உணர்வுகள் தொடர்கதை… உறவுகள்..? – சிறுகதை

பதினஞ்சு வருஷம் கழிச்சு அந்தத் தெருவுக்கு வருகிறான் வருண். வசந்தி அக்கா வீடு இருக்குமா இல்லை இடிச்சு அடுக்குமாடி குடியிருப்பு வந்திருக்குமான்னு கொஞ்சம் சந்தேகம் அவன் மனத்தில். கூகிள் மேப்சில் பார்த்தபோது சரியா தெரியலை. ஆனா அவங்க வீடு அரை கிரவுண்டில் இருந்ததால் இடிச்சிருக்க வாய்ப்பில்லை, வித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். தெரு நிறைய மாறியிருந்தது. செட்டியார் கடை போய் அங்கே சூப்பர் மார்கெட் வந்திருந்தது. அவன் முன்பு குடியிருந்த வீட்டையே காணவில்லை. அங்கொண்ணும் இங்கொண்ணுமா சில மரங்களே இருந்தன. முன்பு தெருவே சோலையா குளுகுளுன்னு இருக்கும். கோடை விடுமுறைல கிரிக்கெட் ஆட அதுக்காகவே பக்கத்து காலனி பசங்களெல்லாம் அந்தத் தெருவுக்கு வருவாங்க. தெரு இன்னும் குறுகிப் போன மாதிரி அவனுக்குத் தோணியது. வசந்தி அக்கா வீடு தெரு கடைசில தான் இருக்கும், எனவே வீடுகளைப் பார்த்துக் கொண்டே பைக்கை மெதுவாக ஓட்டினான்.

அந்த நாட்களை அசை போட்டான் வருண். அந்தத் தெருவில அவன் வசிச்சபோது மூணு வீட்டுல தான் கொலு வெப்பாங்க. வசந்தி அக்கா வீடு, ராகேஷ் வீடு, கல்கண்டு ரோகினி அக்கா வீடு. ராகேஷ் வீட்டுல தான் பெரிய கொலு வெப்பாங்க. ஒன்பது படி. ஆனா அவங்க சரியான கருமிங்க. முதல் நாள் போயிட்டு அடுத்த நாள் போனா நேத்து தானேடா வந்து சுண்டல் வாங்கிண்டு போன? அப்படின்னு அந்த வீட்டுப் பாட்டி கேப்பாங்க. அதனால் அவங்க வீட்டுக்கு ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒரு நாள் தான் போவாங்க. கல்கண்டு ரோகினி அக்கா வீட்டு சுண்டல், ஒண்ணு வேகாம இருக்கும் இல்லேனா உப்புக் கம்மியா இருக்கும். ஆனா எவ்வளவு தடவை போனாலும் கல்கண்டு அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்குக் குழந்தை இல்லை, அதனால சின்னப் பசங்க அவங்க வீட்டுக்குப் போனா எப்பவும் கல்கண்டு கொடுப்பாங்க. ஆனா வசந்தி அக்கா வீடு தான் சூப்பர். மூணு படி தான் வெப்பாங்க. பொம்மை எல்லாம் நல்ல உயரமா இருக்கும். ஆனா அவங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகாரம் பண்ணுவாங்க. கோதுமையை வறுத்து சர்க்கரை ஏலக்காய் எல்லாம் போட்டு நெய் வாசனையா ஒரு பொடி பண்ணுவாங்க. அவ்வளவு நல்லா இருக்கும். நியுஸ் பேப்பர்ல தான் மடிச்சுத் தருவாங்க. சுண்டல் பண்ணுவாங்க. ஆனா எல்லாம் கொஞ்சமா காகிதத்துல பொட்டலம் கட்டிக் கொடுப்பாங்க. சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் போல இருக்கும் அவனுக்கு. அவங்க பையன் ராகவேந்தர் வருணைவிடப் பெரியவன், வருண் அஞ்சாவது படிக்கும்போது அவன் ஏழாவது. ஆனா தெருவுல எல்லாரும் சேர்ந்து தான் கிரிக்கெட் ஆடுவாங்க. அந்தப் பழக்கத்தில் தான் அவங்க வீட்டுக் கொலுவுக்குப் போவாங்க எல்லாப் பசங்களும். வருண் அந்தத் தெருவில் மூணு வருஷம் தான் இருந்தான். வாடகை ஏத்த ஏத்த அவன் அப்பா வீட்டை மாத்துவார்.

ராகவேந்தர் வீட்டைக் கண்டுபிடித்து விட்டான் வருண். அதே மாதிரி தான் இருந்தது. கேட்டுக்கு இந்தப் பக்கம் பப்பாளி மரம், அந்தப் பக்கம் முருங்கை மரம். இரண்டிலேயும் காய்கள் நிறைய தொங்கின. மெதுவா கேட்டைத் திறந்து கொண்டு வெராண்டா சுவத்தில் உள்ள அழைப்பு மணியை அடித்தான். வசந்தி அக்கா தான் கதவைத் திறந்தாங்க. ஒரு சிரமும் இல்லாமல் அவங்களை கண்டுபிடிச்சதில் ஒரு நிம்மதி வருணுக்கு.

“யாரு வேணும்?”

“அக்கா நான் தான் வருண். ராகவேந்தரோட ப்ரென்ட். செட்டியார் கடைக் கிட்ட இருந்த வீட்டுல ஒரு போர்ஷன்ல நாங்க இருந்தோம். எங்க அக்கா பேரு அஞ்சனா.  நியாபகம் இருக்கா?”

“உங்கம்மா பேரு ஜானகி தானே? நல்லா எம்பிராயடரி போடுவாங்க. அவங்க பையனா? ரொம்ப மாறி போயிட்ட. ராகவேந்தர் இப்ப துபாய்ல இருக்கான்பா. உள்ள வா” என்றபடி கதவை முழுசா திறந்தாங்க. வருண் ஹெல்மெட்டைக் கழட்டியபடி உள்ளே நுழைந்தான். வீடு அப்படியே தான் இருந்தது. புதுசா பெயின்ட் பண்ணியிருந்தாங்க. ராகவேந்தர் அப்பா படம் பக்கத்துல அவங்க பாட்டிப் படம் மாட்டியிருந்தது. அந்தப் பெரிய நிலைக் கண்ணாடியைக் காணோம்.

“இன்னும் ஸ்கூல்ல டீச்சரா இருக்கீங்களா அக்கா?”

“இல்லபா. VRS வாங்கி ஒரு வருஷம் ஆகுது. நிறைய பிள்ளைங்களுக்கு டியுஷன் எடுக்கறேன். ராகவேந்தர் தான் பிடிவாதமா வேலையை விடச் சொல்லிட்டான். நல்லா சம்பாதிக்கறான். நான் கூட துபாய் போயிட்டு வந்தேன். இப்ப நீ என்ன பண்ற? உங்கக்காக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆயிடுச்சு கா. பெங்களூர்ல இருக்கா. அவளும் அவ புருஷன் ரெண்டு பேரும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள். அம்மாவும் அப்பாவும் அடிக்கடி போய் இருந்துட்டு வருவாங்க. நான் இங்க சென்னைல ஆங்கில வார இதழ் ஒண்ணுல ரிபோர்டரா இருக்கேன்.” பத்திரிகை பேரை சொன்னதும் அக்கா முகத்துல மகிழ்ச்சி.

“இவ்வளவு பெரிய பத்திரிக்கைல வேலை பாக்கறியா? வெரி குட். என்ன சாப்பிடற?”

“இல்லக்கா ஒன்னும் வேணாம். உங்க கூட சில விஷயங்கள் பேசணும். ரிபோர்டரா தான் வந்திருக்கேன்.”

“என்கிட்டே பேச என்ன இருக்கு? நான் இப்பப் பள்ள ஆசிரியையா கூட இல்லையே.”

“இப்ப சமீபத்துல சந்தியா தற்கொலை பத்தி தொலைக்காட்சி நாளிதழ்லலாம் பார்த்திருப்பீங்க இல்லக்கா? அவங்க வீட்டுல அவங்க மாமனாரும் கொழுந்தனாரும் பண்ணப் பாலியல் தொந்தரவுனால தற்கொலை பண்ணிக்கறேன்னு ஐஜி ஆபிசுக்கு ரெஜிஸ்டர்ட் தபால்ல கடிதம் எழுதி போட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்க அந்தப் பிரச்சினையை வெளிய யாரிடமும் சொல்ல முடியாம மன அழுத்தத்துல தான் தற்கொலை முடிவுக்குப் போயிருக்காங்கன்னு உளவியல் மருத்துவர்கள் கருத்துத் தெரிவிச்சிருக்காங்க.”

என்னை நிமிர்ந்து பார்த்தாங்க.”இதை எதுக்கு இப்போ என் கிட்ட சொல்ற?”

தொண்டையை செருமிக் கொண்டான், “அக்கா, ராகவேந்தர் அப்பா இறந்த வருஷம் உங்க வீட்டுல கொலு கிடையாதுன்னு எனக்குத் தெரியாது. எப்பவும் போல உங்க வீட்டுச் சுண்டல் வாங்கி சாப்பிட வந்தேன். உங்களுக்கு நினைவிருக்கான்னு தெரியலை.”

வசந்தி அக்கா முகம் கருத்து, சிறுத்துப் போய் பேசாம இருந்தாங்க.

“ராகவேந்தர் பாட்டி இங்க தான் சோபால மோட்டுவளையை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. நீங்க கொலு இந்த வருஷம் இல்லப்பான்னு சொன்னதும் நான் கிளம்பத் திரும்பினேன். என் வாடின முகத்தைப் பார்த்து, இருப்பா ஏதாவது சாப்பிடக் கொடுக்கறேன்னு சமையல் அறைக்குப் போனீங்க. அப்ப அந்த எதிர் அறைல இருந்து ராகவேந்தர் சித்தப்பா சமையல் அறைக்கு வந்து உங்களைப் பின்னாடியில் இருந்து கட்டிப் பிடிச்சாரு. நீங்க அவரை தள்ளி விட்டுட்டு கன்னத்துல அறைஞ்சீங்க. அப்போ இங்க ஒரு பெரிய கண்ணாடி இருக்கும். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அந்தக் கண்ணாடில எல்லாம் பார்த்தேன். பயந்து போய் உடனே எங்க வீட்டுக்கு ஓடிப் போயிட்டேன். இது வரைக்கும் இந்த விஷயத்தை நான் யார் கிட்டயும் சொன்னதில்லை.”

வசந்தியின் கண்கள் கலங்கி கன்னத்துல கோடு மாதிரி கண்ணீர் வழிந்தது. சுருக்கமா, “நீ கிளம்பு” என்றாள்.

“அக்கா, ப்ளீஸ் கா, உங்க பேரு, நீங்க எங்க இருக்கீங்க, நீங்க யாருன்னு எந்த விவரமும் வெளி வராது. ப்ராமிஸ் கா. இந்த மாதிரி கொடுமையை அனுபவிச்சவங்க எப்படி இந்தப் பிரச்சினையைக் கையாண்டாங்கன்னு எழுதினா நாலு பேருக்கு அதனால நல்லது நடக்கும். அதுக்காகத் தான் கேக்கறேன்கா.”

“வெளிய போகும்போது வாசக் கதவை மூடிட்டுப் போ” எழுந்து உள்ள போய் அறைக் கதவை சாத்திக்கொண்டாள் வசந்தி. தயங்கி நின்றான். பின் தன் விசிடிங் கார்டை மேஜை மேல் வைத்துவிட்டு வெளியே வந்து கதவை சாத்தினான்.

மனசு வேதனையாக இருந்தது அவனுக்கு. வசந்தி அக்கா வாழ்க்கையில பொருக்குத் தட்டிப் போயிருந்த ஒரு காயத்தைத் திரும்ப பேத்து இரத்தம் வழியவிட்டதை நினச்சு வருந்தினான்.

படுக்கை அறைக்கு வந்த வசந்திக்கு வேர்த்துக் கொட்டியது. பேனை பெரிசாக சுழலவிட்டாள். படுக்கையில் உட்கார்ந்தபடி அந்தக் கொடூரமான நிமிஷங்களை நினைத்துப் பார்த்தாள். “குமரன் என்ன காரியம் பண்றீங்க? நான் உங்க அண்ணி, அம்மா மாதிரி.” இன்னும் அவள் கொழுந்தனிடம் கோபமாகச் சொன்னது காதில் ஒலித்தது. “என்னோட இருங்க நீங்க, ப்ளீஸ். என் மனைவியோட நான் சந்தோஷமாவே இல்லை.” எல்லா ஆண்களும் சொல்லும் வசனத்தை தான் அவனும் சொன்னான். அவனைவிட்டு விலகி ஹாலில் மாமியார் முன் வந்து உட்கார்ந்து கொண்டதை நினைத்துக் கொண்டாள். இது உண்மையிலேயே நடந்ததா இல்லை தன் கற்பனையோ என்று ஒரு நிமிஷம் சந்தேகம் வந்தது வசந்திக்கு. ஆனால் இன்னும் அவனை அடித்தக் கை எரிந்து கொண்டிருந்தது. நடந்தது உண்மை தான் என்று உரைத்தது. அவன் அண்ணன் இறந்து இன்னும் முழுசாக ஒரு மாசம் கூட முடியவில்லை, இவனுக்கு எப்படி இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம் வந்தது என்று உடல் நடுங்கினாள்.

அவன் பிடித்த அவள் இடுப்பை அடுப்பில் வைத்து சுட்டுப் பொசுக்க வேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. அவனுக்கு இந்த எண்ணம் வரும்படி எப்பவாவது தவறாக நடந்து கொண்டோமா என்று யோசித்துப் பார்த்தாள். அவன் வேலை விஷயமா விஜயவாடாவில் இருந்து வந்து இவர்கள் வீட்டில் தங்கும்போதெல்லாம் அவள் இரவில் நைட்டிப் போடுவதைக் கூட தவிர்த்து புடைவையிலேயே இருப்பாள். எப்படி இவள் இடுப்பை அவன் தொடவும், இவளை அடையவும் ஆசைப்பட்டிருக்கான் என்று நொந்து போனாள்.

வசந்தி கணவனுக்குக் கேன்சர் வந்தவுடன் துடித்துப் போனது குமரன் தான். கணேசனை ஒவ்வொரு கீமோ சிட்டிங்கிற்கும் அவன் தான் தவறாமல் அழைத்துப் போவான். விஜயவாடாவில் இருந்து ஒவ்வொரு முறையும் வந்து “அண்ணி நீங்க லீவ் எடுக்காதீங்க, நான் பார்த்துக்கறேன்” என்று கணேசனை பார்த்துப் பார்த்து ஒவ்வொரு கட்டத்திலும் தூணாக நின்று உதவினான்.

அவனுக்கு சொந்த பிசினஸ். மாமனார் பெரிய பணக்காரர். அவரின் கிரானைட் தொழிலை அவன் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் விஜயவாடாவிலேயே மனைவியின் பெற்றோர் வீட்டுக்கருகில் வசித்து வந்தான். திருமணம் ஆகி மனைவி குழந்தை இருப்பவன் எப்படி இப்படி நடந்து கொண்டான்? அதுவும் அவன் அம்மா வீட்டில் இருக்கும்போது! நல்ல வேளை ராகவேந்தர் வீட்டில் இல்லை என்று அப்பொழுது நினைத்துக் கொண்டாள் வசந்தி.

படபடப்பு சற்று அடங்கியவுடனே மாமியாரிடம் நடந்ததை சொல்லிவிடத் துடித்தாள் வசந்தி. மாமியாருக்குக் குமரன் செல்வாக்கோடு இருப்பதிலும் அண்ணனுக்கு உதவி செய்ததிலும் அவன் மீது பெருமையோடு இருந்து வந்தாள். இவன் இப்படி நடந்து கொண்டதைக் கேட்டால் போயே போய்விடுவாள். அகாலமாக மகனைப் பறிக்கொடுத்த ஒரு தாய்க்கு இன்னொரு தண்டனையும் தேவையா என்று நினைத்தபடி அமைதியா இருந்தாள் வசந்தி. குமரன் இவள் சொன்னதை மாமியாரிடம் மறுத்து விட்டால், அவள் தன்னை நம்புவாளா இல்லை மகனையா என்று ஒரு பயமும் அவள் மனத்தில் ஓடியது. மாமியார் தன் கணவனின் மருத்துவச் செலவுக்காக அவளிடம் இருந்த கடைசி பொட்டுத் தங்கம் வரைக்கும் வசந்தியிடம் கொடுத்தவள். அப்படிப்பட்ட நல்லவளை வருத்த வசந்தி விரும்பவில்லை.

ராகவேந்தர் வந்ததும் அவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு வெறும் வயிற்றுடன் அன்று தூங்கிப் போனாள், முதல் முறையாகப் படுக்கை அறைக்குத் தாள் போட்டுவிட்டு.

அடுத்த நாள் குமரனைக் கூப்பிட்டு இனி தன் வீட்டுக்கு தேவை இருந்தால் தவிர வரக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னதும் அவன் அதற்கு சரி சரியென்று தலையை ஆட்டிவிட்டு அம்மா அங்கு இருக்கும் சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வருவது குறையாமல் இருந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா அவள் மனத்தில் நிழலாடியது. அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் உடம்பில் திராவகம் ஊற்றியது போல் எரியும். அவன் வேண்டுமென்றே அருகில் நெருங்கி நிற்க வரும்போது அவசரமாக விலகித் தலையில், முட்டியில் என அடிபட்டுக் கொள்வாள். அவனுக்கு சோறு போடுவதையே நிறுத்திவிட்டாள். எல்லாவற்றையும் மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று விடுவாள். மாமியார் முடிந்தால் பரிமாறுவார். அல்லது அவனே எடுத்துப் போட்டு சாப்பிடுவான்.

முதல் வருஷ திவசம் முடிந்த அன்று அவன் ஊருக்குக் கிளம்பும் முன், “என்ன முடிவெடுத்தீங்க?” என்று கேட்டான். என்ன கேட்கிறான் என்று கூட வசந்திக்குப் புரியவில்லை. “என்ன கேக்கற?” என்றாள் எரிச்சலுடன். “இல்லை சேர்ந்து வாழறதைப் பத்தி யோசிச்சு முடிவெடுத்தீங்களா?” என்றான்.

நொறுங்கிப் போனாள் வசந்தி. பெண்ணென்றால் அவ்வளவு கேவலமா என்று கண்ணில் இருந்து அவளையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளுக்குக் கூடப் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் ஒரு பேருந்து விபத்தில் இவள் சிறுமியாக இருந்தபோதே இறந்து விட்டனர். அத்தை வீட்டில் வளர்ந்து, அத்தை தான் திருமணமும் முடித்து வைத்தார். எங்கே போய் நிற்பாள் அவள்? யாரிடம் இவனைப் பற்றி முறையிடுவாள்?

விடுவிடுவென்று வாசலுக்கு விரைந்தாள். அவனும் பின் தொடர்ந்து வந்தான். “பெட்டியை எடுத்துட்டு வா” என்றாள். அவன் எடுத்து வந்தான். ”இது தான் கடைசி முறை நீ இந்த வீட்டு வாசப்படியை மிதிப்பது. உங்கம்மாவை பார்க்கணும்னா நான் அவங்களை அங்க அனுப்பி வைக்கிறேன். இல்ல உங்கம்மாவை அங்கேயே வெச்சுக்க. என்னால தனியா இருக்க முடியும். என் முகத்திலேயே முழிக்காத இனிமேல்.”

அப்படியே வெராண்டாவில் தடாலென்று அவன் காலில் விழுந்தான் குமரன். “அண்ணி ப்ளீஸ் நான் பண்ணது தப்பு தான். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. நான் ராகவேந்தரைப் படிக்க வைக்கிறேன். என் அண்ணன் எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. வீட்டுக்கு வராதேன்னு மட்டும் சொல்லிடாதீங்க.”

“ஒரு நிமிஷத்துல உனக்கு மனசு மாறிடிச்சா? வா சேர்ந்து வாழலாம்னு உள்ளே சொல்லிட்டு இங்க கால்ல விழறியா? நம்பிடுவேனா? அவர் செஞ்சதுக்கு நீ காட்டற நன்றி இது தானா?” கதவை மூடித் தாள் போட்டுவிட்டு உள்ளே வந்தாள் வசந்தி. சோர்ந்து போய் உட்கார்ந்தாள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் எவ்வளவு கேவலமானவன் இவன் என்று வருந்தினாள். இப்படி நிராதரவாக விட்டுச் சென்ற அவள் கணவன் மேல் அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் வந்தது. ராகவேந்தரும் தன்னை போல் யாருமில்லாத ஒரு அநாதை தானா? சித்தப்பாங்கற ஓர் உறவும் இப்படி கேவலமா இருக்கே. பல நாளாக அழாதது எல்லாம் சேர்த்து வைத்து அழுதாள். சிறிது நேரத்தில் மனம் தெளிந்து எழுந்தாள்.

முகம் கழுவிக் கொண்டு மாமியாருக்குக் காபி போட்டு எடுத்துச் சென்றாள். மத்தியானம் பரீட்சை என்று பள்ளி சென்றிருந்த மகனிடமும் மாமியாரிடமும் குமரனைப் பற்றி சொல்லப் போவதில்லை என்று முடிவு செய்தாள். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பையனுக்கு இந்த அசிங்கம் தெரிய வேண்டாம் என்று நினைத்தாள். பெரியவன் ஆனதும் சொல்லத் துணிவு இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

மாமியார் இருந்த அறைக்குச் சென்றவள் மாமியார் சோர்ந்து படுத்திருப்பதைப் பார்த்து விளக்கைப் போட்டாள். விளக்கைப் போட்டும் மாமியார் எழுந்திருக்காததைப் பார்த்து சந்தேகத்துடன் அவரின் கையைத் தொட கை சில்லிட்டுப் போயிருந்தது. மாமியார் வீட்டில் இருப்பதை கூட மறந்து குமரனிடம் இறைந்து கத்தியது அப்பொழுது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. சரிந்து தரையில் உட்கார்ந்தவள் மாமியார் தலையை தன் மடி மீது வைத்து மூக்கின் கீழே விரல் வைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தாள். மூச்சு நின்று எவ்வளவு நேரம் ஆச்சோ!

தனியா வாழ்ந்து பிள்ளையை வளர்த்து ஆளாக்கி இன்னும் தனிமையே தோழியாய் இருக்கும் ஒரு வாழ்க்கை அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கு. கணவன் இறந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குமரன் செய்தது அவளின் மிச்ச வாழ்க்கையை முழுசாகப் புரட்டிப் போட்டு விட்டது. அத்தனை நல்ல மாமியார், அந்த கேடுகெட்டவன் முகத்தை இனிமேல் பார்க்கக் கூடாது என்று இறந்து போனார். ஆனால் அதனால பாதிக்கப்பட்டது குமரன் இல்லை. கணவனும் போன நிலையில் ஒரு நல்ல துணையை இழந்தது அவள் தான். எந்த வித்தியாசமும் இல்லாம ஆண்களுடன் பழகிவந்த அவள் எந்த ஆணையும் நம்புவதை அடியோடு நிறுத்தி விட்டாள். அதனால நஷ்டப்பட்டதும் கஷ்டப்பட்டதும் அவள் தான்.

ஹாலில் வந்து மேஜையின் மேலிருந்த வருணின் கார்டைப் பார்த்தாள். ஆண்கள் என்னைக்கும் எதனாலும் மாறப் போவதில்லை, எந்தக் கதையும் அவங்கள்ள கெட்டவங்களை திருத்தப் போவதில்லை என்று மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள். இதுல உலகத்துக்குச் சொல்ல அவளிடம் என்ன இருக்கு என்று அவன் வைத்துவிட்டு சென்ற கார்டை இரண்டாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டாள்.

Thanks for the images:

https://fr.dreamstime.com/images-libres-de-droits-couples-sur-la-moto-image31064659

http://www.touchtalent.com/artist/455971/pvr-murty

 

என் மாமியார் – தோற்றம் 23.04.1929 மறைவு 18.04.2017

ஆண்டும்மா என்று அன்போடு குடும்பத்தாரால் அழைக்கப்படும்  என் மாமியார் அவர் வீட்டில் மூத்த மகள், புகுந்த வீட்டில் மூத்த மருமகள். அவர் ஜபல்பூரில் வளர்ந்தவர். கொஞ்சம் வைதீகமான சென்னை வாழ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்குத் தனது பதினாறாவது வயதில் வாக்கப்பட்டார். அந்த வீட்டுப் பழக்க வழக்கங்களை அந்த இளம் வயதில்அவர் விரைவில் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பிறந்த வீடும் புகுந்த வீடும் மக்கள் செல்வம் நிறைந்த வீடுகள். அதனால் சிறு வயது முதலே ரொம்ப பொறுப்பு அதிகம் அவருக்கு. அவர் திருமணமாகிப் போன போது அவர் கடைசி நாத்தனாருக்கு நாலு வயது தான். இந்தத் தலைமுறையில் பலர் பிள்ளை வரம் வேண்டி செயற்கைக் கருத்தரிப்பை நாடும் இவ்வேளையில், இவர் முதல் குழந்தையை உண்டாகியிருந்த சமயத்தில் அவரின் தாயாரும் உண்டாகியிருந்தார். அது ஒரு கனாக் காலம் :-}

சின்ன வயது முதலே பொறுப்பை இயல்பாக ஏற்றுக் கொண்டதனால் அவருக்குக் சுற்றமும் நட்பும் மரியாதையையும் இயல்பாகவே வழங்கியது. அனைத்து நாத்தனார்கள், மைத்துனர்கள் திருமணங்களை முன்னின்று நடத்தியது மட்டுமில்லாமல் அவர்களின் பேறு காலத்திலும் எல்லா விதத்திலேயும் உதவியாக இருப்பார்.  என் மாமனார் அப்பொழுது மத்திய அரசில் குமாஸ்தா வேலையில் தான் இருந்தார். பின்பு உழைப்பால் படிப்படியாக முன்னேறினார். அந்தக் கால வழக்கப்படி கூட்டுக் குடும்பத்தில் சம்பளத்தை முழுக்க அவரின் அப்பாவிடம் கொடுத்துவிட வேண்டும். தன் கைச்செலவுக்கும், தன் மனைவியின் கைச்செலவுக்கும் டியுஷன் எடுத்து உபரி வருமானம் ஈட்டினார் என் மாமனார். நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவருக்கு பெங்களூருக்கு மாற்றல் ஆகியது. நான்கு குழந்தைகளுடன் பெங்களூருக்குக் குடி போகிறவருக்கு அங்கே குடும்பம் அமைக்க அவரின் அப்பா சொல்ப பணமே கொடுத்தனுப்பினாராம். பெரிய குடும்பம், நடுத்தர வர்க்கம் என்றாலே எப்பொழுதும் பண நெருக்கடி தான்! என் மாமனாரின் வருமானத்தில் நாலு குழந்தைகளுடன் தனிக் குடித்தனமாக இருப்பது சிரமம் என்று இரண்டு பிள்ளைகளை என் மாமியாரின் பெற்றோர், மாமாக்கள் சில வருடங்கள் வளர்த்துள்ளனர்.

பெங்களூரு சென்று சிறிது காலத்திலேயே பெல்காமுக்கு மாமனாருக்கு மாற்றலாகிவிட்டது. பிள்ளைகள் எல்லாரையும் நல்ல பள்ளியிலிருந்து மாற்ற வேண்டாம் என்பதால் என் மாமியார் பெங்களூருவிலேயே தனியாக குடும்பத்தை நிர்வகிக்க என் மாமனார் பெல்காமில் தனியாக வசித்து வந்தார். என் மாமியாருக்கு உதவியாக அவரின் தம்பி குடும்பம் பெங்களூருவுக்கு வந்தது. உறவுகள் உதவுவதற்காக மாற்றல் வாங்கிக் கொண்டு வருவது போன்ற நிகழ்வுகள் இந்த மாதிரி பதிவுகளில் தான் இனி பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். என் கணவரை தன்னம்பிக்கை மிக்கவராக, தமிழில் ஆர்வமுள்ளவராக, பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க உந்துகோலாக இருந்தவர் இந்த மாமா தான்.

அந்தக் காலத்தில் விசேஷங்களோ துக்கங்களோ ஆள் பலம் அவசியம். ஏனென்றால் வெளியாட்களை நியமித்தால் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். உறவினர்கள் தான் உழைப்பை எந்த பதிலுதவியும் எதிர்பார்க்காமல் செய்வார்கள். அதில் முதன்மையானவர் என் மாமியார். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே இவரின் தன்னலம் கருதா உழைப்பையே எதிர்பார்த்திருந்தன. எல்லா விசேஷங்களும் இவர் பங்களிப்பினால் மட்டுமே சிறப்படையும். மிகவும் புத்திசாலி. எதையும் திட்டமிட்டு செய்வார். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் தன் பராமரிப்பினால் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவார். எப்படி செலவை குறைத்து நிறைவாக செய்யலாம் என்று தான் பார்ப்பார். என் அத்தை மகள் திருமணத்துக்கு வந்து இவர் ஓடியாடி செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் என் அத்தை இறந்து விட்டதால் தாயில்லா பெண் கல்யாணம் என்று சீர் சாமான் வாங்குவதில் இருந்து திருமணத்தில் உணவு பரிமாறுவது வரை உதவி செய்தார். அவரின் பிள்ளைகளை மிகவும் நன்றாக வளர்த்துள்ளார். மகன்கள் அனைவரும் வீட்டு வேலைகளை அருமையாக செய்வர். பெண் ஆணென பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் எல்லா வேலைகளிலும் நன்கு பயிற்சி அளிப்பார்.

முதலில் வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் பிள்ளைகள் எல்லாரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு அவருக்கு மகிழ்ச்சியான வாழ்வே. அந்த விதத்தில் என் மாமனார் மாமியார் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உழைப்பின் பயனை அவர்களால் பார்க்க முடிந்தது. என் மாமியார் தன் பள்ளி இறுதி வகுப்பை முடிக்காவிட்டாலும் தன் முயற்சியால் ஆங்கிலம், இந்தி, கன்னடம் கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுவார். சிறந்தத் தையல் கலை நிபுணர். அமெரிக்காவில் எங்களுடன் வாழ்ந்த போது என் மகளுக்கும் மகனுக்கும் ஹேலோவீன் காஸ்டியும் செய்து கொடுத்திருக்கிறார். {என் மகனுக்கு பேட்மேன், என் மகளுக்கு சின்டரெல்லா.} புது இடங்கள் சுற்றிப் பார்க்க, எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அவருக்கு. அமேரிக்கா வந்திருந்த போது என் மாமனார் அமைதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் இவர் டிவியில் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து எது சுவாரசியமான நிகழ்ச்சி என்றும் என்னிடம் சொல்லிவிடுவார்.

சமையல் அறையை பார்த்தால் சமைக்கும் இடமா என்று தோன்றும். அவ்வளவு துப்புரவாக இருக்கும். ஒரு இடத்தில் எண்ணெய் பிசுக்கு இருக்காது. சமையல் செய்வதை அவர் ஒரு தவமாக மேற்கொள்வார். எது செய்தாலும் அப்படியொரு ருசி! பெரிய குடும்பத்தை நிர்வகித்ததால் இருபது பேருக்கு என்றாலும் அனாயாசமாக சமைத்து விடுவார். ஸ்ரீ ராம ஜெயம் தினமும் எழுதுவார். கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்.

அவர்களின் ஐம்பதாவது திருமண நாள் விழாவும், மாமனாரின் எண்பதாவது பிறந்த நாளும் விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. என் மாமனார் இறந்த பிறகு ஒன்பது வருடங்கள் எங்களுடன் இருந்து கொள்ளுப் பேரன்கள், பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். என்பது வயதுக்கு மேல் குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு ஒடிந்து அறுவை சிகிச்சைக்குப் பின் தன் விடா முயற்சியால் திரும்பவும் நன்றாக நடக்க ஆரம்பித்து 2 கிலோமீட்டர் வரை வாக்கிங் போவார். கடைசி இரண்டு ஆண்டுகளாக dementia வந்து அவரையும் மீறி உடல் நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டார். ஆனால் அவரின் நல்ல மனசுக்கு அவரின் நான்கு வாரிசுகளும் அவரை கடைசி வரை நன்கு கவனித்துக் கொண்டனர். இறுதி முடிவும் ரொம்ப சிரமப் படாமல் வந்தது.

சேவை மனப்பான்மையோடு கர்ம யோகத்தைக் கடைபிடித்து ஆச்சாரியன் திருவடியை அடைந்த அவருக்கு என் இதயம் கனிந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பவர் பாண்டி – திரை விமர்சனம்

ராஜ் கிரணுக்காகவே எழுதப்பட்டக் கதை இது என்று சொல்லலாம். முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார் அவர். தனுஷின் கதை, இயக்கம், தயாரிப்பு இப்படம். நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறார். அதனால் அதில் பிரச்சினையில்லை. இயக்கம் முதல் முறை. சிம்பிள் கதையைத் தேர்ந்தெடுத்ததும் அதை 125நிமிடங்களில் முடித்திருப்பதும் தவறுகளைக் குறைக்க உதவியிருக்கு.

ராஜ் கிரணுக்கு அடுத்துப் பாராட்டப்பட வேண்டியவர் ஷான் ரோல்டன். அருமையான பின்னணி இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் அளவில் அதிகம். அந்தப் பாடல்களில் இரண்டை தனுஷ் கத்திரித்திருந்தால் படம் இன்னும் தொய்வில்லாமல் இருந்திருக்கும். இப்போ கூடத் தாமதமில்லை. கத்திரித்து விடலாம்.

கதையின் முதல் பாதி மிகவும் மெதுவாகப் போகிறது. பெற்றோர் பிள்ளைகள், இரு சாராருமே நல்லவர்களாக இருப்பினும் தலைமுறை இடைவெளியினால் மனக் கசப்பு ஏற்படுவதை நிறைய படங்களில் பார்த்துவிட்டோம். {ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பையே ஒரு உதாரணம்}. முதல் பாதி படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்னும் புதுசா இல்லையே என்கிற ஆயாசம் தான் ஏற்படுகிறது.

இதில் தந்தை கேரக்டர் ஒய்வு பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர். ராஜ் கிரண் பத்திரத்தில் பச்சக் என்று சரியாகப் பொருந்துகிறார். ஒரு சென்னைவாசியாக, ஆங்கிலம் கலந்து பேசும் இன்னும் மனத்தில் இளமையோடு இருக்கும் ஒரு தாத்தாவாகப் பக்காவா பிராகாசிக்கிறார் ராஜ் கிரண். அவர் மகனாக பிரசன்னாவும், மருமகளாக சாயா சிங்கும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். குட்டிப் பிள்ளைகள் இருவர் நடிப்பும் அதிகப் பிரசங்கித் தனம் இல்லாமல் நன்றாக உள்ளது. பவர் பாண்டியின் பக்கத்து வீட்டு இளைஞரும் நண்பருமாக வருவது யார் என்று தெரியவில்லை, நன்றாக செய்திருக்கிறார், நல்ல துணைப் பாத்திரம் இந்தக் கதைக்கு.

ஒரு தேடலுடன் வீட்டை விட்டுப் புறப்படும் பாண்டி சிலர் உதவியால் தன் முதல் காதலியைத் தேடிப் போகிறார். இள வயது ராஜ் கிரணாக தனுஷும், அவர் காதலியாக மடோன்னா செபாஸ்டியனும் ப்ளாஷ் பேக்கில் வருகிறார்கள். மடோன்னா இந்தப் படத்தில் முந்தையப் படங்களைவிட அழகாகத் தெரிகிறார். இதே மேக்கப்பைத் தொடர்ந்து கையாளலாம். தனுஷ் இளவயது ராஜ் கிரணாக சற்றும் பொருந்தவில்லை. இருவரின் உடல்மொழிக்கும் சம்பந்தமே இல்லை. மேலும் ராஜ் கிரணின் பாத்திரம் இளவயதில் தனுஷ் செய்யும் அலட்டல்களை செய்யுமா என்பதும் மனத்தில் நெருடுகிறது. படத்தில் அதிகத்தொய்வு ஏற்படுவது இங்கே தான்.

மடோன்னாவின் முதிர்ந்த வயது பாத்திரத்தில் ரேவதி வருகிறார். அது அருமையான தேர்வு. இருவரும் மலையாளம் என்பதாலும் நடை உடை பாவனையில் ஒரு நெருக்கம் உள்ளது. அந்நியமாகத் தெரியவில்லை. பின் பாதியில் கதை அங்கே இங்கே ஊசலாடி கடைசியில் ஒரு நல்ல முடிவுடன் முடிகிறது. கடைசி காட்சியில் இயக்குநர் தெரிகிறார். முடிவு மட்டும் தான் படத்தைக் காப்பாற்றுகிறது. ஆனாலும் பேஸ்புக்கில் அந்தச் சிறுவன் ஒருவருக்கு பிரெண்டே இல்லாமல் எதேச்சையாக அவர் பக்கத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்ப்பதெல்லாம் டூ மச்.

ஹார்லி டேவிட்சனாக பவர் பாண்டியை ரிலீஸ் பண்ண நினைத்திருப்பார் தனுஷ், ஆனால் நமக்குக் கண்ணில் தெரிவது என்னவோ பஜாஜ் தான்!

காற்று வெளியிடை – திரை விமர்சனம்

கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி – இவர்களை வைத்து ஒரு காதல் மேஜிக் செய்ய நினைத்திருக்கிறார் மணி. வருண் சக்கரபாணி {VC} லீலா ஏப்ரகாம் இருவரும் காதல் வயப்பட்டு, காதலிக்கும் தருணங்களில் {விடியோ கேசட்டில் பிரபோசல் அனுப்புவது எல்லாம் ரொம்ப ரொமாண்டிக்} மணி P.C.சர்காராக மிளிர்கிறார். மற்ற சமயங்களில் அவர் கிரிகாலனாக வலம் வருவது நம் இழப்பே.

கருப்புத் தோல், வெள்ளைத் தோல் பட்டிமன்றம் போய்கொண்டிருக்கும் சமயம் இது. அதிதியின் நிறம் பளிங்கு வெள்ளை. ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர் முகத்தின் மேல் அளவில்லாக் காதல் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிரேமில் கூட அழகு ஒரு மாசு குறையவில்லை. என்ன லைட்டிங் மேஜிக்கோ, அவர் முகத்தில் எப்பவும் ஒரு பொன்னிற ஒளி மின்னுகிறது! வில்லென வளையும் உடம்பு. லீலா ஏப்ரகாமாக மிகுந்த பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள மருத்துவராக, தன்மானம் மிகுந்தப் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் அதிதி.

கார்த்தி முந்தையப் படங்களின் சாயல் இல்லாமல் ஏர் போர்ஸ் போர் விமானத்தின் விமானியாக வெகு இயல்பாகப் பொருந்தி நன்றாக நடித்துள்ளார். உடல் மொழி கச்சிதம்! ஆனால் பாத்திரப் படைப்பில் சறுக்கல் இருப்பதால் அவர் நடிப்பு நம் மனத்தில் ரொம்பப் பதியவில்லை.  ஆணாதிக்கம் மிகுந்தவராக கார்த்தி இருப்பது ஏர்போர்ஸ்ஸில் இருப்பதாலோ என்று நாம் எண்ணும்போது அவர் குடும்ப அறிமுகத்தின் மூலம் அவர் தந்தையின் குணத்தை ஒரே சீனில் காட்டி எப்படி மகன் அவர் மாதிரி உருவாகியிருக்கார் என்று புரியவைக்கிறார் இயக்குநர். மணி ரத்னம் தெரியும் சில இடங்களில் இவ்விடமும் ஒன்று.

கார்கில் போர் சமயத்தில் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது. எந்த விதத்திலும் கார்கில் போரின் அரசியலோ, போர் வியுகங்களோ கதையில் இல்லை. எந்தப் போரில் வேண்டுமானாலும் இக்கதை நடப்பதாகக் கட்டப்பட்டிருக்கலாம். என்ன ஒன்று, ஈமெயிலும் செல்போனும் பரவலாக இல்லாக் காலம் எனக் கொள்ள கார்கில் போர் காலகட்டம் உதவுகிறது.

கார்த்தி போர்க் கைதியாவதோ, அதன் பின் தப்பித்து வெளியே வரும் முயற்சிகளிலோ எதிலுமே துளி சஸ்பென்ஸ் இல்லை. அதே போல ஜெயிலில் துன்புறுத்தப்பட்டு அடைபட்டுக் கிடக்கும் காலத்தில் அவரின் ஆணாதிக்கக் குணம் மாறி தன்னைத் தாண்டி பிறரை நினைக்கும் குணம் எவ்வாறு வந்தது என்பதற்கும் நம்பவைக்கும் அளவில் காட்சியமைப்போ திரைக்கதையோ இல்லை.

படம் முழுவதும் நடப்பது ஸ்ரீநகர், லடாக், ஹிமாச்சல் பிரதேசம் பகுதிகளில். {ஆனால் படமாக்கப்பட்டது குன்னூர் கொடைக்கானலாம்} கண்ணுக்கு விருந்து வைக்கிறார் ரவி வர்மன். விமானம் பயணிக்கும்போது நாமும் அதில் பயணிக்கிறோம். பனி மலையில் நாமும் நடக்கிறோம். அருமையான ஒளிப்பதிவு! இசை ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையும் (குத்தப் ஈ கிருபா} படத்துக்குப் பலம் சேர்க்கிறது. செட் டிசைனும் நன்றாக உள்ளது.

ஒகே கண்மணியில் சேர்ந்து வாழ்வது சகஜமான ஒன்றாகச் சொல்லியிருந்தார் மணி. இப்படத்தில் இரு சம்பவங்களில் திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் தரித்து அதுவும் இயல்பென காட்டுகிறார். இன்னும் அந்தளவு தமிழ்க் கலாச்சாரம் மாறிவிடவில்லை என்றே எண்ணுகிறேன்.

ஆனால் ஒரு நல்ல பாயிண்டை பெண்கள் சார்பாக சொல்ல வந்திருக்கிறார் மணி. அதற்கு அவரை பாராட்டவேண்டும். பெண்ணை மதிக்காத காதலன்/கணவனோடு எவ்வளவு தான் காதலிக்கும்/மனைவிக்கும் அவன் மேல் அன்பிருந்தாலும் அந்த abusive relationshipல் வாழ வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்பதை அதிதி பாத்திரம் மூலம் உணர்த்துகிறார். ஆனால் படத்தை சுபமாக முடிக்க வேண்டும் என்பதால் விசி மாறிவிட்டதாகக் காட்டி அவர்களை இணைய வைத்திருப்பது சொல்ல வந்தக் கருத்தை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

திரைக்கதையில் நிறைய ஓட்டைகள் இருந்தும் அதை சரி செய்ய மணி மெனக்கிடாதது ஏன் என்று தெரியவில்லை. அழகானக் காதல் கதையாக வந்திருக்க வேண்டியது. காதலன் காதலி இருவர் உணர்வுகள் மீதும் நம்மால் ஒன்ற முடியாததால் படம் முடிந்து வெளியே வரும்போது காற்றே கொட்டாவியாக வருகிறது.

கவண் – திரை விமர்சனம்

தூர்தர்ஷன் காலத்தில் செய்தி வெறும் நடப்பு செய்தியாக இருந்தது. ஆனால் இன்றோ பரபரப்பான பிரேக்கிங் நியுசுக்கு அடிமையாகிவிட்ட பார்வையாளர்களை எப்படி தங்கள் சேனலையே பார்க்குமாறு தக்க வைத்துக் கொள்ளவும், டிஆர்பி ரேடிங்கை உயர்த்தவும் தகிடு தத்தம் வேலை செய்யும் இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் உண்மை முகத்தைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அவர் கதைக்கு உதவி எழுத்தாளர் சுபா.

ஒரு நல்ல ஊடவியலாளராக வர உழைக்கும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. முதலில் வரும் கெட் அப்பில் நன்றாக இருக்கிறார். அப்படியே தொடர்ந்து இருந்திருக்கலாம். ஒரு மாறுதலான முக அமைப்பைப் புது சிகை அலங்காரம் அவருக்குக் கொடுத்தது. மெருகேறிய நடிப்பு விஜய் சேதுபதிக்கு. அவருக்குத் துணை பாத்திரமாக மடோன்னா செபாஸ்டியன். அவரும் மிகவும் நன்றாக நடிக்கிறார். டண்டணக்கா டணக்குணக்கா என பாத்திரக் கடைக்குள் யானை புகுந்தார் போல டி.ஆர் எட்டு வருடத்திற்குப் பிறகு ரீ என்டிரி! ஒரு ராஜ் டிவி மாதிரி சேனலின் உரிமையாளராக வருகிறார். முதலில் சில சீன்களில் எரிச்சல் படுத்தினாலும் பின் பாதியில் அதகளப் படுத்துகிறார்.

ஆகாஷ்தீப் செய்கால் அயன் படத்தில் வில்லன், இந்தப் படத்திலும் அவரே. நன்றாக தடித்து வயதும் ஏறியிருக்கிறார். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் தானே. ரொம்ப சுமாரான நடிப்பு. இவரைத் தவிர நாசர், ஜெகன், விக்ராந்த், பாண்டியராஜன் & நமது ட்விட்டர் கிரேசி கோபாலும் நடித்துள்ளனர். பாண்டியராஜனின் குரலில், வார்த்தை உச்சரிப்பில் அவ்வளவு தெளிவில்லை.

இசை ஹிப் ஹாப் தமிழா. ஆக்சிஜன் பாடல் தவிர வேறு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. கே.வி.ஆனந்த் எடிட்டிங், ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை. தேவையற்ற இடங்களில் பாடல்களும் நடனங்களும் படத்தில் தொய்வை ஏற்படுத்துகின்றன.

உண்மைக்கு முக்கியத்துவம் தராமல் பணத்துக்காக எப்படி ஊடக இயக்குநர்கள் எந்தக் கீழ் தரத்துக்குப் போகவும், குற்றம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கதைக் கரு. பாலியல் தொல்லைக்கு உட்பட்ட பெண்ணுக்கு ஊடகங்கள் எப்படி தனி மனித அந்தரங்கத்துக்கு மதிப்பளிக்காமல் வெட்ட வெளியில் போட்டுடைக்கின்றன, அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனக் கஷ்டம் இவை காட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் எடுத்துக் கொண்ட எந்தச் சம்பவத்திலும் சுவாரசியமே இல்லை. ரகுவரன் அர்ஜுன் முதல்வன் பேட்டி மாதிரி இதில் போஸ் வெங்கட்டுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு நச் பேட்டி உள்ளது. அதுவும் க்ளைமேக்சிலும் மட்டுமே கொஞ்சம் சுவாரசியம். நிறைய விஷயங்களை சொல்ல முற்பட்டிருக்கிறார்கள், எதிலுமே முழுமை இல்லை. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.

நீயா நானா கோபி, கலந்துரையாடல் ஏங்கர்கள் குஷ்பூ, இலட்சுமி இராமகிருஷ்ணன், போன்றவர்களை நன்றாக கலாய்த்திருக்கிறார்கள். ஆனால் கதை, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று போய் ஒரு மாதிரி இஸ்லாம், தீவிரவாதி என்று பின்னிப் பிணைத்து முடிகிறது.

சில நல்ல சீன்கள் உள்ள சுமாரான படம் கவண். அவர் இயக்கியப் படங்களில் அயனுக்குப் பிறகு கோ பரவாயில்லை. அதன் பின் வந்த மாற்றான் சொதப்பல். அநேகனுக்கு அவர் எழுதிய திரைக்கதையை விட அப்படத்தைப் பார்த்தவர்கள் அளித்தப் பொழிப்புரை இன்னும் சுவாரசியமாக இருந்தது. உண்டிவில்லை இன்னும் கொஞ்சம் டைட்டா இழுத்து விட்டிருக்கலாம் – கவண்.