நடிகையர் திலகம் – திரை விமர்சனம்

 

 

Mahanati

கீர்த்தி சுரேஷுக்கு வாழ்நாள் சாதனைப் படம் இது என்றால் மிகை ஆகாது! நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை திரைப்படமாகப் போகிறது என்றும் கீர்த்தி சுரேஷ் அவரின் பாத்திரத்தை ஏற்று நடிக்க நடிக்கப் போகிறார் என்றும் அறிவிப்பு வந்த போது பலரைப் போல நானும், என்ன சாவித்திரி பாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷா என்று குறைவாக எடைப் போட்டேன். சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி. ஒவ்வொரு அசைவிலும் சாவித்திரியை நினைவுக்குக் கொண்டு வருகிறார், ஏன் படம் பார்க்கும்போது நாம் சாவித்திரியை தான் பார்க்கிறோம், கீர்த்தி அங்கே இல்லை. நடை உடை பாவனை அனைத்திலும் சிறப்பான ஆராய்ச்சி செய்து அதை உள்வாங்கி உழைத்து நடித்துள்ளார் கீர்த்தி. சாவித்திரியின் நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் இப்படத்தைப் பார்த்து கண்டிப்பாக நெகிழ்ந்து போவார்கள்.

இன்றைய தலைமுறையினர் எவ்வளவு பேருக்கு சாவித்திரி பற்றி தெரியும் என்று தெரியவில்லை. அப்படிபட்டவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சாவித்திரி, ஜெமினி கணேஷ் பற்றி தெரிந்து அவர்களின் ரசிகராக இருந்தவர்களும் ரசித்துப் பார்க்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இயக்குநரும் படக் குழுவினரும் செய்துள்ள நல்ல ஆராய்ச்சி.

சின்ன வயசு சாவித்திரியாக வரும் பெண்ணும் வெகு அழகாக நடித்துள்ளார். எல்லா பாராட்டும் இயக்குநருக்கே. மாயாபஜார் படக் காட்சிகளில் முக்கியமாக நடனக் காட்சியில் கீர்த்தி சாவித்திரிக்கு இணையாக செய்துள்ளார். அதுவே அவருக்கு மிகப் பெரிய பாராட்டு!

இப்படத்தின் சிறப்பம்சமே வெறும் சாவித்திரியின் கதையாக காட்டாமல் சமந்தா, விஜய் தேவரகொண்டா என்கிற இரண்டு பத்திரிக்கையாளர்கள் சாவித்திரியைப் பற்றி தெரிந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சிப் பார்வையில் படத்தைக் காட்டியிருப்பது தான். இந்த மாதிரி கதை சொல்லலால் சுவாரசியத்தையும் தொடர்ந்து சாவித்திரியின் கதையையே பார்த்து நமக்கு போர் அடிக்காத ஒரு மாற்றையும் தருகிறது.

ஜெமினி பாத்திரத்தில் துல்கர் சல்மான் சிறிதும் ஒட்டவில்லை. முதல் தவறு அவரின் மலையாளத் தமிழ். ரொம்ப நெருடுகிறது. இரண்டாவது, கீர்த்திப் பாத்திரத்தை சாவித்திரி போல காட்ட மெனக்கெட்ட நூற்றில் ஒரு பங்கு கூட துல்கரை ஜெமினி போல காட்ட இயக்குநர் முனையாதது. குறைந்தது அவர் பேண்டை இடுப்பு/தொப்பைக்கு மேல் போடும் ஸ்டைலிலாவது உடையை அமைத்திருக்கலாம். சிகை அலங்காரத்திலும் அவரை நகலெடுக்கவில்லை. அவர் அடிக்கடி பயன்படுத்தும் நான்ஸென்ஸ் என்னும் சொல்லை படத்தில் பல இடத்தில் அவர் பயன் படுத்துவதைப் பார்க்கிறோம். அது அவரை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் பழக்கமாக இருப்பதால் சாதாரண ரசிகனுக்கு அதுப் புரியப் போவதில்லை. தமிழ், தெலுகு, மலையாளம் மூன்றிலும் இப்படம் வெளி வருவதால் மலையாள ரசிகர்களுக்காக துல்கரை போட்டிருக்கலாம். ஆனால் அவர் பாத்திரத்தையும் அழுத்தமாக செய்யாததால் அவ்வளவாக எடுபடவில்லை.

நடுவில் உடல் பெருத்து, பின் மிகவும் இளைத்து, கடைசியில் மிகவும் காண சகிக்க முடியாத நிலையில் படுத்தப் படுக்கையாக இருந்த சாவித்திரியை அவ்வாறு நல்லவேளை திரையில் காட்டவில்லை. கடைசியில் அவர் இருந்த நிலை நம் யூகத்துக்கே விடப்பட்டு திரைச்சீலைக்குப் பின் காட்சிகளாலும் லாங் ஷாட் காட்சிகளாலும் காட்டியிருப்பது இயக்குநரின் திறமையை பறை சாற்றுகிறது.

அறுபதுகளில் உள்ள விஜயா வாகினி, பரணி ஸ்டுடியோக்கள், ஸ்டூடியோக்களில் உள்ள செட்கள், அக்கால சென்னை வீதிகள் ஆகியவை இயல்பாக இருந்தாலும் இன்னும் நேர்த்தியாக செட் வடிவமைப்பு செய்திருக்கலாம். டிராம் காட்சிகள், இன்னும் சில நாடக அரங்க பாணி அளவிலேயே உள்ளது. ஆந்திராவில் நடக்கும் காட்சிகள் இயற்கையாக அமைந்திருக்கின்றன.

எப்பொழுதும் உண்மைக் கதைகளில் உள்ளது உள்ளபடியே சொல்லப்படும்போது ஒரு பாத்திரத்தை மிகவும் உயர்வாக காட்ட முடியாது. ஏனென்றால் ஒருவர் முழுவதுமாக உத்தமராக இருப்பது அரிது. அதை இப்படத்திலும் பார்க்கிறோம். ஜெமினியை நிறை குறைகளுடனும், அவர் முதல் மனைவி குழந்தைகளையும் படத்தில் சேர்த்து, முதல் மனைவிக்கும் சாவித்திரிக்கும் உள்ள உறவினையும், அவர்களின் குழந்தைகளையும் காட்டியிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது.

சாவித்திரியைப் பற்றி தெரியாத நிறைய நல்ல விஷயங்கள் இப்படத்தின் மூலம் தெரியவருகிறது. மேலும் குடிப்பழக்கத்தின் தன்மையை (addiction), அதிலிருந்து மீள்வதில் உள்ள சிரமம், அதற்குத் தேவையான புனர்வாழ்வு மையங்கள் எல்லாவற்றையும் இப்படம் தொட்டுவிட்டு செல்கிறது.

சாவித்திரியின் மகள் விஜயசாமுண்டேஸ்வரியாகவும், மகன் சதீஷாக வரும் பாத்திரங்களைஅவர்களின் தோற்றத்தை ஒத்துத் தேர்வு செய்திருப்பது அருமை! விஜி சிறுமியாக இருக்கும்போது நெற்றியில் சாதனா ஃப்ரிஞ்ச் கட் வைத்திருப்பார். இப்படத்திலும் அப்பாத்திரத்தில் வரும் பெண் அதே போல வைத்திருப்பது எவ்வளவு நுணுக்கமாக இயக்குநர் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. ஒளிப்பதிவு Dani Sanchez-Lopez அருமை! நிச்சயமாக கேமரா கோணங்கள் மூலம் கீர்த்தியை சாவித்திரியாக காட்ட உதவியிருக்கிறார். மேலும் நம்மை சினிமா பார்க்கிறோம் என்று நினைக்கத் தோன்றாமல் படத்துடன் லயிக்க வைக்கிறது அவரின் கேமரா லென்ஸ்!

இவ்வளவு நல்ல படத்துக்குத் திருஷ்டி பரிகாரம் இருக்கவேண்டாமா? இசை ரூபத்தில் அது வந்துள்ளது. (மிக்கி ஜே மேயர்) பின்னணி இசை மட்டும் நன்றாக அமைந்திருந்தால் இந்தப் படம் இன்னும் அதிக உயரத்தைத் தொட்டிருக்கும். Bio picல் கதை நடக்கும் காலத்துக்கு இட்டு செல்வது செட்களும், உடையும், இசையும் தான். செட்டில் பாஸ் மார்க், உடையில் டிஸ்டின்க்‌ஷன், இசையில் பெயில் மார்க் வாங்கியுள்ளது இப்படம். நாயகன் படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளியும்’, ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலும் அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும். அது இந்தப் படத்தில் இல்லை. முக்கியமாக பின்னணி இசை படத்தை உயிரோவியமாக ஆக்கியிருக்க வேண்டியது. ஆனால் படத்தைக் கோமாவில் (pun intended) தள்ளிவிட்டு விட்டது.

அடுத்தத் திருஷ்டிப் பரிகாரம் சமந்தாவின் பிராமண கதாப்பாத்திரம் (+பிராமண குடும்பம்). எதற்கு அப்படி ஒரு பாத்திரப் படைப்பு என்று தெரியவில்லை. பிராமண மொழியில் வசனங்கள் கேட்கவே எரிச்சலாக வருகிறது. அந்தப் பாத்திரம் ஒரு கிறிஸ்டியனை காதலித்துக் கல்யாணம் செய்வது போல காட்டியிருப்பதால் ஒரு வேளை வேறு சமுகத்தைச் சேர்ந்தவராக அப்பாத்திரத்தைப் படைத்திருந்தால் வெட்டுக் குத்து இல்லாமல் எளிதாகத் திருமணத்துக்கு சம்மதம் கிடைக்காது என்று இயக்குநர் யோசித்திருப்பாரோ என்னவோ!

சாவித்திரியின் வாழ்க்கையே ஒரு திரைக்கதைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக இருந்ததால் திரைக்கதையை சரியாக அமைத்தாலே படம் அனைவரையும் ஈர்க்கும் என்று அறிந்து நன்றாக ஹோம்வர்க் செய்து படத்தை இயக்கி அமைத்திருக்கிறார் இயக்குநர் நாக் அஷ்வின். ஒன்றுமேயில்லாத, இன்னொருவர் ஆதரவில் வாழ்ந்து வந்த ஒரு சிறுமி எப்படி பெரிய ஆண் நடிகர்களும் இயக்குநர்களும் அவர் தேதிகளுக்காக காத்து நிற்கும் உயரத்துக்கு பெரும் நடிகையாகி கொடி கட்டிப் பறந்து பின் அனைத்தும் இழந்து அப்பொழுதும் தன் தயாள குணத்தை இழக்காத பெருந்தகையாக வாழ்ந்து முடித்தார் என்பதிலேயே ஒரு ஜனரஞ்சக திரைக்கதைக்கான அனைத்தும் உள்ளது!  எவ்வடே சுப்பிரமணியத்துக்குப் பிறகு இந்தப் படம். இரண்டு படங்களுமே சிறப்பு. ஆனால் பயோ பிக் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதை நல்ல முறையில் அமைத்து வெற்றியும் கண்டுள்ளார் நாக் அஷ்வின்.

சென்னையில் சத்யம் சினிமாஸோ அல்லது வேறு பிரபல திரையரங்கமோ இப்படத்தை வெளியிடவில்லை. நாங்கள் கமலா திரையரங்கத்தில் தான் பார்த்தோம். மதிய ஆட்டம் மட்டுமே இப்பொழுது உள்ளது. செவிவழிச் செய்தியாக படம் நன்றாக உள்ளது என்று தெரியவந்தால் நிறைய அரங்குகளிலும் காட்ட வாய்ப்பு அதிகரிக்கும்.

திரையரஙகத்தை விட்டு வெளியே வந்தும் நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளார் சாவித்திரி/கீர்த்தி!

nadikaiyarthilakam

4 Comments (+add yours?)

 1. Venmanikumar
  May 11, 2018 @ 14:36:51

  துள்ளியமான விமர்சனம் நீளமாக இருந்தாலும் போர் அடிக்கவில்லை ஜெமினியின் நான்சென்ஸ் சரியான கணிப்பு மொத்தத்தில் விமர்சனத்தில் பல உண்மைகள் இருந்தது..

  Reply

 2. UKG (@chinnapiyan)
  May 12, 2018 @ 04:15:24

  ரொம்ப நாள் கழிச்சு ஒரு திரைப்பட விமர்சனம். உங்கள் விமர்சனத்தை ரொம்ப ஆர்வமா பாடிப்பேன். துளிகூட சமரசம் இல்லாமல் நிறைகுறை எடுத்துக்கூறும் பாங்கு அருமை. ஒரு Bio Pic தயாரிப்பது ரொம்ப கஷ்டம்தான். இருந்தாலும் என் போன்றோருக்கு பிடிக்கும். வரலாறு தெரியாத இளையோருக்கு இதை தெரிந்துகொள்ள ஆர்வமா இருக்கலாம். ஹபிபுல்லா ரோட்ல ஏன் பெரியப்பா வீட்டருகே, நீச்சல் குளத்துடன் சாவித்திரியின் வீடு. வீட்டில் நீச்சல்குளம் கட்டியவர் இவரே. அப்படி கோலோச்சியவர் கடைசி காலத்தில் ஜெமினி பேச்சை கேட்காமல் சொந்தப்படம் எடுத்து நஷ்டம் அடைந்து நாசமா போயிட்டாரு. வறிய நிலையில் இருந்த போது, அவரின் மகளும் மகனும் சிறுவயதில் எங்கள் தெருவை கடந்து செல்வதை அடிக்கடி பார்த்துள்ளேன். . RIP.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள் ரொம்பநாள் கழித்து விமர்சிக்க ஒரு நல்ல திரைப்படம் கிடைத்ததற்கு :))

  Reply

 3. chennaisagar
  May 14, 2018 @ 13:20:09

  Wonderful and detailed review.

  Reply

 4. UKG (@chinnapiyan)
  Jun 24, 2018 @ 04:05:33

  படம் பார்த்துட்டேன். உங்கள் விமர்சனத்தில் இருக்கும் ஒவ்வொரு வரியும் மிக சரியாக இருந்தது. என்னால் உங்கள் கருத்துக்கு மறுப்பு ஏதும் சொல்ல ஒன்றுமில்லை..

  நிற்க.
  அந்த பிராப்தம் படம் தோல்வியடைந்து ரொம்ப நஷ்டப்பட்ட சாவித்திரிக்கு, சிவாஜி கணேஷன் ஏதாவது ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டியிருக்கலாமே என்ற எண்ணம் என் மனதில் உதிக்காமல் இல்லை.
  வாழ்த்துக்கள்

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: