலில்தான் (2002 என்று நினைக்கிறேன்). முதிர்ந்த அந்த வயதிலும், அப்போதும் கூட அசரடிக்கும் அழகில் (அதே நேரம் கண்ணியமாகவும், மிடுக்குடனும்) இருந்தார்.
அவரின் துணிச்சல் அவரின் பலம் என்று பலரும் சொல்வர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எப்போதும் தனக்கு ஆமாம் போடும் அடிமைகளை மட்டுமே தன்னருகே வைத்திருந்தார். ஏதேனும் அமைச்சருக்கு ஓரளவு நல்ல பெயர் வந்தாலுமோ, ஊடகங்களைச் சந்தித்தாலுமோ பதவி பறிக்கத் தயங்காதவர். ஏகப்பட்ட insecurity உடையவர் என்பது என் கருத்து. அவரின் அரசியல் கருத்துகளில் ஒன்றில் கூட எனக்கு ஒப்புதல் இருந்ததில்லை. ஆனால் அவரின் மறைவு பற்றிய செய்தி வந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அதுதான் அவரின் வாழ்வாங்கு வாழ்ந்த வெற்றி.
Dec 05, 2016 @ 16:04:46
நல்ல பதிவு. அவரின் அணுகுமுறையில் சில குறைகள் இருந்தாலும் அவரின் தன்னம்பிக்கை, தலைமை பண்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
Dec 05, 2016 @ 16:46:00
சினிமாவும், அரசியலும் அவர்மீது திணிக்கப்பட்டது. குறை பார்க்காமல் நின்று போராடி வெற்றி கண்டார். ஒரு கட்டத்தில் இனி தம் வாழ்வு மக்களுக்காகவே என மாற்றிக் கொண்டார். கொண்ட கொள்கைகளில் உறுதியோடு இருந்தார். பல துரோகங்களை எதிர்கொண்டார். வேண்டாத இன்னல்களுக்கு ஆளானார். வாக்குத் தவறியவர்களை மன்னிக்க மறுத்தார். கடவுளை துணையாக்கிக் கொண்டார்.
நிறையச் சொல்லலாம்.
சொல்லிக் கொண்டே போகலாம்.
இணையற்ற தலைவியாக உருவெடுத்த சமயம் உடல்நிலை ஏமாற்றிவிட்டது.
ஒட்டு மொத்த நஷ்டம் தமிழகத்திற்கு.
Dec 06, 2016 @ 15:35:49
அருமையான பதிவு.அன்பையும் மரியாதையையும் தமிழக மக்களிடம் இருந்து நிறைய பெற்றுக்கொண்டார் என்பதை இன்று நேரிடையாகக் கண்டோம். பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்தவர் அவர். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சுஷிமா.
Dec 07, 2016 @ 03:59:53
பேராளுமைக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர். well written.
Dec 08, 2016 @ 05:03:52
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
Dec 22, 2016 @ 09:38:40
நீங்கள் ஜெயலலிதாவை புகழ்வது ஆச்சரியமாக உள்ளது.இவரை புகழ்வதற்கு சொல்லபடும் காரணங்களை வைத்து பார்த்தால் ஹிட்லரை கூட புகழலாம்.ஆனால் ஹிட்லரால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை கேட்டு பார்த்தால் நிச்சயம் அவர் எவ்வளவு மோசமான பிறவி என்பதை கூறுவர்.இறந்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவர் செய்த அத்தனை அட்டூலியங்களையும் மறந்து விடுவது என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. இன்னொரு வாதமும் அதிகம் வைக்கப்படுகிறது அது அவர் பெண் என்பது, தீயவர்கள் எவ்வுருவத்தில் இருந்தாலென்ன அவர்கள் மாற்று திறனாளிகளாக,திரு நங்கையாக, வயதானவர்களாக இப்படி எப்படி இருந்தாலென்ன…?? தீயவர்கள் தீயவர்கள்தானே…. உங்கள வீட்டை பிடுங்கி கொண்ட மாற்றுதிறனாளி அரசியல்வாதியை அல்லது அரசு அதிகாரியை மற்றவர் அம்மனிதர் மாற்றுதிறனாளியாய் இருந்து இவ்வளவு முன்னேறி இருக்கிறாரே என்று வியந்து பாராட்டினால் உங்களால் அதை ஏற்க முடியுமா…??
Mar 14, 2017 @ 10:24:52
சுருக்கமான பதிவு!
குறைகளை மட்டுமே கூறிக்கொண்டு அதன் மேல் நான் நல்லவன் என்கிற பொய் பிம்பம் கட்டிக்கொண்டிருக்கும் அரசியல் கயவர்களுக்கு ”அம்மாவின் அழியாப்புகழ்” இன்றும் ஒரு உறுத்தலாகவே இருப்பதைக் காண்கிறேன். ஆகவேதான் ஒருவர் மறைவுக்குப் பின்னரும் குறை கூறிக்கொண்டிருக்கும் ஒரு மனோபாவத்தை அதிகம் காண நேர்கிறது.
அவரது மறைவுற்குப் பின்னர், பல நாட்கள் கழித்தும் நீண்ட நேரம் வரிசையில் நின்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய பலரைக் கண்டேன். அவரது அழியாப் புகழுக்கு அதுவே ஒரு சாட்சி!
மத்தியில் நல்ல பதவியில் அவர் அமர்ந்திருந்தால் இந்தியா மிகப்பெரிய பலனை அடைந்திருக்கும். இழப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல! இந்தியாவிற்கே!
அவர் வாழ்ந்த காலத்தில் இழி சொல் சொன்னோர் இனி காலம் முழுவதும் மனக்காயம் பட்டே வாழ்வார்!