காமாக்யா கோவில் – அஸாம்

Kamakhya-temple

என் தோழிகள் நான்கு பேர் காமாக்யா கோவில் சென்று வந்து அந்தக் கோவிலைப் பற்றிய சிறப்புகளை என்னிடம் பகிர்ந்தனர். மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. ஐம்பத்தோரு சக்தி பீடத்தில் ஒன்றானது இக்கோவில். அஸாம் மாநிலம் கௌஹாடி நகரில் உள்ள நீலாந்சல் மலையில் அமைந்துள்ளது இக்கோவில்.

தந்தை தட்சனால் ஏற்பட்ட அவமானத்தால் சதி தன் உயிரை மாய்த்துக் கொண்ட துக்கத்தில் சிவன் தன் காதல் மனைவியின் உடலைத் தாங்கிக் கொண்டு கோபமாகத் தாண்டவம் ஆடுகிறார். அதைத் தணிக்க விஷ்னு தன் சக்கரத்தை அனுப்பி உடலைப் பல துண்டங்களாக்குகிறார். அவை நூற்றியெட்டு இடங்களில் விழுகின்றன. யோனியும் கர்பப்பையும் விழுந்த இடமே இக்கோவில் இருக்கும் இடம். சதி சிவனை முதலில் கண்டு காதலித்த இடமும் இதுவே என்றும் சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகம் கிடையாது. பெண்ணின் யோனி மட்டுமே உள்ளது.  அதன் அடியில் கர்பப்பையும் உள்ளதாக நம்பிக்கை. தாய்மை, பெண்ணின் கருவுறும் சக்தி, தாய் மண், இயற்கை அன்னை, இவைகளின் அடையாளமாக இத்தெய்வம் போற்றி வணங்கப்படுகிறாள். சக்தியே காமாக்யாவாக வழிபடப்படுகிறாள்.

இக்கோவிலின் தனிச் சிறப்பு ஜூன் மாதத்தில் தேவிக்கு உதிரப் போக்கு ஏற்படுவதாக நம்பப் படுவது. அம்மாதத்தில் மட்டும் அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதி சிவப்பாக மாறுகிறது. தீட்டு என்று மாதவிடாய் காலத்தில் பெண் தள்ளி வைக்கப் படுகின்ற இச்சமூகத்தில் இக்கோவிலில் இதைக் கொடுப்பினையாகவும், இந்தச் சக்தியால் பெண் கருத்தறிக்க முடிகிற பாக்கியத்தையும் போற்றி பெருமைப்படுத்துகிறது. ஜூன் மாதத்தில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்படும்போது எப்பொழுதும் நீரூற்று வந்துகொண்டிருக்கும் கர்ப்பகிரகத்தில் யோனியில் இருந்து வரும் நீர் சிவப்பு நிறமாக மாறுகிறது. இந்த சமயத்தில் அம்புவாச்சித் திருவிழா வெகு கோலாகலமாக நடை பெறுகிறது. மூன்று நாட்கள் கோவில் நடை சாத்தப்பட்டுப் பின் திறக்கப்படுகிறது. இவ்விழாவில் அகோரிகளும் தாந்த்ரிக வழிமுறையில் நம்பிக்கை உள்ளவர்களும் பெரும் திரளாக வந்து வழிபடுகின்றனர். பில்லி சூன்யத்தில் இருந்து விடுபடபவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். மானச பூஜா, துர்கா பூஜா இங்கு நடக்கும் வேறு சில திருவிழாக்கள் ஆகும்.

இங்கு கர்பக்கிரகம் தரை மட்டத்துக்குக் கீழே சிறிய குகை அறையாக அமைந்திருக்கிறது. ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தரிசனம் உண்டு. மூன்று செங்குத்தான படிகளில் இறங்கி சிறிய கும்மிருட்டான கர்ப்பகிரகத்திற்குள் சென்றால் இரண்டு பெரிய அகல் விளக்குகள் நடுவில் நாம் யோனியை தரிசிக்கலாம். செம்பருத்திப் பூக்களாலும் சிவப்புத் துணியினாலும் யோனி அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கே ஊற்றாக நீர் வந்துகொண்டே இருக்கிறது. குனிந்து வணங்கி அந்தத் தீர்த்தத்தை நம் தலையில் தெளித்துக் கொள்வதே பிரசாதமாகிறது. இந்த நீர் பல நோய்களை தீர்க்கும் அருமருந்து என நம்பப்படுகிறது.

நம் அனைத்து இச்சைகளையும் பூர்த்தி செய்கிறவள் காமாக்யா தேவி. இங்கு குங்குமமாக ஒரு வகைக் கற்களைப் பொடி செய்த செந்தூரப் பொடியைப் பிராசதமாக அளிக்கிறார்கள். இதை இட்டுக் கொண்டால் தேவியின் ஆசி பரிபூரணமாக நமக்கு அமைகிறது என்பது நம்பிக்கை. ஈரமான சிவப்புத் துணி முக்கியமானவர்களுக்குப் பிராசதமாகக் கிடைக்கிறது. இதை அம்புவாச்சி வஸ்திரம் என்று கூறுகிறார்கள். புஷ்பங்களையே காணிக்கையாக அளிப்பது வழக்கமாக இருந்தாலும் வெளியே ஆடு பலியிடுவதும் நடக்கிறது. நாம் எடுத்து செல்லும் பூக்கள்,தேங்காய் சிவப்பு ஜரிகை துணி முதலியவை அங்கு இருக்கும் பாண்டாவால் அன்னையின் மேல் சமர்ப்பிக்கப் பட்டு திரும்ப நம்மிடமே கொடுக்கப்படுகிறது. சமர்ப்பிக்கப்பட்ட தேங்காயை குகைக்கு வெளியே வந்ததும் அங்கிருக்கும் பாண்டா அதை உடைத்து நெற்றியில் திலகம் இட்டு அனுப்புகிறார். சில பக்தர்கள் வளையல்கள், பொட்டு, ஏன் லிப்ஸ்டிக் கூட அன்புடன் அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

காமாக்யா பற்றிய முதல் கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. இக்கோவிலும் இஸ்லாமிய படையெடுப்புகளால் (ஹுசெய்ன் ஷா) 1498 அழிக்கப்பட்டுப் பின் கோச் வம்ச அரசர் விஷ்வசிங்கனாலும் அவருடைய மகன் நாராயணனாலும் திரும்ப 1565ல் கட்டப்பட்டுள்ளது.

kamakhya-templecrowd

திருப்பதி கோவில் மாதிரி இங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சாதரண வரிசையில் நின்று தரிசனத்திற்குச் சென்றால் சராசரியாக ஏழு மணி நெரம் ஆகும். விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள், வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் இன்னும் அதிகம். சிறப்பு தரிசனமாக ஐநூறு ரூபாய் கொடுத்துச் செல்லலாம். ஆனால் அந்தக் குறுகிய மூன்று படிகளைக் கடந்து தரிசிக்க செல்லும் அதே படிகளில் தான் தரிசனம் முடித்துத் திரும்புவர்களும் மேலே ஏறி வரவேண்டியுள்ளதால் காக்கும் நேரம் அனைவருக்கும் அதிகரிக்கிறது.

மிகப் புராதனமான கோவில், மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகக் கருதப்படுகிறது. இக்கோவில் பெண்மையைப் போற்றும் கோவிலாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. நம் மதத்தில் எதுவும் விலக்கப்பட்டதல்ல. இயற்கை எதுவோ அதை அங்கீகரித்து, நேசிக்கும் பழக்கம் போற்றுதலக்குரியது ஆகும். பெண்ணின் சக்தி ஆக்கும் சக்தியாகும், அழிக்கும் சக்தியல்ல. பெண்மை போற்றுவோம்! பெண்மை போற்றுவோம்!

ஜெய் காமாக்யா மாதா!

Kamakhya Temple Picture 2