சுந்தர் Cயின் வழக்கமான பாணியில் கதை, திரைக்கதை, இயக்கம். கலகலப்பு, அரண்மனை போன்ற படங்களின் சாயலில் இன்னுமொரு படைப்பு கலகலப்பு 2. அவரின் கதைகள் ஒரே மாதிரி இருந்தாலும் களத்தை மாற்றி வித்தியாசம் காட்டுவோம் என்று இப்படத்தின் பெரும்பாலான கதை காசியிலும் பின்னர் காரைக்குடி பக்கத்திலும் எடுத்துள்ளார்.
ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஹீரோக்களே மூன்று பேர்கள். ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா. இதில் ஜீவா சீனியர் என்றாலும் பங்களிப்பில் ஜெய் போட்டோ பிநிஷில் முதலில் வந்துவிடுகிறார். சிவா பிராட் செய்யும் பாத்திரத்தில் வருகிறார். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி பாத்திரம் ஒரே விதமான வசன உச்சரிப்பு/நடிப்பு, மாற்றமே இல்லை! ஹீரோயின்களில் கேதரின் தெரசா நன்றாக செய்திருக்கிறார். நிக்கி கல்ரானியும் நன்றே. இவர்களைத் தவிர ஏமாற்றும் இன்ஸ்பெக்டராக ராதா ரவி, நித்தி மாதிரி போலி சாமியாராக யோகி பாபு, இதர நகைச்சுவை பாத்திரங்களில் {அதாவது அடி வாங்கும் பாத்திரங்களில்} ரோபோ சங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், சதீஷ், வையாபுரி, சிங்கமுத்து, சிங்கம் புலி, சந்தான பாரதி, கலகலப்பு 1ல் வந்த நாய் என்று ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளது.
காசியில் மேன்ஷன் நடத்துபவராக ஜீவா வருகிறார். அவருக்கென்று ஒரு குடும்பம். இதே மேன்ஷனுக்கு ஜெய் தனக்கு உரித்தான சொத்தைத் தேடி காசி வருகிறார். ஒரு அரசியல்வாதியின் ஆடிட்டர் லேப்டாப்பில் புதையுண்ட இரகசியங்களுக்கு விலை பேசி அதை பெற அதே காசிக்கு வருகிறார். இதற்கு நடுவில் போலி சாமியார் காசி மேன்ஷனை அபகரிக்கப் பார்க்கிறார். ஜீவா ஜெய்யை ஏமாற்றிய சிவா பாத்திரம் மீண்டும் கதையில் பிரவேசிக்க, ஏமாந்த பணத்தைப் பெற ஜீவா, ஜெய் முயல கதை திரும்ப தமிழ்நாட்டுக்குப் பயணிக்கிறது கதை. கலகலப்பு 1ல் கடைசிப் பகுதியில் இருந்ததை விட இதில் அதிக அடிதடி சண்டை, அதனால் ஏற்படும் நகைச்சுவையே படம்! எதுவுமே ரொம்ப ஓவராக போனால் அலுத்துவிடும். அது தான் இப்படத்திலும் காண்கிறோம்.
ஹிப் ஹாப் தமிழாவின் இசை வெகு சுமார். அதுவும் பாடல்கள் எதுவுமே மனத்தில் நிற்கவில்லை. இது லாஜிக் இல்லா படம் என்பதால் நடனக் காட்சிகளும் அங்கங்கே புகுத்தப் பட்டு ரசிகர்களை இம்சிக்கிறது. படத்தின் நீளத்தை இந்தப் பாடல்களை கத்திரித்துக் குறைத்து இருக்கலாம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை, முக்கியமாக காசியை காட்டும் பகுதிகளில்.
கதை சரியாக இல்லாததால் இவ்வளவு கதாப் பாத்திரங்கள் இருந்தும் எந்தப் பாத்திரத்துடனும் ஈடுபாடு ஏற்படவில்லை. முதல் பாதியை விட இரண்டாம் பாதி தேவலாம். கதை எல்லாம் எதிர்பார்க்காமல் சிரித்து விட்டு வர ஒரு நல்ல பொழுதுபோக்குக் சித்திரம். அதைக் கொடுப்பதில் சுந்தர் C. வெற்றிபெற்று விட்டார்.