ஸ்பைடர் – திரை விமர்சனம்

இது ஒரு சைக்கோ திரில்லர் படம். சைக்கோ எஸ்.ஜே.சூர்யா. அவரை கண்டுபிடித்து அவர் செய்யும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது tech savvy ஹீரோவான மகேஷ் பாபு. மகேஷ் பாபு ஆண் அழகராக உள்ளார். நல்ல அமுல் பேபி முகம். எல்லா சமயத்திலும் ஒரே முக உணர்ச்சியுடன் இருப்பதை ஒரு வித ஜேம்ஸ் பாண்ட் தனமான நடிப்பு என்றும் பாராட்டலாம் அல்லது நடிக்க வரவில்லை என்றும் சொல்லலாம். நமக்கு அவரைப் பிடித்தால் முன்னது இல்லாவிட்டால் பின்னது. ஹீரோ செய்யும் சாகசங்கள் ஸ்பைடர் மேனும் இல்லை, சூப்பர் மேனும் இல்லை. பேட் மேன் ரகம்.

பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு தேவை ஏற்படும்போது அவர்களுக்கு அபாயம் ஏற்படும் முன்னரே உதவும் ஒரு வேலையை செய்கிறார் மகேஷ் பாபு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் பெரிய வேலை அவருக்கு வருகிறது. அந்தக் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் அதன் பின் என்னவாகிறது, எவ்வளவு கேடுகள் நடக்கின்றன என்பதை வெள்ளித் திரையில் பார்க்கலாம். இப்படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டிருப்பதால் நடனங்கள் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் உள்ளன.

எஸ்.ஜே.சூர்யா சைக்கோ பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறார். அவர் பண்ணும் சேட்டைகள், கொலைவெறி தாக்குதல் எல்லாம் எரிச்சல் ஏற்படுத்தும் சிறந்த நடிப்பு! முழுக்க முழுக்க கெட்டவன் பாத்திரம். கதையை வளர்த்த வேண்டும் என்று பிடிபட்டும் தப்பிக்கிறார்.

ராகுல் {ரகுல்?} பரீத் நாயகி. பார்க்காமலே காதல், கடிதம் மூலம் காதல், நாக்கை அறுத்துக் கொண்டு காதல், இன்டர்நெட் காதல் எல்லாம் போய் இப்போ காதலே கிடையாது, தேவைக்கு செக்ஸ் என்று முன்னேறியிருக்கிறது ஹீரோ ஹீரோயின் கதைப் பாகம். நல்ல முன்னேற்றம்! Friends with benefitsஆம். இதில் கொடுமை என்னவென்றால் U/A செர்டிபிகெட் கொடுக்கப்பட்டும் மக்கள் குழந்தைகளுடன் படத்துக்கு வந்திருந்தனர். என் அருகில் உட்கார்ந்திருந்த எட்டு வயது சிறுமி அடுத்து என்ன வரப்போகிறது என்று இட்சிணியாட்டம் சொல்லிக் கொண்டே வந்தார். முருகதாஸ் போன்ற பெரிய இயக்குநர்களும் பெண்களை வெறும் bimbosஆக பயன்படுத்துவது வேதனைக்குரியது.

ஹீரோ தன் குடும்பத்தை சமயோஜித அறிவைக் கொண்டு காப்பாற்றும் காட்சி அருமை. வில்லனை வளைத்துப் பிடிக்க சீரியல் பார்க்கும் குடும்பத் தலைவிகளைப் பயன்படுத்தியதும் நல்ல யுக்தி. ஆனால் குண்டு பெண்கள் ஏறி, இறங்கி, குதித்து, சாகசம் செய்வது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. நம்பகத் தன்மையைத் தள்ளிவைத்து விட்டு அந்தக் காட்சியை ரசிக்கலாம். ஆனால் அதுக்காக மிகப் பெரிய பாறை உருண்டு ஒடி வருவதை ஒரு பெரிய வண்டி மூலம் ஹீரோ தடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர். கடைசியில் கட்டடம் இடிபாடுகளிடையே நடக்கும் சண்டையும் அதே ரகம்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் எடிடிங் ஸ்ரீகர் பிரசாத் படத்தின் நீளத்தைக் குறைத்து இருக்கலாம். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹீரோ வில்லனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நமக்குத் தெரிந்திருந்தாலும் நம்மை சீட்டில் உட்காரவைப்பது சுவாரசியமான திரைக் கதை தான். அது இப்படத்தில் சில இடங்களில் நன்றாக உள்ளது, சில இடங்களில் காணவே இல்லை. வசனங்கள் சில இடங்களில் பளிச், அதே மாதிரி கடைசி மெச்செஜும். முருகதாசின் கடினச் சாவு விசிறிகளுக்கான படம் இது.

மகளிர் மட்டும் – திரை விமர்சனம்

இந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. எந்த மணமான பெண்ணுக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது இதில் எந்த ஒரு பகுதியாவது அவர்கள் வாழ்வில் அனுபவித்ததாக, சொல்ல நினைத்ததாக, செய்யத் துடித்ததாக இருக்கும் என்பது உறுதி. முற்றிலுமாக பெண்கள் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள படம்.

1978ல் கல்லூரியில் படிக்கும்போது பாதியில் பிரிந்த மூன்று உயிர்த் தோழிகள் தங்கள் ஐம்பதுகளில் சந்திக்கும்போது ஏற்படும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, தவிப்பு என பல உணர்வுகளை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. குடும்ப பாரத்தில் உழலும் இவர்களை சந்திக்க வைப்பது காட்டாற்று வெள்ளம் போல் தங்கு தடையின்றி சுதந்திரமாக ஒரு ஆணைப் போல் தனக்குப் பிடித்தததை செய்யும் பாத்திரத்தில் வரும் ஜோதிகா. நாற்பது வருடங்கள் கழித்து சந்திக்கும் மூவராக ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் கலக்குகிறார்கள். அருமையான தேர்வு. அதில் மற்றவர்களை ஊர்வசி தன் இயல்பான நடிப்பினால் சற்றே ஓவர்டேக் செய்துவிடுகிறார்.

இளம் வயது பாத்திரதிரங்களில் வரும் மூன்று பெண்களையும் அதே சாயலில் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு கண்டிப்பான கிருஸ்துவ பள்ளி, அதன் விடுதியில் தாங்கும் இம்மூவர் செய்யும் சேட்டைகள், கடைசியில் விளையாட்டு வினையாகி மூவரும் பிரிவது என கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை நிகழ் காலக் கதையோடு மாறி மாறி காட்டி சுவாரசியமாக எடுத்து செல்கிறார் இயக்குநர்.

குடியரசு ஆட்சியை மக்களால் மக்களுக்காக என்பார்கள். அது மாதிரி இந்தப் படம் பெண்களால் பெண்களுக்காக என்று இருந்தாலும் ஆண் மக்கள் இதைப் பார்த்தால் பெண்ணின் உணர்வுகள், அவர்கள் படும் சிரமம், செய்யும் தியாகம் அனைத்தும் கொஞ்சம் புரியலாம். இதில் ஒரு காட்சியில் பானுப்ரியாவின் மருமகளுக்கு இடுப்பு வலி எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவரின் பின்புறம் இரத்தம் தோய்ந்திருக்கும். சாதாரணமாக அடி தடி சண்டையில் தான் நாம் படங்களில் இரத்தத்தைப் பார்க்கிறோம். அந்த வன்முறை இரத்தத்தை விட இந்த ஒரு காட்சி சொல்கிறது பொருள் ஆயிரம்.

எவ்வளவு தான் நல்ல குடும்பம் அமைந்தாலும் நட்புகளிடம் இருக்கும் நெருக்கும் உறவுகளில் கிடைப்பது அபூர்வமே. அதுவும் இளமையில் ஏற்படும் எந்த எதிர்பார்ப்பும் இல்லா நட்பு பெரும் வரமாகும். அதைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். முக்கால்வாசி படம் ஆக்ரா, சட்டிஸ்கரில் நடக்கிறது. இயற்கை காட்சிகள் அழகு. ஜிப்ரானின் பாடல்களும் இசையும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

ஜோதிகா சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். அது ஒரு மைனசாக உள்ளது. முக உணர்சிகளை விட குரல் அதிகமாக ஓவர் ஏக்டிங் செய்கிறதோ எனத் தோன்றுகிறது. மாயாவியில் அந்தப் பாத்திரத்துக்கு அவர் சொந்தக் குரல் ரொம்ப சரியாக பொருந்தியது.  மற்றபடி அவரின் இந்தப் பாத்திரம் அவர் உண்மை வாழ்க்கையில் இருப்பதற்கு அருகில் இருக்கும் போலத் தோன்றுகிறது. சிரமிமில்லாமல் செய்திருக்கிறார். எடை குறைந்து மிகவும் பொலிவுடன் விளங்குகிறார்.

சரண்யாவின் கணவனாக வரும் லிவிங்க்ஸ்டன் சின்ன வேடத்தில் வந்தாலும் steals the show. குடிகாரக் கணவன், ஆனால் அவர் நடிப்பும், கடைசியில் அவர் தொலைபேசியில் ஜோதிகாவிடம் ஒரு முக்கியத் தகவல் சொல்லும்போது அவர் எடுக்கும் முடிவும் அவர் பாத்திரத்தை உயர்த்துகிறது, அவர் நடிப்பினாலும் அந்த இடம் அதிக வலுவைப் பெறுகிறது.  பானுப்ரியாவின் கணவராக நாசர். அவரும் வடக்கத்தி அரசியல்வாதியாக பக்காவாக உள்ளார்.

குறைகள் என்று பார்க்கும்போது எல்லா பெண்களும் சுதந்திரம் அற்றும், திருமணத்திற்குப் பிறகு சுய வாழ்க்கையைத் தொலைத்தது போலும் காட்டப் படுவது செயற்கையாக உள்ளது. மேலும் எல்லா ஆண்களும் {ஜோதிகாவின் ஜோடி தவிர} மோசமான கணவனாக இக்கதைக்காக சித்தரிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. பானுப்ரியாவின் மகன் சட்டென்று ஒரு சம்பவத்தால் மனம் மாறுவதும் சிநிமேடிக். நடுவில் ஒரு கீழ் சாதி, மேல் சாதி கலப்புத் திருமணம் வருகிறது. அதை சேர்த்ததால் ஜோதிகா பாத்திரம் துணிச்சலான பெண் என்பதைத் தவிர வேறு எந்த மேச்செஜும் தரவில்லை.

படம் நடிகர் சூரியாவின் தயாரிப்பு. மனைவிக்காக அவர் செய்திருக்கும் இத்தயாரிப்புப் பாராட்டுக்குரியது :-}

துப்பறிவாளன் – திரை விமர்சனம்

விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்கியராஜ், சிம்ரன் என பல பெரிய பெயர்களுடன் வெளி வந்துள்ளது மிஸ்கினின் புதிய படைப்பு துப்பறிவாளன். ஷெர்லக் ஹோமேஸ் கதைகளின் தழுவல் என்று முதலிலேயே டைட்டிலில் வந்துவிடுகிறது. அதனால் விஷால் தான் ஷெர்லக் ஹோம்ஸ், பிரசன்னா தான் வாட்சன் என்று நாம் தொடக்கத்திலேயே முடிவு பண்ணிக் கொண்டுவிடலாம்.  அதே மாதிரி ஒரு மர்மத்தை/கொலையைத் துப்புத் துலக்கப் போய் பெரிய மர்மத்தை வெளிக் கொண்டுவருவது தான் படத்தின் கதையும்.

விஷால் ரொம்ப ஃபிட்டாக இருக்கிறார். சுறுசுறுப்பு, விறுவிறுப்பு எல்லாம் சமவிகிதத்தில் அவர் உடல் மொழியில் உள்ளது. துப்பறிவாளராக செமையாகப் பாத்திரத்தில் பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடுகிறார். ஆனால் கேசை கொண்டுவருபவரை பார்த்த மாத்திரத்தில் அது என்ன கேஸ், கொண்டுவருபவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லும்போது அவர் யூகிப்பதற்கான காரணங்களும் நமக்குத் தெரிய வேண்டும் அல்லவா? ஒரு சம்பவம் தவிர்த்து அது விளக்கப்படவில்லை. அவர் அதி புத்திசாலி என்பது எதனால் அவர் யூகிக்கிறார் என்பதை வைத்து தானே நாம் புரிந்து கொள்ள முடியும்? மிஸ்கின் அதற்கெல்லாம் மெனக்கெடவில்லை.

பிரசன்னா விஷாலுக்குத் துணை பாத்திரம். ரொம்ப அனாயாசமாக செய்திருக்கிறார். அவரும் உடம்பை நன்றாக வைத்திருக்கிறார். நடிப்பில் விஷாலுக்கு சீனியர் என்பது எளிதாக தெரிகிறது. ஆனால் ஒப்புக்குச் சப்பாணி பாத்திரத்தில் வருவது கொஞ்சம் வருத்தமாக உள்ளது. நல்ல நடிகர் அவர். வேறு நல்ல வாய்ப்புகள் வர வாழ்த்துவோம்.

பாகியராஜூக்கு ஒரு வில்லன் பாத்திரம். நன்றாக செய்திருக்கிறார்.  அனு இம்மானுவேல் விஷாலின் காதல் இன்ட்ரஸ்ட். சின்ன பாத்திரம். குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. ஆண்ட்ரியாவிற்கு ஈவிரக்கமில்லாத ஒரு வில்லி பாத்திரம். அவருக்கு அது அல்வா சாப்பிடுவது போல. வெளுத்து வாங்குகிறார். வில்லன் வினய் சுமார். அதற்குக் காரணம் திரைக் கதையாகவும் இருக்கலாம். சிம்ரன் குட்டி பாத்திரத்தில் வருகிறார். கொஞ்சம் ஓவர் ஏக்டிங் செய்கிறார். அதுவும் இயக்குநர் தவறே.

படத்தின் ஆரம்பம் நன்றாக உள்ளது. கலை அருமை. விஷாலின் வீடு வெகு நேர்த்தியாக ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற ஒரு துப்பறிவாளருடைய வீடு போல் அமைக்கப்பட்டிருப்பது அழகு. ஒரு சிறுவன் வந்து தன் சேமிப்பைக் கொடுத்து தன் நாயைக் கொன்றவனைத் தேடிக் கொடுக்குமாறு புது கேசை கொடுப்பதும் நல்ல திரைக்கதையின் தொடக்கம். ஆனால் அதன் பின் படம் ஒரு கொலையுதிர்காலமாக உள்ளது. மர்மக் கதையில் கொலைகள் இருக்கும் தான்.  ஆனால் இரண்டு சீனுக்கு ஒரு கொலை விகிதம் கொஞ்சம் அதிகம்.

இசை அரோல் கொரியோலி. பின்னணி இசை கதைக்குத் தகுந்தவாறு உள்ளது. பாடல்கள் இல்லை, சபாஷ். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நன்று. படம் இருட்டாக இல்லை, பெரிய பிளஸ் பாயின்ட்.  ஆனால் படத்தை ஒரு இருபது நிமிடமாவது குறைத்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். இப்பொழுது படத்தின் நீளம் இரண்டு மணி முப்பது நிமிடங்கள்.

சீரியசான இடங்களில் அரங்கில் சிரிப்பொலி. உண்மையில் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது மனம் காமெடி படம் பார்த்த உணர்வைத் தருகிறது. ஏனென்றால் ஒருவர் குத்துப் பட்டு செத்துக் கொண்டிருக்கும்போது காப்பாற்ற வேண்டியவர் முதலுதவியோ அல்லது ஆம்புலன்சையோ கூப்பிடாமல் நீண்ட வசனம் பேசுவதெல்லாம்…… யாராவது துணை இயக்குநர்களாவது மிச்கின்னிடம் எடுத்துரைத்து இருக்கலாம்.

ஒரு பழைய படத்தில் வில்லனிடம் மாட்டிக் கொண்ட சோ வண்ணான் கணக்கு சொல்வது போல மனோரமாவுக்கு வில்லனின் போன் நம்பரை சொல்லுவார். அந்த அளவில் இருக்கிறது கிளைமேக்சில் விஷால் சங்கேத மொழியில் பிரசன்னாவிற்குத் துப்புக் கொடுப்பது. வில்லன் தன் கூட இருந்தவர்களையே நொடியில் போட்டுத் தள்ளுகிறான், தன் எதிரியும், தான் மறைமுகமாக செய்து வந்த தில்லுமுல்லு சாம்ராஜ்ஜியத்தையே வெளிக் கொண்டுவந்த விரோதியுமான விஷாலை கொல்லாமல் அவ்வளவு நேரம் பேச விடுவது எல்லாம், ரொம்ப டூ மச்.

விஷால் பிரசன்னாவிற்காக படத்தைப் பார்க்கலாம்.

புரியாத புதிர் – திரை விமர்சனம்

ரஞ்சித் ஜெயகொடியின் முதல் படம், நீண்ட தாமதத்திற்குப் பிறகு வெளி வந்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருப்பதால் பாராட்டுக்குரியதாகிறது. எழுதி இயக்கியிருக்கும் ரஞ்சித் ஒரு தேர்ந்த திரையுலக படைப்பாளியாக முதல் படத்திலேயே பெயர் வாங்குகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பு மிக மிக அருமை. அட்டகாசமாக செய்திருக்கிறார். தன் காதலிக்கு நேரும் துன்பத்தைக் கண்டு பத்தட்டப் படுவதும்,  அதிர்ச்சிக்கு உள்ளாகும்போதும் அனாயசமாக பாத்திரத் தன்மையை உள்வாங்கி வெளிக் கொண்டு வருகிறார். மேலும் மூன்று வருடங்களுக்கு முன் படப்பிடிப்பு நடந்திருப்பதால் குறைந்த எடையுடன் இருக்கும் விஜய் சேதுபதியைக் கண்டு களிக்க முடிகிறது.  பொதுவில் கதாநாயகிகளுக்குக் கிடைக்காத கனமான பாத்திரம் ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ காயத்திரிக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. நடிக்கிறார் என்பதே தெரியாத அளவு பாத்திரத்தில் ஒன்றி சிறப்பாக பங்களித்துள்ளார். இவர்கள் இருவரின் நடிப்பும் இப்படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

லென்ஸ் சொல்ல வந்தக் கருத்தை இப்படமும் முன்னிறுத்துகிறது. ஆனால் சொல்ல வந்தப் பிரச்சினை ஒன்றாக இருப்பினும் முற்றிலும் வேறு கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் நெருங்கும் வரை யூகிக்க முடியாத கதையம்சத்துடன் விறுவிறுப்பாக படத்தை நகர்த்தியிருகிறார் இயக்குநர். படத்தின் ஒன் லைன் – நமக்கு ஏற்படும் வரை இழப்பின் வலி நமக்குத் தெரியாது என்பது தான். அதுவும் இன்றைய கால கட்டத்தில் பலான காணொளிகளை இணையம் மூலம் பலருக்கும் பகிர்வதை சகஜமாக நினைக்கும் இளைஞர்களுக்கு இப்படம் ஒரு நல்ல பாடமாக அமையும் என்று நம்புகிறேன். குற்ற உணர்வு வருமா, மக்கள் திருந்துவார்களா என்று தெரியாது ஆனால் மனத்தில் உரைக்கும் வண்ணம் கதை அமைந்துள்ளது.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்குத் தேவையான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சாம் C.S. பல இடங்களில் பின்னணி இசையே திரைக்கதையாகிறது. பாடல்களும் நன்றாக உள்ளன. இசையைப் பொறுத்த வரையில் சபாஷ் சாம்! ஒளிப்பதிவும், முக்கியமாக லைட்டிங்கும் திகிலை ஏற்படுத்தும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு ஒரு பூங்கொத்து!

படக்காட்சி இரண்டு மணி நேரம் தான். இடைவேளை வரை இருக்கும் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் இரண்டாவது பாதியும் நன்றாக அமைந்துள்ளது. அருவருப்போ, ஆபாசமோ இல்லாமல் கதை சொல்லத் தெரிந்திருக்கிறது இயக்குநருக்கு. அச்சு பிச்சு காமெடி இல்லை. காதலில் சொதப்புவது எப்படி அர்ஜுனனுக்கு பெரிய பாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கும் காயத்திரிக்கும் அதிக வாய்ப்புகள் வர வாழ்த்துகள்.

குறையில்லாமல் இருக்குமா? ரமேஷ் திலக் வரும் பகுதியில் சில விஷயங்கள் விளக்கப்படாமல் உள்ளது. அது தனிப்பட்ட ஒரு சம்பவம் எனில் நாயகியை வாயை கட்டி கையை கட்டி அவர் என்ன செய்வதாக இருந்தார்? அது ரசிகரை குழப்புவதற்காக போடப்பட்ட முடிச்சா என்று புரியாத புதிராக உள்ளது. அந்த உதிரி பகுதியையும் சரியாக விளக்கியிருக்கலாம் இயக்குநர்.

மற்ற இணை பத்திரங்களில் வந்த அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.  சோனியா தீப்தி சின்ன பாத்திரத்தில் வந்தாலும் மனத்தில் நிற்கிறார். நிறைவைத் தருகிற குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. புரியாத புதிர் டீமுக்கு வாழ்த்துகள்.