ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் புறப்படும் தருவாயில் அந்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மூடப்படாத ஒரு ஆழ் கிணற்றில் தவறி ஒரு நாலு வயது சிறுமி விழுந்து விடுகிறாள். விண்வெளியில் ஏவுகணைகளை சர சரவென விட்டு ராக்கெட் விஞ்ஞானத்தில் கோலோச்சும் நாம் ஒரு முப்பதினாயிரம் செலவழித்து இம்மாதிரி விபத்துகளில் இருந்து குழந்தைகளை மீட்கும் உபகரணத்தை எந்த கிராம பஞ்சாயத்தும் வாங்கி வைத்துக் கொள்ளாததை முகத்தில் அறைந்தார் போல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கோபி நயினார்.
நம் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்பதை இரண்டு மணி நேர திரைப்படத்தில் அருமையாக காட்டியிருக்கும் இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள். கதாநாயகனாக நயன்தாரா. அந்தப் பகுதி கலெக்டராக வந்து ஒரு கருணை உள்ளம் கொண்ட பெண்ணாக துணிச்சலுடன் சிஸ்டத்துக்கு எதிராகப் போராடி தொண்ணூறு அடி ஆழத்தில் விழுந்துள்ள குழந்தையை மீட்கப் பாடுபடுகிறார். நடிகைகளுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் இந்த மாதிரி பாத்திரங்கள் அவர்களுக்கு எளிதில் அமையாது. வந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் நயன்.
காக்க முட்டையில் நடித்த சின்ன காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை {ரமேஷ், விக்னேஷ்} இருவரும் {முக்கியமாக சின்ன காக்கா முட்டை} நன்கு நடித்துள்ளனர். கதை தொடங்கி பத்து நிமிடங்களுக்குள்ளேயே எல்லா பாத்திரங்களின் தன்மையையும் நன்கு செதுக்கிவிடுகிறார் இயக்குநர். அதனால் பின்னால் திரைக்கதை அமைக்க எளிதாகிறது. எழுத்தும் கோபி நயினார் தான். நயன்தாரா தவிர அனைத்து கதாபாத்திரங்களும் அந்த மண்ணின் மைந்தர்கள் போன்றே தோற்றம் அளிக்கின்றனர். கதையின் வெற்றிக்கு முக்கிய காரணம் இது. தண்ணீருக்காக அல்லாடும் மக்களைத் திரையில் பார்க்கும்போது இந்த நிலை பரவலாக தமிழ்நாடு முழுவதுமே உள்ளதை நினைத்து கொஞ்சமாவது படம் பார்ப்பவர்கள் கவலைப்படுவார்கள். அந்த அளவு சொல்லப்படும் விஷயம் எதுவாக இருந்தாலும் அழுத்தமாகப் பதியப் படுகிறது.
கடைசி வரைக்கும் நம்மை பதைபதைப்புடன் வைக்கிறார் இயக்குநர். இத்தனைக்கும் படம் நயன்தாராவின் பணி இடை நீக்கம், விசாரணையில் தொடங்கி கதை பின்னோக்கிப போகிறது. கிளைமேக்சில் மனம் நெகிழ்ந்து கண்ணில் நீர் வராமல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். ஏழையின் உயிரும் உயிர் தான். அவர்களின் பாசமும், நேசமும், ஒட்டுதலும், ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தான் படத்தின் அடிநாதங்கள்.
ஆழ்துளைக் கிணறில் ஒரு குழந்தை விழுந்து விட்டால் மீடியா அங்கு வராதா? நிச்சயமாக வருகிறது. ஆனால் எதுவும் மிகைப்படாமல் கையாளப் பட்டிருக்கிறது. தொலைகாட்சி ஊடகங்களில் கலந்துரையாடல்கள் நடக்கின்றன, ஆனால் அனைத்தும் அறிவுபூர்வமாக உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. வசங்கள் அருமை. அரசியல்வாதிகளை நன்கு சாடுகிறது.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆழ்கிணற்றினுள் இருக்கும் குழந்தையை காட்டுவதில் இருந்து அவளை மீட்கும் முயற்சிகளை தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவது வருவதில் தன்திறமையை காட்டி பாராட்டைப் பெறுகிறார். பீடர் ஹெயின்சின் அக்ஷன் காட்சிகளும் நன்று!முக்கியமாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து வந்து உதவும்போது நன்கு காட்சியமைக்கப் படுகிறது. ரூபனின் எடிடிங், முக்கியமாக கிளைமேக்சில் விண்வெளி கலம் புறப்படும்போது இங்கே ஆழ்துளை கிணறில் நடப்பதை ஒரு சேரக் காட்டுவது அருமை. ஆவணப் படம் போல இல்லாமல் பின்னணி இசை படத்துக்கு உயிர் ஊட்டுகிறது. ஜிப்ரான் இசைக்கு நன்றி.
நயன்தாராவுக்கு துளியும் கவர்ச்சி உடைகள் கிடையாது. காதலன் இல்லை, அதனால் டூயட் கிடையாது. குத்துப் பாட்டு, அச்சு பிச்சு காமெடி கிடையாது. ஏழை மக்கள், பாட்டாளி மக்கள் பற்றிய படமென்றாலும் டாஸ்மாக் காட்சிகள் இல்லை. நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். ஆனால் மக்கள் திரை அரங்குக்குச் சென்று பார்த்தால் தான் இந்த மாதிரி படங்களைத் துணிந்து தயாரிக்க முடியும். பார்த்தவர்கள் சொல்லும் வார்த்தை மூலம் இப்படத்துக்குக் கூட்டம் சேர வாழ்த்துகள்.
Nov 11, 2017 @ 03:05:47
You can’t except crowd for these kind of movies on fdfs. Will pickup later br words of mouth.
Nov 11, 2017 @ 06:50:28
படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த மாதிரி நல்ல படங்களுக்கெல்லாம் கூட்டம் அடுத்தடுத்து வரத்தொடங்கும். படமும் வெற்றி பெறட்டும்.
Nov 11, 2017 @ 14:59:47
இதுபோன்ற நல்ல கருத்துள்ள படங்களை ரசிகர்களும், விமரிசகர்களும் ஆதரிப்பது அவசியம்.
Nov 13, 2017 @ 02:02:00
ஹீரோவை துரத்திக் காதலிக்கும் காட்சிகள், ஜிகுஜிகு ஆடைகள் போன்றவற்றிலிருந்து பெரிய பிரேக் அவருக்கும் நமக்கும். ஹீரோக்கள் அரசியல் பேசும் காலத்தில், ஹீரோயினையும் அரசியல் பேசவைத்த இயக்குநர் கோபி நயினாருக்கு சல்யூட். அவர் உருவாக்கிய கேரக்டருக்கு, கச்சிதமாக உயிர் பாய்ச்சியிருக்கிறார் நயன்தாரா. அவர் கரியரில் மிக முக்கியமான படம் இது. கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எம்.எல்.ஏ-வை முறைத்துவிட்டு கெத்தாக நடப்பது, குழந்தையை கேமராவின் வழி பார்க்கும்போதெல்லாம் இயலாமையில் புழுங்குவது என அசரடிக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸில் மொத்தக் கூட்டத்திலிருந்தும் பிரிந்து, தனியாக வெடித்துக் கதறும்போது… க்ளாஸ் …குடும்பத்துடன் பார்க்கலாம்
Nov 16, 2017 @ 12:51:58
நன்றாக விமர்சனம் கொடுத்துள்ளீர்கள். படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது. பார்த்துட்டு திரும்ப வந்து சொல்றேன். நன்றி வாழ்த்துக்கள் 🙂
Nov 19, 2017 @ 10:48:26
மிகை இல்லாதா சரியான விமர்சனம் ! வாழ்த்துக்கள் !
Nov 20, 2017 @ 01:03:07
@thiraithuruvi.
காலம் ஒருநாள் மாரும், நம் கவலை யாவும் தீரும் – நம்பிக்கைதான் வாழ்க்கையை
நகர்த்துகிறது. படத்தை பார்த்த பிறகாவது இந்த அவலத்திற்கு தீர்வு கிடைக்குமா?
வருவதை எண்ணி சிரிக்கின்றேன், வந்ததை எண்ணி அழுகின்றேன்! நயன் மிகவும்
நயம்! படத்தின் வெற்றிக்கு காரணம் அனைவரின் வேர்வையே காரணம்.. எந்த
வேர்வைக்கும்……வேர்வைக்கும்…..வெற்றி ஒரு நாள்….வேர்வைக்கும்! (நன்றி: கவிஞர்
வாலிக்கு) “அறம் – நிச்சயம் வேர் வைத்திருக்கிறது! பலன்: காலத்தின் கையில்!
இயக்குனருக்கு – கண் படாமல் இருக்க சுற்றிபொடவேண்டும் – பாராட்டுக்கள்!
@திரைதுருவி.
்
Nov 20, 2017 @ 06:36:00
மதிப்பிற்குரிய, சூப்பர் இயக்குனர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, அறம் படத்தின் வெற்றி பட இயக்குனர் திரு கோபி நயினார் பார்வைக்கு…………
தயவு செய்து “அறம்” 2 என்ற பெயரில் உங்களின் அடுத்த படம் இருக்க வேண்டாம்.
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளை தினமும் சந்தித்து சோர்வடைந்து, நம் தலைவிதி, என்று நம்மை நாமே நொந்து கொண்டு வாழும் சுழ்நிலை சுற்றிலும் இருக்கிறது. தீர்க்க தனி மனிதனால் முடிவதில்லை! உங்களின் படம் தீர்வு காண்ட்டும்!
அந்த பிரச்சனையைத் கையில் எடுங்கள், ஊர் உணரட்டும்! படமும் வெற்றி காண்ட்டும்!
இருக்கவே இருக்கிறார் திரு ஓம் பிரகாஷ் உங்கள் படத்திற்கு ஒளியூட்ட!
சிந்திப்பீர்களா?
திரைதுருவி
ஆர் சீனிவாசன்.