ரொம்ப யதார்த்தமான அதே சமயம் சிறப்பாக பின்னப்பட்டத் திரைக்கதையாக அமைந்துள்ளது மாநகரம். பல புது முகங்கள், பழைய முகங்களுடன் சேர்ந்து அடர்த்தியாக நெய்யப்பட்ட நறுமணம் மிக்கக் கதம்ப மாலையாக மணக்கிறது மாநகரம். சென்னை மாநகரத்தைப் பற்றிய கதை இது என்பதால் என் முகத்தில் கூடுதல் புன்னகை. முதல் படமென தெரியாத அளவில் லோகேஷ் கனகராஜின் திரைக்கதையும் இயக்கமும் பாராட்டைப் பெறுகிறது!
சென்னை வாழ்க்கையை அப்பட்டமாக காட்டுகிறது படம். பிழைப்புக்காக தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சென்னை வந்து, பின் சென்னையையே சொந்த ஊராக பாவித்து வசிப்பவர்கள் தான் இங்கே அதிகம். அப்படி வெளியூரில் இருந்து வரும் இருவரில் ஒருவர் டேக்சி ஓட்டுநராக வரும் சார்லி, இன்னொருவர் ஐடி வேலையில் சேருவதற்காக வரும் ஸ்ரீ. இவர்களுடன் சென்னையிலேயே வசிக்கும் சந்தீப் ஆகிய மூவரின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் இறுதியில் ஒன்று கூடும் இடமாக க்ளைமாக்சில் சேர்க்கிறது திரைக்கதை. மூவருமே சென்னையை ஏற்றுக் கொள்ளவோ உதறித் தள்ளவோ முயன்றாலும் இறுதியில் சென்னை அவர்களை வசீகரித்து ஆட்கொள்கிறது.
ஒரு கேங்க், கொடுத்தக் கடனுக்கு வட்டி கட்டாததற்காக கட்டாதவனின் குழந்தையைக் கடத்த திட்டமிடுகிறது. கடத்தப் பட வேண்டிய பள்ளிப் பிள்ளைக்குப் பதிலாக தவறுதலாக வேறொரு குழந்தை கடத்தப்பட்டு அதன் தொடர்ச்சி படத்தை விறுவிறுப்பாகிறது. இதில் முணீஸ்காந்த் சூப்பராக செய்திருக்கிறார். நகைச்சுவை இயற்கையாக வருகிறது அவருக்கு. அவர் அந்த கேங்கின் புது அடியாள். அவர் தான் தவறான குழந்தையை கடத்தி விடுகிறார், அந்தப் பிள்ளையின் அப்பாவோ சென்னை மாநகரத்தின் மிகப் பெரிய தாதா! அவர் பேச ஆரம்பித்தாலே சிரிப்பு வரும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறார்.
இப்படத்தின் இன்னொரு சுவாரசியம், நாம் இங்கே சந்திக்கும் பலரின் பெயர்களும் நமக்குத் தெரியாத மாதிரி சார்லி, சந்தீப், ஸ்ரீயின் கதாபாத்திரங்களின் பெயர்கள் நமக்குக் கடைசி வரை தெரியாது. சந்தீப் காதலிக்கும் பெண்ணாக ரெஜினா கசான்ட்ரா வருகிறார். அவரும் நன்றாக செய்திருக்கிறார். கடத்தப்படும் குட்டிப் பையனும் சூப்பர். காவல் நிலையத்தில் நடப்பவை நாம் அப்படியே நிஜ வாழ்வில் காண்பது தான். நல்ல காவலரும் உள்ளனர், கெட்டவர்களும் உள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் தவறில்லாமல் படைக்கப்பட்டிருக்கு.
அருமையான படத் தொகுப்பு {பிலோமின்}. கொஞ்சம் கூட தொய்வில்லாமலும், தெளிவாகவும் நகருகிறது கதை. முதல் காட்சியில் இருந்து கவனமாகப் பார்த்தால் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வெவ்வேறு குணாதிசயங்களை முதலிலேயே இயக்குநர் காட்டியிருப்பது தெரிய வரும். ஒவ்வொரு காரியத்துக்கும் காரணங்கள் பின்னால் தெரிய வருவது அருமை. நிறைய காட்சிகள் இரவில் தான் நடக்கின்றன. விஷ்ணுவின் ஒளிப்பதிவும் A 1! ஜாவேத் ரியாசின் பின்னணி இசை {நிறைய எண்பதுகளின் ரஜினி பாடல்கள்} நன்றாக உள்ளது.
குறை இல்லை என்று சொல்ல முடியாது. ரெஜினா சந்தீப் காதல் ஒரு வன் தொடர்தலை நினைவு படுத்துகிறது. ஆனால் சந்தீப் பின்னால் செய்யும் செயல்கள் அவரின் ஆழ்ந்த அன்பையும் காட்டுகிறது. நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான படம். நல்லதும் கெட்டதும் சேர்ந்ததே ஒரு நகரம், அதில் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று முடிக்கிறார் இயக்குநர். அவருக்கு நம் வாழ்த்துகள்!