மும்பையில் ஓர் நகைக் கடையில் உண்மையில் நடந்த ஒரு துணிகர ஏமாற்று சம்பவத்தை {பொய்யான CBI ரெயிட்} மையமாக வைத்து Special 26 என்ற இந்திப் படத்தின் தழுவல் ‘தானா சேர்ந்த கூட்டம்’.
மோசடி செய்யும் ஒருவனின் சாமர்த்தியமான செயல்களைப் பற்றிய படம் இது. இதைச் செய்வது ஒரு ஹீரோ என்பதால் அவன் செய்யும் செயல்களை நியாயப் படுத்த ஒரு பின்னணிக் கதை உள்ளது. ஆரம்பம் ஜோராக உள்ளது. சொடக்கு மேல சொடக்கு போட்டு தூளாக குத்தாட்டம் போடுகிறார் சூர்யா. முதல் ஏமாற்று வேலைக்குப் பிறகு அந்த ஆச்சரியத் தன்மை குறைந்து விடுவதால் அடுத்து ஏமாற்றும் சம்பவத்தில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. திரைக்கதையின் கோளாறு அது. சூர்யா மாதிரி ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு அவரை பிரமாதமாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா? இன்னும் அழகாக விறுவிறுப்பாக திரைக் கதை அமைத்திருக்கவேண்டும். அதுவும் சிபிஐ ஆதிகாரிகள் இந்த ஏமாற்றும் கும்பல் யார் என்று கண்டுபிடித்தப் பிறகும் இடைவேளைக்குப் பிறகு அவர்களை பிடிக்காமல் திரைப்படம் தொடர்கிறது!
எண்பதுகளின் பிற்பகுதியில் நடக்கிறது கதை. ஆனால் அது தெளிவாகச் சொல்லப்படவில்லை. எண்பதுகளில் நடக்கிற கதை என்பதாக பொட்டிக் கடையில் தொலைபேசி, லாட்டரி டிக்கெட் விற்பனை முதலியன மூலம் காட்டப்படுகின்றன. செல் போன் இல்லை. வீட்டில், கடையில் இருக்கும் தொலைபேசி மூலம் எல்லா போன் உரையாடல்களும் நடப்பதால் செல் போன் வரும் முன் நடக்கும் கதை என்கிற அளவில் புரிந்து கொள்கிறோம் ஆனால் தெளிவாக சொல்ல மெனக்கெடல் இல்லை.
வேலையில்லா திண்டாட்டம் என்னும் காலகட்டம் என்றில்லாமல் வேலை கிடைக்க லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் என்று படம் தொடங்குவதாலும் கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது.அந்த மாதிரி சம்பவங்கள் இப்பொழுது தான் பெருகியுள்ளது. பணம் கொடுத்தும் நாளை வோட்டை வாங்குவார்கள் என்பது போன்ற சில வசனங்கள் இடம் பெறுகின்றன. அவை மூலம் இந்தக் கதை அதற்கு முன்பு நடைபெற்றது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அந்தக் கதை தொண்ணூறு பிற்பாதியிலும் இராண்டாயிரத்தின் முற்பகுதியிலும் நடந்த கதை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தத் தெளிவு இந்தப் படத்தில் இல்லை.
சூர்யா படம் முழுவதும் எந்த இடத்திலும் சோடை போகாமல் நன்றாக செய்துள்ளார். அடுத்த பிளஸ் ரம்யா கிருஷ்ணன். அவர் இல்லை என்றால் படம் இந்த அளவு கூட சிறப்பாக இருந்திருக்காது. தேர்ந்த நடிகை! சிபிஐ உயர் அதிகாரியாக சுரேஷ் மேனன், நடிப்பு நன்று. கார்த்திக் ஸ்பெஷல் சிபிஐ அதிகாரியாக வந்து தன் அனாயசமான நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். சோகம் என்னவென்றால் அவரை அவ்வளவு கெத்தாக ஆரம்பத்தில் காட்டிவிட்டு கிளைமேக்சில் அவர் பாத்திரத்தை சொதப்பி விட்டார்கள். அதே போல சூர்யாவின் தந்தையாக வரும் தம்பி ராமையா பாத்திரமும் எடுபடவில்லை. படத்தில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய சூர்யாவின் நண்பரான கலையரசன் பாத்திரம் வலுவாகவே இல்லை. அவனின் முடிவு தான் சூர்யாவின் பாதையை தேர்ந்தெடுப்பதற்கான தூண்டுதல். கலையரசன் எதற்காக போலீசில் சேரவேண்டும் என்று அவ்வளவு முயற்சி எடுக்கிறான் என்பதற்கோ கடைசியில் எடுக்கும் முடிவுக்கான காரணமோ சரியாக கொடுக்கப்படவில்லை. சூர்யாவின் கூட்டாளிகள் செந்தில், சத்யன், கீர்த்தி ரெட்டி இவர்களின் பங்களிப்பு நன்றே. கீர்த்தி சுரேஷ் இருக்கும் இடமே தெரியவில்லை. டூயட்டுடன் சரி.
படத்தின் பெரிய பலம் அனிருத். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே நன்றாக அமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் பாராட்டைப் பெறுகிறது.
க்ளைமேக்ஸ் நகைக் கடை சம்பவம் ரொம்ப குழப்பமாக சொல்லப்பட்டிருக்கு. ஒரு பரபரப்பும் இல்லாமல் ஒரு க்ளைமேக்ஸ் சம்பவம்! இந்திப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காது. அது ரொம்ப சுவாரசியமான கலகலப்பான திரைப் படம். மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அப்படியே எடுத்திருக்கலாம் விக்னேஷ் சிவன். சூர்யாவிற்கும் நமக்கும் ஒரு நல்ல படம் கிடைத்திருக்கும். நானும் ரவுடி தான் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் ஏமாற்றி விட்டார்.
Jan 13, 2018 @ 15:56:39
நன்றி , பீரியட் படம் என்பதில் சொதப்பிவிட்டார்கள் போலும். உங்கள் விமர்சனம் அருமை. நிறைகுறைகளை சுத்தமா எடுத்து சொல்லியுள்ளீர்கள். இதைவிட வேறு யாரும் விளக்கமா விமர்சனம் செய்திருக்க முடியாது. எவ்வளவோ மெனக்கெட்டு திட்டம்போட்டு செலவு செய்து நேரம் விரையம் செய்துதான் படத்தை எடுக்கிறார்கள். இருந்தாலும் எப்படித்தான் சொதப்பிவிடுகிரார்களோ. இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பாடம். நமக்கும்தான் 🙂 நன்றி வாழ்த்துக்கள்