கதைக் களம் என்னமோ ரொம்பப் பழசு தான். நாயகன் முதலான படங்களில் பார்த்த தாராவியில் அரசியல் செல்வாக்குடன் ஒருவன் வந்து வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கி குடியிருப்புகள் கட்டத் திட்டமிடுவது, அதைத் தடுத்து அங்கு வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நல்ல தமிழ் தாதா ஹீரோவாக இருப்பது! நாயகன் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அதில் வீடுகளை இடித்து யாரோ ஒரு பணக்காரன் நிலத்தை ஆட்டையப் போடப் பார்ப்பான். இந்தப் படத்தில் மக்களுக்கே அங்கு குடியிருப்புகள் கட்டித் தருவதாகச் சொல்லி வேறு மாதிரி மக்களை ஏமாற்ற திட்டம் போடுகிறான் அரசியல்வாதி வில்லன். இதை முறியடிக்க காலா என்ன செய்கிறார் என்பதே கதை. இந்த மாதிரி படங்களுக்கு பலமே திரைக்கதை தான். எப்படி கதை சொல்லப்படுகிறது என்பதில் தான் சுவாரசியம் அடங்கியிருக்கும். அதில் சராசரி மதிப்பெண் மட்டுமே பெற்று பாஸ் செய்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
தொடக்கத்தில் இருந்தே காலா போராட்டக்காரராகவும் தாராவி மக்களின் நலனை மட்டுமே மனத்தில் வைத்து செய்லபடுபவராகவும் காட்டியிருப்பதும் அந்த கேரக்டர் கடைசி வரை அதில் வழுவாமல் இருப்பதும் சிறப்பானப் பாத்திர உருவாக்கம். அதற்கு ரஞ்சித்திற்குப் பாராட்டுகள். காலாவின் ஒரு மகன் அகிம்சை வழியில் போராடுபவராக காட்டி பின் அந்தப் பாத்திரம் இருந்தும் அவரின் செயல்பாடுகள் காணாமல் போய்விடுகின்றன. தந்தைக்கும் மகனுக்கும் பெரிய சண்டை எல்லாம் வருகிறது, பிறகு அதன் தொடர்ச்சி புஸ்ஸென்று போய்விடுகிறது.
ரஜினிக்கு மச்சானாக ஈஸ்வரி ராவுக்கு தம்பியாக வரும் சமுத்திரக்கனி மிகவும் நன்றாக நடித்துள்ளார். சதா சர்வகாலமும் தண்ணியில் மிதந்தும், தள்ளாடியும், ஸ்டெடியா நிற்கும் பாத்திரம். ஆனால் அந்தப் பாத்திரத்தினால் கதைக்கு எந்தப் பயனும் இல்லை, காமெடிக்காக அவரை பயன்படுத்தியிருக்கலாம். ஈஸ்வரி ராவ் காலாவை அன்பால் அதிகாரம் செலுத்தும் ஒரு வெள்ளந்தியான பாத்திரம். அஸால்டாக செய்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்களாக வரும் அனைவரும் ஓகே. முன்னாள் காதலி ஹூமாவின் கேரக்டர் முரண்பாடாகவும், கதையுடன் ஒன்றாமலும் உள்ளது. முன்னாள் காதலியாகவும், திடீரென வில்லியாகவும் பின்னர் புரட்சியாளராகவும் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நில உரிமை போராட்டம் என்பது படத்தின் கரு. எந்தக் கதைக்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் ஓர் இலக்கு. திரைக்கதை அதில் ரொம்பத் தள்ளாடுகிறது. படத்தைத் தாங்கிப் பிடிப்பது ரஜினி மட்டுமே. ரஜினி பயங்கர ஃபிட்டா இருக்கிறார். நின்னா, நடந்தா, உட்கார்ந்தா, பார்த்தா, சிரிச்சா, புருவத்தை உயர்த்தினான்னு ஒவ்வொரு அசைவிலும் ஸ்டைல். அவரை அதில் மிஞ்ச ஒருவர் இனி பிறந்து தான் வரவேண்டும்.
க்யா ரே செட்டிங்கா? வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன் வாலேன்னு சொல்லிட்டு நிக்கற ரஜினிக்குப் பெரிய சண்டைக் காட்சி இருக்கும்னு பார்த்தா வேங்கை மகனோட மகன் தான் சுத்திச் சுத்திச் சண்டை போடுகிறார். ஆனால் பிறகு மழையில் மேம்பாலத்தின் மேல் வரும் சண்டைக் காட்சி மாஸ்! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், காலாவுக்கு குடையும் கூர்வாள்!
முதலில் கதை சூடு பிடிக்கக் கொஞ்ச நேரம் ஆகிறது. பிறகு கொஞ்சமாக சுவாரசியம் உருவாகிறது. வில்லன் வரவே இடைவேளை வந்துவிடுகிறது. அதுவரை ரஜினி ஷேடோ பாக்ஸிங் தான் செய்து வருகிறார். நானா படேகரும் ரகுவரன் அளவுக்கெல்லாம் இல்லை. திரும்பத் திரும்ப நிலத்தை அபகரிக்க வில்லன் திட்டமிடுவதும் அதைத் தடுக்க காலா முயல்வதும் எந்த வித சஸ்பென்ஸும் இல்லாமல் நகர்கிறது கதை. இதில் க்ளைமேக்ஸ் ரொம்பப் பொறுமையை சோதிக்கிறது. நிறைய சண்டைக் காட்சிகளும் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே போகும் போராட்டமும் நல்ல எடிட்டரின் கத்திரிக்கு வெட்டப்பட்டு படத்தைக் காப்பாத்தியிருக்கும். இத்தனைக்கும் நல்ல எடிட்டர் தான் ஶ்ரீகர் பிரசாத். படத்தின் நீளம் 167 நிமிடங்கள் என்பதை கவனிக்கத் தவறிவிட்டாரா?
சந்தோஷ் நாராயணனனின் பின்னணி இசை படத்துக்குப் பலம். நானா படேகர் வரும் இடங்களில் பின்னணி இசை கச்சிதம். ந ன ன ன ன ன என காதலி சந்திப்பின் போது ஒலிக்கும் பின்னணி இசை மட்டும் செம கடுப்பு. பாடல்கள் இசை வெளியீட்டில் கேட்டதை விட படத்தில் பாந்தமாக வந்து அமருகின்றன. முரளியின் ஒளிப்பதிவு மழையில் சண்டைக் காட்சிகளிலும், தாராவிப் பகுதிகளை காட்டும்போதும் அவரின் திறன் வெளிப்படுகிறது.
நிறைய குறியீடுகள், புத்தர் கோவில் முன் காலா உட்கார்ந்து ஆலோசிப்பது, காலா வீட்டில் அம்பேத்கார் படம், புத்தர் சிலை இருப்பது, மேஜையில் இராவண காவியம் புத்தகம் எனப் பல! ஆனால் அவை காலாவுக்கான குறியீடுகளாகத் தெரியவில்லை, இயக்குநர் ரஞ்சித்தின் குறியீடுகளாகத் தெரிகின்றன. பிஜேபி மாதிரி ஒரு கட்சிக்கு எதிரா தான் காலாவின் எதிர்ப்பு உள்ளது. ஸ்வச் பாரத் மாதிரி பியுர் இந்தியா திட்டத்தின் விளம்பர பலகைகளை பார்க்கலாம், வெள்ளை பைஜாமா குர்தாவவுடன் நெற்றியில் குங்கும திலகம் தரித்தவர்களே அக்கட்சியினராகவும் காட்டப்படுகின்றனர். இதில் இராம பக்தன் வில்லனாகக் காட்டப்படுகிறார். காலாவை இராவணனாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயக்குநரின் நோக்கமாக இருக்கும் என்று கொள்ளவேண்டும்.
படத்தில் பஞ்ச் டயலாகுகள் இல்லை. க்ளைமேக்சில் ரஜினி ரொம்ப அமைதி காப்பது போலவும் அவரை மிஞ்சி காரியங்கள் நடப்பது போலவும் காட்டியிருப்பது அவரின் பாத்திரப் படைப்புக்கு இழுக்காகவும் அவரின் சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கும் சரிப்பட்டு வரவில்லை என்றே தோன்றுகிறது. முக்கியமாக முடிவில் நடப்பது என்ன என்று புரிந்து கொள்வது கூட சிரமாமக உள்ளது. ஹீரோ & வில்லன் கொல்லப்பட்டார்களா போன்ற சில முக்கிய விஷயங்களையே மக்களின் கற்பனைக்கு விட்டுவிட்டார் இயக்குநர்.
நில உரிமை எளிய மக்களின் வாழ்வாதரம், அவர்களின் உடம்பே ஆயுதம் என்னும் முக்கிய கருத்துகளை ரஜினியை பயன்படுத்தி மக்கள் முன்வைத்த ரஞ்சித் படம் இது!
Jun 08, 2018 @ 16:27:55
நன்றி. இவ்வளவு பரபரப்புக்குள்ளேயும் ஓடிப்போய் படம் பார்த்து அதை சுட சுட விமர்சனமும் செய்துள்ளீர்கள். விமர்சனம் ஓகே நீங்க சொன்னா அது சரியாத்தானிருக்கும். நான் படம் பார்த்திருந்தால், ஒருவேளை மேற்கொண்டு விவாத்திருக்கலாம். நீங்க சொல்வதிலிருந்து பார்த்தால், எல்லா அம்சங்களிலும் படம் சுமார்தான். எக்ஸ்ட்ராஆர்டினரியா ஒன்றுமில்லை. காமெடி பார்ட்டை கூட சிலாகிக்க ஒன்றுமில்லை போலும் . நன்றி வாழ்த்துக்கள் :))
Jun 09, 2018 @ 01:49:08
மிக்க நன்றி 🙂
Jun 08, 2018 @ 17:06:13
முதல் வரியிலேயே உண்மையை சொல்லி விட்டீர்கள் உங்கள் விமர்சனம் எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே இருக்கிறது.
Jun 08, 2018 @ 17:35:44
மகன் பாத்திரத்தில் தெளிவாக தான் ரஞ்சித் படைத்துள்ளார், நீங்கள் விமர்சித்ததுபோல் காலாவின் பாத்திரபடைப்பு பலகீனம். பின்னனி இசையில் இரைச்சல் அதிகம்.
Jun 08, 2018 @ 18:05:03
ரஜினியும், ரஞ்சித்தும் இணைந்து தான் சரி, ரஜினிக்குத் தெரியாமல் ரஞ்சித் ஒரு எழுத்தைக்கூட திணிக்க முடியும் என நம்புறேங்களா?
Jun 09, 2018 @ 01:51:01
நான் இணைந்தது தவறு என்று எங்குமே சொல்லவில்லையே. கதை முழுக்க டிஸ்கஸ் செய்த பிறகு தான் நடிக்கவே போயிருப்பார் ரஜினி. இதில் சந்தேகம் என்ன?