கல்யாணம் தான் கட்டிக்கிட்டு…… -சிறுகதை

“அண்ணே கல்யாணப் பொண்ணு யாரோடவோ ஓடிப் போயிடிச்சாம்.” சோத்துல கையை வைக்க இருந்த சண்முகத்திடம் கதிரு ஒடி வந்து சொன்னார். கையை உதறியபடி எழுந்த சண்முகம், “என்னடா சொல்ற? யாருடா சொன்னா?” என்றார் பதைபதைப்புடன். குழம்பு சட்டியுடன் நின்றுகொண்டிருந்த அவர் மனைவி யோகலட்சுமி சட்டியை கீழே வைத்துவிட்டுப் புடைவை தலைப்பை வாயில் பொத்தியபடி சமையல் அறைக்குள் சென்றார்.

“இப்ப தான் பொண்ணோட தாய் மாமன் போன் பண்ணாருண்ணே. உங்க கிட்ட சொல்ல பயந்துகிட்டு எனக்குப் போன் பண்ணாரு. இராத்திரியே ஓடிப் போயிடுச்சு போல, இவங்க காலையில் இருந்து சல்லடை போட்டு தேடியிருக்காங்க. எங்கேயும் காணலையாம். அதான் நமக்கு சொல்லிடலாம்னு எனக்குப் போன் பண்ணியிருக்காங்க.”

“இப்ப என்னடா பண்றது கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு? சபரீஷ் அந்தப் பொண்ணோட நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தான்!”

அதற்குள் சமையல் அறையில் இருந்து பல அழுகுரல்கள், சின்னதும் பெரிசுமாக விசும்பல்கள் இவர் காதில் விழ உள்ளே பார்த்து ஒரு சத்தம் போட்டார், “இதென்ன எழவு வீடா, அழுகையை முதல்ல நிறுத்துங்க. சொந்தத்துல வேற பொண்ணு இருக்கான்னு யோசியுங்க. குறிச்ச முகூர்த்தத்துல என் புள்ளை கல்யாணம் நடக்கணும்.”

“டேய் கதிரு இங்க வா” என்று வாசப் பக்கம் நகர்ந்தார் சண்முகம். “சத்திரக்காரன்லேந்து சமையல்காரன் வரை இப்ப கேன்சல் பண்ணா எவனும் பணத்தைத் திருப்பித் தர மாட்டான். நாம எடுத்திருக்கிறதோ சென்னையிலேயே பெரிய சத்திரம், பெரிய கேடரிங். பூக்காரன், மேளக்காரன், மியுசிக் பார்டின்னு எல்லாத்துக்கும் பணத்தைக் கொடுத்தாச்சு. வேற பொண்ணு பார்த்து அதே முகூர்த்தத்துல முடிக்கறது தான் சரி.”

“அண்ணே கோச்சிக்காதீங்க, ஆனா இப்ப ரெண்டு நாளுல யாரைப் பார்க்க முடியும்? சபரீஷ் முதல்ல இதுக்கு ஒத்துப்பானா? இருங்க பையன்ட்ட முதல்ல பேசறேன்.”

“ஹலோ தம்பி சபரீஷ்,”

“சொல்லுங்க சித்தப்பா”

“வந்து.. கல்யாணப் பொண்ணு யார் கூடவோ ஓடிப் போயிடிச்சாம்”

“என்னது?”

“டேய், போனை எங்கிட்ட கொடு டா. ஏண்டா பேப்பயலே அந்தப் பொண்ணு கூடப் பேசும் போதெல்லாம் அந்தப் பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுதுன்னு கூடவா உனக்குப் புரியாம இருந்திருக்கு? என்ன கர்மம் டா இது. லட்ச லட்சமா கொட்டி செலவு செஞ்சு இப்படியா ஆகணும்!”

“அப்பா, என்னப்பா இது, எனக்கு ஒன்னும் புரியலை. நல்லா தாம்பா போன்ல பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கும் பெரிய ஷாக்கா தான் இருக்கு.”

“சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். கல்யாணத்தை கேன்சல் பண்ண முடியாது. எந்த காண்டிறேக்ட்காரனும் பணத்தைத் திருப்பித் தர மாட்டான். அதனால இந்த ரெண்டு நாளுல வேற ஒரு பொண்ணைப் பார்த்து உனக்கு அதே நாளுல கல்யாணம் பண்ணப் போறேன்.”

“லூசாப்பா நீங்க? நீங்க கை காட்டுற யாரோ ஒரு பொண்ணை பேசிப் பழகாம ஒரே நாள்ல எப்படி கல்யாணம் செஞ்சுக்கறது?”

“நீ தாண்டா லூசு. இன்னொரு பையனை லவ் பண்ணி அவனோட ஓடிப் போயிருக்கா, நிச்சயதார்த்தத்துக்குப் பின்ன மூணு மாசமா அவளோட பேசிக்கிட்டு இருந்திருக்க அது கூட உனக்குத் தெரியலை.”

“வெந்த புண்ல வேலைப் பாய்சாதீங்க அப்பா. எனக்குக் கல்யாணமே வேணாம். நீங்க பார்க்கிற இன்னொரு பொண்ணு மட்டும் நல்ல பொண்ணாவா இருந்துடப் போவுது?”

“அதுக்காக காலம் முழுக்கக் கல்யாணம் செய்யாம இருக்கப் போறியா? பண்ணுவ இல்ல? அதை இப்பவே பண்ணு. அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க மூஞ்சில கரியைப் பூசனும். கல்யாண செலவு மாப்பிள்ள வீட்டுக்காரங்களோடதுன்னு அவங்களுக்குத் தெனாவெட்டு. இதே அவங்க செலவுன்னா இப்படி இருந்திருப்பாங்களா?”

“என்னப்பா பேசற? பொண்ணு ஓடிப்போச்சுன்னா அவங்க மட்டும் என்ன செய்வாங்க? அப்படியே நான் எப்பவாச்சும் கல்யாணம் பண்ணாலும் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கறேன், உங்களுக்கு செலவு வைக்க மாட்டேன். ஆளை விடுங்க.” போனை கட் பண்ணிவிட்டு உடனே சத்திரத்துக்குப் போன் போட்டான் சபரீஷ்.

“நான் சபரீஷ் பேசறேன், பிப்ரவரி ரெண்டாம் தேதி ரிசெப்ஷன், மூணாம் தேதி கல்யாணத்துக்கு உங்க ஹால் புக் பண்ணியிருக்கோம்.”

“தெரியும் சார். வணக்கம் சார்.”

“அந்தக் கல்யாணம் நின்னுப் போச்சுங்க. அதனால வேற யாராவது கேட்டா ஹாலை கொடுத்திடுங்க. ஜஸ்ட் உங்களுக்குத் தகவல் சொல்லலாம்னு கூப்பிட்டேன். அந்தத் தேதில கல்யாணம் இல்லை.”

“என்ன சார் என்ன ஆச்சு? ஆனா இந்த லாஸ்ட் மினிட்ல யாரும் இனிமே ஹால் புக் பண்ண மாட்டாங்க. நாங்க பணம் ரீபண்ட் பண்ண முடியாதுங்க.”

“ரீபண்ட் பண்ண மாட்டீங்கன்னு தெரியும். உங்களுக்கு விஷயம் சொல்றேன் அவ்வளவு தான்.”

அடுத்து நளபாகம் நாராயணனுக்குப் போன் போட்டான். “சார் நான் சபரீஷ் பேசறேன்”

“சொல்லுங்க சபரீஷ், நீங்க சொன்ன ஸ்பெஷல் ஸ்வீட் வகையெல்லாம் தயார் பண்ண ஆரம்பிச்சிட்டோம். நாலாயிரம் பேரு ரிசெப்ஷனுக்குன்னா லேசுப்பட்ட விஷயமா? சும்மா அசத்திடுவோம். கல்யாணத்துக்கு வரவங்க எல்லாம் வருஷக் கணக்கா உங்க விருந்தைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பாங்க.”

“சார் கல்யாணம் நின்னுப் போச்சு. அதனால நீங்க ஸ்வீட் பண்றதையும் நிப்பாட்டுங்க.”

“என்ன சார் சொல்றீங்க? நாளன்னிக்கு ரிசெப்ஷன். அடுத்த நாள் கல்யாணம். காய்கறிலேந்து எல்லாத்துக்கும் ஆர்டர் கொடுத்தாச்சு.”

“பணம் திருப்பி தரதைப் பத்தி இப்ப நான் உங்க கிட்ட பேசலை. எதுவும் சமைக்காதீங்கன்னு சொல்ல தான் போன் பண்ணினேன்.” போனை கட் பண்ணிவிட்டு தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து தலையைத் தேய்த்துக் கொண்டான்.  ச்சே இப்படி ஆகிவிட்டதே, முகத்தை நண்பர்களிடம் எப்படி காட்டுவது என்று கவலைப்பட ஆரம்பித்தான்.

“டேய் உன் மச்சானுக்கு ஒரு பொண்ணு ரேவதின்னு காலேஜ்ல படிக்குது இல்ல கதிரு?”

“அண்ணே அதுக்கு பத்தம்போது வயசு தான் ஆகுது. நம்ம சபரீஷுக்கு இருபத்தியெட்டு.”

“அதனால என்னடா? இந்த மாதிரி பணக்கார சம்பந்தம் கிடைக்குமா அவங்களுக்கு? உன் மச்சான் என்ன பேங்க்ல ஆபிசரா தானே இருக்கான். கோடிக்கணக்கான சொத்துக்கு என் பையன் ஒரே வாரிசு. கசக்குதாமா அவங்களுக்கு? போன் போட்டுக் கேளு.”

போனை போட்டார் கதிரு. கொஞ்சம் யோசித்தாலும் சரி என்றார்கள். யோகலட்சுமி, சண்முகம் முகத்தில் திரும்ப புன்னகை வந்தது.

“அண்ணே உங்க போன்ல ரெண்டு மிஸ்ட் கால் இருக்குப் பாருங்க. ஒன்னு சத்திரம், இன்னொண்ணு கேடரர்.”

“எம்எல்ஏ வீட்டுப் பொண்ணுங்கறதால ரிசெப்ஷனுக்கு நாலாயிரம் பேருன்னு சொன்னோம். நாராயணன் கிட்ட நம்ம பக்கம் ஆயிரம் பேர் தான் வருவாங்கன்னு சொல்லணும். ஒரு ப்ளேடுக்கு ஆயிரம் ரூபா சார்ஜ் பண்றான்! முதல்ல எண்ணிக்கையை குறைக்க சொல்லணும்.” என்றபடி நாராயணனுக்குப் போன் செய்தார் சண்முகம். போன் போட்டதும், “என்ன சார் இது? உங்க பையன் போன் பண்ணி கல்யாணம் நின்னிடுச்சுன்னு சொல்றார் உண்மையாவா?” என்றது எதிர்முனை குரல்.

“அப்படியா? அதுக்குள்ளே உங்களுக்குப் போன் போட்டுட்டானா? இல்லல்ல கல்யாணம் நிக்கலை. வேற பொண்ணு பார்த்துட்டோம். ஆனா ரிசெப்ஷனுக்கு மூவாயிரம் விருந்தினர்களை கட் பண்ணிடுங்க. எம்எல்ஏ பொண்ணு இல்ல இப்ப, எங்க சொந்தக்காரப் பொண்ணு தான். அதனால ஆயிரம் பேருக்கு மேல வரமாட்டாங்க.”

“ஓ அப்படியா சார், நல்லது. ரொம்ப சந்தோஷம். கெஸ்டுங்க ஆயிரம் பேரு தானா? நல்லா யோசிச்சு சொல்லுங்க, ஏன்னா பத்து பர்சென்ட் வரைக்கும் முன்ன பின்ன இருந்தாதான் எங்களால சமாளிக்க முடியும். அதுக்கும் மேலன்னா நாங்க அல்லாடனும், ஒரு ப்ளேடுக்கு இத்தனைனு பெனால்டி போடுவோம்.”

“அதுக்கு மேல வராதுயா. வேலையைப் பாருங்க.”

“பார்த்தியாடா கதிரு இந்த சபரீஷை அதுக்குள்ளே நாராயணனுக்குப் போன் பண்ணி கல்யாணம் நின்னுப் போச்சுன்னு சொல்லியிருக்கான். அப்ப சத்திரத்துக்கும் சொல்லியிருப்பான்” என்றபடியே சத்திரத்துக்கும் போன் போட்டார். நினைத்தபடியே சபரீஷ் சொல்லியிருந்ததை நேராக்கினார்.

அடுத்து சபரீஷுக்குப் போனை போட்டார். கதிரு பக் பக் என்று பயத்துடன் காத்திருந்தார். இந்தப் பக்கம் அண்ணன் அந்தப் பக்கம் மச்சான். இந்தக் கல்யாணம் சரிவராமல் நாளை ஏதாவது பிரச்சினை என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி கதை தான். உள்ளூர சபரீஷ் இந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லிட வேணும்னு அங்காளம்மனுக்கு வேண்டிக் கொண்டார் கதிரு.

அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை. கதிரின் மச்சான் பெண் ரதி மாதிரி இருப்பாள். எம்எல்ஏ மகளை விட அதி ரூப சுந்தரி. எம்எல்ஏ மகளை சண்முகம் முடித்ததே வரும் சொத்துக்காகத் தான். நண்பர்கள் மத்தியில் மானம் போகாது, அழகான மனைவி இப்படி அதிர்ஷ்டத்தில் வருகிறாள் என்னும் இரண்டு காரணங்கள் சபரீஷ் மனத்தை மாற்றிவிட்டன. கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டான்.

ரிசப்ஷன் அன்று மதியமே இரு குடும்பத்தாரும் மணடபத்துக்கு வந்துவிட்டனர். “டேய் கதிரு, நாராயணன்ட்ட கரெக்டா சொல்லிடு ஆயிரம் பேர் தானுன்னு. எம்எல்ஏ சாப்பாட்டு செலவுல பாதிய எத்துக்கறேன்னான், கடைசில பொண்ணே ஓடிப்போச்சு. எல்லா செலவும் நம்மளோடுது தான்.”

“ரெண்டு தடவை அழுத்தி சொல்லிட்டேன் அண்ணே, அவரும் புரிஞ்சுகிட்டு நீங்க கொடுத்த அட்வான்சுக்கு மேல ஆகாதுங்கன்னு சொல்லிட்டாரு.”

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம்வர ஆரம்பித்தது. நெருங்கிய சொந்தம் எல்லாம் புது மணமகள் ரேவதிக்கு அடித்த யோகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். மணமகன் சபரீஷ் ஷெர்வானியில் மினுமினுத்தான். மணமகள் ரேவதி டிஷ்யு புடைவையில் ஜொலிஜொலித்தாள். தூரத்து சொந்தமும் நட்பும் வர வர ஆச்சரியத்துடன் குசுகுசு என்று பேசி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டனர். நல்ல கூட்டம். நேரம் ஆக ஆக கூட்டம் அம்ம ஆரம்பித்து. நிறைய கரை வேட்டிகள்.

“டேய் கதிரு என்னடா இது நிறைய கூட்டமா இருக்கு. டைனிங் ஹாலுக்குள் நுழையவே முடியலை. எங்கே இருந்துடா இத்தனை ஜனம் வருது?”

“அதான் அண்ணே எனக்கும் தெரியலை. கரை வேஷ்டி கும்பல் எல்லாம் பார்த்தால் எம்எல்ஏவை சேர்ந்தவங்களாட்டம் இருக்கு”

“என்னது எம்எல்ஏ கட்சியாளுங்களா? அவங்க எதுக்குடா வந்தாங்க?”

அதற்குள் நளபாகம் நாராயணன் ஓடிவந்தார். “என்ன சார் நீங்க ஆயிரம் பேர் தான் வருவாங்கன்னு சொன்னீங்க, மணி ஏழரை தான் ஆகுது அதுக்குள்ளே இரண்டாயிரம் கிட்ட கணக்கு வருது. நான் பக்கத்துல இருக்கிற நீல்கிரீசுக்கு ஆளுகளை அனுப்பியிருக்கேன், மளிகை சாமான் வாங்க சொல்லி.”

தட்டு நிறைய ஸ்வீட் வகைகளை அடுக்கி அமுக்கிக் கொண்டிருந்த ஒரு கரை வேட்டியைப் பிடித்தார் சண்முகம், “நீங்க பொண்ணு வீடா பையன் வீடா?”

“என்ன சார் கேனத்தனமா கேக்கறீங்க. எங்க தலைவர் கல்வித் தந்தை இராமசாமி வீட்டுக் கல்யாணம் இது, பொண்ணு வீடு தான்.”

“ஏன்யா கல்யாண வீடுன்னா உள்ள நுழைஞ்சு இப்படி ஸ்வீட்டை அள்ளி வெச்சு சாப்பிடுவீங்களோ? உங்கத் தலைவர் பொண்ணு தான் யார் கூடவோ ஓடிப் போயிடுச்சே. எங்க இருக்காரு உங்கத் தலைவர் இங்க காட்டுப் பார்க்கல்லாம்.”

“இந்தக் கூட்டத்துல தலைவர எங்கத் தேடறது! என்னது அவர் பொண்ணு ஓடிப் போயிடிச்சா? அப்ப ஏன்யா மண்டப வாசல்ல எங்க தலைவர் பேரை போட்டு கல்வித் தந்தை இராமசாமி இல்லத் திருமணம்னு போர்டு வெச்சிருக்கீங்க?” அந்தக் கரை வேட்டி ஸ்வீட் தட்டைக் கீழே வைக்காமல் இன்னொரு கையால் சண்முகத்தை வாசலுக்குத் தரதரவென்று இழுக்காத குறையுடன் இழுத்துச் சென்று காட்டினார். பெரிய வளைவாக கல்வித் தந்தை இராமசாமி MLA, வணிக மன்னர் சண்முகம் இல்லத் திருமணம் என்ற வரவேற்புப் பலகை அலங்காரத்துடன் இவரைப் பார்த்து சிரித்தது, அதற்குப் பக்கத்திலேயே செந்தாமரை வெட்ஸ் சபரீஷ் என்ற பெயர் பலகையும்!

“எங்கக் கட்சித் தலைவரோட அம்மா பேரை தான் எங்க தலைவர் மகளுக்கு ஆசையா வெச்சாரு. அதான் செந்தாமரை. எல்லாம் பார்த்து தான் உள்ளே நுழைஞ்சோம். இப்ப என்னான்னா தலைவர் பொண்ணு ஓடிப் போயிடிச்சுன்னு சொல்ற? ஏன்யா எதிர்கட்சியா நீயி?” கோபமாக கேட்டுவிட்டு இனிப்புகளை ருசிக்க ஆரம்பித்தார் கரை வேட்டி.

வாசலில் நின்றுகொண்டிருக்கும் போதே அலையாக ஒரு நூறு கரை வேட்டிகள் இவர்களை ஓரமாகத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. சாப்பாட்டு எண்ணிக்கையை சமையல்காரரிடம் குறைக்க சொல்ல எடுத்துக் கொண்ட அக்கறையில் சிறிது ஸ்டேஜ் டெகரேஷன் ஆளிடம் புது மணமகள் பெயரைப் போடவும் எம்எல்ஏ பேரை போடாமல் இருக்க சொல்லவும் எடுத்துக் கொண்டிருக்கலாம் சண்முகம்! நளபாகம் நாராயணன் எவ்வளவு பணம் தீட்டப் போகிறாரோ என்று திக் பிரமைப் பிடித்து ஓரமாக உட்கார்ந்தார் சண்முகம்.

 

4 Comments (+add yours?)

 1. Rajasubramanian S (@subramaniangood)
  Oct 13, 2017 @ 10:40:30

  நல்ல கதை.சொன்ன விதமும் அருமை.

  Reply

 2. GiRa ஜிரா
  Oct 13, 2017 @ 10:49:54

  ஆகா… தப்பு நடந்ததோ பொண்ணு வீட்ல. கஷ்டம் முழுக்க மாப்பிள்ளை வீட்டுக்குன்னு ஆயிருச்சே. எல்லாத்தையும் பாத்தவங்க போர்ட பாக்காம விட்டுட்டாங்களே.

  Reply

 3. sivahrd
  Oct 13, 2017 @ 15:43:41

  நல்ல கதை. எவ்வளவு துரிதமாக எந்த செயலை செய்தாலும், சின்ன சின்ன விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது.

  Reply

 4. கானா பிரபா
  Oct 16, 2017 @ 20:18:58

  உரையாடல்களை அதிகப்படுத்தி ஒரு படம் பார்ப்பது போல நல்லதொரு சிறுகதை

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: