கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி – இவர்களை வைத்து ஒரு காதல் மேஜிக் செய்ய நினைத்திருக்கிறார் மணி. வருண் சக்கரபாணி {VC} லீலா ஏப்ரகாம் இருவரும் காதல் வயப்பட்டு, காதலிக்கும் தருணங்களில் {விடியோ கேசட்டில் பிரபோசல் அனுப்புவது எல்லாம் ரொம்ப ரொமாண்டிக்} மணி P.C.சர்காராக மிளிர்கிறார். மற்ற சமயங்களில் அவர் கிரிகாலனாக வலம் வருவது நம் இழப்பே.
கருப்புத் தோல், வெள்ளைத் தோல் பட்டிமன்றம் போய்கொண்டிருக்கும் சமயம் இது. அதிதியின் நிறம் பளிங்கு வெள்ளை. ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர் முகத்தின் மேல் அளவில்லாக் காதல் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிரேமில் கூட அழகு ஒரு மாசு குறையவில்லை. என்ன லைட்டிங் மேஜிக்கோ, அவர் முகத்தில் எப்பவும் ஒரு பொன்னிற ஒளி மின்னுகிறது! வில்லென வளையும் உடம்பு. லீலா ஏப்ரகாமாக மிகுந்த பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள மருத்துவராக, தன்மானம் மிகுந்தப் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் அதிதி.
கார்த்தி முந்தையப் படங்களின் சாயல் இல்லாமல் ஏர் போர்ஸ் போர் விமானத்தின் விமானியாக வெகு இயல்பாகப் பொருந்தி நன்றாக நடித்துள்ளார். உடல் மொழி கச்சிதம்! ஆனால் பாத்திரப் படைப்பில் சறுக்கல் இருப்பதால் அவர் நடிப்பு நம் மனத்தில் ரொம்பப் பதியவில்லை. ஆணாதிக்கம் மிகுந்தவராக கார்த்தி இருப்பது ஏர்போர்ஸ்ஸில் இருப்பதாலோ என்று நாம் எண்ணும்போது அவர் குடும்ப அறிமுகத்தின் மூலம் அவர் தந்தையின் குணத்தை ஒரே சீனில் காட்டி எப்படி மகன் அவர் மாதிரி உருவாகியிருக்கார் என்று புரியவைக்கிறார் இயக்குநர். மணி ரத்னம் தெரியும் சில இடங்களில் இவ்விடமும் ஒன்று.
கார்கில் போர் சமயத்தில் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது. எந்த விதத்திலும் கார்கில் போரின் அரசியலோ, போர் வியுகங்களோ கதையில் இல்லை. எந்தப் போரில் வேண்டுமானாலும் இக்கதை நடப்பதாகக் கட்டப்பட்டிருக்கலாம். என்ன ஒன்று, ஈமெயிலும் செல்போனும் பரவலாக இல்லாக் காலம் எனக் கொள்ள கார்கில் போர் காலகட்டம் உதவுகிறது.
கார்த்தி போர்க் கைதியாவதோ, அதன் பின் தப்பித்து வெளியே வரும் முயற்சிகளிலோ எதிலுமே துளி சஸ்பென்ஸ் இல்லை. அதே போல ஜெயிலில் துன்புறுத்தப்பட்டு அடைபட்டுக் கிடக்கும் காலத்தில் அவரின் ஆணாதிக்கக் குணம் மாறி தன்னைத் தாண்டி பிறரை நினைக்கும் குணம் எவ்வாறு வந்தது என்பதற்கும் நம்பவைக்கும் அளவில் காட்சியமைப்போ திரைக்கதையோ இல்லை.
படம் முழுவதும் நடப்பது ஸ்ரீநகர், லடாக், ஹிமாச்சல் பிரதேசம் பகுதிகளில். {ஆனால் படமாக்கப்பட்டது குன்னூர் கொடைக்கானலாம்} கண்ணுக்கு விருந்து வைக்கிறார் ரவி வர்மன். விமானம் பயணிக்கும்போது நாமும் அதில் பயணிக்கிறோம். பனி மலையில் நாமும் நடக்கிறோம். அருமையான ஒளிப்பதிவு! இசை ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையும் (குத்தப் ஈ கிருபா} படத்துக்குப் பலம் சேர்க்கிறது. செட் டிசைனும் நன்றாக உள்ளது.
ஒகே கண்மணியில் சேர்ந்து வாழ்வது சகஜமான ஒன்றாகச் சொல்லியிருந்தார் மணி. இப்படத்தில் இரு சம்பவங்களில் திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் தரித்து அதுவும் இயல்பென காட்டுகிறார். இன்னும் அந்தளவு தமிழ்க் கலாச்சாரம் மாறிவிடவில்லை என்றே எண்ணுகிறேன்.
ஆனால் ஒரு நல்ல பாயிண்டை பெண்கள் சார்பாக சொல்ல வந்திருக்கிறார் மணி. அதற்கு அவரை பாராட்டவேண்டும். பெண்ணை மதிக்காத காதலன்/கணவனோடு எவ்வளவு தான் காதலிக்கும்/மனைவிக்கும் அவன் மேல் அன்பிருந்தாலும் அந்த abusive relationshipல் வாழ வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்பதை அதிதி பாத்திரம் மூலம் உணர்த்துகிறார். ஆனால் படத்தை சுபமாக முடிக்க வேண்டும் என்பதால் விசி மாறிவிட்டதாகக் காட்டி அவர்களை இணைய வைத்திருப்பது சொல்ல வந்தக் கருத்தை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.
திரைக்கதையில் நிறைய ஓட்டைகள் இருந்தும் அதை சரி செய்ய மணி மெனக்கிடாதது ஏன் என்று தெரியவில்லை. அழகானக் காதல் கதையாக வந்திருக்க வேண்டியது. காதலன் காதலி இருவர் உணர்வுகள் மீதும் நம்மால் ஒன்ற முடியாததால் படம் முடிந்து வெளியே வரும்போது காற்றே கொட்டாவியாக வருகிறது.
Apr 08, 2017 @ 10:43:11
கடைசில காற்று வெளியிடை காற்றோடு போயாச்சுன்னு சொல்றீங்க. நாளைக்குப் போய் படம் பாக்கப் போறேன்.
Apr 08, 2017 @ 15:17:30
முக தாட்சினை சிறிதும் இல்லாத விமர்சனம் ! சமகால விமர்சகர்கள் மத்தியில் நீங்கள் தனி ரகம் !
Apr 09, 2017 @ 03:01:23
//திருமண த்திற்கு முன்பே பெண் கர்ப்பம் தரித்து அதுவும் இயல்பென காட்டுகிறார். இன்னும் அந்தளவு தமிழ்க் கலாச்சாரம் மாறிவிடவில்லை // கமல் ஆளவந்தானிலையே காட்டியுள்ளார். Honest review as usual. As barathwaj raglan wrote “a good cinema if not good movie”.