சித்தூர் ராணி பத்மினியின் சரித்திரக் கதை நாம் அறிந்ததே. அதை 3Dயில் பிரம்மாண்டமாக காணக் கிடைக்கிறது பத்மாவத் படத்தின் மூலம். நல்ல தயாரிப்பு. அரண்மனைகளும், ஆடை அலங்காரங்களும், சண்டைக் காட்சிகளும் 3Dயில் பிரமிப்பூட்டுகின்றன. இதில் திபிகா படுகோன் பத்மாவதியாகவே வாழ்ந்திருக்கிறார். ராணிக்குரிய கம்பீரம், அழகு, நடை உடை பாவனைகள் இவை அனைத்திலும் நாம் மதிக்கும் ஒரு சரித்திர நாயகியை நம் கண் முன் நிறுத்துகிறார். மேவாரின் ராஜபுத அரசன் ராவல் ரத்தன் சிங்காக ஷாஹித் கபூர் மிக அழகான, வீரமான ஆண்மகனாக அருமையாக நடித்திருக்கிறார். அல்லாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங். அத்தனை குரூரமான நடிப்பு. முதல் காட்சியிலேயே பால்ய நண்பனை அனாயாசமாக கொன்று பின் தன் திருமண விழாவில் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி இலகுவாக தான் எத்தனை பெரிய வில்லன் என்று நம் மனத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கிறார். வரிசையாக கில்ஜியின் கொடூர செயல்களால் அவன் எப்படிப்பட்டவன் என்று காட்டிவிடுகிறது திரைக்கதை.
ரத்தன் சிங் பத்மாவதியை காட்டில் சந்திக்கும் முறையும் அவளின் வீர தீரத்தைக் கண்டு மையல் கொள்வதும் அழகாக உள்ளன. அவன் அரசன், அவள் சிங்கள் தேசத்து அரச குமாரி. அதனால் திருமணம் எளிதாக முடிகிறது. ஆனால் மேவார் ராஜபுத அரசனுக்கு அவள் இளைய ராணியே. பத்மாவதியை மேவார் அழைத்து சென்றவுடன் இவள் அழகையும் அறிவையும் கண்டு அரண்மனையில் உள்ள அனைவரும் மயங்குகின்றனர் ஆனால் மூத்த அரசிக்கு மனம் வாடுகிறது.
பார்யாள் ரூபவதி சத்ரு என்பதற்கு ஏற்ப {மனைவி அழகி என்றால் அதுவே எதிர்வினையாற்றும், சீதைக்கு அவள் அழகே சத்ரு} அவள் அழகே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. ராஜ குருவே தீய எண்ணத்துடன் மாற பத்மாவதியின் அறிவுரையின் பேரில் ராஜ ராஜகுருவை நாடு கடத்துகிறான் அரசன். அதனால் அவனே எதிரியாக மாறி, நயவஞ்சகத்துடன் செயல்பட்டு மேவாருக்கே கில்ஜிக்கு வழி காட்டுகிறான். கிட்டத்தட்ட சூர்ப்பனகை செய்ததை இந்த ராஜகுரு செய்கிறான். இராவணன் இடத்தில் அல்லாவுதீன் கில்ஜி.
முதலில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் கதை பத்மாவதியும் ரத்தன் சிங்கும் மேவார் வந்த பிறகு தொய்வு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இடைவேளை வரை சுமாராகவேப் போகும் படம் இடைவேளைக்குப் பிறகு வேகம் எடுக்கிறது. கணவனை கில்ஜியிடமிருந்து மீட்க பத்மாவதி போடும் கில்லியான யுக்தி, கில்ஜியின் மனைவி மேஹருனிஸ்ஸா செய்யும் உதவி, திருட்டுத்தனமா தில்லி கோட்டைக்குள் புகுந்த ராஜபுத வீரர்கள் அடையும் வெற்றி என்று சுவாரசியமாக போகிறது கதை. ஆனால் ஏமாற்றப்பட்ட கில்ஜி வெகுண்டெழுந்து பெரும் வேகத்தோடும் பெரும் படையோடும் வந்து அரசனை கொன்று கோட்டையை தகர்க்கிறான். ஜ்வாலையில் பத்மாவதி தீக்கு இரையாவதை கவிதையாய் வடித்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.
ஒளிப்பதிவு பெரும்பாலும் நன்றாக உள்ளது. தில்லி சுல்தான் அரியணை இருக்கும் தர்பார் மட்டும் இருளோ என்றிருக்கிறது. அது இஸ்லாமிய அரசின் இருளடைந்த ஆட்சியை குறியீடாக காட்ட இருக்குமோ என்னமோ! இசை வெகு சுமார். நான் பத்மாவத் படத்தைத் தமிழில் பார்த்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. ஆனால் சில இடங்களில் கவிதைகள் வருகின்றன. அவை வெகு மொக்கையான மொழிப்பெயர்ப்பாக அமைந்திருந்தன. {இந்தியிலும் மொக்கையா என்று தெரியாது}.
இந்தப் படம் வெளியாவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று தெரியவில்லை. ராஜபுத்திரர்களையும் ராணி பத்மாவதியையும் எந்தத் தவறும் இல்லாமல் காட்டியுள்ளார்கள். கில்ஜியையும் கொடுங்கோலனாகத் தான் காட்டியிருக்கிறார்கள். எக்கச்சக்கப் பணம் செலவழித்து தயாரிக்கப்பட்டுள்ள படம் {இருநூறு கோடி ரூபாய்}. தயாரிப்பு நன்றாக இருந்தாலும் படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். முதல் பாதி ரொம்ப இழுவையாக உள்ளது. அதை குறைத்திருந்தால் இன்னும் ரசித்துப் பார்க்கலாம். தெரிந்த முடிவாக இருந்தாலும் கடைசி காட்சியில் மனம் பதைபதைக்கிறது. அது இயக்குநரின் வெற்றியே!