ராஜ் கிரணுக்காகவே எழுதப்பட்டக் கதை இது என்று சொல்லலாம். முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார் அவர். தனுஷின் கதை, இயக்கம், தயாரிப்பு இப்படம். நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறார். அதனால் அதில் பிரச்சினையில்லை. இயக்கம் முதல் முறை. சிம்பிள் கதையைத் தேர்ந்தெடுத்ததும் அதை 125நிமிடங்களில் முடித்திருப்பதும் தவறுகளைக் குறைக்க உதவியிருக்கு.
ராஜ் கிரணுக்கு அடுத்துப் பாராட்டப்பட வேண்டியவர் ஷான் ரோல்டன். அருமையான பின்னணி இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் அளவில் அதிகம். அந்தப் பாடல்களில் இரண்டை தனுஷ் கத்திரித்திருந்தால் படம் இன்னும் தொய்வில்லாமல் இருந்திருக்கும். இப்போ கூடத் தாமதமில்லை. கத்திரித்து விடலாம்.
கதையின் முதல் பாதி மிகவும் மெதுவாகப் போகிறது. பெற்றோர் பிள்ளைகள், இரு சாராருமே நல்லவர்களாக இருப்பினும் தலைமுறை இடைவெளியினால் மனக் கசப்பு ஏற்படுவதை நிறைய படங்களில் பார்த்துவிட்டோம். {ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பையே ஒரு உதாரணம்}. முதல் பாதி படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்னும் புதுசா இல்லையே என்கிற ஆயாசம் தான் ஏற்படுகிறது.
இதில் தந்தை கேரக்டர் ஒய்வு பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர். ராஜ் கிரண் பத்திரத்தில் பச்சக் என்று சரியாகப் பொருந்துகிறார். ஒரு சென்னைவாசியாக, ஆங்கிலம் கலந்து பேசும் இன்னும் மனத்தில் இளமையோடு இருக்கும் ஒரு தாத்தாவாகப் பக்காவா பிராகாசிக்கிறார் ராஜ் கிரண். அவர் மகனாக பிரசன்னாவும், மருமகளாக சாயா சிங்கும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். குட்டிப் பிள்ளைகள் இருவர் நடிப்பும் அதிகப் பிரசங்கித் தனம் இல்லாமல் நன்றாக உள்ளது. பவர் பாண்டியின் பக்கத்து வீட்டு இளைஞரும் நண்பருமாக வருவது யார் என்று தெரியவில்லை, நன்றாக செய்திருக்கிறார், நல்ல துணைப் பாத்திரம் இந்தக் கதைக்கு.
ஒரு தேடலுடன் வீட்டை விட்டுப் புறப்படும் பாண்டி சிலர் உதவியால் தன் முதல் காதலியைத் தேடிப் போகிறார். இள வயது ராஜ் கிரணாக தனுஷும், அவர் காதலியாக மடோன்னா செபாஸ்டியனும் ப்ளாஷ் பேக்கில் வருகிறார்கள். மடோன்னா இந்தப் படத்தில் முந்தையப் படங்களைவிட அழகாகத் தெரிகிறார். இதே மேக்கப்பைத் தொடர்ந்து கையாளலாம். தனுஷ் இளவயது ராஜ் கிரணாக சற்றும் பொருந்தவில்லை. இருவரின் உடல்மொழிக்கும் சம்பந்தமே இல்லை. மேலும் ராஜ் கிரணின் பாத்திரம் இளவயதில் தனுஷ் செய்யும் அலட்டல்களை செய்யுமா என்பதும் மனத்தில் நெருடுகிறது. படத்தில் அதிகத்தொய்வு ஏற்படுவது இங்கே தான்.
மடோன்னாவின் முதிர்ந்த வயது பாத்திரத்தில் ரேவதி வருகிறார். அது அருமையான தேர்வு. இருவரும் மலையாளம் என்பதாலும் நடை உடை பாவனையில் ஒரு நெருக்கம் உள்ளது. அந்நியமாகத் தெரியவில்லை. பின் பாதியில் கதை அங்கே இங்கே ஊசலாடி கடைசியில் ஒரு நல்ல முடிவுடன் முடிகிறது. கடைசி காட்சியில் இயக்குநர் தெரிகிறார். முடிவு மட்டும் தான் படத்தைக் காப்பாற்றுகிறது. ஆனாலும் பேஸ்புக்கில் அந்தச் சிறுவன் ஒருவருக்கு பிரெண்டே இல்லாமல் எதேச்சையாக அவர் பக்கத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்ப்பதெல்லாம் டூ மச்.
ஹார்லி டேவிட்சனாக பவர் பாண்டியை ரிலீஸ் பண்ண நினைத்திருப்பார் தனுஷ், ஆனால் நமக்குக் கண்ணில் தெரிவது என்னவோ பஜாஜ் தான்!
Apr 14, 2017 @ 14:51:49
படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. ஒருவாட்டி பாக்கலாம் போல.
Apr 14, 2017 @ 18:07:37
Harley Davidson vs Bajaj உதாரணம்.. டாப்.
Apr 15, 2017 @ 07:22:19
நான் ரொம்ப எதிர்பார்த்தேன். அப்ப சுமார்தான் போல. படம் தயாரிப்பது என்பது ரொம்ப கஷ்டமான வேலை. அதிலும் போட்ட பணத்தை எடுப்பது ரொம்ப கஷ்டம். எத்தனையோ விமர்சகர்கள் எத்தனையோ படங்களுக்கு தவறு நடந்தது எங்கு என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் சொதப்பிவிடுகிரார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும். எல்லாம் அவிங்க அவிங்க விதி :))
Harley Davidson vs Bajaj உதாரணம்.. டாப்.:))
May 23, 2017 @ 18:04:01
படம் பார்த்தாச்சு :)) நீங்க சொன்னதெல்லாம் நூத்துக்கு நூறு + :)) எல்லோருமே நன்கு நடித்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப பிடித்தது ரேவதியின் இயல்பான நடிப்பு 🙂 வாழ்த்துக்கள் :))