இந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. எந்த மணமான பெண்ணுக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது இதில் எந்த ஒரு பகுதியாவது அவர்கள் வாழ்வில் அனுபவித்ததாக, சொல்ல நினைத்ததாக, செய்யத் துடித்ததாக இருக்கும் என்பது உறுதி. முற்றிலுமாக பெண்கள் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள படம்.
1978ல் கல்லூரியில் படிக்கும்போது பாதியில் பிரிந்த மூன்று உயிர்த் தோழிகள் தங்கள் ஐம்பதுகளில் சந்திக்கும்போது ஏற்படும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, தவிப்பு என பல உணர்வுகளை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. குடும்ப பாரத்தில் உழலும் இவர்களை சந்திக்க வைப்பது காட்டாற்று வெள்ளம் போல் தங்கு தடையின்றி சுதந்திரமாக ஒரு ஆணைப் போல் தனக்குப் பிடித்தததை செய்யும் பாத்திரத்தில் வரும் ஜோதிகா. நாற்பது வருடங்கள் கழித்து சந்திக்கும் மூவராக ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் கலக்குகிறார்கள். அருமையான தேர்வு. அதில் மற்றவர்களை ஊர்வசி தன் இயல்பான நடிப்பினால் சற்றே ஓவர்டேக் செய்துவிடுகிறார்.
இளம் வயது பாத்திரதிரங்களில் வரும் மூன்று பெண்களையும் அதே சாயலில் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு கண்டிப்பான கிருஸ்துவ பள்ளி, அதன் விடுதியில் தாங்கும் இம்மூவர் செய்யும் சேட்டைகள், கடைசியில் விளையாட்டு வினையாகி மூவரும் பிரிவது என கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை நிகழ் காலக் கதையோடு மாறி மாறி காட்டி சுவாரசியமாக எடுத்து செல்கிறார் இயக்குநர்.
குடியரசு ஆட்சியை மக்களால் மக்களுக்காக என்பார்கள். அது மாதிரி இந்தப் படம் பெண்களால் பெண்களுக்காக என்று இருந்தாலும் ஆண் மக்கள் இதைப் பார்த்தால் பெண்ணின் உணர்வுகள், அவர்கள் படும் சிரமம், செய்யும் தியாகம் அனைத்தும் கொஞ்சம் புரியலாம். இதில் ஒரு காட்சியில் பானுப்ரியாவின் மருமகளுக்கு இடுப்பு வலி எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவரின் பின்புறம் இரத்தம் தோய்ந்திருக்கும். சாதாரணமாக அடி தடி சண்டையில் தான் நாம் படங்களில் இரத்தத்தைப் பார்க்கிறோம். அந்த வன்முறை இரத்தத்தை விட இந்த ஒரு காட்சி சொல்கிறது பொருள் ஆயிரம்.
எவ்வளவு தான் நல்ல குடும்பம் அமைந்தாலும் நட்புகளிடம் இருக்கும் நெருக்கும் உறவுகளில் கிடைப்பது அபூர்வமே. அதுவும் இளமையில் ஏற்படும் எந்த எதிர்பார்ப்பும் இல்லா நட்பு பெரும் வரமாகும். அதைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். முக்கால்வாசி படம் ஆக்ரா, சட்டிஸ்கரில் நடக்கிறது. இயற்கை காட்சிகள் அழகு. ஜிப்ரானின் பாடல்களும் இசையும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
ஜோதிகா சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். அது ஒரு மைனசாக உள்ளது. முக உணர்சிகளை விட குரல் அதிகமாக ஓவர் ஏக்டிங் செய்கிறதோ எனத் தோன்றுகிறது. மாயாவியில் அந்தப் பாத்திரத்துக்கு அவர் சொந்தக் குரல் ரொம்ப சரியாக பொருந்தியது. மற்றபடி அவரின் இந்தப் பாத்திரம் அவர் உண்மை வாழ்க்கையில் இருப்பதற்கு அருகில் இருக்கும் போலத் தோன்றுகிறது. சிரமிமில்லாமல் செய்திருக்கிறார். எடை குறைந்து மிகவும் பொலிவுடன் விளங்குகிறார்.
சரண்யாவின் கணவனாக வரும் லிவிங்க்ஸ்டன் சின்ன வேடத்தில் வந்தாலும் steals the show. குடிகாரக் கணவன், ஆனால் அவர் நடிப்பும், கடைசியில் அவர் தொலைபேசியில் ஜோதிகாவிடம் ஒரு முக்கியத் தகவல் சொல்லும்போது அவர் எடுக்கும் முடிவும் அவர் பாத்திரத்தை உயர்த்துகிறது, அவர் நடிப்பினாலும் அந்த இடம் அதிக வலுவைப் பெறுகிறது. பானுப்ரியாவின் கணவராக நாசர். அவரும் வடக்கத்தி அரசியல்வாதியாக பக்காவாக உள்ளார்.
குறைகள் என்று பார்க்கும்போது எல்லா பெண்களும் சுதந்திரம் அற்றும், திருமணத்திற்குப் பிறகு சுய வாழ்க்கையைத் தொலைத்தது போலும் காட்டப் படுவது செயற்கையாக உள்ளது. மேலும் எல்லா ஆண்களும் {ஜோதிகாவின் ஜோடி தவிர} மோசமான கணவனாக இக்கதைக்காக சித்தரிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. பானுப்ரியாவின் மகன் சட்டென்று ஒரு சம்பவத்தால் மனம் மாறுவதும் சிநிமேடிக். நடுவில் ஒரு கீழ் சாதி, மேல் சாதி கலப்புத் திருமணம் வருகிறது. அதை சேர்த்ததால் ஜோதிகா பாத்திரம் துணிச்சலான பெண் என்பதைத் தவிர வேறு எந்த மேச்செஜும் தரவில்லை.
படம் நடிகர் சூரியாவின் தயாரிப்பு. மனைவிக்காக அவர் செய்திருக்கும் இத்தயாரிப்புப் பாராட்டுக்குரியது :-}
Sep 16, 2017 @ 02:55:25
நன்றி மேம். உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ஊர்வசியிடம் கொஞ்சம் அசந்தாலும் சகநடிகர்களை தூக்கி சாப்பிட்டுவிடுவார் என்று கமலே ஒரு முறை சொல்லியுள்ளார் ☺️ வாழ்த்துகள்
Sep 16, 2017 @ 05:49:07
ஜோதிகாவுக்கு ஜோடியா நடிச்சது யார்னு சொல்லவேயில்லையே.
Sep 16, 2017 @ 07:39:58
அது சஸ்பென்ஸ். சொல்ல வேண்டாம்னு பார்த்தேன் 😀
Oct 01, 2017 @ 14:52:09
நன்றி :-}
Oct 25, 2017 @ 09:21:25
நன்றி. நேற்றுதான் பார்த்தேன். நன்றாக உன்னிப்பா ஒவ்வொரு சீனையும் கவனித்து எடுத்து சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொரு வரிகளும் 100 +. கரக்ட். எல்லோரும் பாத்திரம் உணர்ந்து முழுஈடுபாடுடன் நடித்துள்ளார்கள். அதிலும் லிவிங்ஸ்டன் நடிப்பும், அவரை அசால்ட்டாக, ஒருவித சலிப்போடு டீல் செய்யும் சரண்யாவின் பங்கும் சூப்பர். நல்ல படம்தான்.
ஒரேஒரு இடத்தில், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் முன்னிலையில் மாட்டுக்கு பிரசவம். ஏன் அந்த காலேஜில் காப்பாளர்கள் அப்போ எங்கே போய் தொலைந்தார்கள். என்னதான் விஷயம் தெரிந்த கிராமத்துப்பெண்ணாக இருந்தாலும் அது கொஞ்சம் ஓவர்டோஸ்சாக தெரிந்தது எனக்கு. ஒரு சில நொடிகளில் தோன்றிமறையும் பின்பக்க ரத்தக்கரை சீனில் இயக்குனரின் டச் தெரிகிறது. வாழ்த்துக்கள் :))