ஆங்கிலப் படங்களில் வரும் ஜேம்ஸ் பான்ட், ஜேசன் போர்ன் போல் ஒற்றை ஆள் ராணுவமாக ஒரு உளவுத் துறையைச் சேர்ந்த/ தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கும் அஜய் குமார் என்னும் கதாபாத்திரமாக அஜித் அதகளம் செய்திருக்கும் படம் விவேகம். இந்த மாதிரி படங்களில் கதாநாயகர்கள் புரியும் சாகசங்களும், அவர்கள் பயன்படுத்தும் தொழிநுட்பக் கருவிகளும் உண்மைத் தன்மைக்கு அதிகப்படியாகத் தான் இருக்கும். படம் பார்க்கப் போகிறவர்கள் அவைகளை எதிர்பார்த்தே போகவேண்டும்.
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை அஜித்தின் தோள்களிலேயே பயணிக்கிறது. அஜித் நல்லவராக வல்லவராக காட்சிப் படுத்தப் படுகிறார். அது அவருக்கு சரியாகப் பொருந்துகிறது. நல்ல கணவராக, தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கும் சாகசக்காரராக வலம் வருகிறார். இடைவேளை சமீபத்தில் படம் சூடு பிடிக்கிறது. விவேக் ஓபிராய் நல்லவரா கெட்டவரா என்று படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அஜித்துக்கு ஈடாக சக பத்திரத்தில் வந்து நன்றாக செய்துள்ளார். இந்தப் படத்தில் அஜித் அடித்துத் துவம்சம் செய்யும் பெரும்பாலானவர்களும் ஐரோப்பா நாடுகளை சேர்ந்தவர்கள். ஆள்கள் எல்லாம் படு முரடாக அகலுமும் உயருமாமாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பந்தாடுகிறார் அஜித். அக்ஷரா ஒரு சிறிய பாத்திரத்தில் வருகிறார். ஆனால் வெகு அழகாகப் பொருந்துகிறார். முகத்தை மறைக்கும் பனிக் குல்லாவுடன் வருவதினால் முகத்தில் உணர்ச்சிகள் காட்டவேண்டிய வேலையில் இருந்து எளிதாக தப்பித்து விடுகிறார். முகத்தைக் காட்டும் சில இடங்களிலும் பெரிய பச்சைக் கண்களும் குழந்தை முகமும் பாஸ் செய்ய வைத்து விடுகிறது. உதாரண மனைவியாக காஜல் ஜொலிக்கிறார். அவருக்கு நடிக்க வாய்ப்புள்ளது, பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுப்பவரே இவருக்கும் கொடுத்திருப்பதால் பல சமயங்களில் ஐஸ்வர்யா ராய் முகம் தான் மனத்தில் தோன்றுகிறது.
மிகவும் கடுப்படிப்பவர்கள் லொள்ளு சபா சுவாமிநாதனும், கருணாகரனும். காமெடி என்னும் பெயரில் ரொம்ப இம்சை படுத்துகிறார்கள். அனிருத் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னணி இசை கதையின் வேகத்துக்கு ஈடு கொடுக்கிறது. செர்பியா நாட்டின் நகரப்பகுதிகளையும், அழகிய பனி படர்ந்த காடுகளையும் ஒளிப்பதிவாளர் வெற்றி நூறு ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் நமக்குக் காண கொடுத்துவிடுகிறார். ஆனால் எடிடிங் கண்ணை வலிக்க வைத்து விடுகிறது, காட்சிகள் வேகமாக நகர நகர சில சமயம் கண்ணை மூடிக் கொண்டு சுதாரித்துக் கொள்ள வேண்டியிருக்கு. தேர்ந்த எடிடர் ரூபன் தான் எடிட் செய்துள்ளார். தவறு இயக்குனருடையதா இல்லை ஒளிப்பதிவாருடையதா இல்லை எடிட்டருடையதா என்று தெரியவில்லை.
இந்த மாதிரி படங்களில் பெரிதாக கதையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் திரைக் கதை நன்றாக இருக்க வேண்டும். அதில் இயக்குநர் சிவா இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எல்லாருடைய உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராக இருக்கக் கூடாது, ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்ய வேண்டியது இயக்குநரின் கடமை. எதற்காக அக்ஷராவை தேடுகிறார்கள் என்று புரியவே இல்லை. சரி ஏதோ தேடுகிறார்கள் பார்ப்போம் என்று பார்க்க வேண்டியுள்ளது. ஒரு பெரிய fan base இருக்கும் நடிகரை வைத்துப் படம் இயக்கம் போது பொறுப்பு அதிகமாகிறது. அதை உணரும் இயக்குநர்களே வெற்றி பெறுகிறார்கள். வசனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அஜித் எல்லா வசனகளையும் மிகவும் நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார். அதையெல்லாம் சரி படுத்தி சில இடங்களில் மட்டும் அவ்வாறு பேச வைத்து மற்ற இடங்களில் மாடுலேஷனை மாற்ற சொல்லியிருக்க வேண்டும் இயக்குநர்.
அடுத்தப் படம் இந்தக் குறைகள் எல்லாம் இல்லாமல் நிறைவாக வர வாழ்த்துகள்.