திருட்டுப்பயலே 2 – திரை விமர்சனம்

பாபி சிம்ஹா போலீசில் கண்காணிப்புத் துறையில் உள்ளார். சில தொலைபேசி எண்களை ஒட்டுக் கேட்க பாபி சிம்ஹாக்கு மேலதிகாரியிடம் இருந்து கட்டளை வருகிறது. இதில் தொடங்குகிறது படம். பாபி சிம்ஹா எடை கூடியுள்ளார் ஆனால் நடிப்பில் சோடை போகவில்லை. படத்தின் தொடக்கத்திலேயே பாபி சிம்ஹா திருட்டுத்தனம் செய்கிற போலிஸ் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் ஹீரோ என்பவனும் சற்றே வில்லத்தனத்துடன் இருப்பதால் வில்லன் பாத்திரம் இன்னும் பயங்கர கெட்ட வில்லனாகக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது இயக்குநருக்கு.

பிரசன்னா படு குயுக்தியான சிந்தனைகளையுடைய வில்லனாக வருகிறார். கதாநாயகன், வில்லன் இரண்டு பாத்திரங்களிலும் பிரமாதமாக வேறுபாடு காட்டி நடிக்கும் திறன் அவருக்குள்ளது. அருமையாக செய்திருக்கிறார். உடம்பை மிகவும் பிட்டாக வைத்துள்ளார். அவரின் இருபத்தி ஐந்தாம் படம் இது. வாழ்த்துகள்! அமலா பால் இவரிடம் பேஸ்புக்கில் நட்புப் பாராட்டி பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். நடிக்க நல்ல வாய்ப்புக் கொடுத்திருக்கும் பாத்திரம். நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். திரைக்கதையைவிட பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பாலின் நடிப்பே படத்தைப் பரபரப்பாக்கி நம்மை ஆவலுடன் பார்க்க வைக்கிறது.

ஆளை சரியாகத் தெரியாமல் அவர் இணையத்தில் காட்டும் முகத்தை வைத்து எத்தனை பேர் இந்த மாதிரி ஏமாந்துள்ளார்களோ என்று தான் படம் பார்க்கும்போது தோன்றுகிறது. அந்த அளவுக்கு உண்மைக்கு வெகு அருகில் பயணிக்கிறது கதை.

பாடல்கள் FMல் ரொம்ப் பிரபலம் அடைந்துவிட்டன. இரண்டு டூயட்கள் இனிமையாக உள்ளன. இசையமைப்பாளர் வித்யாசாகருக்குப் பாராட்டுகள். திருட்டுப் பயலே 2 முதல் பாகத்துக்குத் தொடர்பு இல்லாவிட்டாலும் நவீனத்தனமாக களவாணித்தனம் செய்கிறவர்கள் பற்றிய கதை தான் இதுவும்.

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தாலும் பெண் சமூக ஊடகத்தில் மயிரிழையில் தடம் புரண்டு மாட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது என்பதை சொல்லும் விதம் நன்று.  பிரமாதமான வசனங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் கதை நகர்த்தப்படும் விதம் சுவாரசியமாக உள்ளது. முக்கியமாக கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல் இதில் வித்தியாசமானது.

இயக்குநர் சுசி கணேசன் ஒரு துப்பறிவாளர் பாத்திரத்திலலும் வருகிறார். சின்ன பாத்திரம் தான் எனினும் முக்கியப் பாத்திரம். அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. வேறு யாராவது நடித்திருந்தால் திரைக் கதை/படம் மெருகேறியிருக்கும். திரைக் கதையில் சில இடங்களில் தெளிவு இல்லை. குழப்பத்தைத் தவிர்த்து இருக்கலாம்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதாக க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர்க்கேத்த தண்டனை கிடைக்கிறது. பிரசன்னா க்மேளைக்ஸ் பகுதி சற்றே நம்பகத் தன்மை குறைவாக உள்ளது. இன்னும் நன்றாக முடித்திருக்க கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

தீரன் அதிகாரம் ஒன்று – திரை விமர்சனம்

பருத்தி வீரனுக்குப் பிறகு பல வருடங்கள் காத்திருப்புக்குப் பின் அதே கார்த்தியை இப்போ கண்ணில் காட்டிய H.வினோதுக்கு கார்த்தியும் நாமும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கோம். தீரன் பாத்திரத்தில் நின்று விளையாடுகிறார் கார்த்தி! ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ள சதுரங்க வேட்டை படத்தைத் தந்த இயக்குநர் வினோத் நேர்த்தியான இன்னொரு படத்தை நமக்குத் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.

நிறைய ஆய்வு செய்து 1995-2005 வரை நடந்த உண்மை சம்பவங்களை இரண்டு மணி நாற்பது நிமிட நேரத்தில் தொகுத்து வழங்கியுள்ளார் வினோத். ஒரு பேருந்து கட்டணச் சீட்டின் பின் பகுதியில் எழுதப்படும் கதையை திரைக்கதை ஆக்கிப் படைக்கும் இக்கால கட்டத்தில் ஒரு நீண்ட தொடர் சம்பவங்களை, அதுவும் இந்தியாவின் பல பகுதிகளை மையப் படுத்தி நடந்தவைகளை வெகு கோவையாக, சீர்மைப் படுத்தித் தெளிவாக ரசிகர்களுக்குப் புரியும் விதத்தில் திரைக் கதையை அமைத்து இயக்கியுள்ள வினோத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

தொண்ணூறுகளில் dacoity/வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  தமிழகத்தில் ஒதுக்குப்புறமான வீடுகளில் புகுந்து அதில் வசிப்பவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று நகை, பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றவர்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருப்போம். ஒரு நேர்மையான & கெட்டிக்கார காவல் துறை அதிகாரி எப்படி அந்த வடநாட்டுக் கொள்ளைக் கும்பலை குறைந்த தொழில் நுட்ப வசதியுடனும், அரசு கொடுத்தக் குறைந்த பொருளாதார உதவியுடனும், சிறிய குழுவை வைத்து, தங்கள் உயிர்களைப் பணையம் வைத்து கொள்ளைக் கும்பல் தலைவனைக் கைது செய்தும் மற்றும் பலரை என்கவுண்டரில் கொன்றும் தமிழகத்தை அந்தக் குழுவின் துன்புறுத்தலில் இருந்து விடுவிக்கிறார் என்பதே கதை.

உண்மையில் அந்த போலிஸ் அதிகார் S.R.ஜங்கித். அந்தப் பாத்திரத்தை ஏற்று செம்மையாக செய்துள்ளார் கார்த்தி. உடம்பும் காவல் துறை அதிகாரிக்கு ஏற்றதாக முறுக்கி வைத்துள்ளார். அந்த அர்பணிப்புக்குப் பாராட்டுகள். படம் முழுக்க எக்கச்சக்க ஸ்டன்ட் காட்சிகள். அவை அனைத்தும் அற்புதமாகப் படமாக்கப் பட்டுள்ளது. ஆரவல்லி மலைத் தொடர்களின் மத்தியில் பொட்டல் வெளியில் நிறைய சண்டைக் காட்சிகள். எந்தத் தொழில் நுட்ப உபகரணத்தின் நிழல் கூடத் தெரியாமல் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

கதாநாயகி ராகுல் பரீத் சிங். படத்துக்கு மென்மையைத் தருவது கார்த்தி ராகுல் பரீத் சிங்கிற்குமான காதலும் மண வாழ்க்கையின் இதமும் தான். வெகு அழகாக உள்ளது அவர்களின் அன்பும் நேசமும். கொள்ளைக் கும்பல் தலைவனாக அபிமன்யு சிங் மிக நன்றாக நடித்துள்ளார். வில்லன் பாத்திரம் வலுவாக இருக்குபட்சத்தில் தான் ஹீரோ பாத்திரமும் மிளிரும். கார்த்திக்கிற்கு இணையாக இப்பாத்திரம் அமைந்து இருப்பது படத்தின் இறுதி வரை விறுவிறுப்புக் குறையாமல் இருக்க உதவுகிறது. துணை காவல் துறை அதிகாரியாக வரும் போஸ் வெங்கட்டும் நன்றாக செய்துள்ளார். ஜிப்ரான் படத்துக்குப் படம் அவர் எவ்வளவு பெரிய பலம் என்று நிருபித்து வருகிறார். பாடல் & பின்னணி இசை அருமை!

கண்டுபிடிக்கப்படாத கொடூரமான முறையில் கொலைகள் நிகழ்ந்த சில கேஸ்களை நூல் பிடித்தாற் போலத் தொடர்ச்சியாகச் சென்று அதன் காரணகர்த்தாக்களை ஆராயும் கார்த்தி சரித்திரச் சான்றுகள் மூலம் குற்ற பரம்பரை என முத்திரைக் குத்தப்பட்ட இனங்களை ஆராய்ச்சி செய்து ராஜஸ்தானில் மறைந்திருக்கும் பவாரியா என்னும் கொள்ளைக் கும்பலே தமிழ்நாட்டில் நடக்கும் கொலை/கொள்ளைகளுக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்.

பெரிய கதை, நிறைய சம்பவங்கள் என்பதால் படம் நீளமாக உள்ளது. ஆனால் ஸ்டன்ட் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையில்லாத ஒரு வடநாட்டு ஆடலும் பாடலும் மீதும் கத்திரி போட்டிருக்கலாம்.

இன்பார்மர் மூலம் தகவல் பெறுவது, பல மாநில காவல் துறையினரின் உதவிகளைப் பெறுவது என எந்த சின்ன விவரமும் விடாமல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். எளிதான காரியமில்லை இது. மேலும் கார்த்தியையும் மற்ற பாத்திரங்களையும் மிகைப்பட நடிக்க விடாமல் சரியாக வேலை வாங்கியிருப்பதற்கும் இவரை பாராட்ட வேண்டும். கொஞ்சம் தப்பியிருந்தால் காட்டுக் கத்தல்களும், பஞ்ச் வசனங்களும், அதிக சத்தமுமாக படம் உருவாகியிருக்கும்! படத்தைத் தொடங்கும் முன் பின்னணி வேலைகளை திறம்பட செய்து பின் ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. தமிழ்நாடு காவல் துறை உண்மையில் நடத்திய operation Bawaria என்கிற அதிரடி காவல் துறை நடவடிக்கைப் பற்றியதே இப்படம்.  தமிழ்நாட்டுக் காவல் துறை பெருமைப்பட வேண்டிய ஒரு படைப்பு இது.

 

அறம் – திரை விமர்சனம்

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் புறப்படும் தருவாயில் அந்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மூடப்படாத ஒரு ஆழ் கிணற்றில் தவறி ஒரு நாலு வயது சிறுமி விழுந்து விடுகிறாள். விண்வெளியில் ஏவுகணைகளை சர சரவென விட்டு ராக்கெட் விஞ்ஞானத்தில் கோலோச்சும் நாம் ஒரு முப்பதினாயிரம் செலவழித்து இம்மாதிரி விபத்துகளில் இருந்து குழந்தைகளை மீட்கும் உபகரணத்தை எந்த கிராம பஞ்சாயத்தும் வாங்கி வைத்துக் கொள்ளாததை முகத்தில் அறைந்தார் போல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கோபி நயினார்.

நம் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்பதை இரண்டு மணி நேர திரைப்படத்தில் அருமையாக காட்டியிருக்கும் இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள். கதாநாயகனாக நயன்தாரா. அந்தப் பகுதி கலெக்டராக வந்து ஒரு கருணை உள்ளம் கொண்ட பெண்ணாக துணிச்சலுடன் சிஸ்டத்துக்கு எதிராகப் போராடி தொண்ணூறு அடி ஆழத்தில் விழுந்துள்ள குழந்தையை மீட்கப் பாடுபடுகிறார். நடிகைகளுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் இந்த மாதிரி பாத்திரங்கள் அவர்களுக்கு எளிதில் அமையாது. வந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் நயன்.

காக்க முட்டையில் நடித்த சின்ன காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை {ரமேஷ், விக்னேஷ்} இருவரும் {முக்கியமாக சின்ன காக்கா முட்டை} நன்கு நடித்துள்ளனர். கதை தொடங்கி பத்து நிமிடங்களுக்குள்ளேயே எல்லா பாத்திரங்களின் தன்மையையும் நன்கு செதுக்கிவிடுகிறார் இயக்குநர். அதனால் பின்னால் திரைக்கதை அமைக்க எளிதாகிறது. எழுத்தும் கோபி நயினார் தான். நயன்தாரா தவிர அனைத்து கதாபாத்திரங்களும் அந்த மண்ணின் மைந்தர்கள் போன்றே தோற்றம் அளிக்கின்றனர். கதையின் வெற்றிக்கு முக்கிய காரணம் இது. தண்ணீருக்காக அல்லாடும் மக்களைத் திரையில் பார்க்கும்போது இந்த நிலை பரவலாக தமிழ்நாடு முழுவதுமே உள்ளதை நினைத்து கொஞ்சமாவது படம் பார்ப்பவர்கள் கவலைப்படுவார்கள். அந்த அளவு சொல்லப்படும் விஷயம் எதுவாக இருந்தாலும் அழுத்தமாகப் பதியப் படுகிறது.

கடைசி வரைக்கும் நம்மை பதைபதைப்புடன் வைக்கிறார் இயக்குநர். இத்தனைக்கும் படம் நயன்தாராவின் பணி இடை நீக்கம், விசாரணையில் தொடங்கி கதை பின்னோக்கிப போகிறது. கிளைமேக்சில் மனம் நெகிழ்ந்து கண்ணில் நீர் வராமல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். ஏழையின் உயிரும் உயிர் தான். அவர்களின் பாசமும், நேசமும், ஒட்டுதலும், ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தான் படத்தின் அடிநாதங்கள்.

ஆழ்துளைக் கிணறில் ஒரு குழந்தை விழுந்து விட்டால் மீடியா அங்கு வராதா? நிச்சயமாக வருகிறது. ஆனால் எதுவும் மிகைப்படாமல் கையாளப் பட்டிருக்கிறது. தொலைகாட்சி ஊடகங்களில் கலந்துரையாடல்கள் நடக்கின்றன, ஆனால் அனைத்தும் அறிவுபூர்வமாக உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. வசங்கள் அருமை. அரசியல்வாதிகளை நன்கு சாடுகிறது.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆழ்கிணற்றினுள் இருக்கும் குழந்தையை காட்டுவதில் இருந்து அவளை மீட்கும் முயற்சிகளை தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவது வருவதில் தன்திறமையை காட்டி பாராட்டைப் பெறுகிறார். பீடர் ஹெயின்சின் அக்ஷன் காட்சிகளும் நன்று!முக்கியமாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து வந்து உதவும்போது நன்கு காட்சியமைக்கப் படுகிறது. ரூபனின் எடிடிங், முக்கியமாக கிளைமேக்சில் விண்வெளி கலம் புறப்படும்போது இங்கே ஆழ்துளை கிணறில் நடப்பதை ஒரு சேரக் காட்டுவது அருமை. ஆவணப் படம் போல இல்லாமல் பின்னணி இசை படத்துக்கு உயிர் ஊட்டுகிறது. ஜிப்ரான் இசைக்கு நன்றி.

நயன்தாராவுக்கு துளியும் கவர்ச்சி உடைகள் கிடையாது. காதலன் இல்லை, அதனால் டூயட் கிடையாது. குத்துப் பாட்டு, அச்சு பிச்சு காமெடி கிடையாது. ஏழை மக்கள், பாட்டாளி மக்கள் பற்றிய படமென்றாலும் டாஸ்மாக் காட்சிகள் இல்லை. நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். ஆனால் மக்கள் திரை அரங்குக்குச் சென்று பார்த்தால் தான் இந்த மாதிரி படங்களைத் துணிந்து தயாரிக்க முடியும். பார்த்தவர்கள் சொல்லும் வார்த்தை மூலம் இப்படத்துக்குக் கூட்டம் சேர வாழ்த்துகள்.