ஜெயம் ரவியும் அரவிந்த் சுவாமியும் இணைந்து நடிக்கும் படம்! முதல் நாளே கமலா திரை அரங்கில் சக்சஸ் மீட் எல்லாம் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கே தெரிந்திருக்கிறது அடுத்த நாள் எல்லாம் வைக்க வாய்ப்பே இருக்காதென்று. தனி ஒருவன் போலொரு படத்தை எதிர்பார்த்துப் போனால் தலைவலி தரும் ஒரு படத்தைப் பார்த்துத் திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. இயக்குநர் இலட்சுமணன். ரோமியோ ஜூலியட்டை விட மோசமான படம் கொடுக்க முடியுமா என்று நினைத்தவர்களுக்கு, கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் இயக்குநர்.
சிறந்த நடிகர்கள், அருமையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் உருவம் மாறி ஆனா கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் {கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி} வில்லனாக ஜெயம் ரவியும், நல்லவனாக அரவிந்த் சுவாமியும், பிராமதமாக நடித்துள்ளார்கள். கதையின் ஆரம்பத்தில் நல்லவர் ரவி, வில்லன் அரவிந்த். ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து பக்கா திரைக் கதை மூலம் மாஸ் படத்தையும் தர முடியும், போகன் மாதிரி ஒரு கடுப்புப் படைப்பையும் தர முடியும், திரைக்கதை தான் முக்கியம். அதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டார் இயக்குநர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கதை, இயக்குநரை தேர்ந்தெடுக்கும் நடிகர்களும் எப்படி யோசிக்காமல் இப்படி கால்ஷீட் தருகிறார்கள் என்று புரியவில்லை.
முதலில் அரவிந்த் சுவாமியுடன் ஆரம்பிக்கிறது கதை. உடனே கட், ஜெயம் ரவியிடம் போகஸ். அதன் பின் அவர் ஹன்சிகாவுடன் ஆடிப் பாடுகிறார். பிறகு அரவிந்த் சுவாமி பீல் பண்ணுவாரேன்னு அவருக்கு ஒரு ஆடல் பாடல். அந்த நேரத்தில் ஆடியன்ஸ் எல்லாம் செல் போனை நோண்டி கொண்டிருக்க வேண்டும். பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமை, {டி.இமான்} ஆனால் ஒன்று கூட படத்துக்குத் தேவையில்லை.
இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் படம். சஸ்பென்ஸ் வெளிவந்த பிறகும் ஜவ்வு மாதிரி இழுத்திருக்கிறார் இயக்குநர். ஏழாம் அறிவில் நோக்கு வர்மம். அதில் அந்த சைனீஸ் கழுத்தை சாய்த்து எதிராளியைப் பார்த்து எதிரே இருப்பவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வைத்துவிடுவார். இதில் அரவிந்த் சுவாமி கையில் பாபா முத்திரை பிடித்து கூடு விட்டு கூடு பாய்ந்து வேண்டியதை நடத்திக் கொள்வார்! படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் எதுக்குனே தெரியாத அளவுக்கு அரவிந்த் சுவாமியும், ஜெயம் ரவியும் புரண்டு புரண்டு சண்டை போடுவார்கள். இதில் பயங்கர காமெடி என்னவென்றால் அரவிந்த் சுவாமி செத்து விட்டார் என்று நினைப்போம், ஓலைச்சுவடி தண்ணீரில் தூக்கி எறியப்படும், ஆனால் சடக்கென்று அரவிந்த் சுவாமி கண் முழிப்பார், ஓலைச் சுவடியும் கடல் பாறையில் போய் சிக்கிக் கொள்ளும். அதாவது பார்ட் டூவிற்கு அடி போடுகிறார்கள். நண்பர்களே உங்களை நோக்கித் தான் வருகிறது, தாழ்வான இடத்தை நோக்கி ஓடுங்கள்!
இதன் தயாரிப்பாளர் பிரபு தேவா. எதை நம்பி பணம் போட்டாரோ தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு நேர விரயம், பண விரையம், மூளை செல்கள் விரையம்.
Feb 03, 2017 @ 14:16:08
புரிஞ்சது புரிஞ்சது.. அடுத்த வேலையப் பாக்க வேண்டியதுதான்…
Feb 03, 2017 @ 14:20:21
ஐயோ… அடுத்த படம் (part-2) வேறேயா…?
Feb 04, 2017 @ 04:16:25
அவ்வளோ கொடுமையா…
Feb 05, 2017 @ 01:49:42
நன்றி நன்றி நன்றி என்று உங்களுக்கு நான் சொல்லுவதைவிட வேறு என்ன செய்ய இயலும் என்னால் :)) எங்களுக்காக நீங்கள் அப்பப்ப படும் துயரங்களை எண்ணும்போது மனம் கசிகிறது 🙂
வாழ்த்துகள் அடுத்து ஒரு நல்ல படம் கிடைத்து விமர்சனம் செய்யும் பாக்கியம் கிடைக்க :))