இப்போதைய ட்ரன்ட் ஹீரோவுக்கு வில்லன் குணாதிசயங்கள் இருப்பது தான். விஜய் ஆண்டனி எக்ஷன் ஹீரோவாக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாக முயல்கிறார். இரட்டை வேடம் அவருக்கு, அப்பா மகன். இரண்டிலும் ஒகேவாக செய்திருக்கிறார். அப்பாவாக சிறிது நேரமே வருகிறார். அரசியல் களத்துக்கான ஆரம்பத்தை அப்பா விஜய் விதைத்து விடுகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சமாவது வேறுபாட்டைக் காட்ட அடுத்தப் படத்திற்குள்ளாவது பயிற்சி எடுக்க வேண்டும்.
இன்று அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்தும், பதவிக்காகக் கொலை, வஞ்சகம், கூட இருக்கும் நட்பே குழி பறிப்பது, ஜாதி அரசியல் செய்வது, போன்றவை சாதாரணமாக நடப்பது தமிழக மக்களுக்கு ரொம்ப பரிச்சயமாகியிருக்கும் ஒரு விஷயம். அதை எமன் படத்தில் திரையில் காண்கிறோம்.
தியாகராஜன் இந்தப் படத்தில் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி பாத்திரத்தில் வருகிறார். அரசியல்வாதி/சட்டத்துக்குப் புறம்பான வியாபாரங்கள் செய்யும் ஒருவராக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ரொம்ப நாள் பிறகு சார்லிக்கும் ஒரு நல்ல பாத்திரம். மந்திரியின் காரியதரிசியாக எல்லா விஷயங்கள் தெரிந்தாலும் அமைதியாக சொல்வதை செய்யும் செயலாளராக அடக்கி வாசித்து நன்றாக நடித்துள்ளார். தியாகராஜனும் சார்லியும் படத்துக்குப் பலம். ஹீரோயினாக மியா ஜார்ஜ், நடிகை அஞ்சனாவாக வருகிறார். அவர் பாத்திரம் படத்தின் கதையை சற்றே திசை திருப்பினாலும் அவர் நடிப்பும் கச்சிதம்.
தமிழரசுவாக வரும் விஜய் ஆண்டனி முதல் முப்பது வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சொல்லப்படவில்லை. குற்றம் செய்த ஒருவனை தப்பிவிக்க, செய்யாத குற்றத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு அவர் சிறைக்குச் செல்வதாகத் தான் கதை ஆரம்பிக்கிறது, அதுவும் தாத்தாவின் மருத்துவ செலவுக்காக. ஆனால் சிறையில் நுழைந்த உடனேயே எல்லாரையும் அதகளம் செய்யும் அளவு பலமும் சாமர்த்தியமும் பொருந்தியவராக அவரைக் காட்டுகிறார் இயக்குநர். அங்கேயே திரைக்கதையில் நம்பகத் தன்மை குறைந்து விடுகிறது.
அதன் பின் அரசியலில் அசுர வளர்ச்சி அடைகிறார் விஜய் ஆண்டனி. சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது குழந்தைகள் விளையாடும் சிசர்ஸ் பேப்பர் ஸ்டோன் என்கிற விளையாட்டு தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் கத்தி வைத்திருப்பவரை விட துப்பாக்கி வைத்திருப்பவர் வெற்றி பெறுவார், நெருப்பைப் பயன்படுத்துபவர் எல்லாத்தையும் வெற்றிக் கொள்வார். அந்த மாதிரி உள்ளது அனைத்து ஸ்டன்ட் சீன்களும்.
ஜீவா சங்கர் தான் திரைக் கதை, இயக்கம், ஒளிப்பதிவாளரும் அவரே. அவர் அரசியல் களத்தை எடுத்ததற்கு பாராட்டு ஆனால் திரைக்கதையில் கனமில்லை. ஒரு சஸ்பென்ஸ் இருந்தும் அதைக் கதையில் கடைசி வரை கொண்டு வராதது இயக்குநரின் தவறு. விஜய் ஆண்டனி இசை வெகு சுமார்.
விஜய் ஆண்டனி ஹீரோ என்றாலும் அவர் ஒரு அரசியல்வாதி. அதனால் நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்கவே வேண்டாம், கண்டிப்பாகக் கெட்டவர் தான். ஆனாலும் நமக்கு அவரை பிடிக்க வைக்க இயக்குனர் முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் படத்தில் பாத்திரப் படைப்பு நன்றாக இருந்தாலும் கதையில் சுவாரசியம் இல்லை. கடைசியில் ஆயாசமே மிஞ்சுகிறது.