பெர்மியுடேஷன் காம்பினேஷன் மாத்தி விஜய்யின் இன்னொரு மசாலா படம் பைரவா! நாளுக்கு நாள் எப்படித்தான் இளமையா ஆகிறாரோ தெரியவில்லை, விஜய் இன்னும் உடல் மெலிந்து அதிக முகப் பொலிவுடன் இருக்கிறார். படத்தில் சைக்கிளில் என்ட்ரி என்றாலும் கில்லி என்ட்ரி!
வண்ணத்திரையில் தீமையை எதிர்த்து நன்மைக்குப் போராடுவது தான் எம்ஜிஆர் பாணி. அதையே இவரும் தொடர்ந்து பாலோ செய்கிறார். கல்வியறிவே இல்லாத அராஜகவாதி, கெட்ட வழியில் சம்பாதித்தப் பணத்தை இன்னும் பன்மடங்காக்க அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொடங்கியிருக்கும் கல்வி நிறுவனத்தில் சிக்கிச் சீரழியும் மாணவர்களைக் காப்பாற்றும் செயல் வீரராக வருகிறார் விஜய். அவருக்கேற்ற கதை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக யூகிக்கக் கூடியத் திரைக் கதையா என்று கேட்பவர்களுக்கு, அவரைப் பொறுத்த வரையில் இது tried and tested. அவர் ரசிகர்கள் விரும்புவது இதைத் தான் என்பதால் தொடர்ந்து இவ்வாறே கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்று நினைக்கிறேன்.
விஜய் முதலில் கலெக்ஷன் ஏஜண்டாக ஒரு ஏமாற்றுக் கும்பலிடம் பணம் வசூல் செய்ய கிரிக்கெட் ஆடி, அடிக்கும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. தொடர்ந்து நிறைய சண்டைக் காட்சிகள். எவ்வளவு தடியான ஆளுடன் சண்டை போட்டாலும் எதிராளி எத்தனை பெரிய ஆயுதம் வைத்திருந்தாலும் அனாயாசமாக சண்டை போட்டு ஒரு சின்னக் கீறல் கூட மேலே படாமல் ஒவ்வொரு சண்டையிலும் வெற்றிப் பெறுகிறார் விஜய்! ஜகபதி பாபுவும், டேனியல் பாலாஜியும் முரட்டு வில்லன்களாக வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் நன்றாக செய்திருக்கிறார். அவர் சொல்லும் பிளாஷ்பேக்கை நச்சுன்னு முடித்திருக்கலாம். அங்கே ஆரம்பிக்கிறது இழுவை. எடிட்டிங் சொதப்பல். பாடல்களும் படத்தின் தொய்வுக்குப் பெரும் காரணம். வரலாம் வா வரலாம் வா பைரவா பாடலையும் இன்ட்ரோ பாடலான பட்டையக் கிளப்புப் பாடல்களைத் தவிர அனைத்துப் பாடல்களையும் படத்திலிருந்து வெட்டியிருக்கலாம்.
சதீஷ், மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோர் படத்துக்குத் தேவையே இல்லை. வங்கி மேலாளராக Y.G. மகேந்திரனும் எரிச்சலை ஏற்படுத்துகிறார். இவர்களை சரியாகக் கையாளாதது அல்லது தவறாக தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநரின் தவறு. மேலும் விஜய், சதீஷ் இருக்கும் மேன்ஷன், தெரு ஆகியவை செட் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. கலையலங்காரத்துக்கு ஒரு குட்டு. விஜயின் உடைகள் நன்றாக இருந்தாலும் அவரின் விக் அவருக்கு சரியாகப் பொருந்தவில்லை.
உண்மையிலேயே கல்லூரிகளில் இன்று நடக்கும் தவறுகளை, ஆசிரியரே மாணவியிடம் சொற்களால் வன்கொடுமை செய்வது போன்றவைகளை திரைக்கதையில் சேர்த்திருப்பதாலும் {அதை விஜய்யும் தட்டிக் கேட்கிறார்} கோர்ட்டில் விஜய் உண்மை சம்பவங்களையே மேற்கோள் காட்டி எப்படி நிர்வாகத்தின் அஜாக்கிரதையினால் பல மரணங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கின்றன என்பதை சொல்வதினாலும் படம் என்டேர்டேயின்மென்ட் தாண்டி நல்ல மெஸ்சேஜ்ஜையும் தருகிறது. அது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.
இங்கே சோஷியல் மீடியாவில் சொல்லப்படுவது போல மகா மோசமனப் படமாக எனக்குப் படவில்லை. விஜய் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தும் உள்ளன. முழுப் படத்தையும் விஜய் ஒருவரே தாங்குகிறார். பஞ்ச் வசனம் கைத்தட்டல் பெறுகின்றது. ஒளிப்பதிவாளர் சுகுமார் விஜயை அழகாகவும் ஸ்க்ரீனில் நல்ல ப்ரசன்சுடன் காட்டுவதில் பாராட்டைப் பெறுகிறார்.