தமிழ் படம் 1, 2, இவற்றிற்கு டஃப் கொடுக்கும் ஒரு நல்ல சபூஃப் ஜூங்கா! நானும் ரவுடி தான் படத்தில் விசே தான் ஒரு ரவுடி என்று அலப்பறை பண்ணுவார். ஆனா நயன் சிம்பிளா நீங்க ரௌடி இல்லை ஒரு பிராட் என்று சொல்லிவிடுவார். அந்த மாதிரி இந்தப் படத்திலும் இவர் டான் என்று சொல்லிக் கொண்டாலும் காமெடி டானாக இருக்கிறார். சீரியஸா எடுத்துக்கற படம் இல்லை இது. லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். ஆரம்பமே சூப்பர் ஸ்டாருக்குக் கொடுக்கற பில்டப் மாதிரி தொடங்குது, இவர் பாத்திரமும் முதலில் கண்டக்டர் தான்! அரங்கத்திலும் ஆரவாரம் அதிகம். விசில் பறக்குது!
கஜினி படத்தில் அசின் அவர் அப்பா டிராவலஸ் நடத்தி நொடித்துப் போய் கார்களை விற்றதால் மூணு அம்பாசிடர் கார் வாங்கின பிறகு தான் கல்யாணம் பணன்னும்னு சொல்றா மாதிரி விசேயும் அவர் அப்பாவும் தாத்தாவும் டானாக இருந்தும் வரவுக்கு மேல் செலவு செய்து ஒரு செட்டியாரிடம் அநியாயமாக தொலைத்தத் தன் அம்மாவின் சீதன சொத்தான திரை அரங்கை மீட்க சபதம் எடுத்து டானாக மாறுகிறார். அதற்காக சென்னை வந்து கம்மி ரேட்டில் கொலை, கடத்தல் எல்லாம் செய்கிறார். அதனால் தொழிலில் இருக்கும் மத்த டான்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இதில் ராதா ரவி சின்ன வேடத்தில் பெருங்காய டப்பா டான் சங்கத் தலைவராக வந்து போகிறார். அந்தக் காட்சிகள் எல்லாம் நல்ல ஸ்பூஃப்!
விசே கெட்டப் காமெடியா இருக்கு. யார் இதை அவருக்கு செய்து கொடுத்து நல்லா இருக்குன்னு சொன்னதோ தெரியலை. ஆனா வடிவேலு மாதிரி காமெடி செய்யனும்னு நினச்சு இந்த கெட்டப்பை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். மடோன்னா செபாஸ்டியன் சில சீன்களிலேயே வந்து கழட்டி விடப்படுகிறார் (literally). கஞ்சப்பிசினாரி டான் விசே, அதனால் ஒரு டூயட் மட்டும் பாடிவிட்டு செலவு வைக்கும் காதலியை கழற்றி விடுகிறார். அடுத்து சாயிஷா. இவர் வெள்ளைத்தோல் வடிவழகி! செட்டியாரின் (சுரேஷ் மேனன்) செல்ல மகள். நன்றாக நடனம் ஆடுகிறார். குறை சொல்ல ஒன்றும் இல்லை. செட்டியார் விசேவிடம் திரை அரங்கை தவணை முறையில் விற்க மறுக்க விசே உடனே பேரிசில் இருக்கும் மகளை கடத்தி செட்டியாரை பணிய வைக்க பேரிஸ் போகிறார். எந்தப் பேரிசுக்கு முதலில் போகிறார் என்பாதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்!
அவர் பேரிஸ் போகும்வரை செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, ஆனால் கஞ்சத்தனமான டானாக சென்னையில் செய்தவைகளையெல்லாம் மொழி தெரியாமல் யோகிபாபுவுடன் பாரிசில் தொடர்வது அபத்தமாக உள்ளது. ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரி நடித்து வந்த அவர் இப்படத்தில் செய்யும் சேட்டைகள் ஒரு மாற்றாக நன்றாக அமைந்திருக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குநர் பாரிஸ் சென்ற பிறகு திரைக் கதையில் கோட்டை விட்டுவிட்டது படத்தின் சறுக்கல்.
படிக்காத, ஏழை, கஞ்சனான சுமார் மூஞ்சி குமார் டான் ஹீரோவுக்கும் பணத்திலே புரண்டு வளர்ந்த, படித்த, அழகி ஹீரோயினுக்கும் காதல் வருவதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பது தமிழ் சினிமா பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். அதே போல இடாலியன் மாஃபியா கண்ணில் மண்ணைத் தூவி காதலியைக் காப்பாற்றி, பிரெஞ்ச் போலிசிடமிருந்தும் செம கார் சேசிங் செய்து தப்பிக்கும் ஹீரோ நமக்கும் புதுசும் இல்லை. எப்படியோ ஹீரோ காதலியையும் கைப்பற்றி தன் சபதத்தையும் நிறைவேற்றி விடுவார்.
இவருக்கு அம்மாவாக சரண்யா. இவர் ப்ளாஷ் பேக்கை சொல்லி இவர் டான் குடும்பம் என்பதை தெரிவிக்கிறார். அதில் டாடா சுமோவை பிரபலப்படுத்தியதே இவரின் அப்பாவும் தாத்தாவும் தான் போன்ற வசனங்கள் நல்ல நகைச்சுவை. அவரை விட அவர் மாமியாராக விசேவின் டான் பாட்டியாக வருபவர் பின்னி பெடலெடுக்கிறார். விசே தோழனாக யோகி பாபு படத்தின் பலம்.
பாடல்கள் எல்லாம் ஏன் வருது எதுக்கு வருதுன்னு தெரியலை ஆனா இயக்குநர் சொன்ன நேரத்தில் கரெக்டா வருது. விபின் சித்தார்த்தின் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையை நான் கவனிக்கவேயில்லை. அது பிளஸ்சா மைனஸா தெரியலை! டட்லியின் ஒளிப்பதிவு வெளிநாட்டு லொகேஷன்களில் அருமை!
முன்னெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது பெரிய விஷயம், அதனால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டுக் காட்சிகளைக் கண்டு களிக்க நிறைய பேர் அப்படங்களுக்கு செல்வார்கள். அது மாதிரி இந்தப் படமும் பிரான்ஸ் ச்விட்சர்லேந்து என்று படமக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியா காட்சிகளை கண்டு களித்துவிட்டு வரலாம்.
பிரெஞ்சு போலீசுக்கே அல்வா கொடுத்த விசே எதற்காக தமிழக போலீசில் மாட்டினார்? முதல் சீனே சிறைச்சாலை தான், ஆனால் அது கடைசி சீன் வரை புரியவில்லை. அவ்வளவு சிறப்பான திரைக்கதை! கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். இந்தப் படத்தில் முன் பாதி நகைச்சுவை துணுக்குத் தோரணம், பின் பாதியில் கதை இல்லை. ஆனால் திரை அரங்கில் படத்துக்கு செம வரவேற்பு உள்ளது!